Friday, 16 December 2011

Catholic News - hottest and latest - 10 December 2011

1. இத்தாலிய கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை உரை

2. கியுபாவில் மரியா ஜூபிலி ஆண்டு

3. நியுயார்க் பேராயர் - மனித மாண்பு, கத்தோலிக்க விசுவாசத்தின் மையம்

4. சீனாவில் மனித உரிமைகள் நிலவரம் மிக மோசம் ஒரு மனித உரிமைகள் அமைப்பு

5. இலங்கையில் இந்தியத் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் உரிமைகள்
   அமைப்பு

6. வளரும் நாடுகள் பன்வலை அமைப்புக் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்து ஐ. நா. 

7. மோசமான வாழ்வியல் முறைகளால் ஆண்டுக்கு ஒரு இலட்சம் புற்று நோயாளிகள்  -
   இலண்டன் மருத்துவர்கள்

8. கொல்கத்தா ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனைத் தீ விபத்துச் சம்பவம், வெறுமனே மேற்கு வங்க
   மாநிலத்துக்கு மட்டுமே உரிய நிகழ்வாகக் கருதப்படக் கூடாது

------------------------------------------------------------------------------------------------------

1. இத்தாலிய கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை உரை

டிச.10,2011. தற்போது சமுதாயம் எதிர்நோக்கும் நெருக்கடிகளிலிருந்து வெளிவருதற்கு தனிப்பட்டவரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பொது நலனை ஊக்குவிப்பதற்கும் இடையே சமத்துவம் ஏற்படுவதற்கான வழிகளைத் தேட வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலிய கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இத்தாலிய கூட்டுறவு வங்கிகள் கூட்டமைப்பின் சுமார் 80 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அந்தச் சமூகத்தின் தேவைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
இந்த இத்தாலிய கூட்டமைப்பு, பாப்பிறை 13ம் சிங்கராயர் வெளியிட்ட ரேரும் நோவாரும்அதாவது புதியன என்ற திருமடலையொட்டி உருவாக்கப்பட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் திருத்தந்தை.
பொருளாதாரத்திலும் நிதி அமைப்பிலும்கூட சரியான நோக்கம், ஒளிவுமறைவின்மை, நல்ல பலன்களைத் தேடுதல் ஆகியவற்றுக்கிடையே தொடர்புகள் உள்ளன, இவை பிரிக்கப்படக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பொருளாதார மற்றும் தொழில் உலகிலும் அன்பையும் ஒருமைப்பாட்டையும் வாழ்வதற்கு, இறைவனோடு ஆழமான உறவு கொள்வதும் இறைவார்த்தைக்குத் தொடர்ந்து செவிமடுப்பதும் அவசியம் என்பதையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
1891ம் ஆண்டு மே 15ம் தேதி உலக ஆயர்களுக்கென வெளியிடப்பட்ட ரேரும் நோவாரும் திருமடல், முதலீடு மற்றும் தொழிலின் உரிமைகளையும் கடமைகளையும் சுட்டிக் காட்டுகிறது.

2. கியுபாவில் மரியா ஜூபிலி ஆண்டு

டிச.10,2011. 2012ம் ஆண்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கியுப நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை உறுதி செய்துள்ள அதேவேளை, அவ்வாண்டை மரியா ஜூபிலி ஆண்டாக அறிவித்துள்ளனர் கியுப ஆயர்கள்.
"La Caridad" எனப் பொதுவாக அழைக்கப்படும் கியுபாவின் பாதுகாவலியான எல் கோப்ரே பிறரன்பு கன்னிமரியாவின் திருப்பயணியாகத் திருத்தந்தை அந்நாட்டிற்கு வருவார் என்றும் ஆயர்கள் தெரிவித்தனர்.
இம்மாதம் 8ம் தேதி அமலமரி விழாவன்று மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்ட கியுப ஆயர்கள், 2012ம் ஆண்டு சனவரி 7 முதல் 2013ம் ஆண்டு சனவரி 6 வரை மரியா ஜூபிலி ஆண்டு என அறிவித்துள்ளனர்.
திருத்தந்தை கியுபாவிற்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் தேதிகளைக் குறிப்பிடாத ஆயர்கள், திருத்தந்தையின் இத்திருப்பயணம், எல் கோப்ரே பிறரன்பு கன்னிமரியா திருவுருவப் படம் கண்டுபிடிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு நிகழ்ச்சிகளின் ஓர் அங்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
2012ம் ஆண்டு வசந்த காலத்தில் மெக்சிகோ மற்றும் கியுபாவிற்குத் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத் திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாக முன்னதாகவே திருப்பீடம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3. நியுயார்க் பேராயர் - மனித மாண்பு, கத்தோலிக்க விசுவாசத்தின் மையம்

