1. சாம்பல் புதன் பவனியை திருத்தந்தை வழிநடத்திச் செல்வார்
2. ஸ்பெயினில் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் 60ம் ஆண்டு குருத்துவ விழா
3. பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியவர் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு அமெரிக்க ஆயர் கண்டனம்
4. அமைச்சர் ஷபாஸ் பாட்டியின் இறப்பால் வருந்தும் பாகிஸ்தான் ஆயர்களுக்கு கானடா ஆயர்கள் அனுதாபம்
5. கரீபியன் நாடுகளில் ஆயுதப் புழக்கத்தை நிறுத்துவதற்குக் கானடாவிலுள்ள கிறிஸ்தவ சபைகள் நடவடிக்கை
6. லிபியாவில் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு இயேசு சபையினர் அழைப்பு
7. மார்ச் 8 அனைத்துலக பெண்கள் தினம், பான் கி மூனின் செய்தி
8. இந்த பிப்ரவரியில் உலக அளவில் அடிப்படை உணவுப் பொருட்களின் விலை அதிகம்
9. 'ஐவரிகோஸ்ட்'- ஒரு போர்ச்சூழல்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. சாம்பல் புதன் பவனியை திருத்தந்தை வழிநடத்திச் செல்வார்
மார்ச்05,2011. பாரம்பரியாக இடம் பெற்று வரும் சாம்பல் புதன் பவனியை திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உரோம் Aventine குன்றிலுள்ள புனித Anselm ஆலயத்திலிருந்து புனித சபினா பசிலிக்காவுக்கு வழிநடத்திச் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தவக்காலம் தொடங்கும் சாம்பல் புதனான, மார்ச் 9, வருகின்ற புதன் மாலை உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு இந்தப் பவனி தொடங்கும்.
தபத்துடன் நடைபெறும் இப்பவனியில் கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், புனித ஆன்செல்ம் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிகள், புனித சபினா பசிலிக்காவிலுள்ள தொமினிக்கன் குருக்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் கலந்து கொள்வார்கள்.
இதைத் தொடர்ந்து புனித சபினா பசிலிக்காவில் திருத்தந்தை திருப்பலியும் நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஸ்பெயினில் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் 60ம் ஆண்டு குருத்துவ விழா
மார்ச்05,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் 60ம் ஆண்டு குருத்துவ விழாவை முன்னிட்டு ஸ்பெயினின் Murcia அந்தோணியோ கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் வருகிற அக்டோபர் 26 முதல் 30 வரை அனைத்துலக மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்- மூன்றாவது மில்லென்யத்திற்கான திருத்தந்தை என்ற தலைப்பில் நடைபெறும் இம்மாநாட்டை திருப்பீட இறைவழிபாடு மற்றும் திருவருட்சாதனப் பேராயத் தலைவர் கர்தினால் Antonio Canizares தலைமை தாங்கி நடத்துவார்.
உலகெங்கிலுமிருந்து வல்லுனர்கள் கலந்து கொண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்டின் வாழ்வு, பணிகள் மற்றும் எழுத்துக்கள் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
3. பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியவர் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு அமெரிக்க ஆயர் கண்டனம்
மார்ச்05,2011. பாகிஸ்தானில் அனைத்துச் சிறுபான்மையினரின் குறிப்பாகக் கிறிஸ்தவரின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய அமைச்சர் ஷபாஸ் பாட்டி கொலை செய்யப்பட்டதற்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சர்வதேச நீதி மற்றும் அமைதி விவகார ஆணையத் தலைவர் ஆயர் Howard Hubbard தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் ஷபாஸ் பாட்டி, பாகிஸ்தான் சமுதாயத்தில் சமய சகிப்புத்தன்மையை வளர்க்கும் நோக்கத்தில் பல்சமய உரையாடலை ஊக்குவித்து வந்தவர் என்றும் அவரின் தைரியமிக்க குரல் மௌனப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆயர் Hubbard கூறினார்.
ஷபாஸ் பாட்டியின் கொலை, வன்முறையின் விவரிக்க முடியாத செயல் என்றுரைத்த ஆயர், வன்முறையால் நசுக்கப்படும் கிறிஸ்தவர்கள் மற்றும் சமய சுதந்திரம் உடனடியாகப் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தை ஒவ்வொருவரும் உணருமாறு வலியுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்படும் சிறுபான்மை சமூகங்கள் உட்பட அனைத்துக் குடிமக்களின் மனித உரிமைகளும் சமய சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதற்குத் தெளிவான நடவடிக்கைகள் எடுப்பதில் பாகிஸ்தான் அரசுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு சேர்ந்து செயல்படுமாறு ஆயர் கேட்டுள்ளார்.
