Friday, 11 March 2011

Catholic News - hottest and latest - 11 Mar 2011

1. திருத்தந்தை : ஏழைகளுக்கு உதவம் போது நிறைவாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்கின்றது

2. ஆசியாவின் புதிய உலகில் கலாச்சாரத்தை வளர்க்கத் திருப்பீடம் முயற்சி

3. கர்தினால் சாரா : புருண்டி நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபையின்  பணிகளுக்கு அரசுத் தலைவர் நன்றி

4. திருப்பீட அதிகாரி : கல்வியும் சமய சுதந்திரமும் ஒன்றையொன்று வலுவடையச் செய்ய முடியும்

5. ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தோலிக்கக் காரித்தாஸ் உதவி

6. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்படச் செபிக்க அழைப்பு

7. கென்யக் கத்தோலிக்கத் திருச்சபை அந்நாட்டின் புதிய அரசியலமைப்பு பற்றி விளக்கி  வருகிறது

8. உலகின் மிகப் பெரிய திருச்சிலுவைப்பாதை உரோம் Via della Conciliazione ஒப்புரவுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது

9. இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்க நாட்டிலுள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் ஐ.நா.அறிக்கை

10. அமெரிக்காவில் புற்றுநோயாளிகள் அதிகம் : ஆய்வில் தகவல்

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : ஏழைகளுக்கு உதவம் போது நிறைவாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்கின்றது

மார்ச்11,2011. தேவையில் இருப்போருக்கு உதவி செய்யும் போது அது நம்மைக் கடவுளுக்கு மிக நெருக்கமாக இட்டுச் செல்கின்றது மற்றும் அவரது அன்பிலிருந்து கிடைக்கும் நிறைவாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். 
புனித பேதுருவின் வழிவரும் திருத்தந்தையருக்கு உதவும் Pro Petri Sede என்ற பெல்ஜிய நாட்டுப் பிறரன்பு அமைப்பின் 45 பேரை இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, வறியவர்க்கு உதவி செய்யும் போது அது நம்மில் மனமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது என்றும் கூறினார்.
நாம் தொடங்கியிருக்கும் இத்தவக்காலம், ஏழைகளுக்கு உதவி செய்வதற்கான நமது பொறுப்புணர்வை அதிகமாக உணரச் செய்கின்றது என்றுரைத்தத் திருத்தந்தை, உலகில் அண்மைக் காலங்களில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்ட, சிறப்பாக ஹெய்ட்டியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த Pro Petri Sede அமைப்பினர் செய்த அனைத்து உதவிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.    


2. ஆசியாவின் புதிய உலகில் கலாச்சாரத்தை வளர்க்கத் திருப்பீடம் முயற்சி

மார்ச்11,2011. ஆசியக் கண்டத்தில் புதியதோர் உலகம் உருவாக்கப்படவும் அப்பகுதியில் பல்வேறு கலாச்சாரங்களுக்கு மத்தியில் புரிந்து கொள்ளுதலையும் நல்லிணக்க வாழ்வையும் ஏற்படுத்தவும் திருப்பீடம் முயற்சித்து வருகிறது.
திருப்பீடத்துக்கான 20 ஆசிய நாடுகளின் தூதர்களுடன் இவ்வியாழனன்று கூட்டம் நடத்திய திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி கலாச்சார மேம்பாட்டிற்கு பொருளாதாரத்தின் இன்றியமையாத கூறு பற்றி விளக்கினார்.
ஒவ்வொரு நாடும் பொருளாதாரத்தை வளர்க்க உதவுவதன் மூலம் கலாச்சார மேம்பாட்டிற்கு உதவ முடியும் என்றும் அவர் கூறினார். 