டிச.10,2011. ஒவ்வொரு மனித வாழ்வும் கத்தோலிக்க விசுவாசத்தின் அடிப்படை கோட்பாடாக இருக்கின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் பேராயர் திமோத்தி டோலன் கூறினார்.
நோத்ரு தாமின் மனித மாண்பு குறித்த திட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பேராயர் டோலன், கத்தோலிக்கக் கோட்பாடுகள் பற்றிப் பேசும்  போது, மூவொரு கடவுள், இயேசுவின் மனித அவதாரம், மீட்பு, திருநற்கருணை போன்றவைகளைப் பொதுவாகக் குறிப்பிடுகிறோம், ஆனால் நாம் ஏன் மனித மாண்பு பற்றிய கோட்பாட்டை ஒருபோதும் இணைப்பதில்லை என்பது தனக்கு வியப்பாக இருக்கின்றது என்று கூறினார்.
குழந்தைகளுக்குச் சிலுவை போடக் கற்றுக் கொடுக்கும் போதே மனித மாண்பு பற்றிய கோட்பாட்டையும் கற்றுக் கொடுக்க வேண்டும், ஏனெனில் இது கத்தோலிக்க விசுவாசத்தின் அடிப்படைச் சாரமாக இருக்கின்றது என்று கூறினார் பேராயர் டோலன்.
இறைவனின் மகிமை மனிதன் முழுமையாய் வாழ்வதே என்று சொன்ன இரண்டாம் நூற்றாண்டு ஆயர் புனித இரேனியுசின் போதனைகளையும் சுட்டிக் காட்டினார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் டோலன்.  

4. சீனாவில் மனித உரிமைகள் நிலவரம் மிக மோசம் ஒரு மனித உரிமைகள் அமைப்பு

டிச.10,2011. மனித உரிமைகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிலைமை 2011ம் ஆண்டில் சீனாவில் மிக மோசமாக இருந்ததாக சீனாவை மையமாகக் கொண்ட ஒரு மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட இவ்வமைப்பு, சீனாவில் அண்மைக் காலங்களின் நிலவரங்களை நோக்கும்போது இவ்வாண்டில் மனித உரிமைகள் நிலவரம் மிக மோசமாக இருந்தது எனக் கூறியுள்ளது.
கட்டாயக் காணாமற்போதல்களும் சட்டத்திற்குப் புறம்பான கைதுகளும், குறிப்பாக இவ்வாண்டு பிப்ரவரி முதல் ஜூன் வரையில் இடம் பெற்ற ஜாஸ்மின் எழுச்சி தொடர்பான நிகழ்வுகளின் போது சீன அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் அதிகமாக இருந்ததாக அவ்வறிக்கை கூறியது.
கட்டாயக் காணாமற்போதல்களைச் சட்டப்படி அங்கீகரிக்க உதவும் குற்றப்பிரிவு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான பரிந்துரைகள் கவலை தருவதாக இருப்பதாகவும் CHRD என்ற இந்த அமைப்பு கூறியது.      

5. இலங்கையில் இந்தியத் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் உரிமைகள் அமைப்பு 

டிச.10,2011. இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்கள் இன்னும் குடியுரிமைகள் இன்றியும் உணவு வேலை குடியிருப்பு நிலம் போன்ற அடிப்படை உரிமைகளின்றியும் உள்ளனர் என்று கொழும்புவில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டது.
இலங்கையில் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இந்தியத் தமிழருக்கு அரசு செய்து வருவது என்ன என்பது குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் பொருளாதார, சமூக மற்றஉம் கலாச்சார உரிமைகளுக்கான அமைப்பு ஒன்று இவ்வாறு கூறியது.
அக்காலத்திய சிலோனில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து இலங்கை வந்தவர்களே இந்தியத் தமிழர்கள் ஆவர். இவர்கள் தேயிலைத் தோட்டங்களில் 200 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்ட சிறிய குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.

6. வளரும் நாடுகள் பன்வலை அமைப்புக் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்து ஐ. நா. 

டிச.10,2011. வளரும் நாடுகள் பன்வலை அமைப்புக் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றன என்று இவ்வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் தலைமையில் நடந்த கூட்டமொன்றில் எச்சரிக்கப்பட்டது.  
பன்வலை அமைப்பு தொடர்பானக் குற்றங்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்நோக்கும் வழிகள் குறித்து ஆராய்வதற்கென இடம் பெற்ற கூட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டது.
நாட்டின் உள்கட்டமைப்பு, வங்கி அமைப்பு, தேசிய நலவாழ்வு அமைப்புகள், முக்கியமான அரசு மற்றும் தொழிற்சாலை விபரங்கள், சேவைகள் போன்றவைகளுக்கு எதிரான இந்தத் தாக்குதல்கள் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்து கின்றன என்று ஐ.நா.பொருளாதார மற்றும் சமூக அவைத் தலைவர் Lazarous Kapambwe இக்கூட்டத்தில் கூறினார்.
இந்த வகையான தாக்குதல்கள் வளரும் நாடுகளின் முழு வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஐ.நா.சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் கணிப்புப்படி, உலக அளவில் 600 கோடி அலைபேசிகளுக்குச் சந்தாக்கள் கட்டப்படுகின்றன. 230 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பன்வலை அமைப்புக்களைப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

7. மோசமான வாழ்வியல் முறைகளால் ஆண்டுக்கு ஒரு இலட்சம் புற்று நோயாளிகள்  - இலண்டன் மருத்துவர்கள்

டிச.10,2011. மோசமான வாழ்வியல் முறைகளால் புற்று நோயால் ஆண்டுக்கு ஒரு இலட்சம் பேர் கட்டாயமாகப் பாதிக்கப்படும் வேளை, மதுபானம் மற்றும் புகையிலைப் பயன்பாடுகளில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு இலண்டன் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரிட்டனில் மக்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவதற்கு அவர்களின் வாழ்வியல் முறைகளே தவிர்க்க முடியாத காரணங்களாக இருக்கின்றன என்று RCP என்ற மருத்துவர்களின் கூட்டமைப்பு நடத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இதையொட்டி வேண்டுகோள் விடுத்த RCP அமைப்பின் தலைவர் Sir Richard Thompson, இவ்விவகாரத்தில் அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
புகையிலைப் பயன்பாட்டு வாழ்வியல் முறையால் ஆண்டுக்கு 60,800 பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
புற்று நோயால் பாதிக்கப்படுவோரில் 23 விழுக்காட்டு ஆண்கள் மற்றும் 15.6 விழுக்காட்டுப் பெண்களுக்கு அவர்களின் வாழ்வியல் முறையே காரணம் என்று அவ்வாய்வு கூறுகிறது.
எனவே வாழ்வியல் முறைகளில் சில எளிய மாற்றங்கள் செய்வதன் மூலம் புற்று நோயைத் தடுக்க முடியும் என்று அவ்வாய்வு பரிந்துரைக்கின்றது.
புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் முதலிடத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது எனவும், நுரையீரல் புற்றுநோய் மட்டுமன்றி பித்தப் பை, சிறுநீரகம், இரப்பை உள்ளிட்ட பகுதிகளிலும் புற்றுநோய் உருவாக புகைப்பழக்கம் காரணமாக அமைந்துள்ளது எனவும் அம்மருத்துவர்கள் கூறினர்.

8. கொல்கத்தா ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனைத் தீ விபத்துச் சம்பவம், வெறுமனே மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டுமே உரிய நிகழ்வாகக் கருதப்படக் கூடாது

டிச.10,2011. கொல்கத்தா நகரில் ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனைத் தீ விபத்தில் 89 பேர் இறந்துள்ள துயரச் சம்பவம், வெறுமனே மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டுமே உரிய நிகழ்வாகக் கருதப்படாமல், இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளதாக ஊடகவியலார் ஒருவர் கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு, ஓர் ஆங்கில வார இதழும் ஒரு தனியார் அமைப்பும் இணைந்து சிறந்த இந்திய மருத்துவமனைகளைத் தரவரிசைப்படுத்தின. இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது அட்வான்ஸ்டு மெடிகேர் அன்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஹாஸ்பிடல் என்கிற ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனை என்று அவர் கூறினார்.
இத்தகைய ஒரு மருத்துவமனையிலேயே தீ விபத்து நடக்கும் வாய்ப்புகள் இருப்பதும், அத்தகைய நேரங்களில் நோயாளிகளும் அவர்களுடன் இருப்போரும் வெளியேற வழியின்றி இறப்பதும் சாத்தியம் என்று சொன்னால், மற்ற சாதாரண மருத்துவமனைக் கட்டடங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இந்த மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் மருத்துவக் கழிவுப்பொருள் சேமிப்புக் கிடங்கு இருந்ததாகவும் அதிலிருந்து வெளிப்பட்ட தீயே மருத்துவமனையின் மேல் தளங்களுக்கும் பரவியது என்றும் கூறப்படுகிறது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...