Thursday, 17 March 2011

Catholic News - hottest and latest - 16 Mar 2011

1. திருத்தந்தை : இத்தாலிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு  மையமாகச் செயல்பட்டவர்கள் கத்தோலிக்கர்

2. வரலாற்று நினைவுகளின் காயங்களைப் புறந்தள்ளி, ஜப்பானியர்களுக்கு உதவும் தென் கொரியாவின் காரித்தாஸ் அமைப்பு

3. நாட்டில் அணு சக்தி நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை

4. ஜப்பான் மக்களுக்காக அயர்லாந்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், திருப்பலியும்

5. தேவ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்ட கிறிஸ்தவர் பாகிஸ்தான் சிறையில் மரணம்

6. பிரித்தானிய அரசின் பிறநாட்டுக் கொள்கைகள் கிறிஸ்தவர்களுக்கு எதிரானவை - கர்தினால் Keith O'Brien

7. Facebook மற்றும் YouTube வழியாக இறையடியார் இரண்டாம் ஜான்பால் குறித்த ஒலி-ஒளி பதிவுகள்

8. பாத்திமா அன்னை திருத்தலத்தில் இறையடியார் இரண்டாம் ஜான்பால் நினைவுக் கொண்டாட்டம்

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இத்தாலிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு  மையமாகச் செயல்பட்டவர்கள் கத்தோலிக்கர்

மார்ச்16,2011. இத்தாலிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு  மையமாகச் செயல்பட்டவர்கள் கத்தோலிக்கரே என்று இப்புதனன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலி, ஒன்றிணைந்த நாடாக அமைந்ததன் 150ம் ஆண்டை முன்னிட்டு இத்தாலிய அரசுத் தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, இத்தாலி நாட்டு வரலாற்றில் கிறிஸ்தவம் மற்றும் திருச்சபையின் பங்கு பற்றிய தனது ஆழமானச் சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இத்தாலியில் மத்திய காலம் தொடங்கி கல்வி, கலை, நலவாழ்வு, புனிதம் உட்பட பல துறைகளில் கிறிஸ்தவம் ஆற்றி வரும் பங்கைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இத்தாலியர்கள் என்ற நிலை உருவாகுவதற்கு ஜியோபெர்த்தி, ரோஸ்மினி, மன்சோனி, பெல்லிக்கோ, புனித ஜான் போஸ்கோ போன்ற பெருந்தலைவர்களை நினைவுகூர்ந்தாலே போதுமானது என்று கூறியுள்ளார்.
1929ம் ஆண்டின் இலாத்தரன் ஒப்பந்தங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ள அவர், பாப்பிறையின் உலகளாவியப் பணிக்கு புதிய திருப்பத்தையும் மிகுந்த பலனையும் இந்த ஒப்பந்தங்கள் கொடுத்தன என்று கூறியுள்ளார்.
இத்தாலியர்கள் சுதந்திரம், நீதி மற்றும் அமைதியின் காரணிகளாகச் செயல்படுவதற்கு அவர்கள் விசுவாச ஒளியில் எப்பொழுதும் வழிநடத்தப்பட வேண்டுமென்று தான் செபிப்பதாகவும் அச்செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இத்தாலி, ஒன்றிணைந்த நாடாக அமைந்ததன் 150ம் ஆண்டு மார்ச் 17, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படுகிறது. இதனையொட்டி இத்தாலிய அரசுத் தலைவர் மாளிகையில் அரசுத் தலைவரைச் சந்தித்து திருத்தந்தையின் இந்த வாழ்த்துச் செய்தியை இப்புதனன்று வழங்கினார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே. இவ்வியாழனன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் கர்தினால் கலந்து கொள்வார். இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ தலைமையில் அப்பேரவையும் தூதர்களின் மரியா பசிலிக்காவில் இவ்வியாழனன்று திருப்பலி நிகழ்த்தி இவ்விழாவைச் சிறப்பிக்கின்றது.