4. அமைச்சர் ஷபாஸ் பாட்டியின் இறப்பால் வருந்தும் பாகிஸ்தான் ஆயர்களுக்கு கானடா ஆயர்கள் அனுதாபம்
மார்ச்05,2011. பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவராக இருந்த அமைச்சர் ஷபாஸ் பாட்டியின் இறப்பால் வருந்தும் பாகிஸ்தான் ஆயர்களுடன் தங்களது ஒருமைப்பாட்டுணர்வைப் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளனர் கானடா ஆயர்கள்
பாகிஸ்தான் சிறுபான்மைத்துறை அமைச்சர் ஷபாஸ் பாட்டி கொலை செய்யப்பட்டதற்கு கானடா பிரதமர் கண்டனம் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட கானடா கத்தோலிக்க ஆயர்கள், கடந்த மாதத்தில் ஷபாஸ் பாட்டி கானடாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது கானடா அமைச்சர்கள் அவரைச் சந்தித்த நிகழ்வுகளையும் குறிப்பிட்டுள்ளனர்.
சமய சுதந்திரத்தையும், மனச்சான்றின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி சிறுபான்மை சமூகங்களைக் குறிவைக்கும் தேவநிந்தனைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான ஷபாஸ் பாட்டியின் முயற்சிகள் ஊக்கப்படுத்தப்பட்டதையும் ஆயர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.
கானடா நாட்டு வெளிநாட்டுக் கொள்கையில் சமய சுதந்திரம், மனச்சான்றின் சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு ஆயர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமய சுதந்திரமும், மனச்சான்றின் சுதந்திரமும் அனைத்து மனித சுதந்திரங்களுக்கும் மிக முக்கியமானது எனறு குறிப்பிட்டு இதனாலே கானடாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு கேட்பதாக ஆயர்கள் கூறியுள்ளனர்.
மேலும், அமைச்சர் ஷபாஸ் பாட்டியின் ஆன்ம சாந்திக்காக உரோமையிலுள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள், இஞ்ஞாயிறு மாலைத் திருப்பலி நிகழ்த்தவுள்ளனர். இதனைத் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran தலைமை தாங்கி நடத்துகிறார்.
5. கரீபியன் நாடுகளில் ஆயுதப் புழக்கத்தை நிறுத்துவதற்குக் கானடாவிலுள்ள கிறிஸ்தவ சபைகள் நடவடிக்கை
மார்ச்05,2011. கரீபியன் நாடுகளில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பெருமளவாகப் புழக்கத்தில் இருப்பதை நிறுத்துவதற்கான கானடா அரசின் முயற்சிகளுக்கு அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளும் தங்கள் ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளன.
வெளிப்படையாக நடைபெறும் சில போர்களில் இடம் பெறும் இறப்புக்களைவிட துப்பாக்கி வன்முறையால் ஜமெய்க்கா நாட்டில் அதிகமான பேர் இறக்கின்றனர் என்றுரைத்தக் கானடக் கிறிஸ்தவ சபைகள் அவை இயக்குனர் John Siebert, ஒரு இலட்சம் ஜமெய்க்கா மக்களுக்கு ஆறு பேர் வீதம் கொல்லப்படுகின்றனர், இவர்களில் பெரும்பாலான மக்கள் துப்பாக்கிக்குப் பலியாகின்றனர் என்றார்.
கரீபியன் நாடுகளில் ஆயுதப் புழக்கத்தை நிறுத்துவதற்கென, கானடா வெளிவிவகாரத் துறை மற்றும் சர்வதேச வணிகத் துறையின்கீழ் 24 இலட்சம் டாலர் கொண்ட மூன்றாண்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
6. லிபியாவில் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு இயேசு சபையினர் அழைப்பு
மார்ச்05,2011. லிபியாவில் இடம் பெறும் படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கும் அம்மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் சர்வதேச சமுதாயம் உடனடியாகச் செயல்படுமாறு மால்ட்டாவிலுள்ள விசுவாசம் மற்றும் நீதிக்கான இயேசு சபை மையம் அழைப்பு விடுத்துள்ளது.
இயேசு கல்வாரி மலைக்குச் சிலுவை சுமந்து சென்ற போது சீமோன் என்ற நவீனகால லிபியாவிலிருந்து ஒரு மனிதர் அவருக்கு உதவி செய்வதற்கு உரோமைப் படைவீரர்களால் கட்டளையிடப்பட்டார் என்று கூறும் இந்த இயேசு சபை மையத்தின் அறிக்கை, இன்று லிபியாவில் மக்களின் கல்வாரித் துன்பத்தைக் காண முடிகின்றது என்று கூறுகிறது.
