Sunday, 13 March 2011

Catholic News - hottest and latest - 12 Mar 2011

1. ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்

2. கல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயர் தாமஸ் டி சூசா

3. திருத்தந்தை, இத்தாலிய தேசிய நகரசபை கழக உறுப்பினர்கள் சந்திப்பு

4. ஜப்பான் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் திருத்தந்தை செபம்

5. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் ஆயர் பேரவை உதவி

6. இந்தோனேசியா :  தவக்காலத்தில் நோன்பிலும் தன்மறுப்புச் செயல்களிலும் ஈடுபட பேராயர் அழைப்பு

7. மலாய் மொழியில் முப்பதாயிரம் விவிலியங்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு அரசு தடை, கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு

8. மத்ரித் உலக இளையோர் தின நிகழ்வுகள் சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் பாதகம் ஏற்படாவண்ணம் இடம் பெறும்

9. மார்ச் 19ல் பூமிக்கு அருகே சந்திரன்

----------------------------------------------------------------------------------------------------------------

1. ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்

மார்ச் 12,2011: இந்தியாவின் ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக இதுவரை வாரங்கல் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிய ஆயர் தும்மா பாலா அவர்களை இச்சனிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் தும்மா பாலா, ஆந்திராவின் நரிமெட்டா என்ற ஊரில் 1944ம் ஆண்டு பிறந்தவர். 1970ம் ஆண்டு குருவான இவர், 1986ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி வாரங்கல் மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பேற்றார்.
ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக 2000மாம் ஆண்டு சனவரியில் பொறுப்பேற்ற பேராயர் ஜோஜி மாரம்புடி (Joji Marampudi) தனது 67வது வயதில் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து அப்பேராயர் இடம் இந்நாள்வரைக் காலியாக இருந்தது. 
1886ம் ஆண்டு மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டு 1953 ம் ஆண்டு உயர்மறைமாவட்ட உயர்த்தப்பட்ட ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தில் 90 ஆயிரம் கத்தோலிக்கர் உள்ளனர்.


2. கல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயர் தாமஸ் டி சூசா

மார்ச் 12,2011. கல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயராக, இதுவரை பாக்டோக்ரா (Bagdogra) மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிய ஆயர் தாமஸ் டி சூசா அவர்களை இச்சனிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை.
கல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயர் தாமஸ் டி சூசா, பாக்டோக்ரா மறைமாவட்டத்தின் முதல் ஆயராக 1998ம் ஆண்டு பணியேற்றார். 1950ம் ஆண்டு பிறந்த இவர், 1977ல் குருவாகவும் 1998ல் ஆயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார்.


3. திருத்தந்தை, இத்தாலிய தேசிய நகரசபை கழக உறுப்பினர்கள் சந்திப்பு

மார்ச் 12,2011: இந்த நவீன உலகின் பதட்டங்கள் மற்றும் துன்பங்களுக்கு மத்தியில் மக்கள் நீதியையும் தோழமை உணர்வையும் தங்கள் வாழ்க்கைப் பாதையாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.
இத்தாலியின் தேசிய நகரசபை கழகத்தின் தலைவர்கள் அலுவலகர்கள் என 250 பேரை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நகரசபை குழுக்கள் ஒன்றுகூடி ஒருவர் மற்றவருடன் பேசி விழாக்கள் கொண்டாடி வருங்காலத்திற்குத் திட்டமிடுவது பற்றிக் குறிப்பிட்டார்.
விசுவாசக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலிகளில் பங்கெடுத்து ஆலயங்களுக்கு அருகிலுள்ள வளாகங்களில் விழாக் கொண்டாடுகின்றனர் என்றும் இந்த ஒரு சூழலில் இத்தாலி, தேசிய ஐக்கியத்தின் 150ம் ஆண்டை இம்மாதத்தில் சிறப்பிக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
இரண்டு முக்கிய வழிகாட்டும் கூறுகளான உதவி செய்வதும் ஒருமைப்பாடும் திருச்சபையின் சமூகக் கோட்பாட்டுடன் ஒத்திணங்கிச் செல்கின்றன  என்றுரைத்த அவர், திருச்சபை சலுகைகளைக் கேட்கவில்லை, மாறாக அது தனது பணியை முழுமையாய் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்களைக் கேட்கின்றது என்றார்.
சமய சுதந்திரம் அமைதியைான நல்லிணக்க வாழ்வுக்கு அடிப்படையான உரிமை என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், குடியேற்றதாரருக்கு குடியுரிமை வழங்குவது பற்றியும் பேசினார்.


