Friday, 11 March 2011

Catholic News - hottest and latest - 10 Mar 2011

திருத்தந்தை: குருக்கள் எப்பொழுதும் கிறிஸ்துவின் தூதர்களாக அவரோடு இருப்பதே அவர்களின் பணி

2. நாசரேத்தூர் இயேசு பற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இரண்டாவது புத்தகம் வெளியிடப்பட்டது

3. திருநீற்றுப் புதன் திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரை

4. மனித சமுதாயத்தின் முன்னேற்றம் மனிதர்களை மையப்படுத்த வேண்டும் -  திருப்பீட அதிகாரி

5. மத்தியப் பிரதேச தலைநகரின் பெயர் மாற்றத்திற்கு பேராயர் லியோ கொர்னேலியோ எதிர்ப்பு

6. காரித்தாஸ் ஆசியாவின் புதிய தலைவராக ஜப்பான் ஆயர் Isao Kikuchi

7. தெற்கு ஆசிய இயேசு சபையினர் உலகளவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - இயேசுசபைத் தலைவர் Adolfo Nicolas

8. நாடு கடந்த திபெத் அரசின் அரசியல் பொறுப்பிலிருந்து தலாய் லாமா  விலகல்

----------------------------------------------------------------------------------------------------------------


திருத்தந்தை: குருக்கள் எப்பொழுதும் கிறிஸ்துவின் தூதர்களாக அவரோடு இருப்பதே அவர்களின் பணி

மார்ச் 10,2011. குருக்கள் பகுதி நேரப் பணியாளர்களாக இருக்க முடியாது, மாறாக, அவர்கள் தங்களது முழு மன, முழு இதயத்தோடு எப்பொழுதும்  கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரோம் மறைமாவட்ட குருக்களிடம் கூறினார்.
இவ்வியாழனன்று வத்திக்கானில் உரோம் மறைமாவட்ட குருக்களைச் சந்தித்துப் பேசிய திருத்தந்தை, குருக்கள் எப்பொழுதும் கிறிஸ்துவின் தூதர்களாக அவரோடு இருப்பதே அவர்களின் பணி, இது அவர்களின் முழு வாழ்க்கையையும் ஊடுருவிச் செல்வதாக இருக்க வேண்டும் என்றார்.
இன்றைய உலகம் கடவுளை அறிந்து கொள்வதற்கு மிகவும் ஆவல் கொண்டுள்ளவேளை, குருக்கள் கடவுளைப் பற்றியத் தேடலில் விழித்தெழுந்தவர்களாக வாழுமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
அலகையின் எதிர்ப்புச் சக்தி முன்வைக்கும் ஆபத்தால் திருச்சபை எப்பொழுதும் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்றுரைத்த திருத்தந்தை , உண்மை பொய்யைவிடவும், அன்பு வெறுப்பை விடவும், வல்லமை வாய்ந்தவை என்றும் கடவுள் அனைத்துவிதமான எதிர்ப்புச் சக்திகளை விடவும் மிகுந்த வல்லமை வாய்ந்தவர் என்றும் கூறினார்.
இந்த ஓர் உண்மையுடன், கடவுளின் ஆறுதல் மற்றும் உலகின் அடக்குமுறைகளில் குருக்கள் தங்களது பாதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அறிந்திருக்க வேண்டுமெனவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பரிந்துரைத்தார்.


நாசரேத்தூர் இயேசு பற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இரண்டாவது புத்தகம் வெளியிடப்பட்டது

