Wednesday 16 March 2011

Catholic News - hottest and latest - 15 Mar 2011

1. புனித பூமிப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவது நிறுத்தப்பட உதவுமாறு திருப்பீட அதிகாரி அழைப்பு

2. ஜப்பானில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிய நாடுகள் உதவி
                           
3. ஜப்பான் சுனாமியில் கானடா மறைபோதகர் மரணம்

4. இலங்கைத் திருச்சபையில் தவக்காலம் : “கிறிஸ்துவே நமது நம்பிக்கை

5. உலகில்  ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடம்

6. பிரான்சில் காலியாக இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களை முஸ்லீம்கள் செபிப்பதற்கு விண்ணப்பம்

7. FAO எச்சரிக்கை : வெப்பநிலை மாற்றத்தால் 75 விழுக்காட்டு பலவகையான உணவுப் பொருட்களின் அறுவடைகள் மறையும் அபாயம்

8. இந்தியாவில் கருக்கலைப்பு மாத்திரைக்கு கடுமையான சட்டம்

----------------------------------------------------------------------------------------------------------------

1. புனித பூமிப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவது நிறுத்தப்பட உதவுமாறு திருப்பீட அதிகாரி அழைப்பு

மார்ச்15,2011: கிறிஸ்தவத்தின் தொட்டிலாக அமைந்துள்ள புனித பூமிப் பகுதியிலிருந்து  கிறிஸ்தவர்கள் வெளியேறுவது நிறுத்தப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
"குடியேற்றதாரர், அகதிகள் ஆகிய இவர்களுக்கான மேய்ப்புப்பணி:ஜோர்டன், இஸ்ரேல், எருசலேம், பாலஸ்தீனம், சைப்ரஸ் ஆகிய பகுதிகளின் தற்போதைய நிலைமையும் சவால்களும்" என்ற தலைப்பில் இடம் பெறும் கூட்டத்தில் இவ்வாறு கேட்டுக் கொண்டார் திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò.
கிறிஸ்தவச் சமூகங்கள் உயிர்த்துடிப்புடன் வாழும் இடங்களில் கிறிஸ்தவம் என்பது தனியார் சொத்தாக மாறி வருகிறது என்றுரைத்த பேராயர் Vegliò, இந்தப் பகுதிகளில் குடியேற்றதாரர் மற்றும் அகதிகளுக்கு உதவுவதற்குக் கிறிஸ்தவ சபைகள் மத்தியில் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்தப் பணியை இறைவார்த்தையின் ஒளியில் நோக்குமாறும் கேட்டுக் கொண்ட அவர், தங்களது பாரம்பரிய இடங்களிலிருந்து வேரோடு பெயர்த்தெறியப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் கிறிஸ்தவர்களுக்கு அனைத்துச் சபைகளும் ஒன்றிணைந்து செய்ல்படுமாறும் பரிந்துரைத்தார்.

2. ஜப்பானில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிய நாடுகள் உதவி

மார்ச்15,2011: ஜப்பானில் கடும் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிய நாடுகளிலுள்ள சமய மற்றும் மனிதாபிமான நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்கி உதவி செய்து வருகின்றன.
ஜப்பான் காரித்தாஸ் தலைவர் ஆயர் Isao Kikuchi வுக்குச் சீனாவின் வடக்கு ஹெபெய் மாநில கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, சீனக் கத்தோலிக்கர்களின் சார்பாக ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளதோடு, முதல் கட்டமாக பத்தாயிரம் டாலர் அடையாள நிதியுதவியையும் வழங்குவதாகக் கூறியுள்ளது.
தென் கொரியத் தலைநகர் செயோல் கர்தினால் Nicholas Cheong Jin-sukம் ஜப்பானிய மக்களுடனான ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளதோடு, தனது உயர்மறைமாவட்டம் ஐம்தாயிரம் டாலர் அவசர நிதியுதவியையும் வழங்குவதாகக் கூறியுள்ளார்.
ஜப்பானுடன் நீண்டகாலமாகப் பகைமையுடன் இருக்கும் தென் கொரிய அரசும் 102 பேர் கொண்ட அவசரகால மீட்புப்பணிக் குழுவை ஏற்கனவே அனுப்பியுள்ளது. கொரிய புத்தமதத்தின் Jogye அமைப்பும் சுமார் 89 ஆயிரம் டாலர் உதவியுடன் 500 தன்னார்வப் பணியாளர்களையும் அனுப்பியுள்ளது.