4. ஜப்பான் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் திருத்தந்தை செபம்

மார்ச் 12,2011: ஜப்பானின் வடகிழக்குப் பகுதியை 8.9 ரிக்டர் அளவில் கடுமையாய்த் தாக்கிய நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த சுனாமி ஆழிப் பேரலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுடனானத் தனது செபம் நிறைந்த ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Leo Jun Ikenaga க்குத் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பிய தந்திச் செய்தியில், இந்தத் திடீர் இயற்கைப் பேரிடர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்துத் திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பேரிடரில் இறந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இடர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள எல்லாருக்கும் திருத்தந்தையின் செபமும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவுக்கு வடக்கே செந்தை கடலோரப் பகுதியில் இவ்வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் பிற்பகல் 2.46 மணிக்கு இடம் பெற்ற இந்தப் பேரிடரில் 32 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின. இதில் வீடுகள், நகரின் உள்கட்டமைப்புகள், கப்பல்கள், வாகனங்கள், தொழிற்கட்டிடங்கள் உட்பட அனைத்தும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் 50 நாடுகளுக்கும் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுமார் 1300 பேர் இறந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
இன்னும், இப்பேரிடரின் தாக்கத்தால் Fukushima அணுசக்தி நிலையம் வெடித்ததில் பல தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.


5. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் ஆயர் பேரவை உதவி

மார்ச் 12,2011: ஜப்பான் ஆயர் பேரவை அலுவலகம் இரவு பகல் பாராமல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றது என்று அந்த அலுவலகப் பணியாளர்கள் ஆசிய செய்தி நிறுவனத்திடம் அறிவித்தனர்.
இப்பேரிடர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், ஜப்பானைப் பற்றி வெளிவரும் புகைப்படங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தார்.

இப்பேரிடர் இடர்துடைப்புப் பணியில் ஐ.நா. தன்னால் இயன்ற அனைத்து மனிதாபிமான உதவிகளையும் செய்யும் என்றும் பான் கி மூன் உறுதியளித்துள்ளார்.
புகுஷிமாவில் அணுமின் நிலையம் உள்ள பகுதியில் சற்று வாயு பரவியிருப்பதாக தெரிகிறது. இங்குள்ள 5அணு உலைகளில் 1 சேதமடைந்திருக்கிறது. இதனால் அழுத்தம் காரணமாக இது அணு வெப்ப வாயு கசிந்துள்ளது. அணுக்கதிர் எதுவும் வெளியேறவில்லை. இது பெரும் ஆபத்து இல்லை. இருப்பினும் 10 கி.மீட்டர் வரை வாழ்வோர் இடத்தைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அணு மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தப்பகுதியில் அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


6. இந்தோனேசியா :  தவக்காலத்தில் நோன்பிலும் தன்மறுப்புச் செயல்களிலும் ஈடுபட பேராயர் அழைப்பு

மார்ச் 12,2011: இந்தத் தவக்காலத்தின் நாற்பது நாட்களும் விசுவாசிகள் நோன்பிலும் தன்மறுப்புச் செயல்களிலும் ஈடுபடுவதன் மூலம் புனித வாரத்தில் ஆன்மீகத் தயாரிப்புடன் நுழைய முடியும் என்று இந்தோனேசியாவின் Semarang பேராயர் Johannes Pujasumarta கூறியுள்ளார்.
இந்தத் தவக்காலத்திற்கென மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்ட பேராயர் Pujasumarta, விசுவாசிகள் தங்களது அன்றாட வாழ்க்கையில் இயேசுவின் பாலைவன அனுபவத்தை வாழுமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஒரு வாரத்தின் ஏழு நாட்களில் தினமும் 24 மணிநேரம் கொடுக்கப்படுகின்றது, இதில் ஆன்மீகத்திற்கும் பொருளாதாரத் தேவைகளுக்கும் இடையே சமநிலை காக்குமாறும் பேராயர் கேட்டுக் கொண்டார்.


