Friday 4 March 2011

Catholic News - hottest and latest - 03 Mar 2011


1. பிலிப்பின்ஸ் ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

2. சிலே அரசுத்தலைவர் பினேரா, திருத்தந்தை சந்திப்பு

3. ஐ.நா.வின் உலக உணவு திட்டக்குழுவின் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

4. திருத்தந்தை எழுதியுள்ள ஒரு புதிய நூல் மார்ச் மாதம் 10ம் தேதி வெளியாகும்

5. சிறுபான்மைத் துறையின் அமைச்சர் Shahbaz Bhattiன் படுகொலையைக் கண்டித்து பாகிஸ்தான் தலத்திருச்சபை மூன்று நாட்கள் துக்கம்

6. வத்திகானின் அனைத்துச் செய்திகளையும் திரட்டி அளிக்கும் ஒரே வலைதளம்

7. கோவாவில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கணக்கெடுப்பு சரிவர நடத்தப்படவில்லை - தலத்திருச்சபை

8. பயிற்சி முடித்த விடுதலைப் புலிகள் விடுவிப்பு

----------------------------------------------------------------------------------------------------------------

1. பிலிப்பின்ஸ் ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

மார்ச் 03,2011. பிலிப்பின்ஸ் நாட்டில் மக்களிடையே நிலவி வரும் ஆழ்ந்த பக்தியை வளர்ப்பதும், திருச்சபையின் படிப்பினைகளையும், நன்னெறி முறைகளையும் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வதற்கு உதவுவதும் ஆயர்களின் பணிகளில் முக்கியமானதென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆயர்கள் திருத்தந்தையை வத்திக்கானில் சந்திக்கும் Ad Limina கூட்டத்தில் இவ்வியாழன் காலை பிலிப்பின்ஸ் ஆயர்களைச் சந்தித்தபோது, திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
ஆயர்கள் மேற்கொள்ளும் பல பணிகளில் குடும்பங்களை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டுமென்றும், பெற்றோர்களே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் என்பதால், அவர்களைச் சரியான திருமறைக் கோட்பாடுகளில் வழிநடத்துவது ஆயர்களின் கடமை என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
மேலும், ஆயர்களின் பணிகளில் அவர்களுக்குப் பக்கபலமாய் செயல்படும் குருக்களின் பயிற்சியிலும் ஆயர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, இளம் குருக்களை வழிநடத்த வயது முதிர்ந்த குருக்கள் வழிகாட்டிகளாய் விளங்கும் வழிகளையும் ஆயர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
நன்மைசெய்வதில் மனம்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால், தக்க காலத்தில் அறுவடை செய்வோம். (கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 6:9) என்ற புனித பவுலடியாரின் சொற்களைப் பிலிப்பின்ஸ் ஆயர்களிடம் எடுத்துக் கூறிய திருத்தந்தை, அவர்களும் மனம் தளராமல் நற்பணிகளைச் செய்து இறையரசைக் கட்டியெழுப்பவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.


2. சிலே அரசுத்தலைவர் பினேரா, திருத்தந்தை சந்திப்பு

மார்ச்03,2011. தென் அமெரிக்க நாடான சிலே அரசுத்தலைவர் Sebastián Piñera Echenique வை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
வத்திக்கான் அப்போஸ்தலிக்க மாளிகையில் 25 நிமிடம் நடந்த இச்சந்திப்பில், சிலே நாட்டில் மனித வாழ்வையும் குடும்பத்தையும் பாதுகாத்தல், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுதல், வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், மனித உரிமைகளை மதித்தல், சமூகத்தில் நீதியையும் அமைதியையும் பாதுகாத்தல் ஆகிய தலைப்புகள் இடம் பெற்றன..
இந்த நடவடிக்கைகளில் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்கும் வலியுறுத்தப்பட்டது. மேலும், இலத்தீன் அமெரிக்காவின் இன்றையச் சூழல் பற்றியும் பேசிய அவர்கள், மனிதர் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அடிப்படையான விழுமியங்களை ஊக்குவிப்பதில் சிலே அரசுக்கும் திருப்பீடத்திற்கும் இடையேயான புரிந்துணர்வுகள் குறித்தும் கலந்து பேசினர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையே உறவுகளுக்கானத் துறைச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் சிலே அரசுத்தலைவர் Piñera.