மார்ச் 10,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் நாசரேத்தூர் இயேசு - இரண்டாவது பாகம் என்ற நூல் நிருபர் கூட்டத்தில் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.
நாசரேத்தூர் இயேசு புனித வாரம் :  எருசலேமில் நுழைவதிலிருந்து உயிர்ப்பு வரை”   (Jesus of Nazareth - Holy Week: From the Entrance into Jerusalem to the Resurrection) என்ற தலைப்பிலான இந்தப் புத்தகத்தில், இயேசு அரசியல் புரட்சியாளர் என்ற எண்ணத்தை அகற்றியிருப்பதோடு வன்முறை கடவுளின் பணியோடு ஒத்திணங்கிச் செல்லாதது என்று கூறியுள்ளார். 
இயேசு அழிப்பவராக வரவில்லை, அவர் புரட்சியாளரின் கத்தியைக் கொண்டு வரவில்லை என்று கூறியுள்ள அவர், இயேசு குணப்படுத்தும் கொடையோடு இவ்வுலகிற்கு வந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசு மறுதலிக்கப்பட்டது, சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டது ஆகிய நற்செய்திப் பகுதிகளை அலசியுள்ள திருத்தந்தை, அனைத்துப் பாவிகளும், இந்த மனித சமுதாயம் முழுவதுமே கிறிஸ்துவின் மரணத்திற்குப் பொறுப்பேற்கிறார்கள் என்று  கூறியுள்ளார்.
சாத்தான் திருச்சபையில் நுழைந்து தவறானச் செயல்களைச் செய்வதற்குத் திறமை வாய்ந்தவனாக இருக்கிறான், இதுவே இப்பொழுது திருச்சபையில் நடந்து வருகிறது, எனவே திருச்சபை அங்கத்தினர்கள் திருச்சபைக்குள் இடம் பெறும் பாலியல் முறைகேடுகளைத் தடுப்பதற்கு விழிப்பாய் இருக்குமாறும் அப்புத்தகத்தில் கேட்டுள்ளார்  திருத்தந்தை.
புதிய ஏற்பாட்டுச் செய்தி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது என்று இந்நூலில் கூறியுள்ள அவர், இயேசுவை ஓர் ஆன்மீக மற்றும் வரலாற்று நாயகனாக அதில் விவரிக்க முனைந்துள்ளார் என்றும் தெரிகிறது.
ஒன்பது அதிகாரங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் இத்தாலியம், ஜெர்மானியம், ஸ்பானியம், ஆங்கிலம், ப்ரெஞ்ச் என ஏழு மொழிகளில் 12 இலட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.
ஜெர்மானியத்தில் இரண்டு இலட்சம், ஆங்கிலத்தில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம், ப்ரெஞ்ச் மற்றும் இஸ்பானியத்தில் ஒரு இலட்சம் என இது அச்சிடப்பட்டுள்ளது.
E-Book, audio book ஆகிய வடிவங்களிலும் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 
இயேசுவின் துவக்ககாலப் பணிகளை விளக்கும் நாசரேத்தூர் இயேசு என்ற திருத்தந்தையின் முதல் புத்தகம் அது வெளியிடப்பட்ட 2007ம் ஆண்டிலிருந்து சர்வதேச அளவில் விற்பனையில் முதலிடத்தில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


திருநீற்றுப் புதன் திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரை

மார்ச் 10,2011. தவக்காலத்தில் மேற்கொள்ளும் செபம், தவம், தர்மம் ஆகியவைகளை நமது சொந்த புகழுக்காகச் செய்யாமல், இறைவன் மேல் கொண்ட அன்பிற்காக மேற்கொள்ள வேண்டுமென்று திருத்தந்தை கூறினார்.
திருநீற்றுப் புதன் அல்லது சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் இப்புதன் பிற்பகலில் உரோம் நகரில் தவக்கால ஊர்வலத்தையும், திருப்பலியையும் முன்னின்று நடத்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
"உங்கள் முழு மனதுடன் என்னிடம் திரும்பி வாருங்கள்" என்று இறைவன் எப்போதும் விடுக்கும் அழைப்பைச் சிறப்பான முறையில் கேட்கவும், அவரது கருணையை மீண்டும் ஆழமாய் உணரவும் இத்தவக்காலம் நமக்குத் துணைபுரிய வேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
செபம், தவம், தர்மம் ஆகிய மூன்றும் இஸ்ரயேல் மக்களின் காலத்திலிருந்தே பழக்கத்தில் உள்ள பக்தி முயற்சிகள் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நம் சுயப் புகழைத் தேடுவதற்கு இவற்றைப் பயன்படுத்துவது இம்முயற்சிகளின் இறுதிப் பலனை நாம் அடையாமல் நம்மைத் தடுத்து விடும் என்று கூறினார்.
நமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நாற்பது நாட்கள் மிகவும் சக்தி வாய்ந்த நாட்கள், எனவே இந்நாட்களில் இறை வார்த்தைகளைக் கேட்கவும், செபத்திலும், பிற உடல் ஒறுத்தல் முயற்சிகளிலும் நம் நேரத்தைச் செலவழிக்கவும் வேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
திருப்பலிக்கு முன்னதாக, உரோம் நகரில் உள்ள Aventine குன்றில் மேல் அமைந்துள்ள புனித ஆன்செல்ம் கோவிலில் பெனடிக்ட் சபை துறவிகளுடன் திருத்தந்தை ஒரு சிறிய செப வழிபாட்டில் கலந்து கொண்டார். அதன் பின் அக்கோவிலிலிருந்து அருகிலிருந்த புனித சபினா ஆலயத்திற்கு ஊர்வலமாய் வந்து, அங்கு திருநீற்றுப் புதன் திருப்பலியை நிகழ்த்தினார்.