3. ஜப்பான் சுனாமியில் கானடா மறைபோதகர் மரணம்
  
மார்ச்15,2011: ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் கானடா நாட்டு மறைபோதகர் அருட்திரு Andre Lachapelle, சென்டைய் நகரில் இறந்துள்ளார்.
கானடா நாட்டு கியூபெக் வெளிநாட்டு மறைபோதகக் சபையைச் சேர்ந்த 76 வயதாகும் அருட்திரு Andre Lachapelle, 33 அடி உயரத்தில் சீறிவந்த சுனாமி அலையில் அதிர்ச்சியடைந்து இறந்துள்ளார் என்று சென்டைய் மறைமாவட்ட சான்சிலர் அருட்திரு Peter Shiro Komatsu கூறினார்.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் ஃபுக்குஷிமா அணுமின் நிலைய அணுஉலை எண் ஒன்று மற்றும் எண் மூன்று ஏற்கனவே வெடித்துள்ளவேளை, இச்செவ்வாய் காலை அணுஉலை எண் இரண்டும் எண் நான்கும் தீப்பற்றியதாகச் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்த அணுக் கதிர்வீச்சுக்கள், மணிக்கு 400 millisievert என்ற விகிதத்தில் உள்ளன இவை முந்தைய நாளைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கின்றன.. இதனால் இதனைக் குறைப்பதற்கானப் பணிகளில் உதவி செய்வதில் ஐ.நா.வின் IAEA என்ற அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பும் அமெரிக்க ஐக்கிய நாடும் தீவிரம் காட்டி வருகின்றன. 
பொதுவாக கதிர்வீச்சின் தாக்கம் ஆயிரம் millisieverts இருந்தால் மூச்சுத்திணறல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். 5,000 millisieverts வந்தால் இதனால் தாக்கப்பட்டவர்களில் 50 விழுக்காட்டினர் இறக்கக்கூடும் என்று உலக அணுக்கழகம் கூறுகிறது.

4. இலங்கைத் திருச்சபையில் தவக்காலம் : “கிறிஸ்துவே நமது நம்பிக்கை

மார்ச்15,2011: பல ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் ஒப்புரவுப் பாதையில் செல்வதற்கு கிறிஸ்துவே நமது நம்பிக்கை என்ற எண்ணத்தில் வளருவது முக்கியம் என்று தனது தவக்காலச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
இம்மாதம் 9ம் தேதி தொடங்கியுள்ள தவக்காலத்திற்கென இலங்கை காரித்தாஸ் முன்வைத்துள்ள, கிறிஸ்துவே நமது நம்பிக்கை என்ற தலைப்பையே தனது மறைமாவட்டத்திற்கும் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார் Kurunegala  ஆயர் Harold Anthony Perera,.
 முப்பது ஆண்டுகள் வன்முறை மற்றும் துன்பத்திற்குப் பின்னர் ஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு கிறிஸ்துவே நமது நம்பிக்கை என்ற தலைப்பைத் தவிர வேறு எதுவும் பொருத்தமாக இருக்காது என்றும் ஆயர் பெரேரா கூறியுளி்ளார்.

5. உலகில்  ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடம்

மார்ச்15,2011: 2006ம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் உலக அளவில் இடம் பெற்ற ஆயுதப் பரிமாற்றங்கள், அதற்கு முந்தைய நான்காண்டு இடைவெளியில் இடம் பெற்றதைவிட 24 விழுக்காடு அதிகம் என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் கூறியது.
உலகில் இடம் பெற்ற மொத்த ஆயுதத்தளவாட இறக்குமதிகளில் ஆசிய-பசிபிக் பகுதி 43 விழுக்காடு இறக்குமதி செய்துள்ளது, இதில் இந்தியா, சீனா, தென் கொரியா பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் பெருமளவில் இறக்குமதி செய்துள்ளன என்று இந்த மையம் வெளியிட்ட புதிய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்த 2006 மற்றும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளின் ஆயுத இறக்குமதியில் இந்தியா, சீனாவையும் விஞ்சிவிட்டது என்றுரைக்கும் அம்மையத்தின் அறிக்கை, தனது இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும் சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்குமென இந்தியா 2009ம் ஆண்டில் நான்காயிரம் கோடி டாலைச் செலவழித்துள்ளது என்றும் தெரிவிக்கிறது.
இந்த நான்காண்டுகளில் உலக அளவில் இடம் பெற்ற ஆயுத ஏற்றுமதிகளில் அமெரிக்க ஐக்கிய நாடு முப்பது விழுக்காட்டைக் கொண்டு அது முதலிடத்தில் உள்ளது எனவும் அம்மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் Mark Bromley கூறினார். இதற்கு அடுத்த இடங்களில் இரஷ்யாவும் ஜெர்மனியும் உள்ளன
ஆசியா, மத்திய கிழக்கு, வட ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் கடும் போட்டி நிலவுவதாகவும் புரோம்லி தெரிவித்தார்.
சர்வதேச அளவில் இந்தியா மட்டும் அதிகபட்சமாக ஒன்பது விழுக்காடு ஆயுதங்களை வாங்கியுள்ளது.

