Friday, 16 December 2011

Catholic News - hottest and latest - 15 December 2011

1. பாகிஸ்தான், இலங்கை, உட்பட 11 நாடுகளின் புதியத் தூதர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

2. ஈராக்கில் இரு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு மத வெறிதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது திருப்பீடத் தூதர்

3. பிலிப்பின்ஸ் நாட்டில் கிறிஸ்மஸ் நவநாள் முயற்சிகள் ஆரம்பம்

4. சனவரியை வறுமை விழிப்புணர்வு மாதம் என்று கொண்டாட அமெரிக்க ஆயர் பேரவை முடிவு

5. அருள் சகோதரி மேரி எலிஷா குற்றமற்றவர் - இலங்கை நீதி மன்றம் தீர்ப்பு

6. அணு உலைகளை அமைக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபடுவதை மக்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் - தென் கொரிய ஆயர்

7. ஐ.நா அவைக்கு 2011ம் ஆண்டு முக்கியமான ஆண்டு - பொதுச் செயலர் பான் கி மூன்

------------------------------------------------------------------------------------------------------
1. பாகிஸ்தான், இலங்கை, உட்பட 11 நாடுகளின் புதியத் தூதர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

டிச.15,2011. மனித குலம் பயன்படுத்தி வரும் பல்வேறு தொடர்பு சாதனங்கள், மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியவை நம்மை ஒரு குடும்பமாக இணைத்து வருவதை ஒரு சவாலாக ஏற்று ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீடத்திற்கென நியமிக்கப்பட்டு, பிற நாடுகளில் தங்கி, பணியாற்றும் 11 நாடுகளின் புதியத் தூதர்களை இவ்வியாழன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றபின், அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகள், மற்றும் புருண்டி, மொசாம்பிக், புர்கினா பாசோ உட்பட சில ஆப்ரிக்க நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் 11 பேரை ஒரே குழுவாக திருத்தந்தை சந்தித்தார்.
மனித குலம் பயன்படுத்தும் தொடர்பு வசதிகளும், போக்குவரத்து முன்னேற்றங்களும் நமக்கு சவால்களாகவும், பிரச்சனைகளாகவும் மாறி வருகின்றன என்று கூறிய திருத்தந்தை, இந்த வசதிகளைக் கொண்டு மனித குலத்தை மென்மேலும் ஒருங்கிணைப்பதில் அனைவருக்கும் கடமை உள்ளது என்று எடுத்துரைத்தார்.
வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு கலாச்சாரங்களில் வாழ்ந்து வரும் நாம் அனைவருமே இளைய தலைமுறையினரை நல்ல மதிப்பீடுகளுடன் வளர்ப்பதில் தனி அக்கறை கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
வேலையில்லாத் திண்டாட்டம், போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், தனி மனித உயிருக்குத் தகுந்த மதிப்பு அளிக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ள இளையோருக்கு தகுந்த முறையில் கல்வி வழங்குவது இன்றைய உலகின் மிக முக்கியமான கடமை என்று தன் உரையில் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
மனுக்குலத்தை இணைக்கும் வழிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஒவ்வோர் அரசும் இன்னும் தெளிவாகவும், தீவிரமாகவும் முடிவுகள் எடுப்பதற்கு தூதர்கள் வழியாக தான் வேண்டுகோள் விடுப்பதாக தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, அங்கு கூடியிருந்த தூதர்களுக்கும், அவர்கள் குடும்பங்கள் மற்றும் அவர்களது பணிகள் அனைத்திற்கும் தன் ஆசீர் உண்டு என்று வாழ்த்தினார்.


2. ஈராக்கில் இரு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு மத வெறிதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது திருப்பீடத் தூதர்

டிச.15,2011. ஈராக்கின் மோசுல் நகரில் இரு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கு மத வெறிதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது என்றும், இந்த நிகழ்வுக்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம் என்றும் திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
மோசுல் நகரில் இச்செவ்வாயன்று இரு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணங்கள் தெளிவில்லாதபோது, இதனை ஒரு மதக்கலவரமாக எண்ணிப் பார்க்கக் கூடாது என்று ஈராக் நாட்டில் பணிபுரியும் திருப்பீடத் தூதர் ஆயர் Giorgio Lingua, FIDES செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இக்குற்றங்களைச் செய்தவர்களும், இக்கொலைகளுக்கான காரணங்களும் தெரியவில்லை என்று கூறிய மோசுல் நகரத்தின் கால்தீய ரீதிப் பேராயர் Amel Shamon Nona, கொலையுண்டவர்களின் குடும்பங்களுக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.
இதுபோன்ற வன்முறைகளால் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழ வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டிய திருப்பீடத் தூதர், சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பகல் நேரங்களில் நிகழும் என்றும், ஒவ்வொரு கோவிலும் தகுந்த முறையில் பாதுகாப்பு பெறும் என்றும் கூறினார்.
இதற்கிடையே, கடந்த ஒன்பது ஆண்டுகள் ஈராக்கை ஆக்கிரமித்திருந்த அமெரிக்க படைகள் இப்புதனன்று அந்நாட்டிலிருந்து முழுமையாக வெளியேறி உள்ளதாக முன்னணி ஊடகச் செய்திகள் கூறுகின்றன.