மனித சமுதாயத்தின் முன்னேற்றம் மனிதர்களை மையப்படுத்த வேண்டும் -  திருப்பீட அதிகாரி

மார்ச் 10,2011. மனிதர்கள் முன்னேற்றத்தின் மையங்களாய் கருதப்படவேண்டுமேயொழிய முன்னேற்றத்தின் தடைகளாய் கருதப்படக் கூடாதென்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.கூட்டமொன்றில் ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் சார்பில் இப்புதனன்று பேசிய பேராசிரியர் Charles Clark இவ்வாறு கூறினார்.
வருகிற 2012ம் ஆண்டு ஜூன் மாதம் பிரேசில் நாட்டின் Rio de Janeiroவில் நடைபெறவுள்ள Rio+20 என்ற உலக முன்னேற்ற கருத்தரங்கிற்கு முன்னேற்பாடாக நிகழ்ந்த ஐ.நா.வின் கூட்டமொன்றில் திருப்பீடத்தின் சார்பில் இக்கருத்தை வலியுறுத்தினார் பேராசிரியர் Clark.
மனித சமுதாயம் திட்டமிடும் எந்த ஒரு முன்னேற்றமும் மனிதர்களை மையப்படுத்தியதாகவும், மனிதர்களின் முழு முன்னேற்றத்தை மனதில் கொண்டதாகவும் இருப்பதையே திருப்பீடம் விரும்புகிறதென பேராசிரியர் Clark சுட்டிக்காட்டினார்.
மனித சமுதாயம் மனிதர்களை முன்னேற்றத்தின் தடைகளாய் பார்க்கும்போது, முக்கியமாக ஏழைகள், கருவில் வளரும் குழந்தைகள், வயது முதிர்ந்தோர் போன்ற சமுதாயத்தில் வலுவிழந்தவர்களையே இவ்விதம் நோக்கி வருகின்றது என்ற தன் கவலையையும் வெளியிட்டார் பேராசிரியர் Clark.
முழு மனித சமுதாயத்தை மையப்படுத்தாத எந்த ஒரு முன்னேற்றமும் உலகின் வளங்களை தேவைக்கும் அதிகமாய் உறுஞ்சி, அவற்றின் மூலம் பணம் படைத்தவர்களை மட்டுமே முன்னேற்றும் ஆபத்து உள்ளதென்று திருப்பீடத்தின் சார்பில் பேசிய பேராசிரியர் Charles Clark எடுத்தரைத்தார்.


மத்தியப் பிரதேச தலைநகரின் பெயர் மாற்றத்திற்கு பேராயர் லியோ கொர்னேலியோ எதிர்ப்பு

மார்ச் 10,2011. மத்தியப் பிரதேசத்தின் தலைநகராகிய போபாலுக்கு வேறொரு பெயர் சூட்டும் முயற்சியில் அம்மாநிலத் தலைவர் ஈடுபட்டிருப்பது மக்களாட்சி நியமங்களுக்கு எதிரானது என்று போபால் உயர் மறைமாவட்டப் பேராயர் லியோ கொர்னேலியோ கூறினார்.
மத்திய பிரதேச மாநில முதல்வர் Shivraj Singh Chauhan மார்ச் மாதத் துவக்கத்தில் செய்தியாளர்கள் கூட்டமொன்றில் பேசியபோது, தலைநகர் போபாலுக்கு முற்கால மன்னர் Raja Bhojன் பெயரைச் சூட்ட தான் திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருந்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து பல சமுதாய அமைப்புக்கள் குரல் கொடுத்தன.
ஒரு மாநிலத் தலைநகரின் பெயரை மாற்றுவது மிக முக்கியமான ஒரு காரியம் எனவே மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் முதல்வர் தனியே முடிவெடுப்பது மக்களாட்சி முறைகளுக்கு எதிரானது என்று பேராயர் கொர்னேலியோ கூறினார்.
மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பொதுவான பெயர்களை மாற்றி, பழங்கால மன்னர்களின் பெயர்களை வைப்பதில் மதசாயம் பூசும் உள்நோக்கம் இருப்பது தெரிகிறதென்று பேராயர் சுட்டிக் காட்டினார்.
26 ஆண்டுகளுக்கு முன் Union Carbide தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் பல்லாயிரம் உயிர்கள் பலியானதால் போபால் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு நகரம் என்பது குறிப்பிடத் தக்கது.