2. வரலாற்று நினைவுகளின் காயங்களைப் புறந்தள்ளி, ஜப்பானியர்களுக்கு உதவி செய்ய தென் கொரிய காரித்தாஸ் அழைப்பு  

மார்ச் 16,2011. ஜப்பானில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரழிவு மற்றும் அணுக்கதிர் வீச்சு ஆபத்து ஆகியவைகளிலிருந்து அம்மக்களைக் காப்பாற்ற செபிக்கும்படியும் நிதி உதவிகள் செய்யும்படியும் தென்கொரியாவின் கர்தினால் Nicholas Cheong Jin-suk மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை அனுப்பியுள்ளார்.
Seoul உயர்மறைமாவட்டத்தின் சார்பில் 50,000 டாலர்கள் உடனடியாக அளிப்பதாகவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
கொரிய ஆயர் பேரவை அந்நாட்டின் 16 மறைமாவட்டங்களிலும் நிதிகள் திரட்டி ஜப்பானுக்கு அனுப்ப முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று கொரிய ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Peter Kang U-il செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜப்பானும், தென் கொரியாவும் வரலாற்றில் பெரும் எதிரிகளாய் இருந்த இரு நாடுகள். இவ்விடர் நேரத்தில் தங்கள் வரலாற்றுப் பகையை மறந்து அம்மக்களுக்கு பல வழிகளிலும் உதவுவதற்கு கொரிய மக்களை அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு தூண்டி வருகின்றது.
ஜப்பான் நாட்டைக் குறித்து நமது  வரலாற்று நினைவுகள் காயப்பட்டவைகளாக இருந்தாலும், இந்நேரத்தில் அவைகளைப் புறந்தள்ளி, அவர்களுக்கு செபத்தாலும், இன்னும் பிற வழிகளிலும் உதவ முன் வர வேண்டுமென்று கொரிய காரித்தாஸ் அமைப்பின் தலைவரும், Daejon மறைமாவட்டத்தின் ஆயருமான Lazzaro You Heung-sik கூறினார்.
கொரிய காரித்தாஸ் அமைப்பு ஜப்பான் மக்களுக்கு உடனடியாக 100,000 டாலர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
கத்தோலிக்கர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் போலவே, பிற கிறிஸ்தவ அமைப்புக்களும், புத்த அமைப்புக்களும் தங்கள் குழுக்களை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.


3. நாட்டில் அணு சக்தி நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை

மார்ச் 16,2011. ஜப்பானில் தொடர்ந்து வரும் அணுக் கதிர்வீச்சு ஆபத்துக்களைப் பார்க்கும்போது, பிலிப்பின்ஸ் நாட்டில் அணு சக்தி நிலையங்களுக்கு தாங்கள் தெரிவித்து வந்த எதிர்ப்பு நியாயமானதே என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டில் Bataan பகுதியில் இயங்கவிருந்த அணுசக்தி நிலையத்திற்கு ஆரம்பத்திலிருந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தது அந்நாட்டின் ஆயர் பேரவை.
1970களில் Marcosன் சர்வாதிகார ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணு மின் நிலையம், பல்வேறு காரணங்களால் இன்னும் இயங்க ஆரம்பிக்கவில்லை. தலை நகர் மணிலாவுக்கு 60 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தை இனி ஆரம்பிக்காமல் இருப்பதே நாட்டுக்கு நல்லதென்று ஆயர்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
அணு  சக்தியை நம்புவது ஆபத்தை விளைவிக்கும் என்று ஆயர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூறிவந்திருப்பதற்குத் தகுந்த ஒரு நிரூபணமாக ஜப்பான் சந்தித்துள்ள ஆபத்துக்கள் அமைந்துள்ளன என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவைப் பொதுநலக் குழுவின் தலைவர் ஆயர் Deogracias Iniguez கூறினார்.


