Tuesday, 15 March 2011

Catholic News - hottest and latest - 14 Mar 2011

1.  திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை ஜெப உரை.

2.  சுனாமி ஆழிப்பேரலைகளால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு திருத்தந்தையின் ஆறுதல்.

3.  ஜப்பானியர்கள் தைரியமுடன் இருப்பதற்கு ஆயர்கள் வேண்டுகோள்.

4.  திருத்தந்தையின் அண்மை புத்தகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் திருப்பீடப் பேச்சாளர்.

5.  பாதுகாப்பு மற்றும் அமைதிக்கென மங்களூர் கிறிஸ்தவர்கள் 21 நாள் ஜெபம் மற்றும் உண்ணா நோன்பு.

6.  இந்தியாவில் ஒரு நாளைக்கு இரு விவசாயிகள் வீதம் தற்கொலை.

----------------------------------------------------------------------------------------------------------------

1.  திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை ஜெப உரை.

மார்ச் 14, 2011.  தவக்காலத்தின்போது திருச்சபை, பாவம் மற்றும் தீமையின் சக்திகளுக்கு எதிராக இயேசு கிறிஸ்துவின் பக்கமே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என, பாவத்தின் இருப்பு குறித்து இஞ்ஞாயிறு மூவேளை ஜெப உரையின்போது  உரை வழங்கிய திருத்தந்தை குறிப்பிட்டார்.
உலகில் பாவம் என்பதை மனிதனின் சமயக் கண்ணோட்டத்தோடு தொடர்புடையதாக மக்கள் கணிக்கிறார்கள் என்ற திருத்தந்தை, சூரியன் மறையும்போது நிழலும் மறைகிறது மற்றும் சூரியன் தோன்றும்போதே நிழலும் எழுகிறது என்பது போல் கடவுள் என்ற எண்ணமே பாவம் என்ற எண்ணத்தையும் கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டார். குற்ற உணர்வு என்பதிலிருந்து வேறுபட்டதாக உளவியலில் புரிந்துகொள்ளப்படும் பாவம் என்பதன் அர்த்தம், கடவுளைக் குறித்த உண்மை அர்த்தத்தை நாம் முழுவதுமாக கண்டு கொள்வதன் மூலமே புரிந்துகொள்ள முடியும் என்றார்.
கடவுள் பாவத்தையும் தீமையையும் பொறுத்துக் கொள்வதில்லை, ஏனெனில் அவர் அன்பு, நீதி மற்றும் பிரமாணிக்கம் உடையவர் என்ற பாப்பிறை, யூதகுல வரலாற்றில் எகிப்தின் அடிமைத் தளையிலிருந்து நம்மை மீட்ட இறைவன், தன் மக்களைப் பாவத்திலிருந்து விடுவிக்க தன் மகனையே அனுப்பினார் என்றார். பாவங்கள் அனைத்தின் காரணமும் ஆதாரமும் ஆகிய சாத்தான், இறைத்திட்டத்திற்கு எதிராக தன் அனைத்துச் சக்திகளையும் பயன்படுத்துகிறது என்ற திருத்தந்தை, தவக்காலத்தின்போது விசுவாசிகள் தீய சக்திகளுக்கு எதிரான தங்கள் ஆன்மீகப் போராட்டத்தின் மூலம் தனி ஆளாகவும் திருச்சபையோடு இணைந்தும் பாவத்திற்கு எதிராக இயேசுவோடு நிற்கிறார்கள் என்றார்.

2.  சுனாமி ஆழிப்பேரலைகளால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு திருத்தந்தையின் ஆறுதல்.

மார்ச் 14, 2011.  ஜப்பானின் சுனாமி ஆழிப்பேரலைகளின் பாதிப்பு, நம்மை ஆழமாக அசைத்துப் பார்த்துள்ளது என்று கூறிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அந்நாட்டு மக்களுடன் தன் ஆன்மீக நெருக்கத்தை புதுப்பிப்பதாகவும் தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.
இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும், இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தன் ஜெபங்களை வழங்குவதாக உரைத்த திருத்தந்தை,  இச்சூழலில் உதவி புரிய முன் வந்திருக்கும் அனைவருக்கும் தன் ஊக்கத்தை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ளோர் ஆறுதலைப் பெறவும், உதவிப்பணிகளில் ஈடுபட்டுள்ளோர் மேலும் உறுதியையும் பலத்தையும் பெறவும் அனைவரின் ஜெபத்திற்காகவும் அழைப்பு விடுத்தார் பாப்பிறை.

3.  ஜப்பானியர்கள் தைரியமுடன் இருப்பதற்கு ஆயர்கள் வேண்டுகோள்.