இதற்கிடையே, லிபியாவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கத்தோலிக்கக் காரித்தாஸ் குழுக்கள் உதவி செய்து வருகின்றன.
ஆசியா மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த குடியேற்றதாரர்கள் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு அதன் எல்லைகளில் இரண்டு முதல் ஆறு நாள்கள் வரைக் காத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது.
7. மார்ச் 8 அனைத்துலக பெண்கள் தினம், பான் கி மூனின் செய்தி
மார்ச்05,2011. சமுதாயத்தில் பெண்களின் முழுமையான, சமத்துவமான பங்கெடுப்பின் மூலமாக மட்டுமே வளர்ச்சியும் அமைதியும் நீதியும் நிறைந்த சமூதாயத்தை அமைக்க முடியும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
மார்ச் 8, வருகிற செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்படும் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், இவ்வாண்டில் இந்த உலக தினம், பெண்களுக்குக் கல்வி, பயிற்சி மற்றும் தொழிநுட்பத்தில் சமவாய்ப்பு வழங்கப்படுவதில் கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
அனைத்துலக பெண்கள் தினம் கடைபிடிக்கத் தொடங்கப்பட்டதன் நூறாம் ஆண்டு, இந்த 2011ம் ஆண்டில் கடைபிடிக்கப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர், பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றங்கள் இவ்வாண்டில் கொண்டாடப்படுகின்றது, எனினும், பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே இன்றும் இருக்கின்றனர் என்றார்.
8. இந்த பிப்ரவரியில் உலக அளவில் அடிப்படை உணவுப் பொருட்களின் விலை அதிகம்
மார்ச்05,2011. சர்க்கரை, தானியங்கள், சமையல் எண்ணெய்கள் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களின் விலை உலக அளவில் இந்த பிப்ரவரியில் மிகவும் அதிகரித்திருந்ததாக FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறியது.
15 வளரும் நாடுகளில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தையொட்டி புரட்சிகள் வெடித்த 2007ம் ஆண்டு கடைசியிலும், 2008ம் ஆண்டு தொடக்கத்திலும் இருந்ததைவிட இந்த பிப்ரவரியில், அரிசியைத் தவிர மற்ற உணவுப் பொருட்களின் விலை மிக அதிகமாக இருந்ததாக அந்நிறுவனம் கூறியது.
இந்த 2011ம் ஆண்டிலும் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் FAO நிறுவனம் கணித்துள்ளது.
இந்தப் பிரச்சனையால் 2009ல் சுமார் 85 கோடிப் பேர் கடும் பசியால் வாடினர், தற்போது இவ்வெண்ணிக்கை 90 கோடியாக இருக்கின்றது என்று இந்நிறுவனத்தின் வட அமெரிக்க அலுவலக இயக்குனர் Daniel Gustafson கூறினார்.
இந்த விலைவாசி ஏற்றத்திற்குக் கடந்த ஆண்டில் இரஷ்யாவில் ஏற்பட்ட கோடை வறட்சி, ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டக் காட்டுத் தீ உட்பட கடும் வெப்பநிலை மாற்றங்களே காரணம் என்றார் Gustafson.
9. 'ஐவரிகோஸ்ட்'- ஒரு போர்ச்சூழல்
மார்ச்05,2011. ஆப்ரிக்க நாடான ஐவரிகோஸ்டில் அதிகரித்து வருகின்ற வன்முறைகள் காரணமாக மிகுந்த களைப்பும் கவலையும் அடைந்துள்ளதாக ஐநாவின் அமைதிகாக்கும் படை கூறுகின்றது.
பதவியிலுள்ள அதிபர் லோரண்ட் பாக்போவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் ஆறு பேர் அந்நாட்டுப் படையினரால் இவ்வியாழக்கிழமைக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் பாக்போ, எதிரணி வேட்பாளர் அலஸ்ஸான் ஒட்டாராவிடம் தோற்றுவிட்டதாக சர்வதேச சமூகம் பெரும்பாலும் கருதுகின்ற போதிலும்கூட அவர் பதவியை விட்டு இறங்க மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் தொடங்கிய நாள் முதல் நூற்றுக்கணக்கான எதிரணி ஆதரவாளர்கள் பாதுகாப்பு படையினராலோ அதிபர் லோரண்ட் பாக்போவால் கட்டுப்படுத்தப்படும் ஆயுதக்குழுக்களாலோ திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
அலஸ்ஸான் ஒட்டாராவே தேர்தலில் வெற்றிபெற்றதாக எதிரணியினர் கூறிவருவதை நிறுத்துவதற்கான உத்தியாக, படைகள் இவ்வாறான கொலைகளை மேற்கொள்வதாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment