Friday, 16 December 2011

Catholic News - hottest and latest - 12 December 2011

1. கிறிஸ்மஸ்க்கு முன்னர் இடம்பெறும் தயாரிப்புக்களில் கவனத்தைச் செலுத்தாமல் இயேசுவின் மீது கவனத்தைத் திருப்ப திருத்தந்தை அழைப்பு

2. கர்தினல் ஜான் பேட்ரிக் ஃபோலி காலமானார்

3. இலங்கை அரசு ஏற்பாடு செய்யும் கிறிஸ்மஸ் விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்கிறார் அனுராதபுர ஆயர்

4. இலங்கை பிறரன்பு சபை சகோதரிகளின் பாதுகாப்பிற்கான செப நாள்

5. அனைத்து மதங்களிடையே ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் மியான்மார் எதிர்க்கட்சி தலைவர்

6. கொல்கத்தாவில் நிகழ்ந்த தீவிபத்தால் கிறிஸ்மஸ் விழாக் கொண்டாட்டங்கள் இரத்து

7. ஆப்ரிக்காவில் குழந்தைகளின் நிலை குறித்து UNICEF கவலை

------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்மஸ்க்கு முன்னர் இடம்பெறும் தயாரிப்புக்களில் கவனத்தைச் செலுத்தாமல் இயேசுவின் மீது கவனத்தைத் திருப்ப திருத்தந்தை அழைப்பு

டிச.12,2011. இத்திருவருகைக் காலத்தில் கடைவீதிகளில் மினுமினுக்கும் ஒளிவிளக்குகளில் நமது கவனத்தை வைக்காமல் உலகின் உண்மையான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மீது நமது கவனத்தைச் செலுத்த வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தினார்.
மழை பெய்வதையும் பொருட்படுத்தாது வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்கு ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள், திருவருகைக் காலத்தில் மின்னும் விளக்குகளால் கவனம் கலைக்கப்படாமல் வாழ அழைக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.
மகிழ்ச்சி ஞாயிறு என்றழைக்கப்படும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு பற்றிய சிந்தனைகளை வழங்கிய அவர், ஓய்வு மற்றும் இளைப்பாறுதலுக்கு காலம் தேவை, அதேநேரம், உண்மையான மகிழ்ச்சி கேளிக்கைகளில் இல்லை என்றார்.
மனிதனின் இதயம் கடவுளில் இளைப்பாற்றி காணும்வரை அது சலனமற்ற ஆழ்ந்த அமைதியைப் பெற முடியாது என்று ஹிப்போ நகர் ஆயர் புனித அகுஸ்தீன் கூறியதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, உண்மையான மகிழ்ச்சியை ஒருவர் தனது சொந்த முயற்சியால் பெற முடியும் என்று எண்ணக் கூடாது, ஆனால் அது வாழும் மனிதாரகிய இயேசுவோடு கொள்ளும் உறவிலிருந்து பெறப்படுவது என்று கூறினார்.
மேலும், தங்கள் வீட்டுக் குடில்களில் வைக்கும் சிறிய பாலன் இயேசு உருவங்களைத் திருத்தந்தை ஆசீர்வதிப்பதற்காக அவற்றுடன் இம்மூவேளை செப உரையில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான சிறாருக்குக் கிறிஸ்மஸ் வாழ்த்தும் நன்றியும் சொன்னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருத்தந்தையின் இவ்வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சிறார், கைதட்டி ஆரவாரித்து பலூன்களைப் பறக்கவிட்டனர். 

