1. திருத்தந்தை : கடவுள் பற்றிய கேள்வி சமுதாயத்துக்கு அச்சுறுத்தும் செய்தியாக இல்லை
2. திருத்தந்தை: கடவுளுக்கும் மற்றவருக்கும் மிகுந்த நெருக்கமாக வருவதற்கு வேலை உதவுகிறது
3. பாகிஸ்தான் ஆயர்கள் : Shahbaz Bhatti மறைசாட்சியாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையை முன்வைக்கத் திட்டம்
4. திருப்பீடத் தூதர் பேராயர் பிராங்கோ : வன்முறைகள் நமது சூழ்நிலையை மேலும் குழப்பமான நிலைக்கு இட்டுச் செல்லும்
5. ஐ.நா.மனித உரிமைகள் அவை சமய சுதந்திரத்திற்கு ஆதரவாகத் தீர்மானம்
6. அடிமை வியாபாரத்தில் பலியானோரின் நினைவு நாள் மார்ச் 25
7. பான் கி மூன் : அணுக்கதிர்வீச்சு குறித்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் எடுக்கப்பட வேண்டும்
8. ஐவரி கோஸ்ட் வன்முறைகளில் சுமார் பத்து இலட்சம் பேர் புலம் பெயர்வு
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை : கடவுள் பற்றிய கேள்வி சமுதாயத்துக்கு அச்சுறுத்தும் செய்தியாக இல்லை
மார்ச்26,2011: கடவுள் பற்றிய கேள்வி சமுதாயத்துக்கு அச்சுறுத்தும் செய்தியாக இல்லை, இந்தக் கேள்வி உண்மையான மனித வாழ்க்கையை அச்சுறுத்தவில்லை, கடவுள் பற்றிய கேள்வி நாம் வாழும் இக்காலத்திய மற்ற பெரிய கேள்விகளில் இல்லாமல் இருக்கக் கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீடக் கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசியும் (Gianfranco Ravasi) பாரிஸ் உயர் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் ஆந்த்ரு வாங் த்ருவாவும் (André Vingt-Trois) இணைந்து நடத்திய “Courts of the Gentiles” என்ற சர்வதேசக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் இவ்வெள்ளி மாலை ஒலி-ஒளிக் காட்சி மூலம் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
அக்காலத்தில் இஸ்ரயேல் மக்களின் மதத்தைச் சேராதவர்கள் எருசலேம் ஆலயத்துக்கு அருகிலுள்ள இடத்துக்கு வந்து மதத்தைப் பற்றிக் கேள்வி கேட்டனர். சதுசேயர்களைச் சந்தித்து விசுவாசம் பற்றிப் பேசி அறியப்படாத கடவுளிடமும் செபித்தனர். இந்த மக்கள் கூடிய இடம் புறவினத்தாரின் கூடம் “Courts of the Gentiles” என்று அழைக்கப்பட்டது.
இன்று கத்தோலிக்கத் திருச்சபைக்குள் “Courts of the Gentiles” என்ற பெயரில் அமைப்புக்களை உருவாக்கி கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்துமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டதன் பேரில் இத்தகைய கூட்டங்கள் தற்போது பல இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பாரிஸ் கூட்டத்தில் டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுத் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருமளவான இளையோர் உட்பட பலர் கலந்து கொண்ட இக்கூட்டப் பிரதிநிதிகளிடம் வீடியோ செய்தி மூலம் பேசிய திருத்தந்தை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் விசுவாசத்திற்குச் சவால் விடுக்க வேண்டும், அதேசமயம் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தாங்கள் பொதிந்து வைத்துள்ள உறுதியான விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த உலகை நாம் சமைக்க விரும்பினால், விசுவாசிகளும் விசுவாசமற்றவர்களும் தனியாட்களாகவும் குழுவாகவும் தங்களது உறுதிப்பாடுகளுக்கு ஒத்தவகையில் வாழ்வதற்குத் தங்களது உரிமைகளில் நீதியும் சமத்துவமும் பெற்றிருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இந்தக் கோடைகாலத்தில் மத்ரித்தில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்தில் பங்கு கொள்ளவும் இளையோருக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
2. திருத்தந்தை: கடவுளுக்கும் மற்றவருக்கும் மிகுந்த நெருக்கமாக வருவதற்கு வேலை உதவுகிறது
மார்ச்26,2011: இத்தாலியின் தெர்னி-நார்னி-அமேலியா மறைமாவட்டத்தின் இரும்புத் தொழிற்சாலைக்குத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் சென்றதன் முப்பதாம் ஆண்டை முன்னிட்டு அம்மறைமாவட்ட விசுவாசிகளை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்றையப் பொருளாதார நெருக்கடியில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் வேலைவாயப்பின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளைக் குறிப்பிட்டார்.