3. பிலிப்பின்ஸ் நாட்டில் கிறிஸ்மஸ் நவநாள் முயற்சிகள் ஆரம்பம்

டிச.15,2011. நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிகளை செபத்தின் வல்லமையால் மேற்கொள்ளலாம் என்று பிலிப்பின்ஸ் நாட்டின் தலத்திருச்சபை அதிகாரிகள் கூறினர்.
இவ்வெள்ளியன்று பிலிப்பின்ஸ் நாட்டில் கிறிஸ்மஸ் நவநாள் முயற்சிகள் ஆரம்பமாக உள்ளன. இந்த முயற்சிகளின் முதல் கட்டமாக Simbang Gabi எனப்படும் முதல் திருப்பலி நிகழவிருப்பதையோட்டி, Lipa உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Ramon Arguelles மக்களுக்கு விடுத்த அழைப்பில் இவ்வாறு எடுத்துரைத்தார்.
பிலிப்பின்ஸ் நாட்டில் அண்மையில் நிகழ்ந்து வரும் பல்வேறு அரசியல் முடிவுகள் மக்களின் நலனை மையப்படுத்தியதாக இல்லை என்று கூறிய Jaro உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Angel Lagdameo, Lipa பேராயரைப் போலவே செபத்தின் வல்லமை குறித்து பேசினார்.
திருப்பலிகளில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கிறிஸ்மஸ் விழா நவநாள் மற்றும் விழாக்கால திருப்பலிகள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன என்று Kidapawan மறைமாவட்ட ஆயர் Romulo Dela Cruz கூறினார்.


4. சனவரியை வறுமை விழிப்புணர்வு மாதம் என்று கொண்டாட அமெரிக்க ஆயர் பேரவை முடிவு

டிச.15,2011. வறுமையில் வாடும் பல குடும்பங்களின் போராட்டங்களிலும், துன்பங்களிலும் ஒன்றிணைவதன் மூலம் அவர்களது நம்பிக்கையிலும் பங்கேற்பதே நமது கடமை என்று அமெரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
புத்தாண்டின் முதல் மாதமான சனவரியை வறுமை விழிப்புணர்வு மாதம் என்று கொண்டாட அமெரிக்க ஆயர் பேரவை முடிவு செய்திருப்பதை செய்தியாளர்களிடம் எடுத்துரைத்த வறுமை ஒழிப்பு அவையின் தலைவரும், Sacramento ஆயருமான Jaime Soto இவ்வாறு கூறினார்.
சனவரி முழுவதும் நடைபெறும் இவ்விழிப்புணர்வு மாதத்தின் செயல்பாடுகள் வழியாக அமெரிக்காவில் வறுமையில் வாடுவோர் குறித்து புள்ளி விவரங்கள் தெளிவாக்கப்படும் என்று ஆயர் எடுத்துரைத்தார்.
வேற்று நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள குடும்பங்களை இந்நாட்டின் சமுதாயத்துடன் இணைப்பது, கருவுற்றுள்ள ஒவ்வொரு பெண்ணும், அவரது கருவில் வளரும் குழந்தையும் இவ்வுலகை ஒரு பாதுகாப்பான இடமாக நோக்குவதற்கு உரிய நம்பிக்கையைத் தருவது, பிறரன்பு சேவை என்பதே நம் சமுதாயத்தின் நல அளவு என்பதை வலியுறுத்துவது ஆகிய செயல்பாடுகள் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்று ஆயர் விவரித்தார்.