2. கர்தினால் ஜான் பேட்ரிக் ஃபோலி காலமானார்

டிச.12,2011. திருப்பீட சமூகத் தொடர்புத்துறை, மற்றும் எருசலேமின் புனித கல்லறை என்ற அமைப்பு ஆகியவைகளின் முன்னாள் தலைவர் கர்தினால் ஜான் பேட்ரிக் ஃபோலி இஞ்ஞாயிறு காலை அமெரிக்க ஐக்கிய நாட்டில் காலமானார்.
கர்தினாலின் மரணத்தையொட்டி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஃபிலடெல்ஃபியா பேராயர் Charles Chaputக்கு அனுப்பியுள்ள இரங்கற்தந்தியில், திருச்சபைக்கு கர்தினால் ஆற்றியுள்ளச் சேவைகளைப் பாராட்டியுள்ளதுடன் அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்கு தான் செபிப்பதாகவும் உறுதி கூறியுள்ளார்.
1935ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஃபிலடெல்ஃபியா உயர்மறைமாவட்டத்தில் பிறந்த கர்தினால் ஃபோலி, 1962ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு அமெரிக்காவில் கத்தோலிக்கச் சமூகத்தொடர்புத் துறையில் பல ஆண்டுகள் தொடர்ந்துச் சேவையாற்றினார். 1984ல் இவரை திருப்பீட சமூகத் தொடர்புத்துறையின் தலைவராக நியமித்து பேராயராக அறிவித்தார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால். 2007ல் புனித கல்லறை என்ற அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட இவரை, அதே ஆண்டு நவம்பர் மாதம் கர்தினாலாகவும் உயர்த்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவருக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாக அறிய வந்ததைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டில் தன் சொந்த நாட்டிற்கு திரும்பி ஃபிலடெல்ஃபியாவில் வாழ்ந்து வந்த கர்தினால் ஃபோலி, இஞ்ஞாயிறன்று காலை தன் 76ம் வயதில் காலமானார்.
கர்தினால் ஃபோலியின் இறப்புடன் திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 192 ஆகக்குறைந்துள்ளது. இதில் 109 பேரே திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்கள்.

3. இலங்கை அரசு ஏற்பாடு செய்யும் கிறிஸ்மஸ் விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்கிறார் அனுராதபுர ஆயர்

டிச.12,2011. இலங்கையில் பணிபுரியும் அன்னை தெரேசா பிறரன்புச் சபை சகோதரிகளுக்கு எதிரான அரசின் தவறான நடவடிக்கைகளைக் கண்டித்து, இவ்வாண்டில் அரசு ஏற்பாடு செய்யும் எந்த விதமான கிறிஸ்மஸ் விழாக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளார் அந்நாட்டின் அனுராதபுர ஆயர் நார்பர்ட் அந்த்ராடி.
பிறரன்புச் சபை சகோதரிகள் குழந்தைகளைக் கடத்த உதவினார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் அருட்சகோதரி ஒருவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன் இந்த வியாழனன்று அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தக் கைது குறித்து ஏற்கனவே தன் கண்டனத்தை வெளியிட்ட கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித், எவ்வித அரசு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டேன் என அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அனுராதபுர ஆயர் அந்த்ராடியும் அரசு ஏற்பாடு செய்யும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என தற்போது அறிவித்துள்ளார்.

4. இலங்கை பிறரன்புச் சபை சகோதரிகளின் பாதுகாப்பிற்கான செப நாள்

டிச.12,2011. இதற்கிடையே, இலங்கையின் அன்னை தெரேசாவின் பிறரன்புச் சபை சகோதரிகள் மற்றும் அவர்களின் பிரேம் நிவாஸ் இல்ல‌த்தின் பாதுகாப்பிற்குச் செபிக்கும் நாளாக‌ இச்செவ்வாய்க் கிழ‌மையைச் சிற‌ப்பிக்கின்ற‌து கொழும்பு உய‌ர்ம‌றைமாவ‌ட்ட‌ம்.
கடந்த நவம்பர் 28ம் தேதி பிற‌ர‌ன்புச் ச‌பை ச‌கோத‌ரிக‌ள் ந‌ட‌த்திய‌ இல்ல‌த்திற்குள் புகுந்து சோத‌னை ந‌ட‌த்திய‌துட‌ன், அருட்ச‌கோத‌ரி மேரி எலிசாவையும் கைதுச் செய்த‌ காவ‌ல்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்து கர்தினால் மால்கம் இரஞ்சித், பத்திரிகையாளர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இம்மாதம் 8ம் தேதி மன்னிப்புக் கடிதம் ஒன்றை இச்சபை சகோதரிகளுக்கு அனுப்பியது இலங்கை அரசு. மன்னிப்பு கடிதம் மட்டும் போதாது, அச்சபை சகோதரிகளுக்கு எதிரான அனைத்து பொய் வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என விண்ணப்பம் ஒன்றை முன்வைத்துள்ளது தலத்திருச்சபை.

