Tuesday, 27 December 2011

Catholic News - hottest and latest - 26 December 2011

1. புனித ஸ்தேவான் திருநாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை

2. நைஜீரிய கோவில் தாக்குதல் குறித்து திருப்பீடம் கவலை

3. இலங்கை ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தி

4. கிறிஸ்மஸ் நாளன்று 'பிரேம் நிவாஸ்' இல்லத்தைப் பார்வையிட்ட கர்தினால் மால்கம் இரஞ்சித்

5. பெத்லகேம் பகுதியில் வீடுகளையும் நிலங்களையும் இழக்கும் குடும்பங்கள் மீது பேராயர் நிக்கோல்ஸ் கவலை

6. ஜகார்த்தா உயர்மறைமாவட்டம் வறியோருடன் பகிர்ந்து கொண்ட கிறிஸ்மஸ் விருந்து

------------------------------------------------------------------------------------------------------

1. புனித ஸ்தேவான் திருநாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை

டிச.26,2011. கிறிஸ்மஸ் பெருவிழாவைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாள் திருச்சபையில் சிறப்பிக்கப்படும் முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவான் குறித்த சிந்தனைகளை இத்திங்கள் மூவேளை செப உரையில் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராக மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்எனத் திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டிப் பேசியத் திருத்தந்தை, ஸ்தேவான் என்ற பெயருக்கு 'மணிமகுடம்' என்ற பொருள் உண்டு என்பதையும் சுட்டிக் காட்டினார்.
தன்மீது கல்லேறிந்தபோது ஸ்தேவான், ‘ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்என்று வேண்டிக் கொண்டபின் முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், ‘ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்என்று சொல்லி உயிர்விட்ட நிகழ்வையும் தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.
காலம் காலமாக மறைசாட்சிகள் திருச்சபை நன்னெறிகளின் ஆசிரியர்களாக, வாழும் சாட்சிகளாக, உயிருள்ள தூண்களாக, அமைதித் தூதர்களாக போற்றப்பட்டு வருகின்றார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
மூவேளை செப உரையின் இறுதியில், இவ்வுலகில் அமைதி, மற்றும் நீதியின் ஆட்சி தழைக்க செபிக்குமாறும் அழைப்பு விடுத்தத் திருத்தந்தை, நைஜீரியாவில் கிறிஸ்மஸ் நாளன்று கோவில்கள் தாக்கப்பட்டது குறித்து தன் ஆழ்ந்த கவலையை எடுத்துரைத்தார்.
பாதிக்கப்பட்டோருடன் தன் ஒருமைப்பாட்டையும், அருகாமையையும் வெளியிட்டதுடன், துன்பங்களையும், அழிவுகளையும், மரணத்தையும் கொண்டு வரும் வன்முறைகளைக் கைவிட்டு, அமைதியை நோக்கிச் செல்லும் அன்பு, மதிப்பு மற்றும் ஒப்புரவின் வழிகளைக் கைகொள்ளுமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. நைஜீரிய கோவில் தாக்குதல் குறித்து திருப்பீடம் கவலை

டிச.26,2011. நைஜீரியாவின் அபுஜா நகர் புனித தெரேசா கோவில் வெடிகுண்டால் தாக்கப்பட்டு பலர் பலியாகியுள்ளது குறித்து திருச்சபையின் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
மனித உயிர்கள் மீது எவ்வித மதிப்புமற்ற வகையில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டோருடனும், தலத்திருச்சபையுடனும் அகில உலகத்திருச்சபை தன் அருகாமையைத் தெரிவிக்கிறது என்று கூறிய திருப்பீடப் பேச்சாளர், அமைதியின் மகிழ்வைக் கொணரும் இக்கிறிஸ்மஸ் காலத்தில் இத்தகைய தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.
பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்காக செபிக்கும் அதே வேளை, இத்தைகைய தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாதிருக்கவும், அந்நாட்டில் இடம்பெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாதிப்படையாமல் தொடரவும் ஆவல் கொள்வோம் என மேலும் தெரிவித்தார் இயேசு சபை குரு லொம்பார்தி.
நைஜீரியாவின் அபுஜா புனித தெரேசா கோவிலில் கிறிஸ்மஸ் திருப்பலியின்போது இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் அந்நாட்டின் ஜோஸ் நகரின் கோவிலும் வெடிகுண்டால் தாக்கப்பட்டுள்ளது.