5. அருள் சகோதரி மேரி எலிஷா குற்றமற்றவர் - இலங்கை நீதி மன்றம் தீர்ப்பு

டிச.15,2011. என்னைச் சிறைக்கு அனுப்பியவர்கள் அனைவரையும் நான் மனதார மன்னிக்கிறேன் என்று அருள்சகோதரி மேரி எலிஷா கூறினார்.
அருளாளர் அன்னை தெரேசா பிறரன்புச் சபை சகோதரி மேரி எலிஷா குழந்தைகளை விற்கிறார் என்ற தவறான குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் பிணையத்தில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அருள் சகோதரி எலிஷா குற்றமற்றவர் என்று கூறி, இலங்கை நீதி மன்றம் இவ்வியாழன் அவரை விடுவித்ததுடன், அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள கடவுச் சீட்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அவரிடம் மீண்டும் சேர்க்குமாறு ஆணை பிறப்பித்தது.
நீதி மன்றத்தை விட்டு வெளியேறிய அருள்சகோதரி எலிஷா, சூழ்ந்திருந்த செய்தியாளர்களிடம் கூறிய செய்தி மன்னிப்புச்  செய்தியாக இருந்தது.
கடந்த மாதம் 23ம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி, அருள்சகோதரிகள் நடத்தி வந்த ஓர் அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் நுழைந்த அரசு அதிகாரிகள் தகுந்த ஆதாரங்கள் ஏதுமின்றி, அவ்வில்லத்தின் தலைவியாகப் பணிபுரிந்த அருள்சகோதரி மேரி எலிஷாவை கைது செய்தனர்.
தேசிய குழந்தைகள் பாதுகாப்புத் துறை என்ற அரசு அமைப்பு மேற்கொண்ட இந்நடவடிக்கைகள் அவ்வமைப்பின் நம்பகத் தன்மையைப் பெரிதும் பாதித்துள்ளது என்று கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் சார்பில் இந்த வழக்கில் ஈடுபட்ட அருள்தந்தை நோயல் டயஸ் கூறினார்.
குழந்தைகள் முன்னேற்ற அரசுத் துறை அமைச்சர் இந்த நிகழ்வு குறித்து ஏற்கனவே தன் வருத்தங்களை அருள் சகோதரியிடமும் அவரது சபையிடமும் தெரிவித்துள்ளார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. அணு உலைகளை அமைக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபடுவதை மக்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் - தென் கொரிய ஆயர்

டிச.15,2011. ஜப்பான் அரசு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருந்தாலும், அணு சக்தி என்றும் ஆபத்து நிறைந்ததே என்று அணுசக்தி ஆய்வில் ஈடுபட்டுள்ள ஓர் ஆயவாளர் கூறினார்.
அணு உலைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள ஜப்பான் Kyoto பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வு நிறுவனத்தில் பணி புரியும் Tetsuji Imanaka, தென் கொரியாவின்  கத்தோலிக்க மையம் ஒன்றில் இப்புதனன்று அளித்த உரையில் இவ்வாறு கூறினார்.
ஜப்பானில் நில நடுக்கம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து ஏற்பட்ட அணுக்கசிவினைச் சரிசெய்த அரசு, அதன்பின் விடுத்த ஓர் அறிக்கையில் அணு உலைகள் பாதுகாப்பானவை என்று கூறியிருப்பது முற்றிலும் உண்மையல்ல என்றும், பல நுணுக்கமான தகவல்களை அரசு வெளியிடவில்லை என்றும் ஆய்வாளர் Imanaka எடுத்துரைத்தார்.
கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில் ஒரு சில ஆயர்கள், 100 குருக்கள் மற்றும் பொது நிலையினர் கலந்து கொண்டனர்.
தென் கொரியா அணு உலைகளை அமைக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபடுவதை மக்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று நீதி மற்றும் அமைதிக் குழுவின் தலைவர் ஆயர் Matthias Ri Iong-hoon எடுத்துரைத்தார்.
தென் கொரியாவில் தற்போது 21 அணு உலைகள் இயங்கி வருகின்றன என்றும், மேலும் 11 அணு உலைகள் அமைப்பதற்கு அரசு திட்டங்கள் தீட்டி வருகின்றது என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. ஐ.நா அவைக்கு 2011ம் ஆண்டு முக்கியமான ஆண்டு - பொதுச் செயலர் பான் கி மூன்

டிச.15,2011. 2011ம் ஆண்டு ஐ.நா.அவைக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்து விட்டது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
2011ம் ஆண்டின் இறுதி நாட்கள் நெருங்கிவரும் வேளையில், இவ்வாண்டைக் குறித்து ஓர் அலசலை இப்புதனன்று ஐ.நா. தலைமையகத்தில் மேற்கொண்ட ஐ.நா. பொதுச் செயலர், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
அரேபிய வசந்தம் என்ற பெயரில் அந்நாடுகளில் இடம்பெற்ற புரட்சிகள், ஐ.நா.வின் புதியக் குழந்தையாக பிறந்துள்ள தெற்கு சூடான் உருவான நிகழ்வுகள், மியான்மார் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மாற்றங்கள் ஆகியவற்றில் ஐ.நா.வின் ஈடுபாட்டைத் தன் அலசலில் எடுத்தரைத்த பான் கி மூன், மனித சமுதாயம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்று கூறினார்.
இம்மாதம் 31ம் தேதி தன் பொதுச் செயலர் பணியின் முதல் ஐந்தாண்டு பருவத்தை முடிக்கும் பான் கி மூன், அடுத்த ஐந்தாண்டு பருவத்தில் தான் மேற்கொள்ள விருக்கும் பணிகளின் திட்டத்தைக் குறித்தும் இக்கூட்டத்தில் பேசினார்.
அண்மையில் தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டது குறித்து தன் திருப்தியை வெளியிட்ட ஐ.நா.  பொதுச் செயலர், இன்னும் தொடர்ந்து உலக சமுதாயம் சந்திக்க வேண்டிய பல்வேறு சவால்களையும், சிறப்பாக ஆப்ரிக்க நாட்டில் நிலவும் பட்டினி குறித்த சவால்களையும் சுட்டிக் காட்டினார்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...