நற்செய்தியின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதிலும் மனித மாண்பும் நீதியும் நிறைந்த ஒரு சமூகத்தை அமைப்பதிலும் திருச்சபைக்கு இருக்கும் பணியைத் தான் நன்கு அறிந்திருப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, திருநற்கருணை இந்த உலகை மீட்கும் சக்தியைக் கொண்டது என்றார்.
ஞாயிறு திருப்பலியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்ன திருத்தந்தை, தொழிலில் மனிதன் மையப்படுத்தப்பட வேண்டும் என்றும், கடவுளுக்கும் மற்றவருக்கும் மிகுந்த நெருக்கமாக வருவதற்கு வேலை உதவுகின்றது என்றும் கூறினார்.
3. பாகிஸ்தான் ஆயர்கள் : Shahbaz Bhatti மறைசாட்சியாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையை முன்வைக்கத் திட்டம்
மார்ச்26,2011: பாகிஸ்தானில் அண்மையில் கொலை செய்யப்பட்ட சிறுபான்மைத்துறை அமைச்சர் Shahbaz Bhattiயை மறைசாட்சியாக அறிவிப்பதற்குப் பாகிஸ்தான் ஆயர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர்.
இத்தகையப் பரிந்துரையை வத்திக்கானுக்கு முன்வைப்பதற்கான முன்வரைவுத் தொகுப்பைத் தயாரித்த முல்டான் ஆயர் ஆண்ட்ரு பிரான்சிஸ், Shahbaz Bhatti, இயேசு கிறிஸ்து மீது அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்ததால் தனது வாழ்வையே அளித்தார் என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆயர்கள் லாகூரில் நடத்தி வரும் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறுபான்மை மதங்களின் அமைச்சா Shahbaz Bhatti இம்மாதம் 2ம் தேதி இசுலாமாபாத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்காகத் தனது தாயின் வீட்டை விட்டு வெளியே வந்த சமயம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவராக இருந்த Shahbaz Bhatti, சமய சுதந்திரம் மற்றும் அமைதிக்காகக் குரல் எழுப்பியவர்.
4. திருப்பீடத் தூதர் பேராயர் பிராங்கோ : வன்முறைகள் நமது சூழ்நிலையை மேலும் குழப்பமான நிலைக்கு இட்டுச் செல்லும்
மார்ச்26,2011: வன்முறை ஒரு பொழுதும் பிரச்சனைக்கானத் தீர்வாக அமையாது, மாறாக, இது சூழ்நிலையை மேலும் குழப்பமான நிலைக்கு இட்டுச் செல்லும் என்று இஸ்ரேல் மற்றும் சைப்ரசுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் அந்தோணியோ பிராங்கோ கூறினார்.
இச்செவ்வாயன்று எருசலேமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்துப் பேசிய பேராயர் பிராங்கோ, ஓரிடத்தில் பதட்டநிலை நிலவும் போது, யாராவது ஒருவர் இத்தகைய வன்செயல்களை நடத்திச் சூழ்நிலையை மேலும் மோசமாக்குவதையும் துன்பங்களையும் வேதனையையும் பெருக்குவதையும் எப்பொழுதும் காண முடிகின்றது என்றார்.
எருசலேமில் மார்ச் 23ம் தேதி இடம் பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சுமார் 40 பேர் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் இறந்தார்.
எருசலேம் இலத்தீன் ரீதிப் பேராயர் Fouad Twalம் இச்செயலைக் கண்டித்திருப்பதோடு, செபம், அமைதி மற்றும் திருப்பயணத்தின் புனித நகரம் என்ற எருசலேமின் பெயரை மேன்மைப்படுத்துவதற்கு எல்லா வழிகளிலும் முயற்சிகள் எடுக்கவிருப்பதாகக் கூறினார்.
5. ஐ.நா.மனித உரிமைகள் அவை சமய சுதந்திரத்திற்கு ஆதரவாகத் தீர்மானம்
மார்ச்26,2011: ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவை சமய சுதந்திரத்தை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை நாடுகள் வரவேற்றுப் பேசியுள்ளன.