3. இலங்கை ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தி

டிச.26,2011. இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பின்னையக் காலக்கட்டத்தில் இடம்பெறும் கிறிஸ்மஸ் பெருவிழா, தலத்திருச்சபைக்கு முன் பல்வேறு சவால்களை வைத்துள்ளதென்று தங்கள் கிறிஸ்மஸ் செய்தியில் உரைத்துள்ளனர் இலங்கை ஆயர்கள்.
மக்களால் உருவாக்கப்பட்ட பிரிவினைகளான ஜாதி, மதம், இனம் ஆகியவற்றைத் தாண்டி, வாழ்வெனும் கொடை தொடர வேண்டும் என இக்கிறிஸ்மஸ் பெருவிழா நமக்கு நினைவூட்டுகிறதென தங்கள் செய்தியில் உரைக்கும் ஆயர்கள், ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் ஆழமான மதிப்பு, ஒருமைப்பாடு மற்றும் ஒப்புரவின் தேவை போன்றவை உணரப்பட வேண்டும் என்று மேலும் கூறியுள்ளனர்.
ஒப்புரவு என்பது மேன்மேலும் தேவைப்படும் இன்றையச் சூழலில் நம் முற்சார்பு எண்ணங்களைக் கைவிட்டு, போரின் காயங்களைக் குணப்படுத்தும் சவால்களை மேற்கொள்வோம் எனவும் இலங்கை ஆயர்கள் தங்கள் கிறிஸ்மஸ் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒரே கடவுளின் குழந்தைகள் என்ற உறுதிப்பாட்டு உணர்வுடன் ஒப்புரவு மற்றும் அமைதியைக் கட்டியெழுப்பும் நம் பணிகளை இருமடங்காக்குவோம் என கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஆயர்கள், சமுதாயத்தில் ஏழைகள் மற்றும் குடிபெயர்ந்தோரிடையே இறைவனைக் கண்டு கொள்ள முன் வந்து, அம்மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவோமாக எனவும் தங்கள் கிறிஸ்மஸ் செய்தியில் விண்ணப்பித்துள்ளனர்.


4. கிறிஸ்மஸ் நாளன்று 'பிரேம் நிவாஸ்' இல்லத்தைப் பார்வையிட்ட கர்தினால் மால்கம் இரஞ்சித்

டிச.26,2011. அண்மையில் இலங்கை அரசின் தவறான குற்றச் சாட்டிற்கு உள்ளான 'பிரேம் நிவாஸ்' அன்னை தெரேசா பிறரன்புச் சகோதரிகள் இல்லத்தை கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், இலங்கைக்கான இந்தியத் தூதரக உயர் அதிகாரி அசோக் காந்தாவும் கிறிஸ்மஸ் நாளன்று சென்று பார்வையிட்டனர்.
இவ்வில்லத்தில் பிறரன்புச் சகோதரிகளால் பராமரிக்கப்படும் குழந்தைகளையும், மற்றவர்களையும் சென்று பார்வையிட்ட இவ்விரு தலைவர்களும், அக்குழந்தைகள் வழங்கிய வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.
ஏழைக் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்ட கர்தினால் இரஞ்சித்தும், இந்திய உயர் அதிகாரி காந்தாவும் அவர்களுடன் உரையாடியதாக கொழும்பு உயர்மரைமாவட்டம் வெளியிட்ட செய்தி கூறுகிறது.
குழந்தைகளை அயல் நாட்டவருக்கு விற்க முயன்றார் என்ற தவறான குற்றச்சாட்டின்பேரில் கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்டு, பின் நீதி மன்ற விசாரணையில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அருள் சகோதரி மேரி எலிசா, மற்றும் அச்சபையின் இலங்கை மாநிலத் தலைவி அருள்சகோதரி Johannes ஆகியோரையும், ஏனைய சகோதரிகளையும் இவ்விரு தலைவர்களும் சந்தித்து உரையாடினர்.


