Thursday, 31 March 2011

Catholic News - hottest and latest - 29 Mar 2011

1. குடும்ப வாழ்வு குறித்த பொகோட்டா கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி.

2. வட ஆப்ரிக்க வன்முறைகளுக்கு நீதியான தீர்வு காண அப்பகுதி ஆயர்கள் அழைப்பு.

3. இலங்கையில் குடிபெயர்ந்து வாழ்வோருள் 52 குடும்பங்களுக்கு வீடு கட்ட மன்னார் மறைமாவட்ட உதவி.

4. அரசியல் என்பது செயல்பாடின்றி இருக்கும்போது வன்முறை பிறக்கின்றது என்கிறார் புனித பூமி பொறுப்பாளர்.

5. இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் துவக்கத் திட்டமிட்டுள்ளார் லெபனனின் மேரோனைட் ரீதி தலைவர்.

6. இரஷ்ய பள்ளிகளில் 'மதக்கலாச்சாரம் மற்றும் அறநெறிகளின் அடிப்படை'  பற்றிய வகுப்புகள் இடம்பெற உள்ளன.

7. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் : உலக அளவில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது குறைந்துள்ளது

8.   குடிமக்களின் நலவாழ்வை விட, இராணுவச்செலவுகளுக்கென அதிக நிதி ஒதுக்கும் இங்கிலாந்து அரசின் செயலுக்கு கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு.

----------------------------------------------------------------------------------------------------------------

1. குடும்ப வாழ்வு குறித்த பொகோட்டா கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி.

மார்ச் 29, 2011.  நவீன உலகில் குடும்ப வாழ்வு குறித்து கொலம்பியாவின் பொகோட்டாவில் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தலத்திருச்சபைத் தலைவர்கள் கூடி விவாதித்து வரும் கூட்டத்திற்கு தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அதிவேகமான கலாச்சார மாற்றங்கள், சமூக நிலையற்ற தன்மை, புலம்பெயர்வு, ஏழ்மை, தவறான கல்வி திட்டங்கள், பொய்யான கொள்கைகள் இவைகளால் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுவருவது குறித்து திருச்சபை மௌனம் காக்க முடியாது என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, மனித வாழ்வின் மாண்பைக் காக்கும் மதிப்பீடுகள் மற்றும் விசுவாசம் குறித்து வருங்காலத் தலைமுறையினருக்குப் பெற்றோர் கற்பிப்பதை தூண்ட வேண்டிய திருச்சபையின் கடமையை அதில் வலியுறுத்தியுள்ளார்.
கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை மனித வாழ்வு வரவேற்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியதற்கான சூழல்களை உருவாக்கித்தர சமூகத்திற்கு இருக்கும் கடமையும் திருத்தந்தையால் வலியுறுத்தப்பட்டுள்ள‌து அச்செய்தியில்.
குடும்பங்களுக்கான நற்செய்தி அறிவிப்பில் தங்களை ஈடுபடுத்தியுள்ள தலத்திருச்சபைத் தலைவர்கள், தகுந்த முறையில் அதற்கான பயிற்சிகளை பெறவேண்டிய அவசியமும் திருத்தந்தையின் இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் திருச்சபைகளுக்கானச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2. வட ஆப்ரிக்க வன்முறைகளுக்கு நீதியான தீர்வு காண அப்பகுதி ஆயர்கள் அழைப்பு.

மார்ச் 29, 2011.  வட ஆப்ரிக்க பகுதியில் இடம்பெறும் வன்முறைகளுக்கு முடிவு காணும் நோக்கில், மனித மாண்பை மதிப்பதுடன் கூடிய‌ நீதியான தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அப்பகுதி ஆயர்கள்.
ஏமன், ஜோர்தான், எகிப்து, லிபியா, மொரோக்கோ, சிரியா மற்றும் பஹ்ரைனின் பதட்ட நிலைகள் குறித்து கூடி விவாதித்த வட ஆப்ரிக்க நாடுகளான மொரோக்கோ, அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியாவின் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் என்பது எத்தீர்வையும் கொணராது என்பதை வலியுறுத்தியுள்ளதுடன், வன்முறைகளுக்குப் பலியாகி வரும் மக்கள் குறித்த கவலையையும் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பதட்டநிலைகளில் சுதந்திரம், நீதி மற்றும் மாண்புக்கான மக்களின், குறிப்பாக இளைய சமுதாயத்தின் நியாயமான ஏக்கத்தைக் காணமுடிகிறது என ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
போரால் அதிக அளவில் பாதிக்கப்படுவது ஏழைகளும் வசதிகள் அற்றோருமே எனக்கூறும் வட ஆப்ரிக்க ஆயர்களின் அறிக்கை, அப்பகுதி கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இதுவரைக் கட்டிக்காப்பாற்றிய உறவுகள் இப்பதட்டநிலைகள் மற்றும் போரால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளது.