4. ஜப்பான் மக்களுக்காக அயர்லாந்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், திருப்பலியும்

மார்ச் 16,2011. வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஜப்பான் மக்களுக்காக அயர்லாந்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், திருப்பலியும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அயர்லாந்து கர்தினால் Seán Baptist Brady மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட வகையிலும், குடும்பமாகவும், பங்குத் தளங்களிலும் நாம் மேற்கொள்ளும் செபங்களை ஜப்பான் மக்களுக்காக, சிறப்பாக அங்குள்ள குழந்தைகளுக்காக எழுப்புவோம் என்று அயர்லாந்து ஆயர் பேரவையின் சார்பில் அனைத்து பங்குகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள மடல் கூறுகிறது.
இத்தருணத்தையொட்டி, ஆயர் பேரவை ஆங்கிலம், ஜப்பானியம்  ஆகிய இரு மொழிகளிலும் சிறப்பு செபங்களை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் பயன்படுத்துமாறு, இச்செபம் ஒரு வீடியோ பதிவாகவும் வெளியாகியுள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. தேவ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்ட கிறிஸ்தவர் பாகிஸ்தான் சிறையில் மரணம்

மார்ச் 16,2011. தேவ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்ட Qamar David என்ற கிறிஸ்தவர் இத்திங்கள் நள்ளிரவு, அல்லது செவ்வாய் அதிகாலையில் பாகிஸ்தான் சிறையில் மரணம் அடைந்தார். இவர் மாரடைப்பால் காலமானார் என்று காவல் துறை அறிவித்துள்ளது.
நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான Davidன் உடல் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசொதனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதென்றும், அப்பரிசோதனையின் முடிவுகள் அவரது மரணம் குறித்தத் தெளிவை ஏற்படுத்தும் என்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தலத்திருச்சபையும், பிற கிறிஸ்தவ அமைப்புக்களும் இம்மரணம் குறித்த முழு விசாரணையை அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளன.
Qamar David என்ற 56 வயது நிறைந்த ஓவியர், லாகூருக்கு அருகே பிறந்தவர். 2006ம் ஆண்டு David உடன் எழுந்த தொழில் போட்டியினால் வேறொரு இஸ்லாமியர் இவர் தேவ நிந்தனை குற்றம் புரிந்ததாக வழக்கு தொடர்ந்தார்.   இவர் 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேவ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டார்.
இம்மாதம் இரண்டாம் தேதி கொலையுண்ட பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhattiன் மரணம் தந்த வேதனையிலிருந்து மீள்வதற்கு முன், மீண்டும் ஒரு மரணத்தைச் சந்தித்திருப்பது ஆழ்ந்த கவலையை உருவாக்கியுள்ளதென்று இராவல்பிண்டி ஆயர் Rufin Anthony ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களின் இரத்தத்தைக் குடித்து வரும் இந்த தேவ நிந்தனைச் சட்டத்தை இந்த நாட்டிலிருந்து அகற்ற இன்னும் எத்தனை உயிர்களைத் தியாகம் செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளதென்று ஆயர் Anthony மேலும் கூறினார்.
இதற்கிடையே, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளுக்குப் பயந்து ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இப்புதனன்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், லாகூரைச் சேர்ந்த Jamia Naeemia என்ற ஒரு இஸ்லாமிய நிறுவனத்தின் பதிவேட்டின்படி, 2009ம் ஆண்டில் 678 கிறிஸ்தவர்களும், 2010ல் 693 கிறிஸ்தவர்களும் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர், மற்றும் இவ்வாண்டின் முதல் இரு மாதங்களில் இந்த எண்ணிக்கை 95 ஆக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


6. பிரித்தானிய அரசின் பிறநாட்டுக் கொள்கைகள் கிறிஸ்தவர்களுக்கு எதிரானவை - கர்தினால் Keith O'Brien

மார்ச் 16,2011. பிரித்தானிய அரசின் பிறநாட்டுக் கொள்கைகள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொள்கைகளாக உள்ளன என்று அந்நாட்டின் கர்தினால் Keith O'Brien கூறினார்.
பிரித்தானிய அரசு அண்மையில் பாகிஸ்தானுக்கு 44 கோடியே 50 லட்சம் பவுண்டுகள் நிதி உதவி ஒதுக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் O'Brien மதச் சுதந்திரம் பல்வேறு வழிகளில் பறிக்கப்படும் அந்நாட்டில் மதச் சுதந்திரம் உறுதி செய்யப்படாமல் அளிக்கப்படும் உதவிகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.
உலகின் பல   நாடுகளிலும் மத அடிப்படையில் எழும் வன்முறைகளுக்கு கிறிஸ்தவர்களே பெரும்பாலும் ஆளாகின்றனர்  என்பதைக் குறிக்கும் ஒரு கருத்துக் கணிப்பு Aid to the Church in Need என்ற அமைப்பு இச்செவ்வாயன்று வெளியிட்டிருந்தது.
இக்கருத்துக் கணிப்பின்படி, உலகின் பல பகுதிகளில் 11 கோடியே பத்து லட்சம் கிறிஸ்தவர்கள் பல்வேறு வன்முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. மத வன்முறைகளுக்கு ஆளாகும் மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களே என்றும் இக்கணிப்பு கூறுகிறது.
இவ்வறிக்கையைக் குறித்துப் பேசிய கர்தினால் O'Brien பாகிஸ்தான், மற்றும் பிற அரபு நாடுகளில் மத சுதந்திரம் வெகுவாக குலைந்துள்ளதென்றும் இதனால் அடிப்படை மனித உரிமைகளும் அங்கு அழிந்து வருகிறதென்றும் கூறினார்.