3. ஐ.நா.வின் உலக உணவு திட்டக்குழுவின் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

மார்ச் 03,2011. இப்புதன் பொது மறைபோதகத்திற்குப் பிறகு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் WFP எனப்படும் ஐ.நா.வின் உலக உணவு திட்டக்குழுவின் தலைவரான Josette Sheeran ஐ வத்திக்கானில் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார்.
ஐ.நா.அதிகாரியான Josette Sheeran லிபியாவின் எல்லைப்பகுதிகளுக்கு அண்மையில் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளார்.
இச்சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய Sheeran, லிபியாவின் தற்போதைய துன்பகரமான நெருக்கடியில் சிக்குண்டிருக்கும் மக்கள் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதைக் காண முடிந்ததென்று கூறினார்.
உலகின் பல பகுதிகளில் உணவின்றி வாடும் அனைத்து மக்களுக்கும் திருச்சபை ஆற்றி வரும் எண்ணற்ற உதவிகளையும் ஐ.நா.அதிகாரியான Josette Sheeran எடுத்துரைத்தார்.


4. திருத்தந்தை எழுதியுள்ள ஒரு புதிய நூல் மார்ச் மாதம் 10ம் தேதி வெளியாகும்

மார்ச் 03,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதியுள்ள ஒரு புதிய நூல் மார்ச் மாதம் 10ம் தேதி வருகிற வியாழனன்று வெளியாகும்.  நாசரேத்தின் இயேசு: புனித வாரம் - எருசலேம் நுழைவிலிருந்து உயிர்ப்பு வரை (Jesus of Nazareth: Holy Week -- From the Entrance into Jerusalem to the Resurrection) என்ற தலைப்பில் வெளியாகும் இப்புத்தகம் இயேசுவைக் குறித்து திருத்தந்தையின் எண்ணங்களைத் தாங்கி வரும் இரண்டாம் நூல்.
இயேசு கிறிஸ்துவைக் குறித்து திருத்தந்தை எழுதிய முதல் நூல் 2007ம் ஆண்டு வெளியானது. மார்ச் 10ம் தேதி வெளியாகவுள்ள இப்புதிய நூல் இத்தாலியம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்படும். வத்திக்கான் வெளியீட்டகம் இத்தாலிய மொழியிலும், Ignatius அச்சகம் ஆங்கிலத்திலும் வெளியிடும்.
ஒன்பது பிரிவுகளைக் கொண்ட இந்நூலில் இயேசுவின் எருசலேம் நுழைவு மற்றும் ஆலயத்தைச் சுத்தம் செய்தல் ஆகிய நிகழ்வுகள் முதல் பிரிவில் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இயேசுவின் பாடுகளின் பல நிலைகள் குறித்தும் இறுதிப் பிரிவில் இயேசுவின் உயிர்ப்பு குறித்தும் திருத்தந்தை தன் கருத்துக்களைக் கூறியுள்ளார்.
இந்நூல் வெளியீட்டையொட்டி நடத்தப்படும் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ஆயர்கள் திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouelletம் ஜெர்மானிய எழுத்தாளர் Claudio Magrisம் கலந்து கொள்வர்.
திருத்தந்தையின் இப்புதிய நூல் ஜெர்மானிய, பிரெஞ்ச், போர்த்துகீசிய மற்றும் போலந்து மொழிகளிலும் விரைவில் வெளியிடப்படும் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு கூறுகிறது.


5. சிறுபான்மைத் துறையின் அமைச்சர் Shahbaz Bhattiன் படுகொலையைக் கண்டித்து பாகிஸ்தான் தலத்திருச்சபை மூன்று நாட்கள் துக்கம்

மார்ச் 03,2011. பாகிஸ்தானில் சிறுபான்மைத் துறையின் அமைச்சராகப் பணியாற்றிய Shahbaz Bhattiன் படுகொலையை வன்மையாகக் கண்டித்து பாகிஸ்தான் தலத்திருச்சபை மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்து வருகிறது.
கொலையுண்ட அமைச்சரின் வீட்டிற்கு முன் இப்புதனன்று நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சிறுபான்மையினர் தங்கள் நாட்டில் எல்லா உரிமைகளையும் அனுபவித்து வருகின்றனர் என்று வெறும் வாய் வார்த்தைகளாய் கூறிவரும் பாகிஸ்தான் அரசு, இந்நாட்டில் செயல்படும் தீவிரவாத அமைப்புக்களைக் கட்டுப்படுத்த உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ஆயர்கள் பேரவை வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் Bhattiன் படுகொலையை எதிர்த்து கிறிஸ்தவ பள்ளிகள், மற்றும் பிற நிறுவனங்கள் இப்புதன் முதல் மூன்று நாட்கள் மூடப்படும் என்று தலத்திருச்சபை அறிவித்துள்ளது.
இந்தப் படுகொலையை பாகிஸ்தான் அரசுத் தலைவர் Asif Ali Zardariயும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
பாகிஸ்தானில் நிலவி வரும் தேவநிந்தனை சட்டத்தை அகற்றுமாறு குரல் கொடுத்து வந்தவர்கள் பஞ்சாப் மாநில முதல்வர் Salman Taseerம், அமைச்சர் Shahbaz Bhattiம் என்பது குறிப்பிடத் தக்கது.
இவ்விருவரில், பஞ்சாப் ஆளுநர் Salman Taseer இவ்வாண்டு சனவரி 4ம் தேதி தனது மெய்க்காப்பாளரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மார்ச் 2 இப்புதனன்று அமைச்சர் Shahbaz Bhatti அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


6. வத்திகானின் அனைத்துச் செய்திகளையும் திரட்டி அளிக்கும் ஒரே வலைதளம்

மார்ச் 03,2011. வத்திகான் வானொலி, வத்திக்கான் செய்தித்தாள் L'Osservatore Romano, FIDES செய்தி நிறுவனம் போன்ற வத்திக்கானின் பல்வேறு தொடர்புத் துறைகளில் வெளியாகும் அனைத்துச் செய்திகளையும் திரட்டி ஒரே வலைதளத்தில் அளிக்கும் முயற்சி இவ்வாண்டு உயிர்ப்புத் திருநாளுக்கு முன் துவங்கும் என்று வத்திக்கான் தொடர்புத் துறைக்கான திருப்பீட அவை அறிவித்துள்ளது.
இத்திருப்பீட அவையின் தலைவரான பேராயர் Claudio Maria Celli இவ்வவையின் ஆண்டு கூட்டத்தில் இப்புதனன்று பேசியபோது, இவ்வலைத் தளம் உயிர்ப்பு ஞாயிறான ஏப்ரல் 24க்கு முன் ஆங்கிலம், இத்தாலியம் ஆகிய இரு மொழிகளில் துவங்கப்படும் என்றும் விரைவில் பிற மொழிகளில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
தொடர்புத் துறையில் ஒவ்வொரு நாளும் காணப்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து திருச்சபை முயற்சிகளை மேற்கொள்வது நல்லதொரு அடையாளம் என்று பாப்பிறை சலேசியப் பல்கலைக் கழகத்தின் தொடர்புத் துறை முதல்வர் அருள்தந்தை Franco Lever கூறினார்.


7. கோவாவில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கணக்கெடுப்பு சரிவர நடத்தப்படவில்லை - தலத்திருச்சபை

மார்ச் 03,2011. வட இந்தியப் பகுதியில் உள்ள கோவாவில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கணக்கெடுப்பு சரிவர நடத்தப்படவில்லையென்று கோவா காங்கிரஸ் கட்சி அதிகாரிகள் மத்திய அரசிடம் முறையிட்டுள்ளனர்.
அண்மையில் அரசு மேற்கொண்ட மக்கள் கணக்கெடுப்பில், கப்பல்களில் பணி செய்யும் பலர் விடப்பட்டுள்ளனர் என்று கோவா காங்கிரஸ் கட்சியின் Altinho Gomes இப்புதனன்று புது டில்லியில் சோனியா காந்தியைச் சந்தித்து கூறினார்.
இதே குறையைச் சுட்டிக் காட்டி, கோவா தலத்திருச்சபை அதிகாரிகள் இத்திங்களன்று புது டில்லியில் உள்ள மக்கள் கணக்கெடுப்பு ஆணையத்தின் அதிகாரிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவாவில் இருந்து வெளி நாடுகளில் பணி செய்யப்போகின்றவர்களில் 74 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களாய் இருக்கின்றனர் என்றும், இவர்களையும் மக்கள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் தலத்திருச்சபை கணக்கெடுப்பு ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.


8. பயிற்சி முடித்த விடுதலைப் புலிகள் விடுவிப்பு
 
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியை முடித்துக் கொண்ட மூன்று இளம் பெண்கள் உட்பட 106 பேர் சிவராத்திரியை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வு ஆணையளாரின் விசேட ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட 26 இளம் பெண்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பயிற்சிகளுக்கு லீட்ஸ் எனப்படும் தொண்டு நிறுவனம் உதவித்தொகைகளை வழங்கியிருந்தது. துறைசார்ந்த ஆசிரியர்கள், விரிவுரையாளர்களைக் கொண்டு இந்தப் பயிற்சியை இலங்கையின் வடமாநில கல்வி அமைச்சு வழங்கியிருந்ததாக அரசு அதிகாரி செல்வி ஜெயா தம்பையா கூறினார்.
இந்த இளம் பெண்கள் சமூகத்தில் நம்பிக்கையோடு இணைவதற்கு வசதியாக முன்பள்ளி ஆசிரியைகளுக்கான இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்திருந்ததாக லீட்ஸ் நிறுவனம் கூறுகின்றது.
இதற்கிடையில் இன்னும் 4500 பேர் புனர்வாழ்வு மையங்களில் பயிற்சி பெற்று வருவதாகவும். அவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவர் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த இரணசிங்க பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...