Thursday, 10 March 2011

Catholic News -09 March 2011

1. திருத்தந்தை : சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மனிதன் தனது வாழ்வு நிலையை மாற்ற வேண்டும்
2. இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை பெண்கள் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தியுள்ளது - கர்தினால் Telesphore Toppo
3. அகில உலக மகளிர் தினத்தன்று கந்தமால் பகுதியில் 4000 கிறிஸ்தவ மற்றும் இந்து பெண்கள் ஊர்வலம்
4. உணவின்றி வாடும் பல குழந்தைகளைக் காக்கும் முயற்சிகளைத் தவக்காலத்தில் மேற்கொள்ள வேண்டும் - பிலிப்பின்ஸ் கர்தினால்
5. லிபியாவின் பிரச்சனைகளைத் தீர்க்க இராணுவ சக்தியல்லாத பிற வழிகளைத் தேட வேண்டும் - திருப்பீடத்தின் பிரதிநிதி
6. போர்ச் சூழல்களில் வாழும் பெண்களைப் பாதுக்காக்கும் வழிமுறைகள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும் - அயர்லாந்து ஆயர்கள்
7. எகிப்தின் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களும் இஸ்லாமியரும் கெய்ரோ நகர வீதிகளில் ஆர்ப்பாட்டம்
8. உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள ஆண்-பெண் சமத்துவப் பட்டியல்
----------------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை : சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மனிதன் தனது வாழ்வு நிலையை மாற்ற வேண்டும் 
மார்ச் 09,2011. நம்மைச் சுற்றியுள்ள உலகோடு சரியான உறவைக் கொண்டிருக்க வேண்டுமானால், மனிதன் கடவுள் அல்ல, மாறாக, அவன் கடவுள் சாயாலாகப் படைக்கப்பட்டவன் என்பது குறித்தப் புரிதல் அவசியம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.இப்புதன்கிழமை தொடங்கும் தவக்காலத்தை முன்னிட்டு பிரேசில் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Geraldo Lyrio Rochaவுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் முதலில் “மனிதச் சுற்றுச்சூழல்” சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றார்.“சகோதரத்துவமும் இப்பூமிப்பந்தில் வாழ்வும்” என்ற தலைப்பில், பிரேசில் திருச்சபை இவ்வாண்டு தவக்காலத்தைக் கடைபிடிப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மனிதன் தனது வாழும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.மனித வாழ்வு தாயின் உதரத்தில் கருவான நேரமுதல் இயற்கையான மரணம் அடையும் வரை அது பாதுகாக்கப்படாவிட்டால், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயானத் திருமணத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பம் பாதுகாக்கப்படாவிட்டால், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களும் இயற்கைப் பேரிடர்களில் அனைத்தையும் இழந்தவர்களும் பாதுகாக்கப்படாவிட்டால் உண்மையானச் சுற்றுச்சூழல் குறித்துப் பேச முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடவுள் தமது படைப்பை மனிதனிடம் ஒப்படைத்துள்ளான் என்ற விழிப்புணர்வு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாதது என்றும் அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.தென் அமெரிக்க நாடான பிரேசில், உலகில் அதிகமான கத்தோலிக்கரைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


2. இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை பெண்கள் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தியுள்ளது - கர்தினால் Telesphore Toppo
மார்ச் 09,2011. கல்வி மற்றும் நலம் குறித்த சேவைகளின் மூலம் கடந்த பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பணிகள் புரிந்து வரும் இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை பெண்கள் முன்னேற்றம் என்பதில் தனி கவனம் செலுத்தியுள்ளது என்று கர்தினால் Telesphore Toppo கூறினார்.இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட அகில உலக மகளிர் நாளின் நூற்றாண்டையொட்டி, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரான கர்தினால் Toppo இவ்வாறு கூறினார்.இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே இருந்தாலும், திருச்சபை உருவாக்கியுள்ள கல்வி மற்றும் நல நிறுவனங்கள் வழியே மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்குச் செய்து வரும் சேவையை அனைவரும் அறிவர் என்று கர்தினால் எடுத்துரைத்தார்.பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இழைக்கப்படும் அநீதிகளை திருச்சபை உணர்ந்துள்ளது என்று கூறிய கர்தினால், திருச்சபையில் ஆங்காங்கே காணப்படும் இந்த அநீதிகளையும், இந்தியாவில் பரவலாக உள்ள அநீதிகளையும் முற்றிலும் களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கூறினார்.