5. அனைத்து மதங்களிடையே ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் மியான்மார் எதிர்க்கட்சி தலைவர்

டிச.12,2011. சகிப்புத்தன்மைகளையும் ஐக்கியத்தையும் வளர்ப்பதில் மதங்களின் பங்கு மிக முக்கியமானது என்றார் மியான்மாரின் எதிர்க்கட்சி தலைவர் Aung San Suu Kyi.
மியான்மார் ஆயர் பேரவைக் கட்டிடத்தில் 15 கத்தோலிக்க ஆயர்கள், இரு குருக்கள் மற்றும் நான்கு புராட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ சபைக் குருக்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடிய Suu Kyi, அனைத்து மக்களும் தங்கள் சரிநிகர் உரிமைகளைப் பெற வேண்டுமெனில், முதலில் அனைத்து மதங்களிடையே ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றார்.
கல்வி சீர்திருத்தம், ஏழ்மை அகற்றல், மதவிடுதலை போன்றவைகளின் அவசியத் தேவை குறித்தும் தன் ஆதரவுக் கருத்துக்களை வழங்கினார் அவர்.
அந்நாட்டின் யாங்கூன் புனித மேரி பேராலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அந்நாட்டிற்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாகச் சென்றிருந்த கர்தினால் ரெனாத்தோ மர்த்தினோவை கடந்த வெள்ளியன்று Suu Kyi சந்தித்ததைத் தொடர்ந்து, மியான்மார் கிறிஸ்தவத் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரின் இச்சந்திப்பு இடம்பெற்றது.

6. கொல்கத்தாவில் நிகழ்ந்த தீவிபத்தால் கிறிஸ்மஸ் விழாக் கொண்டாட்டங்கள் இரத்து

டிச.12,2011. இத்திங்கள் முதல் ஒரு வாரம் கொண்டாடப்படுவதாய் அறிவிக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் விழா நிகழ்ச்சிகளை கல்கத்தா உயர்மறை மாவட்டம் இரத்து செய்துள்ளது.
டிசம்பர் 9, கடந்த வெள்ளியன்று கொல்கத்தாவின் மருத்துவ மனையொன்றில் நிகழ்ந்த தீவிபத்தில் 90க்கும் அதிகமானோர் இறந்துள்ளதையொட்டி, இந்த விழாக் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று கல்கத்தா உயர் மறைமாவட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அருள்தந்தை தோமினிக் கோமெஸ் கூறினார்.
மாநில முதலமைச்சர் மமத்தா பானர்ஜீயும் கல்கத்தா பேராயர் தாமஸ் டிசூசாவும் இணைந்து துவக்கவிருந்த இந்த விழா நிகழ்ச்சிகளை தீவிபத்தில் இறந்தவர்களின் நினைவாக இரத்து செய்து விட்டோம் என்று அருள்தந்தை கோமெஸ் கூறினார்.
இத்திங்களன்று ஒரு பெரும் கிறிஸ்மஸ் மரத்தின் விளக்குகள் ஏற்றப்படுவதாய் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிக்குப் பதில், அனைத்து மதங்களும் இணைந்து செப வழிபாடு ஒன்றை மேற்கொண்டனர் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.
மேலும், இஞ்ஞாயிறன்று அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் நடைபெற்ற திருப்பலியில் இறந்தொருக்கென வேண்டுதல்கள் எழுப்பப்பட்டன என்றும் இச்செய்திக் குறிப்பு கூறுகிறது.

7. ஆப்ரிக்காவில் குழந்தைகளின் நிலை குறித்து UNICEF கவலை

டிச.12,2011. வரும் ஆண்டில் ஆப்ரிக்காவின் Sahel பகுதியில் பத்து இலட்சம் குழந்தைகள் வரை உணவு நெருக்கடியால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக UNICEF எனும் குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.
இத்தகைய நிலைகளுக்குத் தீர்வு காண அனைத்துலகச் சமுதாயம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விண்ணப்பித்துள்ள இந்த அமைப்பு, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாடு Niger என தெரிவிக்கிறது. நைஜீரியா, கேமரூன், செனகல் ஆகியவைகளின் வடபகுதிகள், சாடு, புர்க்கீனா ஃபாசோ, மாலி மௌரித்தானியா ஆகிய நாடுகளில் குழந்தைகள் உணவுப் பற்றாக்குறையால் துன்புறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...