5. பெத்லகேம் பகுதியில் வீடுகளையும் நிலங்களையும் இழக்கும் குடும்பங்கள் மீது பேராயர் நிக்கோல்ஸ் கவலை

டிச.26,2011. புனித பூமியின் பெத்லகேம் பகுதியில் பிரிவுச் சுவர் ஒன்றைக் கட்டும் இஸ்ராயேலின் பணிகள் முடியும் இத்தறுவாயில், அங்கே தங்கள் வீடுகளையும், நிலங்களையும் இழந்து வெளியே தள்ளப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ள 50 குடும்பங்களைக் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் இங்கிலாந்தின் Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ்.
உலகில் இன்று பல கோடி மக்களின் வாழ்வில் பாதுகாப்பற்ற நிலைகளும், கவலைகளும் ஆக்ரமித்துள்ளதைக் காணும் நாம், இதற்குக் காரணமான பேராசை, கொடும் எண்ணம், சுயநலம், மனித வாழ்வின் மீது மதிப்பற்ற நிலை போன்றவைகளை முதலில் நோக்கி, அவைகளைச் சரிசெய்ய முன் வர வேண்டும் என்று பேராயர் நிக்கோல்ஸ் கிறிஸ்மஸ் பெருவிழாத் திருப்பலியில் மறையுரை யாற்றிய வேளையில், பெத்லகேமின் இன்றைய நிலை குறித்தும் பேசினார்.
பெத்லகேமின் Beit Jala பங்குதள மக்கள் 50 பேர் இஸ்ராயேல் அரசின் நடவடிக்கைகளால் தங்கள் நிலங்களையும், வீடுகளையும் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது எனவும், அவர்களுக்காக கத்தோலிக்க சமுதாயம் செபிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் பேராயர் நிக்கோல்ஸ்.


6. ஜகார்த்தா உயர்மறைமாவட்டம் வறியோருடன் பகிர்ந்து கொண்ட கிறிஸ்மஸ் விருந்து

டிச.26,2011. சமுதாயத்திற்குச் சேவையாற்றும் உணர்வை மக்களில் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், கிறிஸ்மஸ் பெருவிழா விருந்தை ஏறத்தாழ 1000 குழந்தைகள் மற்றும் முதியோருடன் பகிர்ந்துள்ளது இந்தோனேசியாவின் ஜகார்த்தா உயர்மறைமாவட்டம்.
San Edigio கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ்விருந்தில் பெருமளவில் இஸ்லாமியச் சிறுவர்களும் முதியவர்களும் கலந்து கொண்டதாக இயேசு சபை குரு Alexius Andang Listya Binawan கூறினார்.
ஒருவர் மற்றவருக்கு உதவ வேண்டும், தேவையில் உள்ளோருக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்ற உணர்வை இத்தகைய செயல்பாடுகள் மூலம் சமுதாயத்திற்கு கற்பிக்க முயல்வதாக அருள்தந்தை Binawan எடுத்துரைத்தார்.
கிறிஸ்மஸ் பெருவிழாவின்போது பொட்டலங்காளாக உணவு வழங்குவதைக் காட்டிலும், ஒரு குடும்ப உணர்வுடன் வறியோருக்கு விருந்தளிப்பது சமூக கடமையுணர்வைக் கற்பிப்பதாக இருக்கும் என்று கூறிய அருள்தந்தை Binawan,  இந்த விருந்து தொடர்பான செயல்களில் 700 தன்னார்வத் தொண்டர்கள் எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் செயலாற்றியதையும் சுட்டிக்காட்டினார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...