3. அகில உலக மகளிர் தினத்தன்று கந்தமால் பகுதியில் 4000 கிறிஸ்தவ மற்றும் இந்து பெண்கள் ஊர்வலம்
மார்ச் 09,2011. இதற்கிடையே, அகில உலக மகளிர் தின செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் இச்செவ்வாயன்று ஏறத்தாழ 4000 கிறிஸ்தவ மற்றும் இந்து பெண்கள் ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் 75 விழுக்காட்டினர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்குப் பிறகு கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இணைந்து மேற்கொள்ளும் முதல் ஒற்றுமை முயற்சி இது என்றும், இதைப் பெண்கள் முன்னின்று நடத்தினர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.எந்த ஒரு சமுதாயத்திலும் பெண்கள் ஒப்புரவையும், சகிப்புத் தன்மையையும் வளர்க்கும் கருவிகளாய் இருக்கின்றனர் என்பதற்கு இந்த ஊர்வலமும் ஒரு சான்று என்று இந்த ஊர்வலத்தை ஏற்பாடு  செய்தவர்களில் ஒருவரான அருள் சகோதரி Justine Senapati கூறினார்.

4. உணவின்றி வாடும் பல குழந்தைகளைக் காக்கும் முயற்சிகளைத் தவக்காலத்தில் மேற்கொள்ள வேண்டும் - பிலிப்பின்ஸ் கர்தினால்
மார்ச் 09,2011. தவக்காலத்தில் மேற்கொள்ளும் பல உண்ணாநோன்பு முயற்சிகளால் சேமிக்கும் பணத்தைக் கொண்டு, உணவின்றி வாடும் பல குழந்தைகளைக் காக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று பிலிப்பின்ஸ் கர்தினால் Gaudencio Rosales கூறினார்.ஆசியாவிலேயே கிறிஸ்தவர்களை அதிக அளவில் கொண்டுள்ள பிலிப்பின்ஸ் நாட்டில், இப்புதனன்று துவக்கப்பட்டுள்ள தவக்காலத்தையொட்டி பல பிறரன்பு முயற்சிகளை ஆரம்பித்து வைத்த மணிலா உயர் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Rosales இவ்வாறு கூறினார்.இத்தவக்காலத்தில் இளையோரிடையே தியாகத்தையும், பிறரன்பு சேவையையும் வலியுறுத்தும் முயற்சிகளை ஹாங்காங் தலத்திருச்சபை மேற்கொண்டுள்ளது. இலங்கைத் தலத்திருச்சபை போரினால் அனைத்தையும் இழந்தவர்கள், முக்கியமாக விதவைகள், அனாதைகள் ஆகியோருக்கு உதவிகள் செய்ய "கிறிஸ்துவே நமது நம்பிக்கை" என்ற மையக் கருத்துடன் தவக்கால செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளது.இதேபோல் இந்தோனேசியா, மியான்மார், கொரியா, பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய அனைத்து ஆசிய நாடுகளின் தலத்திருச்சபைகளும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிட்டுள்ள தவக்காலச் செய்திகளை மையப்படுத்தி பல்வேறு முயற்சிகளை அறிவித்துள்ளன என்று UCAN செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