6. பிரான்சில் காலியாக இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களை முஸ்லீம்கள் செபிப்பதற்கு விண்ணப்பம்

மார்ச்15,2011: பிரான்சில் காலியாக இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களை முஸ்லீம்கள் செபிப்பதற்கு வழங்குமாறு முஸ்லீ்ம் குழு ஒன்று கேட்டிரு்ப்பதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
பிரான்ஸ் ஆலய நிர்வாகத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு ஒரு முஸ்லீம் குழு அனுப்பிய கடிதத்தில், காலியான ஆலயங்களை முஸ்லீம்கள் செபிப்பதற்கு வழங்குவதன் மூலம் முஸ்லீம்கள் தெருக்களில் செபிப்பதையும் அரசியல்வாதிகள் பிணையல் கைதிகளாக இருப்பதையும் தடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ஒரு செய்தி நிறுவனம், எகிப்திலும் அல்ஜீரியாவிலும் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செபம் செய்வதற்கு மசூதிகளைக் கேட்டால் என்னவாகும்.
எனவே ஐரோப்பாவில் அதிகரித்து வரும் மோதல்களைத் தவிர்ப்பதற்கு இசுலாம், மனரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மேற்கத்தியவர்களாக மாற வேண்டிய தேவை இருக்கின்றது என்றும் கூறியது. 

7. FAO எச்சரிக்கை : வெப்பநிலை மாற்றத்தால் 75 விழுக்காட்டு பலவகையான உணவுப் பொருட்களின் அறுவடைகள் மறையும் அபாயம்

மார்ச்15,2011: 1900 மற்றும் 2000மாம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகின் வெப்பநிலை மாற்றத்தால் 75 விழுக்காட்டு பலவகையான அறுவடைகள் மறைந்து விட்டன என்று FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் அறிவித்தது.
வேர்கடலை, உருளைக்கிழங்கு, பயிறு வகைகள் போன்ற முக்கிய உணவு வகைகளில் 22 விழுக்காடு வெப்பநிலை மாற்றத்தால் 2055ம் ஆண்டுக்குள் மறையக்கூடும் என்றும் FAO எச்சரித்தது.
இந்தோனேசியாவின் பாலி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் வேளாண்துறை மற்றும் மூத்த அதிகாரிகள் கடந்த வாரத்தில் நடத்திய கூட்டத்தில் இதனை அறிவித்தது FAO நிறுவனம்.

8. இந்தியாவி்ல் கருக்கலைப்பு மாத்திரைக்கு கடுமையான சட்டம்

மார்ச்15,2011: கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்து கொள்ளவும், கருக்கலைப்பிற்கான மாத்திரை பெறுவதிலும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவர இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டின் பல மாவட்டங்களில் ஆண், பெண் சதவீத வேறுபாடு பெரியளவில் காணப்படுகிறது. "சோனோகிராபி' மூலம், முன்பு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்து கருக்கலைப்பு செய்து வந்தனர். இதைத் தடுக்க அரசு விதிமுறைகளைக் கொண்டு வந்தது. ஆனால், தற்போது புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டதால், சட்டதிட்டங்களை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய பொது சுகாதாரத் துறை அமைச்சர் சுரேஷ் ஷெட்டி தலைமையில் டில்லியில் நடந்த கூட்டத்தில், மருத்துவர்கள் மூன்று படிம மருந்து சீட்டை வழங்க வேண்டும். கருக்கலைப்பு மாத்திரை இருப்பு பற்றி மருந்துக் கடையினர் தெரிவிக்க வேண்டும். யாருக்கு மாத்திரை வழங்கப்பட்டது என்பது தொடர்பான முழு தகவலையும் வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...