7. மலாய் மொழியில் முப்பதாயிரம் விவிலியங்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு அரசு தடை, கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு 

மார்ச்12,2011: முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியாவில், மலாய் மொழியில் பல்லாயிரக்கணக்கான விவிலியங்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு அரசு தடை செய்து வருதையொட்டி அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
மலேசியாவில் முப்பதாயிரம் விவிலியங்கள் விநியோகிக்கப்படுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்து வருவது சமய சுதந்திரத்திற்கு முரணாக இருக்கின்றது என்று இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மலேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு கூறியது.
அரசின் இந்நடவடிக்கை குறித்துப் பேசிய இக்கூட்டமைப்பின் தலைவர் ஆயர் Ng Moon Hing, Borneo தீவின் துறைமுகத்தில் மலாய் மொழியில் முப்பதாயிரம் விவிலியங்கள் அதிகாரிகள் வசம் இருக்கின்றன என்றார்.   
மலாய் மொழி விவிலியத்தில் கடவுள் என்ற சொல்லுக்கு அல்லா என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. 
மலேசியாவின் சுமார் 2 கோடியே 80 இலட்சம் மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் மலாய் முஸ்லீம்கள். 25 விழுக்காட்டினர் சீனர்கள். 8 விழுக்காட்டினர் இந்தியாவைப் பூர்வீகமாக்க கொண்டவர்கள்.


8. மத்ரித் உலக இளையோர் தின நிகழ்வுகள் சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் பாதகம் ஏற்படாவண்ணம் இடம் பெறும்

மார்ச் 12,2011: வருகிற ஆகஸ்டில் மத்ரித்தில் உலக இளையோர் தின நிகழ்வுகள் நடைபெறும் நாட்களில் சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் பாதகம் ஏற்படாவண்ணம் அனைத்தும் இடம் பெறும் என்று இவ்விழாத் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பூமியை வருங்காலத் தலைமுறைக்கு நல்ல நிலையில் வைக்க வேண்டுமென்பதே ஒவ்வொரு கிறிஸ்தவனின் அக்கறையாக இருக்கின்றது என்று இந்தத் திட்ட இயக்குனர் Eva Latonda அறிவித்தார்.
ஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மத்ரித்தில் வருகிற ஆகஸ்ட் 16 முதல் 21 வரை உலக இளையோர் தினம் நடைபெறுகின்றது


9. மார்ச் 19ல் பூமிக்கு அருகே சந்திரன்

மார்ச் 12,2011: பூமிக்கு அருகே சந்திரன், கடந்த 18 ஆண்டுகளுக்குப் பின், இம்மாதம் 19ம் தேதி 3,56,577 கி.மீ., தூரத்தில் வருகிறது எனச் சொல்லப்பட்டுள்ளது.
சந்திரனுக்கும் பூமிக்கும் இடையேயான சராசரி தூரம் சுமார் 3,84,440 கி.மீட்டராகும்.
ஆயினும் இந்த மார்ச் 19ம் தேதி பௌணர்மியாக இருப்பதோடு 3,56,577 கி.மீ., தூரத்தில் வருகிறது, இது கடந்த 18 ஆண்டுகளில் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக வரும் தூரம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் 1993ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி முழுநிலவு தினத்தன்று சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக வந்தது என்று பிர்லா பிளானெட்டோரியம் இயக்குனர் டி.பி.துரை அறிவித்தார்.
எப்போதெல்லாம் பூமிக்கு அருகே சந்திரன் வருகிறதோ, அப்போதெல்லாம் சுனாமி, எரிமலை வெடிப்பு, பயங்கர அழிவுகள் ஏற்படுகின்றன என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பூமிக்கு அருகில் சந்திரன் இம்முறை வருவதற்கு, "சூப்பர் மூன்' என்று பெயரிட்டுள்ளனர். இதனால், பூமியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும்; பகல் அதிகமாக இருக்கும். சந்திரன் உருவத்தில் பெரிதாகக் காணப்படும். கடந்த 1947, 1974, 1992, 1995, 2004 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போதும் இதுபோன்ற கோரச் சம்பவங்கள் நடந்துள்ளன. 1974ல் பூமிக்கு அருகே சந்திரன் வந்த போது ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரை புரட்டிப்போட்டது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...