5. லிபியாவின் பிரச்சனைகளைத் தீர்க்க இராணுவ சக்தியல்லாத பிற வழிகளைத் தேட வேண்டும் - திருப்பீடத்தின் பிரதிநிதி
மார்ச் 09,2011. லிபியா சந்தித்து வரும் பிரச்னைக்கு வெளிநாடுகள் இராணுவத்தின் மூலம் தீர்வு காண நினைப்பது மேலும் பல ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கும் என்று வத்திக்கான் அதிகாரி கூறினார்.திருப்பீடத்தின் பிரதிநிதியாக லிபியாவின் Tripoli யில் உள்ள ஆயர் Giovanni Martinelli வத்திக்கானின் FIDES செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், லிபியாவின் பிரச்சனைகளைத் தீர்க்க இராணுவ சக்தியல்லாத பிற வழிகளைத் தேட வேண்டும் என்று கூறினார்.இப்பிரச்சனையின் மத்தியில் லிபியாவை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் 89,000 பங்களாதேஷ் மக்களுக்கு அங்குள்ளத் திருச்சபை பல வழிகளிலும் தஞ்சம் அளித்து வருகிறதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.பங்களாதேஷ் மக்களை மீண்டும் தங்கள் நாட்டிற்குக் கொண்டு  வர அரசு இயலாத நிலை உருவாகியுள்ளதால், இத்தாலிய ஆயர் பேரவையின் நிதி உதவியுடன் அம்மக்களுக்கு லிபியத் தலத்திருச்ச்சபை உதவிகள் செய்யவேண்டுமென்று பங்களாதேஷ் தலத்திருச்சபை விண்ணப்பித்துள்ளது என்று Rajshahi மறைமாவட்ட ஆயர் கெர்வாஸ் ரொசாரியோ (Gervas Rosario) கூறினார்.இந்தியாவிலிருந்து லிபியாவில் பணி புரிந்த 18000 பேரில் இன்னும் 1700 பேர் அங்கிருந்து வெளியேறக் காத்திருக்கின்றனர் என்றும், அதேபோல், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாட்டு மக்களையும் வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.

6. போர்ச் சூழல்களில் வாழும் பெண்களைப் பாதுக்காக்கும் வழிமுறைகள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும் - அயர்லாந்து ஆயர்கள்
மார்ச் 09,2011. ஒவ்வொரு நாட்டிலும், உலகச் சமுதாயத்திலும் பெண்களைப் பாதுக்காக்கும் வழிமுறைகள் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும், அதிலும் சிறப்பாக போர்ச் சூழல்களில் வாழும் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவது நிறுத்தப்பட வேண்டுமென்று அயர்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட அகில உலக மகளிர் தினத்தின் நூற்றாண்டையொட்டி அயர்லாந்தின் ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கையில், பெண்களை மையப்படுத்தி சேவை செய்யும் குழுவினருக்கு அரசின் அதிகப்படியான உதவிகள் கொடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.உலகின் பல பகுதிகளில் இன்று போராட்டங்களும், போர் சூழலும் நிலவி வருவதும், அங்கு பெண்களின் நிலையே மிகவும் ஆபத்தானது என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றாலும், இந்த ஆபத்தை நீக்க அரசுகள் அதிகம் முயற்சிகள் எடுப்பதில்லை என்று அயர்லாந்து ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவரும், Dublin துணை ஆயருமான Raymond Field கூறினார்.

7. எகிப்தின் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களும் இஸ்லாமியரும் கெய்ரோ நகர வீதிகளில் ஆர்ப்பாட்டம்
மார்ச் 09,2011. தீக்கிரையாக்கப்பட்ட எங்கள் கோவில்களை மீண்டும் எங்களுக்குத் தாருங்கள் என்று எகிப்தின் காப்டிக் ரீதி கத்தோலிக்கர்கள் இச்செவ்வாயன்று கெய்ரோ நகர வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடந்த சனிக்கிழமை தீவைத்து கொளுத்தப்பட்ட புனித மினாஸ் மற்றும் ஜார்ஜ் ஆலயத்தை மீண்டும் எகிப்து அரசு கட்டித் தர வேண்டுமென்று கெய்ரோவில் 8000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அண்மையில் எகிப்தில் புரட்சிக் கூட்டங்கள் நடைபெற்ற Tahrir வளாகத்தில் அமைந்துள்ள எகிப்து தொலைக்காட்சி நிலையத்திற்கு  முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக, எகிப்தின் தற்போதைய பிரதமர் Essam Sharaf காப்டிக் ரீதி கத்தோலிக்கர்களின் பிரதிநிதிகளை இச்செவ்வாயன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் முடிவில், தற்போது அரசு அதிகாரத்தில் இருக்கும் இராணுவக் குழ்விடம் பேசி இதற்குத் தகுந்த ஒரு தீர்வு காண முயல்வதாகவும் பிரதமர் வாக்களித்தார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.இதுவரை எகிப்தில் எந்த ஓர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடாத சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் முதல் முறையாக மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் இதுவென்றும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இஸ்லாமியர்களும், சிறப்பாக, இஸ்லாமியப் பெண்களும் ஆதரவு தந்திருப்பது மிகவும் உற்சாகமூட்டுகிறதென்றும் கிறிஸ்தவர்களின் சார்பாகப் பேசிய அருள்தந்தை Rafik Greiche ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

8. உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள ஆண்-பெண் சமத்துவப் பட்டியல்   மார்ச் 09,2011. நூறாவது அகில உலக மகளிர் நாளையொட்டி, ஆண் - பெண் சமத்துவத்தில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்தி உலகப் பொருளாதார மன்றம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சிறிய ஆப்பிரிக்க நாடான லெசோதோ (Lesotho) முன்னணியில் வந்துள்ளதென்பதும், முஸ்லிம் உலகில் முற்போக்கான நாடாகக் கருதப்படும் துருக்கி, இப்பட்டியலில் மிகவும் பின்தங்கியிருப்பதென்பதும் பலருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது. அரசியலில் பெண்களின் பங்கேற்பு, ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் கல்வி நிலை, சுகாதார சேவைகளைப் பெறுவதில் அவர்களுக்குள்ள உரிமைகள் போன்றவற்றை மதிப்பிட்டு ஒரு சமூகத்தில் ஆண் பெண் சமத்துவம் எந்த அளவில் உள்ளதென்பதை உலக பொருளாதார மன்றம் கணக்கிட்டு, இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆப்பிரிக்காவின் லெசோதோ எட்டாவது இடத்தில் வந்துள்ளது. மற்ற எந்த ஆப்பிரிக்க நாட்டை விடவும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற செல்வம் நிறைந்த நாடுகளை விடவும் ஆண்-பெண் சமத்துவத்தில் இந்த நாடு முன்னணியில் உள்ளது என்பது பலருக்கு வியப்பைத் தந்துள்ளது. இந்த நாட்டின் மக்கள் தொகை 18 லட்சம் மட்டுமே, அந்த சிறிய தொகையிலும் பாதிக்கும் அதிமானோர் மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ளனர். ஆனாலும் ஆண்-பெண் சமத்துவத்தில் பல செல்வந்த நாடுகளை லெசோதோ விஞ்சியுள்ளது. அந்த நாட்டின் அமைச்சர்களில் ஐந்தில் ஒருவர் பெண். காவல்துறையின் தலைமை அதிகாரி ஒரு பெண். இந்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 விழுக்காட்டினர் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இவர்களில் ஆண்களை விட, பெண்களில் 94.5 விழுக்காட்டினர் படித்தவர்கள்.லெசோதோவில் ஆண் பெண் சமத்துவச் சூழல் வியக்கவைக்கும் நல்ல நிலையில் இருக்கிறதென்றால், வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் துருக்கியோ இந்தப் பட்டியலில் மிகவும் கீழே வந்திருக்கிறது. பெண்கள் முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவதில் துருக்கிய அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதையே இது காட்டுவதாக அந்நாட்டின் பெண்ணுரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன. குடும்ப கௌரவத்தை காப்பாற்றிக்கொள்வதாக நினைத்து பெண்களை குடும்ப உறுப்பினர்களே கொல்லும் சம்பவங்கள் அங்கு தினந்தோறும் நடப்பது வாடிக்கையாகிவிட்டதென்றும், துருக்கியை ஆளும் கட்சி கடைப்பிடித்துவரும் இஸ்லாமியப் பழமைவாதக் கொள்கைகள்தான் இதற்குக் காரணம் என்றும் சமுதாய  ஆர்வலர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆசியாவைப் பொறுத்தவரை, மேற்காசிய நாடுகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் பெண்ணுரிமை என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், அங்கு இந்த விடயங்களில் சில சலனங்கள் ஏற்பட்டிருப்பதையும் காண முடிகிறதென்ரு தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணிய எழுத்தாளரான வ. கீதா கூறுகிறார். இந்தியாவில் ஆண்-பெண் சமத்துவத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அங்கு இன்னமும் எவ்வளவோ முன்னேற வேண்டியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...