இது குறித்துப் பேசிய அமெரிக்க ஐக்கிய நாட்டுச் செயலர் ஹிலரி கிளின்டன், மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் எதிர்கொள்ளும் சகிப்பற்றதன்மை, பாகுபாடு ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இத்தீர்மானம் உதவுவதாய் இருக்கின்றது என்று பாராட்டினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு இசுலாமிய அவை நிறுவனமும் மற்றும் பிற உறுப்பு நாடுகளுமே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமய விவகாரம் குறித்து உலக அளவில் உரையாடல் இடம் பெறுவதற்கு இத்தீர்மானம் உதவுகின்றது என்றும் ஹிலரி கிளின்டன் கூறினார்.
6. அடிமை வியாபாரத்தில் பலியானோரின் நினைவு நாள் மார்ச் 25
மார்ச்26,2011: அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற அடிமை வியாபாரத்தில் துன்புற்ற மற்றும் பலியான இலட்சக்கணக்கான அப்பாவி பொது மக்களை இவ்வெள்ளிக்கிழமை நினைவுகூர்ந்தது ஐ.நா. நிறுவனம்.
இந்த அடிமைகள் தாங்கள் வாழ்ந்த சமுதாயத்திற்குச் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், அடிமைத்தனம் பற்றிப் படிப்பதன் மூலம் மனித சமுதாயத்தை இத்தகைய கொடுமைகளிலிருந்து காப்பாற்ற முடியும் என்றும் உரைத்தார்.
“மூன்று கோடிப் பேரின் சொல்லப்படாத கதைகள்” என்ற தலைப்பில் கடைபிடிக்கப்பட்ட இவ்வுலக நாளில் மனிதர்களின் மாண்பு வலியுறுத்தப்ப்டடது.
ஆண்டு தோறும் மார்ச் 25ம் தேதி அடிமை வியாபாரத்தில் பலியானோரின் நினைவு நாளை உலக சமுதாயம் கடைபிடிக்கின்றது.
7. பான் கி மூன் : அணுக்கதிர்வீச்சு குறித்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் சர்வதேச அளவில் எடுக்கப்பட வேண்டும்
மார்ச்26,2011: ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஃபுக்குஷிமா அணுமின்நிலையம் சேதமாகியிருக்கும் வேளை, உலகில் மக்கள் அணுக்கதிர்வீச்சுக்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்குச் சர்வதேச அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு பான் கி மூன் கேட்டுள்ளார்.
அணுக்கதிர்வீச்சு அவசரகால நிர்வாக அமைப்பு உள்ளிட்ட ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி நிறுவனங்கள் மறு பரிசீலனை செய்யப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பான் கி மூன் கூறினார்.
இதற்கிடையே, ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள கடலில் அயோடின் அணுக்கதிர்வீச்சின் அளவு பாதுகாப்பு வரையறையைவிட 1,250 மடங்கு அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தின் 3ம் உலையில் மிகவும் மோசமாக சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த 3ம் உலையில்தான், யுரேனியத்தோடு புளுட்டோனியமும் கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியத்தைவிட புளுட்டோனியம் மிகுந்த நச்சுத்தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
3ம் உலையில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு கலந்த நீரைப் பரிசோதித்ததில், அதில் இயல்பைவிட 10 ஆயிரம் மடங்கு அதிகமாகக் கதிர்வீச்சு கலந்திருப்பது தெரியவந்தது.
மேலும் ஜப்பானில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டி விட்டது என்றும் 17,440 பேர் காணாமற்போயுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
8. ஐவரி கோஸ்ட் வன்முறைகளில் சுமார் பத்து இலட்சம் பேர் புலம் பெயர்வு
மார்ச்26,2011: ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் பதவி விலக வேண்டிய அரசுத்தலைவர் ஆட்சியை விட்டுக் கொடுக்க மறுப்பதைத் தொடர்ந்து பல மாதங்களாக இடம் பெற்று வரும் வன்முறைகளில் சுமார் பத்து இலட்சம் பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா.உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.
பதவி விலக மறுக்கும் அரசுத்தலைவர் Laurent Gbagboவின் ஆதரவாளர்கள் அப்பாவி பொது மக்களுக்கு எதிராகக் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் மக்களின் வாழ்க்கை கடுமையாயப் பாதிக்கப்ப்டடுள்ளது என்று ஐ.நா.அமைதி காக்கும் படைகளுக்கானப் பொதுச் செயலரின் உதவியாளர் Atul Khare, ஐ.நா.பாதுகாப்பு அவையில் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சனையால் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் லைபீரியாவுக்கும் இன்னும் பத்து இலட்சம் பேர் வரை நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்தும் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment