Friday, 2 December 2011

Catholic News - hottest and latest - 30 November 2011

1. கான்ஸ்டான்டிநோபிளின் Ecumenical கிறிஸ்தவ சபைக்குத் திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

2. புருண்டி நாட்டில் கொலையுண்ட அருள் சகோதரி, தன்னார்வப் பணியாளரின் மரணம் குறித்து திருத்தந்தை அனுப்பியுள்ள தந்திகள்

3. திருவருகைக் காலத்தையொட்டி, அருள் பணியாளர்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenza விடுத்துள்ள செய்தி

4. நற்செய்தியின் பணிக்கென வாழ்வை அர்ப்பணித்த அருள்சகோதரி வல்சா ஜான் போற்றுதற்குரியவர் - இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர்

5. உலக AIDS நாளையொட்டி புது டில்லி பேராயர் Vincent Concessao வழஙகிய செய்தி

6. கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வாவின் கிறிஸ்து பிறப்பு விழா அழைப்பு

7. பூனே நகரில், 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கிறிஸ்தவக் கோவில் தீக்கிரையானது

8. கடந்த 160 ஆண்டுகளில் 2011மாம் ஆண்டின் வெப்ப நிலை 10வது இடம் வகிக்கிறது - ஐ.நா.அறிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. கான்ஸ்டான்டிநோபிளின் Ecumenical கிறிஸ்தவ சபைக்குத் திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

நவ.30,2011. ஒருவருக்கொருவர் சார்ந்து வாழும் நிலை மற்றும் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவங்கள் அதிகரித்துவரும் இன்றையச் சூழலில் நற்செய்தியின் உண்மைகளை எடுத்துரைப்பதற்கு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணத்துடன் நாம் செயல்படவேண்டிய தேவை உள்ளது என கான்ஸ்டான்டிநோபிளின் Ecumenical கிறிஸ்தவ சபை குலமுதல்வருக்கு அனுப்பியுள்ள செய்தியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
நவம்பர் 30, இப்புதனன்று கொண்டாடப்படும், Ecumenical கிறிஸ்தவ சபையின் பாதுகாவலரான திருத்தூதர் புனித அந்திரேயாவின் திருவிழாவையொட்டி இஸ்தான்புல்லுக்கு கர்தினால் Kurt Koch தலைமையில் திருப்பீடத்தின் சார்பாகச் சென்றுள்ள ஒரு குழுவின் மூலம் வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ள‌ திருத்தந்தை, முதலாம் பர்த்தலோமெயோ குலமுதல்வராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் இவ்வாண்டு நிறைவுறுவதையும் நினைவு கூர்ந்து வாழ்த்தினார்.
இன்றைய உலகின் மக்களில் எழும் ஆழமான கேள்விகளுக்கும் ஆன்மீக ஏக்கங்களுக்கும் விடை காண உதவும் வகையில் கிறிஸ்தவ சபைகளின் நற்செய்தி அறிவிப்பு பணி இருக்க வேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இத்தகைய நம் பணி வெற்றியடைய வேண்டுமெனில், முதலில் கிறிஸ்தவ சபைகளிடையே திகழவேண்டிய ஒன்றிப்பு எனும் சாட்சியம் இன்றியமையாதது என்பதையும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் பாப்பிறை.
கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளில் Ecumenical கிறிஸ்தவ சபையின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும், சர்வதேச நிலைப்பாடுகளில் கிறிஸ்தவ மதிப்பீடுகளை மேம்படுத்தும் குலமுதல்வர் முதலாம் பர்த்தலோமெயோவின் அறிவார்ந்த முயற்சிகளையும் தான் பாராட்டுவதாக திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.


2. புருண்டி நாட்டில் கொலையுண்ட அருள் சகோதரி, தன்னார்வப் பணியாளரின் மரணம் குறித்து திருத்தந்தை அனுப்பியுள்ள தந்திகள்

நவ.30,2011. இஞ்ஞாயிறன்று ஆப்ரிக்காவின் புருண்டி நாட்டில் கொலை செய்யப்பட்ட அருள் சகோதரி, மற்றும் தன்னார்வப் பணியாளரின் மரணம் குறித்து தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தந்திகள் மூலம் வெளிப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Brescia வின் பிறரன்பு சகோதரிகள் சபையைச் சார்ந்த அருள்சகோதரி Lukrecija Mamic, மற்றும் தன்னார்வத் தொண்டர் Francesco Bazzani ஆகியோர் கொலையுண்டதையொட்டி, Ngozi மறைமாவட்ட ஆயர் Gervais Banshimiyubusa, அருள்சகோதரி Mamic சார்ந்திருந்த துறவு சபைத் தலைவி, மற்றும் தன்னார்வத் தொண்டர் Bazzaniஇன் குடும்பத்தினர் அனைவருக்கும் திருத்தந்தையின் பெயரால் அனுதாபத் தந்திகளை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ளார்.
இறந்தோர் இருவரையும் இறைவன் தன் அரசில் வரவேற்கவும், இவ்வன்முறையில் படுகாயம் அடைந்துள்ள அருள்சகோதரி Lucia Brienzaவுக்குத் தேவையான வலிமையை இறைவன் தரவும் தான் வேண்டி வருவதாக திருத்தந்தை இத்தந்திகளில் குறிப்பிட்டுள்ளார்.
இத்துயர நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், சிறப்பாக, தன்னார்வத் தொண்டர் Bazzaniஇன் குடும்பத்தினர், அருள்சகோதரிகளின் சபையைச் சார்ந்தவர்கள் மற்றும், Ngozi மறைமாவட்ட மக்கள் அனைவருக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் இத்தந்திகள் வழியாகத் திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.