3. இலங்கையில் குடிபெயர்ந்து வாழ்வோருள் 52 குடும்பங்களுக்கு வீடு கட்ட மன்னார் மறைமாவட்ட உதவி.

மார்ச் 29, 2011.  இலங்கைக் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முல்லிக்குளம் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுள் 52 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான இடங்களை வழங்கியுள்ளார் மன்னார் ஆயர்.
பாதுகாப்புக் காரணங்களுக்கென இலங்கைக் கடற்படையால் முல்லிக்குளம் கிராமம் ஆக்கிரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய 287 குடும்பங்களுக்கு மாற்று இடமாக காயகுளி என்ற வனக்கிராமத்தை அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் தங்கள் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் 125 குடும்பங்களே இந்த மாற்று இடம்பெயர இசைவு அளித்துள்ள நிலையில், 52 தமிழ் கத்தோலிக்க குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கென தன் சொந்த இடத்தைக்கொடுத்து உதவியுள்ளது மன்னார் மறைமாவட்டம்.
காயகுளி என்ற வனக்கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ள மக்கள் காட்டைத் திருத்தி வீடுகள் கட்டுவதற்கு அரசால் எவ்வித பொருளாதார உதவிகளும் வழங்கப்படவில்லை எனக் கவலையை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட முதன்மை குரு விக்டர் சூசை, இதனால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்கள் மன்னார் ஆயரிடம் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து தற்போது 52 குடும்பங்களுக்கு வீடுகட்டும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இலங்கைக்குள்ளேயே தற்போது குடிபெயர்ந்துள்ள 3 இலட்சத்து 27000 மக்களுள் ஒரு இலட்சத்து 95,000 பேர் தங்கள் பூர்வீக இடங்களுக்கு திரும்பியுள்ள போதிலும், அவர்கள் இன்னும் அரசின் உதவிகளுக்கும் பாதுகாப்பிற்கும் காத்திருப்பதாக அறிவிக்கின்றன செய்தி நிறுவனங்கள்.

4. அரசியல் என்பது செயல்பாடின்றி இருக்கும்போது வன்முறை பிறக்கின்றது என்கிறார் புனித பூமி பொறுப்பாளர்.

மார்ச் 29, 2011.  அரசியல் என்பது செயல்பாடின்றி இருக்கும்போது, நம்பிக்கையின்மைகளும் வன்முறை மொழியும் பேச்சுவார்த்தைகளில் புகுந்து பதட்ட நிலைகளுக்குக் காரணமாகின்றன என்றார் புனித பூமியின் புனித இடங்களுக்கான பொறுப்பாளர் குரு Pierbattista Pizzaballa.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பதட்டநிலைகள் அதிகரித்து வருவது குறித்து வத்திக்கான் வானொலிக்கு பேட்டி வழங்கிய கப்புச்சின் சபை குரு Pizzaballa, அண்மைக்காலங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதுபோல் தோன்றுவது ஆபத்தானதாக இருப்பினும், பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பதட்டநிலைகளைக் களையும் வாய்ப்பு உள்ளது என்றார்.
பழைய வன்முறைக்கு எருசலேம் பகுதி திரும்புவதாக தான் நம்பவில்லை என்று கூறிய குரு, அரசியல் தலைவர்களிடையேயான தொடர்புகளும், அரசியல் உறவுகளும் புதுப்பிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

5. இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் துவக்கத் திட்டமிட்டுள்ளார் லெபனனின் மேரோனைட் ரீதி தலைவர்.

மார்ச் 29, 2011.  பொது வாழ்வு மற்றும் ஒத்துழைப்பின் வருங்காலத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இஸ்லாமியர்களுடன், நேர்மையான அதேவேளை முழு அளவிலான பேச்சுவார்த்தைகளைத் துவக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார் லெபனனின் மேரோனைட் ரீதி புதிய முதுபெரும் தலைவர் Bechara Rai.
பல மதங்களைக் கொண்டுள்ள லெபனனில் தற்போது  அரசியல் மற்றும் பிரிவினை வாதங்களினால் விசுவாசத்தின் தூய்மை மற்றும் புனிதத்தன்மையும், மதங்களின் ஆன்மீகமும் களையப்பட்டு வருவது குறித்த கவலையையும் வெளியிட்டார் மேரோனைட் ரீதி முதுபெரும் தலைவர்.
லெபனன் நாடு என்பது ஒரு மதத்திற்கோ, கட்சிக்கோ, குழுவுக்கோ உரியதல்ல, அத்தகைய முயற்சிகள் ஏனைய மக்களைச் சிறுமைப்படுத்தவே உதவும் என்ற முதுபெரும் தலைவர் Rai, பல்வேறு மதங்களின் இருப்பிலிருந்து கிடைக்கும் வளமையிலேயே அந்நாட்டின் பெருமை அடங்கியுள்ளது என்றார்.

6. இரஷ்ய பள்ளிகளில் 'மதக்கலாச்சாரம் மற்றும் அறநெறிகளின் அடிப்படை'  பற்றிய வகுப்புகள் இடம்பெற உள்ளன.

மார்ச் 29, 2011.  அடுத்த ஆண்டில் இரஷ்யா முழுவதும் உள்ள பள்ளிகளில் 'மதக்கலாச்சாரம் மற்றும் அறநெறிகளின் அடிப்படை' பற்றிய வகுப்புகள் இடம்பெறும் என அந்நாட்டின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டில் இதனை ஒரு மாதிரிப் பாடமாக வைத்து வெற்றிகண்டதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டிலிருந்து இதனை நாடு முழுவதும் செயல்படுத்த உள்ளதாக அறிவித்தது இரஷ்ய அமைச்சகம்.
மதங்கள் தடைசெய்யப்பட்டிருந்த கம்யூனிச நாடான இரஷ்யாவில் இவ்வாண்டு மதப்பாடங்கள் சோதனை அளவில் பள்ளிகளில் புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி அது வெற்றி பெற்றுள்ளதாக மதத்தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ ரீதி, இஸ்லாம், யூதம், புத்தம் ஆகிய நான்கு மதங்களுள் ஏதாவது ஒன்றின் வரலாறு, அல்லது மதக்கலாச்சாரத்தின் வரலாறு அல்லது அறநெறிக்கொள்கைகளின் அடிப்படைகள் என்பது குறித்து தேர்வு செய்து கற்க தற்போது இரஷ்ய மாணவர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது அரசு.

7. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் : உலக அளவில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது குறைந்துள்ளது

மார்ச் 28,2011.  2010ம் ஆண்டில் 23 நாடுகள் மரணதண்டனை நிறைவேற்றியிருந்தாலும், இது 2009ம் ஆண்டைவிட 4 நாடுகள் அதிகமிருந்தாலும், இத்தண்டனை நிறைவேற்றப்படுவோரின் எண்ணிக்கை 714லிருந்து குறைந்து 527 ஆக ஆகியுள்ளது என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் கழக ஆண்டறிக்கைக் கூறுகிறது.
2010ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடு 46 பேருக்கு மரணதண்டனைகளை நிறைவேற்றியிருக்கிறது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
2009ம் ஆண்டில் ஐரோப்பாவில் இத்தண்டனை இடம் பெறாமல் இருந்தது, ஆனால் கடந்த ஆண்டில் பெலாருஸ் 2 பேருக்கு இத்தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது.
கடந்த ஆண்டில் காபோன் இத்தண்டனையை இரத்து செய்தது. இத்துடன் உலகில் 139 நாடுகளில் இத்தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் 2010ம் ஆண்டில் குறைந்தது 2000 பேருக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது, எனினும் இவ்வெண்ணிக்கை சுமார் எட்டாயிரமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

8.   குடிமக்களின் நலவாழ்வை விட, இராணுவச்செலவுகளுக்கென அதிக நிதி ஒதுக்கும் இங்கிலாந்து அரசின் செயலுக்கு கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு.

மார்ச் 28, 2011.  இங்கிலாந்து அரசு, குடிமக்களின் நலவாழ்வை விட, இராணுவச் செலவுகளுக்கென அதிக நிதி ஒதுக்கிவருவது குறித்து பல தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றில் கலந்து கொண்டது இங்கிலாந்தின் கத்தோலிக்க சமூகம்.
இங்கிலாந்து அரசின் நிதி ஒதுக்கீட்டு கொள்கை குறித்து கண்டனத்தை வெளியிட்டு அண்மையில் நடத்தப்பட்ட ஊர்வத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்து அரசானது இராணுவச் செலவுகளுக்கென 4,000 கோடி பவுண்டுகளை ஒதுக்கியிருக்கும் வேளை, 2,400 கோடி பவுண்டுகளையே வீட்டு வசதி வாரியத்திற்கும், 750 கோடி பவுண்டுகளையே வெளிநாட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கும் ஒதுக்கியிருப்பது குறித்து எதிர்ப்புத் தெரிவித்து இவ்வூர்வலம் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...