மார்ச்14,2011. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு ஜப்பானியர்களுக்கு அந்நாட்டு ஆயர்கள் தங்களது செபத்தையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்த அதேவேளை தூய ஆவியின் உதவியுடன் அம்மக்கள் தைரியமுடன் இருக்குமாறு கேட்டுள்ளனர்.
நமது வாழ்க்கை கடவுளின் கரங்களில் இருக்கின்றது மற்றும் வாழ்வு கடவுளிடமிருந்து வரும் கொடை என்பதை பத்தாயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டுள்ள இத்துயர நிகழ்வு நமக்கு நினைவூட்டுகின்றது என்று ஜப்பானின் Saitama ஆயர் Marcellinus Daiji Tani கூறினார்.
மேலும், காரித்தாஸ் ஜப்பானும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிதி சேமிப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இன்னும் ஜப்பானிய ஆயர்கள் சென்டைய் நகரில் இப்புதனன்று அவசரகால கூட்டம் ஒன்றைக் கூட்டி இடர்துடைப்புப் பணிகள் பற்றிப் பேசவிருக்கின்றனர்.
ஜப்பானின் சுமார் 12 கோடியே 77 இலட்சம் மக்களில் 0.4 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். 84 விழுக்காட்டினர் ஷின்டோ மற்றும் புத்தமதத்தினர்.
இன்னும், ஜப்பானில் அணுமின் உலைகள் வெடித்துள்ளதையொட்டி அறிக்கை வெளியிட்ட பிரிட்டன் பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பின் உதவித்தலைவர் புரூஸ் கென்ட், நாடுகள் அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலனை செய்யுமாறு கேட்டுள்ளார்.
அணுசக்தி நிலையங்களை அதிகரித்து வருவது இப்போதைய ஜப்பான் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்குக் காரணமாக அமைகின்றன என்றும் அவர் கூறினார்

4.  திருத்தந்தையின் அண்மை புத்தகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் திருப்பீடப் பேச்சாளர்.

மார்ச் 14, 2011.  இயேசு எனும் நபரை இவ்வுலகம் மீண்டும் கண்டுகொள்ள உதவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாக திருத்தந்தையின் நாசரேத்தூர் இயேசு என்ற புத்தகம் உள்ளது என்றார் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் குரு. ஃபெதரிக்கோ லொம்பார்தி.
'நாசரேத்தூர் இயேசு பாகம் இரண்டு : புனித வாரம்-எருசலேமில் நுழைந்தது முதல் உயிர்ப்பு வரை' என்ற தலைப்பில் கடந்த வியாழனன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புத்தகம் குறித்து 'ஓக்தாவா தியேஸ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இயேசு சபை குரு லொம்பார்தி, இந்நூல் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது ஏனெனில் இது நற்செய்தி விளக்கத்திற்கான புதிய ஒரு சகாப்தத்தைத் துவக்கியுள்ளது என்றார்.
அகில உலகத் திருச்சபையின் மேய்ப்பரும் சிறந்த கல்விமானும் ஆகிய திருத்தந்தை, கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் பாரம்பரியங்களுக்கு இயைந்த வகையில் கிறிஸ்தவர்களை இப்புத்தகத்தின் மூலம் ஓர் ஆழமான, திறமை வாய்ந்த வாசிப்பை நோக்கி வழிநடத்திச் செல்கிறார் என்றார் திருப்பீடப் பேச்சாளர்.
அண்மையில் வெளிவந்த திருத்தந்தையின் இந்தப் புத்தகம், கருத்துப் பரிமாற்றத்திற்கென உருவாக்கப்பட்ட ஒன்று என மேலும் கூறினார் இயேசு சபை குரு லொம்பார்தி.

5.  பாதுகாப்பு மற்றும் அமைதிக்கென மங்களூர் கிறிஸ்தவர்கள் 21 நாள் ஜெபம் மற்றும் உண்ணா நோன்பு.

மார்ச் 14, 2011.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் மீதான பல்வேறு தாக்குதல்களுக்கு சாட்சியாக இருந்த இந்தியாவின் மங்களூர் கிறிஸ்தவ சமூகத்தினர், பாதுகாப்பு மற்றும் அமைதிக்கென 21 நாள் செபம் மற்றும் உண்ணா நோன்பைத் துவக்கியுள்ளனர்.
இந்த மூன்று வார செபத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய மங்களூர் ஆயர் பால் டி சூசா, 2008ம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவக் கோவில்கள் பரவலாகத் தாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவி வருவதாகத் தெரிவித்தார்.
இந்நாட்களில் மங்களூர் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினர் மாமிசவகை உணவையும் தங்களுக்குப் பிடித்தமான ஏனைய உணவு வகைகளையும் கைவிடுவதோடு, அமைதிக்கான சிறப்புச் செபவழிபாடுகளிலும் கலந்துகொள்வர் என்று இந்த மூன்று வார செப‌ மற்றும் உண்ணா நோன்பிற்கு ஏற்பாடு செய்தோர் அறிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் 2008ல் பி.ஜே.பி. கட்சி ஆட்சிக்குக்கு வந்த மூன்று மாதங்களிலேயே துவங்கிய கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலில் 27 கிறிஸ்தவ இடங்கள் சேதமாக்கப்பட்டன.

6.  இந்தியாவில் ஒரு நாளைக்கு இரு விவசாயிகள் வீதம் தற்கொலை.

மார்ச் 14, 2011.  கடன் தொல்லை காரணமாக இந்தியாவில்  12 மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் எனத்  தகவல் வெளியாகியுள்ளது.
"15 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்த அவலநிலையைப் போக்க, மத்திய, மாநில அரசுகள் பெரிய அளவில் திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை ' என, விவசாய நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தேசிய குற்றப் பிரிவு ஆவணத்தில், " இந்தியாவில் கடந்த 1997ல் இருந்து, இதுவரை இரண்டு லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் தற்கொலைகளை கணக்கில் எடுத்துப் பார்த்தால், 12 மணி நேரத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அதாவது, தினமும் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விவசாய அமைச்சராக பதவி வகிக்கும் சரத் பவாரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள விதர்பாவில்தான், விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கிறது எனவும், மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகம் இடம்பெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...