7. Facebook மற்றும் YouTube வழியாக இறையடியார் இரண்டாம் ஜான்பால் குறித்த ஒலி-ஒளி பதிவுகள்

மார்ச் 16,2011. மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் மே மாதம் முதல் நாளன்று முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படுவதையொட்டி, Facebook மற்றும் YouTube வழியாக அவரை மக்கள் இன்னும் அதிகம் அறிந்துகொள்வதற்கான முயற்சிகளில் வத்திக்கான் வானொலியும், வத்திக்கான் தொலைக்காட்சியும் இணைந்து இறங்கியுள்ளன.
இறையடியார் இரண்டாம் ஜான்பால் திருச்சபையின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோ பதிவுகளையும், அவரது பல்வேறு உரைகளின் குரலோலியையும் இணையதளத்தின் மூலம் பலரும் பார்க்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று    வத்திக்கான் பத்திரிகை அலுவலகம் இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே YouTubeல் உள்ள வத்திக்கான் அலைவரிசை (Vatican Channel) அன்றி, இரண்டாம் ஜான்பால் அலைவரிசை (John Paul II channel) வழியாக அவரது வாழ்க்கை வரலாற்றையும், மே மாதம் முதல் நாள் குறித்த பல்வேறு விவரங்களையும் மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.


8. பாத்திமா அன்னை திருத்தலத்தில் இறையடியார் இரண்டாம் ஜான்பால் நினைவுக் கொண்டாட்டம்

மார்ச் 16,2011. இறையடியார் இரண்டாம் ஜான்பால் முத்திபேறு பெற்றவராய் உயர்த்தப்படும் தருணத்தைப் போர்த்துக்கல் நாட்டில் மே மாதம் 13ம் தேதி பாத்திமா அன்னை திருநாளன்று கொண்டாடப் போவதாக போர்த்துக்கல் ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் போர்த்துக்கல்லில் உள்ள பாத்திமா அன்னையின் திருத்தலத்திற்கு மும்முறை சென்றுள்ளார். 1981ம் ஆண்டு பாத்திமா அன்னை திருநாளன்று உரோமையில் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் அவர் மீது கொலை முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு, அவர் அதிலிருந்து தப்பித்தார்.
அதற்கடுத்த ஆண்டு 1982ல் அதே பாத்திமா அன்னை திருநாளன்று அவர் அத்திருத்தலத்திற்கு முதல் முறையாக சென்று நன்றி செலுத்தினார். அவர் தலைமைப் பொறுப்பில் இருந்த பொது, 1991 மற்றும் 2000 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் பாத்திமா அன்னையின் திருத்தலத்திற்கு திருப்பயணங்கள் மேற்கொண்டார்.
மே மாதம் முதல் தேதியன்று முத்திபேறு பெற்றவராக இறையடியார் இரண்டாம் ஜான்பால் உயர்த்தப்பட்டபின், அப்பெருமையைக் கொண்டாட மே மாதம் 13ம் தேதி பாத்திமா அன்னையின் திருத்தலத்தில் போர்த்துக்கல் மக்கள் கூடிவருவது பொருத்தமான ஒரு நிகழ்ச்சி என்று திருத்தலத்தின் அதிபர் அருள்தந்தை Virgilio Antunes கூறினார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...