3. கர்தினால் சாரா : புருண்டி நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபையின்  பணிகளுக்கு அரசுத் தலைவர் நன்றி

மார்ச்11,2011. கல்வி, நலவாழ்வு, வளர்ச்சி போன்ற துறைகளில் கத்தோலிக்கத் திருச்சபை தனது காரித்தாஸ் நிறுவனத்தின் வழியாகச் செய்து வரும் பணிகளுக்குப் புருண்டி நாட்டு அரசுத் தலைவர் Pierre Nkurunziza நன்றி தெரிவித்ததாகக் கூறினார் கர்தினால் இராபர்ட் சாரா.
ஆப்ரிக்க நாடான புருண்டிக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் Muyaga நகரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பெயரில் இச்சனிக்கிழமை புதி்ய பள்ளி ஒன்றைத் திறந்து வைத்துத் திரும்பியுள்ளத் திருப்பீட Cor Unum பிறரன்பு அவையின் தலைவரான கர்தினால் சாரா இவ்வாறு கூறினார்.
இந்தப் பள்ளித் தொடங்கப்பட்டுள்ள Cankuzo பகுதியில் குறைந்தது ஐந்து இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்ல வசதியில்லாமல் இருப்பதால் இப்புதிய பள்ளி உண்மையிலேயே அம்மக்களுக்கு இறைவனின் கொடையாக இருக்கின்றது என்றார் கர்தினால்.
புருண்டியில் சுமார் 40 விழுக்காட்டினர் கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பதைச் சுட்டிக் காட்டிய கர்தினால் சாரா, அந்நாட்டின் அரசுத் தலைவர், கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றிவரும் நற்பணிகளைப் பாராட்டியதோடு, திருப்பீடத்தோடு விரைவில் ஓர் உடன்பாடு ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதையும் குறிப்பிட்டார்.
இப்புதிய பள்ளி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய நிதியுதவியைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் இடம் பெற்ற அந்நாட்டில் தற்போது ஹூட்டு மற்றும் டுட்சி இன மக்கள் நல்லிணக்கத்துடன் வாழத் தொடங்கியிருப்பதாகவும் கர்தினால் சாரா வத்திக்கான் வானொலிக்கு அளித்தப் பேட்டியில் கூறினார். 


4. திருப்பீட அதிகாரி : கல்வியும் சமய சுதந்திரமும் ஒன்றையொன்று வலுவடையச் செய்ய முடியும்

மார்ச்11,2011. கல்வியும் சமய சுதந்திரமும் ஒன்றையொன்று வலுவடையச் செய்ய முடியும் என்பதால் இக்கல்வியின் வழியாக ஒவ்வொரு மாணவனின் இன்றியமையாத மாண்பு மதிப்படையச் செய்ய இயலும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் நடைபெறும் 16வது மனித உரிமைகள் அவையில் சமயச் சுதந்திரம் குறித்து இவ்வியாழனன்று உரையாற்றிய ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு தெரிவித்தார்.
கல்விக்கும் சமய சுதந்திரத்திற்கும் இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பு குறித்து விளக்கிய பேராயர் தொமாசி, எல்லா அடிப்படை உரிமைகளும் சமமாக மதிக்கப்படும் போது பாகுபாடுகளைத் தடுக்க முடியும் என்று கூறினார்.


5. ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தோலிக்கக் காரித்தாஸ் உதவி

மார்ச்11,2011. ஜப்பானில் இவ்வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து இடம் பெற்ற சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் செய்வதில் முனைந்துள்ளது ஜப்பான் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு.
ஆசியக் காரித்தாஸின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும் ஜப்பான் காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான ஆயர் Isao Kikuchi இதில் பாதிக்கப்பட்ட மக்களுடனும் ஜப்பான் சிறுபான்மை கத்தோலிக்கச் சமூகத்துடனும் தனது ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று Fides செய்தி நிறுவனம் அறிவித்தது.
ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளில் 8.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. சில இடங்களில் இடிந்த கட்டடங்களும் எண்ணெய் கிணறுகளும் தீப்பற்றி எரிந்தன. மியாகி (Miyagi) தீவுப் பகுதியில் பத்து மீட்டர் உயர இராட்சத அலை எழும்பியதால் தண்ணீர் வீடுகளில் புகுந்து மூழ்கின. இதனால் விமான நிலையங்கள் மூடப்பட்டடன.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேசியா, பாப்புவா நியுகினி, தாய்வான், பிலிப்பைன்ஸ் போன்ற பசிபிக் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜப்பானில் இந்த ஒரு வார காலத்திற்குள் இது 2வது பெரிய நிலநடுக்கம் ஆகும்.


6. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்படச் செபிக்க அழைப்பு

மார்ச் 11,2011. எகிப்து, லிபியா, டுனிசியா போன்ற நாடுகளில் அமைதி ஏற்படுவதற்காக இத்தவக்காலத்தில் செபிக்கவும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டுமென மெல்கித்தேரீதி கிரேக்கக் கத்தோலிக்கத் திருச்சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் கிரகோரியுஸ் கேட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடங்கியது முதல் சில அரபு நாடுகளில் எழுந்துள்ள கிளர்ச்சிகள் பற்றித் தனது தவக்காலச் செய்தியில் குறிப்பிட்டுள்ள அவர், அந்நாடுகளின் மக்கள் துன்பங்களிலிருந்து வெளிவந்து உயிர்ப்பைக் காண உதவுவோம் எனக் கூறியுள்ளார்.
முதுபெரும் தலைவர் மூன்றாம் கிரகோரியுஸ், சுமார் 16 இலட்சம் கீழைரீதி கத்தோலிக்கருக்குத் தலைவராக இருக்கிறார். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா மற்றும் லெபனன் நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்


7. கென்யக் கத்தோலிக்கத் திருச்சபை அந்நாட்டின் புதிய அரசியலமைப்பு பற்றி விளக்கி  வருகிறது

மார்ச்11,2011. கென்யக் கத்தோலிக்கத் திருச்சபை இத்தவக்கால நடவடிக்கையாக  அந்நாட்டின் புதிய அரசியலமைப்பு பற்றியத் தெளிவை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
கென்யக் கத்தோலிக்க நீதி மற்றும் அமைதி அவை நடத்தி வரும் இத்தவக்கால நடவடிக்கையில் மனித வியாபாரம் முதல் தலைமைத்துவம் வரை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் பற்றிப் பேசிய அந்த அவைத் தலைவர் பேராயர் சக்கேயுஸ் ஓகோத், புதிய அரசியலமைப்பு பற்றி அரசியல்வாதிகள் சொல்வதன்படி மக்கள் செல்லாமல் அதில் அடங்கியுள்ள உண்மையான சாராம்சங்களைத் திருச்சபை எடுத்துரைத்து வருகிறது என்றார்.
ஆப்ரிக்க நாடான கென்யாவில் இப்புதிய அரசியலமைப்பு 2012ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னரே அமலுக்கு வரும்.


8. உலகின் மிகப் பெரிய திருச்சிலுவைப்பாதை உரோம் Via della Conciliazione ஒப்புரவுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது

மார்ச் 11,2011. ஆள் உயர உருவங்களால் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய திருச்சிலுவைப்பாதை வத்திக்கான் பேதுரு பசிலிக்கா பேராலயத்தை நோக்கி அமைந்திருக்கும் Via della Conciliazione என்ற ஒப்புரவுச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இயேசுவின் திருப்பாடுகளைச் சித்தரிக்கும் 14 தலங்களைக் கொண்ட இந்தத் திருச்சிலுவைப்பாதையில் 49 உருவங்களும் 11 சிலுவைகளும்  வைக்கப்பட்டுள்ளன. Brunelleschi, Donatello ஆகிய கலைஞர்களின் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி, இவ்வுருவங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளன.
தென் அமெரிக்க நாடான சிலே நாட்டின் Coquimbo நகரத்தில் வைக்கப்படுவதற்கென “Fundacion Cruz del III Milenio" என்ற மூன்றாம் மில்லென்யத்தின் திருச்சிலுவை அமைப்பு இத்திட்டத்தைத் தொடங்கியது. Pasquale Nava, Giuseppe Allamprese ஆகிய சிற்பிகள் இந்த உருவங்கள் அமைக்கும் வேலையை 2002ம் ஆண்டு தொடங்கினர். இதற்கு 22 ஆயிரம் பவுண்டு வெண்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உருவங்கள் அமைக்கும் இப்பணிகள் உரோம் விண்ணகப் போதகரின் பக்தச் சீடர்கள்   பெண் அருட்சகோதரிகள் சபையினரின் இடத்தில் நடந்தன.
உரோம் Via della Conciliazione சாலையில் வைக்கப்பட்டுள்ள இச்சிலுவைப்பாதையை வத்திக்கான் பசிலிக்கா தலைமைக்குரு கர்தினால் Angelo Comastri இஞ்ஞாயிறு பகல் 11.30 மணிக்கு ஆசீர்வதித்து தவக்காலச் சிந்தனைகளை வழங்குவார். இச்சிலுவைப்பாதையின் முதல் தலத்தை இந்த மார்ச் முதல் தேதியன்று புதன் மறைபோதகத்திற்குப் பின்னர் திருத்தந்தை ஆசீர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தவக்காலம் தொடங்கி, வருகிற ஏப்ரல் 29 வரை இது உரோம் Via della Conciliazione சாலையில் வைக்கப்பட்டிருக்கும்.
இத்தாலி மற்றும் திருப்பீடத்தின் இறையாண்மையை அங்கீகரிக்கும் வகையில் 1929ம் ஆண்டு ஏற்பட்ட இலாத்தரன் ஒப்பந்தத்தைக் கொண்டாடும் வகையில் அதே ஆண்டில் பெனித்தோ முசோலினி இந்த Via della Conciliazione சாலையைத் திறந்து வைத்தார்.
சிலே நாட்டு “Fundacion Cruz del III Milenio" என்ற அமைப்பானது 1987ல் திருத்தந்தை 2ம் ஜான் பால் அந்நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொண்டதன் பலனாக உருவாக்கப்பட்டது. 1998ல் 280 அடி உயரச் சிலுவை Coquimbo நகரில் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த சிலுவைப்பாதை அங்கு வைக்கப்படவுள்ளது.


9. இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்க நாட்டிலுள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் ஐ.நா.அறிக்கை

மார்ச் 11,2011. நிலநடுக்கம், வறட்சி, புயல் ஆகிய பல்வேறு இயற்கைப் பேரிடர்களைச் சந்திக்கும் வழிகளை ஒவ்வொரு நாடும் ஆராய வேண்டுமென்று ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது.
ஒவ்வொரு நாடும் பேரிடர்களைச் சந்திக்க தங்கள் நாடு எவ்வகையில் தயாராய் உள்ளதென்ற கணிப்பை மேற்கொள்ள வேண்டுமென்றும், இக்கணிப்பு தரமும் தகுதியும் வாய்ந்த அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் ஐ.நா.வின் பேரிடர் ஆபத்து குறைப்பு குழுவின் நிர்வாகச் செயலர் Margareta Wahlstrom இவ்வியாழனன்று கூறினார்.
ஒவ்வொரு நாட்டிலும் இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்கும் சக்தி இருந்தாலும் அவற்றை ஒருங்கிணைப்பதில் தடைகளும் தாமதங்களும் இருப்பதாலேயே இவ்விடர்களில் பெரும் இழப்பையும், அழிவையும் சந்திக்க வேண்டியுள்ளதென Wahlstrom எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு பேரிடர் நேரத்திலும் அரசு மற்றும் பொதுச் சேவைகள் செயல்பட்டால் மட்டும் போதாது, தனிப்பட்டவர்களும் இணைந்து இவ்விடர் களையும் செயல்பாடுகளில் ஈடுபடுவதே நன்மை பயக்கும் என்று ஐ.நா.வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.


10. அமெரிக்காவில் புற்றுநோயாளிகள் அதிகம் : ஆய்வில் தகவல்

மார்ச்11,2011: அமெரிக்காவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம், நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் ஆகியன இணைந்து 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நடத்திய ஆய்வில், 2001-ம் ஆண்டு புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 9.8 விழுக்காட்டிலிருந்து 2007ம் ஆண்டில் 11.07 விழுக்காடாக அதிகரித்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
நாட்டில் 65 வயதைக் கடந்த ஆண்கள், பெண்கள் புற்றுநோயினால் அவதியுறுகின்றனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
மேலும் 54 விழுக்காட்டுப் பெண்கள் மார்புப் புற்றுநோயினால் அவதியுறுகின்றனர். இது தவிர, 47 இலட்சம் மக்கள் பல்வேறு நோய்க் கொடுமையினால் வாழ்ந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...