காரித்தாஸ் ஆசியாவின் புதிய தலைவராக ஜப்பான் ஆயர் Isao Kikuchi

மார்ச் 10,2011. காரித்தாஸ் ஆசியாவின் தலைவராக ஜப்பானின் Niigata ஆயர் Isao Kikuchi இப்புதனன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 52 வயதான ஜப்பானிய ஆயர் Isao காரித்தாஸ் ஆசியாவின் தற்போதயைத் தலைவரான தூத்துக்குடி ஆயர் Yvon Ambroseக்கு அடுத்தபடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வருகிற மே மாதம் உரோம் நகரில் நடைபெறும் அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் பேரவையில் இந்தத் தேர்வு உறுதியாக்கப்படும் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.
தற்போது காரித்தாஸ் ஆசியாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜப்பான் ஆயர் Isao கடந்த 15 ஆண்டுகள் காரித்தாஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்றும், ஆப்ரிக்கா உட்பட பல நாடுகளின் காரித்தாஸ் சேவைகளில் ஈடுபட்டவர் என்றும் காரித்தாஸ் ஆசியா சேவைகளை ஒருங்கிணைக்கும் அருள்தந்தை Bonnie Mendes கூறினார்.
19 நாடுகளிலிருந்து வந்திருந்த 31 உறுப்பினர்களின் பாங்காக் கூட்டத்தில் மங்கோலியா, வியட்நாம் ஆகிய நாடுகளின் காரித்தாஸ் அமைப்புக்களும் காரித்தாஸ் ஆசியாவின் முழு உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.


தெற்கு ஆசிய இயேசு சபையினர் உலகளவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - இயேசுசபைத் தலைவர் Adolfo Nicolas

மார்ச் 10,2011. உலகளாவிய இயேசுசபையின் பணிகளை மனதில் கொண்டு தெற்கு ஆசியாவில் உள்ள இயேசுசபையினர் உலக அளவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டுமென்று இயேசுசபைத் தலைவரான அருள்தந்தை Adolfo Nicolas கூறினார்.
பிப்ரவரி 26 முதல் வருகிற சனிக்கிழமை மார்ச் 12 வரை இந்தியாவின் பல பகுதிகளில் பயணங்கள் மேற்கொண்டுள்ள இயேசு சபைத் தலைவர் Nicolas, அண்மையில் தெற்கு ஆசிய இயேசுசபை மாநிலத் தலைவர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
குருக்களின் ஒருங்கிணைந்த, முழுமையான பயிற்சிகளில் திருச்சபைக்கு இயேசு சபையினர் உதவிகள் செய்வதை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எதிர்பார்க்கிறார் என்பதை எடுத்துரைத்த அருள்தந்தை Nicolas, திருச்சபை அளித்துள்ள இந்த உலகளாவிய பணிக்கு தெற்காசிய இயேசு சபையினரின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
உலகின் 113 நாடுகளில் பரவியுள்ள 18,500 இயேசு சபையினரில், தெற்காசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் 4,000க்கும் அதிகமான இயேசு சபையினர் பணி செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நாடு கடந்த திபெத் அரசின் அரசியல் பொறுப்பிலிருந்து தலாய் லாமா விலகல்

மார்ச் 10,2011. திபெத்துக்கு வெளியே இருந்து இயங்கும் நாடு கடந்த திபெத் அரசின் அரசியல் பொறுப்பிலிருந்து தான் விலக இருப்பதாக திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா இவ்வியாழனன்று அறிவித்துள்ளார்.
இம்மாதம் 14ம் தேதி கூடவிருக்கும் இந்த நாடுகடந்த அரசு, தலாய் லாமாவின் இந்தத் தீர்மானம் குறித்துப் பரிசீலனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1959ம் ஆண்டில் திபெத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட்டதன் ஆண்டு நிறைவு நிகழ்வில் தலாய் லாமா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
தலாய் லாமாவும் திபெத்தியர்களும் தேர்தல்கள் மூலம் புதிய பிரதமரைதத் தேர்ந்தெடுப்பதற்குத் தயாரித்து வரும் இவ்வேளையில் தலாய் லாமா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...