3. திருவருகைக் காலத்தையொட்டி, அருள் பணியாளர்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenza விடுத்துள்ள செய்தி

நவ.30,2011. இயேசு இவ்வுலகிற்கு முதல்முறை வந்தபோது அவரை முழு உள்ளத்துடன் வரவேற்ற மரியாவின் மனதை அனைத்து கத்தோலிக்க அருள் பணியாளர்களும் கொண்டிருக்க வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
அண்மையில் துவங்கிய திருவருகைக் காலத்தையொட்டி, அருள் பணியாளர்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenza விடுத்துள்ள ஒரு செய்தியில்,  அருள் பணியாளர்கள் அன்னை மரியாவைப் போல் செபத்தில் இறைவனை வரவேற்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு தாய்க்கும் உரிய கண்காணிப்புடனும், ஆதங்கத்துடனும் அன்னை மரியா இயேசுவின் பிறப்பில் இருந்து கல்வாரி மரணம் வரை அவருடன் பயணித்ததைப் போல், குருக்களும் கிறிஸ்துவுடன் பயணிக்க வேண்டும் என்று கர்தினால் Piacenza தன் செய்தியில் கூறியுள்ளார்.
கிறிஸ்துவுக்காக வாழ்வை அர்ப்பணித்துள்ள குருக்களை விண்ணகத்தில் இறைவன் பிரசன்னத்தில் ஒவ்வொரு நாளும் மரியா நினைவுகூருவது உறுதி என்றும் கர்தினால் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


4. நற்செய்தியின் பணிக்கென வாழ்வை அர்ப்பணித்த அருள்சகோதரி வல்சா ஜான் போற்றுதற்குரியவர் - இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர்

நவ.30,2011. தன் வாழ்வை நற்செய்தியின் பணிக்கென துணிவுடன் அர்ப்பணித்த அருள்சகோதரி வல்சா ஜான் போற்றுதற்குரியவர் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கூறினார்.
நவம்பர் மாதம் 15ம் தேதி இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட அருள்சகோதரி வல்சா ஜானைக் குறித்து Aid to the Church in Need என்ற நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் இவ்வாறு கூறினார்.
அருள் சகோதரி கொலை வழக்கு குறித்து காவல் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன என்றும் கர்தினால் கிரேசியஸ் குறிப்பிட்டார்.
அருள் சகோதரி வெட்டிக் கொல்லப்பட்டதைக் குறித்து பல்வேறு சமதாய அமைப்புக்கள் தங்கள் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
மக்களின் நீதி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தொண்டர்களில் அருள்சகோதரி வல்சா ஜான் உட்பட இதுவரை இந்தியாவில் நான்கு பேரின் கொலைகள் இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களாக உள்ளன என்று பன்னாட்டுப் பொது மன்னிப்பு நிறுவனமான Amnesty International கூறியுள்ளது.


5. உலக AIDS நாளையொட்டி புது டில்லி பேராயர் Vincent Concessao வழஙகிய செய்தி

நவ.30,2011. உலக AIDS நாளையொட்டி, ஐ.நா. விடுத்துள்ள 'பூஜ்யத்தை நெருங்குகிறோம்' என்ற செய்தி நம்பிக்கையைத் தருகின்றது என்று புது டில்லி பேராயர் Vincent Concessao கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப்படும் உலக AIDS நாள் டிசம்பர் 1ம் தேதி, இவ்வியாழனன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, 'புதிதாக HIV பரவுவதில் பூஜ்யம், நோயுற்றோரை வேறுபடுத்துவதில் பூஜ்யம், AIDS தொடர்பான மரணங்களில் பூஜ்யம் என பூஜ்யத்தை நெருங்குகிறோம்' என்ற மையக் கருத்துடன் ஐ.நா.வெளியிட்டுள்ள செய்தியைப் பாராட்டி பேராயர் Concessao மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் மக்கள் நலவாழ்வு பராமரிப்பு துறையின் தலைவராகச் செயலாற்றும் பேராயர் Concessao இப்புதனன்று வெளியிட்டுள்ள இம்மடலில் உலக AIDS நாளையொட்டி தன் கருத்துக்களைக் கூறியுள்ளார்.
பரிவு, பராமரிப்பு ஆகிய உயரிய பண்புகளுக்கு கத்தோலிக்கத் திருச்சபை எப்போதும் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது என்பதை, தன் மடலில் சுட்டிக் காட்டியுள்ள பேராயர் Concessao, இந்தப் பரிவும் பராமரிப்பும் HIV மற்றும் AIDS நோயுற்றோருக்கு மிக அதிகமாகக் காட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


6. கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வாவின் கிறிஸ்து பிறப்பு விழா அழைப்பு

நவ.30,2011. கிறிஸ்து பிறப்பு விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம் இவ்விழா கொண்டுவரும் அமைதி, நம்பிக்கை ஆகிய உயர்ந்த எண்ணங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் கருவிகளாக இருக்க வேண்டும் என்று கட்டக் புபனேஸ்வர் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் ஜான் பார்வா கூறினார்.
திருவருகைக் காலத்தின் துவக்கத்தில் தன் உயர் மறைமாவட்ட கத்தோலிக்க விசுவாசிகளுக்கு செய்தி வெளியிட்ட பேராயர் பார்வா, கடவுள் நம்முடன் என்ற கிறிஸ்மஸ் நாட்களின் முக்கியச் செய்தியை நாம் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
2008ம் ஆண்டு கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளில் வீடுகளையும் உடைமைகளையும் இழந்தவர்களில் இன்னும் 30,000க்கும் அதிகமானோர் அரசின் முகாம்களில் தங்கியிருக்கும் அவல நிலையைத் தன் மடலில் சுட்டிக் காட்டியுள்ள பேராயர் பார்வா, தான் அண்மையில் அப்பகுதியில் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணங்களில் மக்கள் மத்தியில் நம்பிக்கை தளராமல் இருப்பதைக் காண முடிந்ததென்று கூறியுள்ளார்.
மறைமாவட்டமும், கத்தோலிக்கச் சமுதாயமும் ஒன்றிணைந்து அப்பகுதியில் மேற்கொண்டுள்ள முயற்சிகளால் இதுவரை 3500 பேருக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்துள்ளது என்பதையும் பேராயர் தன் மடலில் எடுத்துரைத்துள்ளார்.


7. பூனே நகரில், 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கிறிஸ்தவக் கோவில் தீக்கிரையானது

நவ.30,2011. இந்தியாவின் பூனே நகரில், 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கிறிஸ்தவக் கோவில் ஒன்று இத்திங்களன்று தீக்கிரையானது.
பழமை வாய்ந்த இக்கோவிலை தான் நேரில் சென்று பார்த்ததாகவும், அக்கோவிலின் பீடம், மறையுரை மேடை, விவிலியம் உட்பட கோவிலின் உட்பகுதி முழுவதும் சாம்பலாகி விட்டதென்று பூனே ஆயர் தாமஸ் தாப்ரே கூறினார்.
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மறை பணியாளர்களால் 1860ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோவில் அழிந்ததோடு, அங்கு பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட உருது மொழி விவிலியம் ஒன்றும் தீயில் அழிந்து விட்டதென்று கோவிலின் மறைபோதகர் Sachin Masih கூறினார்.
இத்திங்கள் காலை 8 மணி அளவில் ஆரம்பமான இந்தத் தீ, விரைவில் கோவிலெங்கும் பரவியது என்றும், ஐந்து தீயணைக்கும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும் கோவிலைக் காக்க முடியவில்லை என்றும் கோவில் நிர்வாகி தாமஸ் இர்வின் கூறினார்.
தீ விபத்தின் முழுக் காரணங்களையும் ஆராய்ந்து வருவதாகக் கூறும் காவல் துறையினர், மின் இணைப்புக்களில் உருவான பழுதுகளே முக்கிய காரணம் என்று தாங்கள் கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.


8. கடந்த 160 ஆண்டுகளில் 2011மாம் ஆண்டின் வெப்ப நிலை 10வது இடம் வகிக்கிறது - ஐ.நா.அறிக்கை

நவ.30,2011. 1850ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் கணிக்கப்பட்டு வரும் உயர் வெப்ப நிலை அளவில் 2011மாம் ஆண்டின் வெப்ப நிலை 10வது இடம் வகிக்கிறது என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
தட்பவெப்ப நிலையை மையமாகக் கொண்டு தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்று வரும் பன்னாட்டு கருத்தரங்கில் இச்செவ்வாயன்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த ஐ.நா. தட்பவெப்ப நிலை நிறுவனம் இவ்வாறு அறிவித்தது.
உலகை குளிர்விக்கும் La Nina நிலை இவ்வாண்டு நிலவி வந்தாலும், உலகின் வெப்ப நிலை இவ்வாண்டு கூடுதலாக உள்ளது என்று இவ்வறிக்கை கூறுகிறது.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கணிக்கப்பட்டுள்ள இந்த அளவுகளின் படி, 1997ம் ஆண்டிலிருந்து 13 ஆண்டுகள் அதிக வெப்ப நிலை உள்ள ஆண்டுகளாகவே இருந்துள்ளன.
கிழக்கு ஆப்ரிக்கா, மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தெற்கு பகுதி ஆகிய இடங்களில் நிலவிய வறட்சிக்கு 2011ம் ஆண்டு நிலவிய இந்த La Nina நிலையே காரணம் என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...