1. திருத்தந்தை : சமூகத்தொடர்பு சாதனங்கள் ஆன்மீக விழுமியங்களை ஊக்குவிக்க வேண்டும்
2. திருப்பீடத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலவர்.
3. கடவுள் பராமரிப்பில் நம்பிக்கை வைக்க திருத்தந்தை அழைப்பு
4. லிபியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் மீதான அரசின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
5 அரபு நாடுகளின் கிளர்ச்சிகளில் வருங்காலம் குறித்த நம்பிக்கைகளும் தெரிவதாக கூறுகிறார் திருப்பீடப்பேச்சாளர்.
6 கிறிஸ்தவர்களுக்கான கர்நாடக அரசின் நிதி ஒதுக்கீடு ஓர் இலஞ்சம் போல் தெரிவதாக தலத்திருச்சபை கூறுகிறது.
7. பிலிப்பீன்ஸில் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் குறித்த அருங்காட்சியகம்.
8. இலங்கையில் மூன்று கிறிஸ்தவக் குருக்கள் இராணுவ துணைகுழு ஒன்றால் கடத்தப்பட்டுள்ளனர்.
9. 'சர்வதேச சமூகம் தாமதிக்கிறது' - ஆம்னஸ்டி சாடல்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. திருத்தந்தை : சமூகத்தொடர்பு சாதனங்கள் ஆன்மீக விழுமியங்களை ஊக்குவிக்க வேண்டும்
பிப்.28,2011. சமூகத்தொடர்பு சாதனங்கள் வன்முறையை அல்ல, மாறாக ஆன்மீக விழுமியங்களை ஊக்குவிக்க வேண்டும் எனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
திருப்பீட சமூகத்தொடர்புத் துறை இத்திங்களன்று தொடங்கியுள்ள நிறையமர்வுக் கூட்டத்தில் பங்கு கொள்ளும் உறுப்பினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இந்த ஆன்மீக மதிப்பீடுகள் உண்மையான மனிதத் தொடர்புகளைப் பேணிக்காக்கும் என்றார்.
வன்முறையின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் இன்றைய உலகிற்கு இந்த ஆன்மீக விழுமியங்கள் இன்றியமையாதவை என்றுரைத்த திருத்தந்தை, மக்கள் பல்வேறு ஊடகத்துறைகளின் மொழிகளுக்கு மயங்கி விடாமல் இருக்குமாறு எச்சரி்த்தார்.
2. திருப்பீடத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலவர்.
பிப் 28, 2011. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் Jerzy Buzek, இத்திங்களன்று காலை திருத்தந்தை 16ம் பெனடிக்டையும், பின்னர் திருப்பீடச்செயலர் மற்றும் நாடுகளுடன் ஆன திருப்பீடத்தின் உறவுகளுக்கானச் செயலரையும் சந்தித்து உரையாடினார்.
இருதரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற இச்சந்திப்பின்போது திருப்பீடத்திற்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும், ஏனைய ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் இடையேயான நல்லுறவுகள் குறித்தும் ஐரோப்பிய ஐக்கிய அவைக்குத் திருச்சபை வழங்க இயலும் பங்களிப்பு குறித்தும் சுமூகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக திருப்பீடப் பத்திரிகைத்துறை தெரிவிக்கிறது.
மத சுதந்திரம் மதிக்கப்படவேண்டியதன் தேவை மற்றும் உலகில் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகங்களின் இன்றைய நிலைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கடவுள் பராமரிப்பில் நம்பிக்கை வைக்க திருத்தந்தை அழைப்பு
பிப்.28,2011. கடவுளின் எல்லையற்ற அன்பில் வைக்கப்படும் நம்பிக்கை மாண்புடன்கூடிய வாழ்க்கைக்கான நமது போராட்டத்தை எடுத்து விடாது, ஆனால் இவ்வுலகப் பொருட்களின் மீதானப் பற்றுகளிலிருந்தும் எதிர்காலம் குறித்த பயத்தினின்றும் விடுதலை அளிக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, "கடவுளில் நம்பிக்கை வைப்பவர்கள் அவரது அரசையும் அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதையும் முதலிடத்தில் வைப்பார்கள்" என்றுரைத்து இத்தகைய போக்கு விதியின்மீது வைக்கும் நம்பிக்கைக்கு மாறானது என்றார்.
இயேசுவின் இந்தப் போதனை எப்போதும் எல்லாருக்கும் ஏற்றது எனினும், இயேசுவைப் போல விண்ணகத் தந்தையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதில் கிறிஸ்தவர் தனியாகப் பிரித்துக் காட்டப்படுகிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.
தந்தையாம் இறைவனுடன் கொண்டுள்ள உறவு கிறிஸ்தவ வாழ்வின் முழுமைக்கும் பொருள் கொடுக்கின்றது என்ற அவர், இவ்வுலகில் வாழும் பொழுது அயலாரின் தேவைக்கு கவனமாக இருந்து, அதேசமயம் இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கை வாழ்வதன் அர்த்தத்தையும் இயேசு விளக்கியிருக்கிறார் என்று கூறினார்.
பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்ற எசாயா பகுதியையும் குறிப்பிட்ட திருத்தந்தை, வானத்துப் பறவைகளுக்கு உணவளித்து வயல்வெளி மலர்களைப் போர்த்தும் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை வைத்து வாழ்வதற்கு இயேசு தம் சீடர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் என்று கூறினார்
4. லிபியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் மீதான அரசின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
பிப் 28, 2011. லிபியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் மீதான அரசின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து திருப்பீடம் அக்கறையும் ஆழ்ந்த கவலையும் கொண்டுள்ளதாக ஐநாவில் அறிவித்தார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி.
ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி ஐநா மனித உரிமைகள் கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார். இதே கருத்தை வத்திக்கான் வானொலிக்கான தன் பேட்டியிலும் குறிப்பிட்ட பேராயர், இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் கைவிடப்பட்டு, ஓர் அமைதியான தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு லிபிய அரசு முன் வர வேண்டும் என்றார்.
சர்வதேச சமுதாயத்தால் முன்வைக்கப்பட உள்ள தீர்வுகள் எவ்வகையில் லிபிய மக்களின் நலனுக்கான தீர்வுகள் என்பது குறித்து அறிவதிலும் திருப்பீடம் ஆர்வமாக உள்ளது என்றார் பேராயர் தொமாசி.
அமைதியான ஒரு தீர்வு காணப்படவில்லையெனில் லிபிய மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி, அதனால் மனிதகுல நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பது குறித்த கவலையையும் வெளியிட்டார் பேராயர்.
லிபியாவில் மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளும் மீறப்பட்டு வருவதையே லிபியாவிற்கு எதிரான சர்வதேச நாடுகளின் கண்டனங்கள் சுட்டிக்காட்டுகின்றன என பேராயர் தொமாசி மேலும் கூறினார்.
5 அரபு நாடுகளின் கிளர்ச்சிகளில் வருங்காலம் குறித்த நம்பிக்கைகளும் தெரிவதாக கூறுகிறார் திருப்பீடப்பேச்சாளர்.
பிப் 28, 2011. பல அரபு நாடுகளில் குடியரசிற்கென அண்மையில் இடம்பெற்று வரும் வன்முறை நடவடிக்கைகள் கவலை தருவதாக இருக்கின்ற போதிலும், இதன் வழியான மாற்றங்கள் நம்பிக்கைத் தருவதாக உள்ளன என்றார் திருப்பீடப்பேச்சாளர்.
வாரம் ஒருமுறை தொலைக்காட்சியில் வழங்கும் 'ஒக்தாவா தியேஸ்' என்ற நிகழ்ச்சியில் அரபு நாடுகளின் அண்மை கிளர்ச்சி குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி, மேற்கத்திய நாடுகள் இத்தகைய அரசியல் மாற்றங்களில் தலையிடக்கூடாது, ஆனால் குடியரசிற்கான தங்கள் உதவிகளை வழங்கவேண்டும் என்றார்.
குடியரசிற்கான அரபு நாடுகளின் மக்களின் முயற்சிகள் அவர்களுக்குள்ளிருந்தே வரவேண்டுமேயொழிய, பிறநாடுகளின் தலையீட்டால் அல்ல என்பதையும் வலியுறுத்தினார் திருப்பீடப் பேச்சாளர்.
வன்முறை நடவடிக்கைகள், அமைதிக்கான முயற்சிகளுக்கு பெரும் தடையாக உள்ளன என்ற இயேசுசபை குரு லொம்பார்தி, அரபு நாடுகளின் தற்போதைய கிளர்ச்சிகள் அப்பகுதிக்கான குடியரசு வசந்த காலமாக அரசியல் வல்லுனர்களால் நோக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய சமூகத்தின் குடியரசு, மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்து அரபு நாடுகளின் இளைய சமுதாயம் அறிந்துள்ளதும், பேச்சுவார்த்தைகள் மற்றும் உலக சமுதாயத்தில் தங்களை இணைத்துக்கொள்வதற்கான அவர்களின் ஆர்வமும் நல்லதொரு நம்பிக்கையின் அடையாளங்களாக உள்ளன என்பதையும் எடுத்துரைத்தார் திருப்பீடப்பேச்சாளர் குரு லொம்பார்தி.
6 கிறிஸ்தவர்களுக்கான கர்நாடக அரசின் நிதி ஒதுக்கீடு ஓர் இலஞ்சம் போல் தெரிவதாக தலத்திருச்சபை கூறுகிறது.
பிப் 28, 2011. கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறையற்ற கர்நாடக அரசு, அவர்களின் நலவாழ்வுத் திட்டங்களுக்கென அரசு பணத்தை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது கிறிஸ்தவர்களை அமைதிப்படுத்துவதற்கான இலஞ்சமாகத் தெரிவதாக குறைகூறியுள்ளனர் அம்மாநிலத் திருச்சபை அதிகாரிகள்.
மாநில வரவு செலவு திட்ட அறிவிப்பில் முதன்முறையாக 50 கோடி ரூபாயை கிறிஸ்தவர்களின் முன்னேற்றத்திட்டங்களுக்கென அரசு அறிவித்துள்ளதுபற்றி குறிப்பிட்ட பங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ், கிறிஸ்தவக் கோவில்களைத் தாக்கியவர்களை இனம் கண்டு தண்டிக்கத் தவறியுள்ள அரசு, இத்தகைய நிதி அறிவிப்புகள் மூலம் அவர்களைச் சமாதானப்படுத்த முயல்வது பலன் தராது என்றார்.
அவரவர் மதத்தைப் பின்பற்றும் உரிமையை அரசு மதித்துப் பாதுகாக்க வேண்டும் என்பதையே தாங்கள் எதிர்பார்ப்பதாக உரைத்த பேராயர், தற்போது கிறிஸ்தவர்களுக்கு என அரசு அறிவித்துள்ள நிதி ஒதுக்கீடு பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் விண்ணப்பித்துள்ளதன் பதில்மொழியே எனவும் உரைத்தார்.
அரசின் இந்த அறிவிப்பு குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட கர்நாடக தலத்திருச்சபையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் குரு ஃபவுஸ்தின் லோபோ, இது கிறிஸ்தவர்களை அமைதிப்படுத்துவதற்கான இலஞ்சமாகவேத் தெரிவதாகவும் கூறினார்.
7. பிலிப்பீன்ஸில் முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் குறித்த அருங்காட்சியகம்.
பிப் 28, 2011. முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் குறித்த அருங்காட்சியகம் ஒன்று பிலிப்பீன்ஸின் Bacolod மறைமாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.
மேல்மாடியில் மீனவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கைக் கொண்டதாய் கட்டப்பட்டுள்ள இந்த ஏழு மாடி அருங்காட்சியகம், மீனவர்களுக்கான கடல் வழிகாட்டியாகவும் விசுவாசிகளுக்கான திருப்பயணத்தில் ஆன்மீக வழிகாட்டியாகவும் இருக்கும் என்றார் புனித செபஸ்தியார் பேராலய முதல்வர் குரு ஃபெலிக்ஸ் பாஸ்க்யின்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இப்பகுதியில் திருப்பயணம் மேற்கொண்டதை நினைவுகூரும் விதமாகவும், மேமாதம் முதல் தேதி இந்த திருத்தந்தை முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட உள்ளதைச் சிறப்பிக்கும் விதமாகவும் இந்த அருங்காட்சியகம் கட்டப்ப்டுள்ளதாகத் தெரிவித்தார் குரு பாஸ்க்யின்.
8. இலங்கையில் மூன்று கிறிஸ்தவக் குருக்கள் இராணுவ துணைகுழு ஒன்றால் கடத்தப்பட்டுள்ளனர்.
பிப் 28, 2011. இலங்கையின் பட்டிகோலாப் பகுதியில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று கிறிஸ்தவக் குருக்கள் இராணுவத் துணைக்குழு ஒன்றால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அக்குருக்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
கிழக்கு மாநில முதல்வர் பிள்ளையானின் குழுவைச் சேர்ந்த ஓர் அங்கத்தினாரால் ஒரு கூட்டத்திற்கென அழைக்கப்பட்ட இம்மூவரும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவசபைக் குருக்களான கணேசமூர்த்தி, சிவகுமார் யோனாத், சிவானந்தன் லூப் ஆகிய மூவரும் முதல்வர் பிள்ளையானுடன் ஆன சந்திப்பிற்குப்பின் காணாமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு எவ்வித மதபாகுபாடும் இன்றி பணியாற்றி வந்த இக்குருக்கள், இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவால் எடுத்துச்செல்லப்பட்டதாகவும் சில உறுதிச்செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
9. 'சர்வதேச சமூகம் தாமதிக்கிறது' - ஆம்னஸ்டி சாடல்
பிப்.28,2011. இலங்கையில் இடம்பெற்றதாக பரவலாக குற்றஞ்சாட்டப்பட்ட போர்க்காலக் குற்றங்கள் மற்றும் அண்மைக்காலங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதிருப்பதாக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற அனைத்துலக மனித உரிமைகள் கழகம் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தைக் குறை கூறியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவிச் செல்லும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐநா இன்னும் தீவிரமாகச் செயலாற்ற வேண்டுமெனவும் அக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தத் தாழ்த்த இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்பு நீடிக்கவே செய்யும் என்றும் அக்கழகம் கூறியது.
இக்கழகம், ஐ.நா.மனித உரிமை அவைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், அந்த அவையின் 2010ம் ஆண்டு அமர்வுக்கு முன்னரானச் சம்பவங்களுக்குப் புறம்பாக, இலங்கையில் புதிதாகப் பல மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போதான சர்வதேச மனிதாபிமானச் சட்டமீறல்கள் பற்றிய விசாரணைகளிலும் இலங்கை அக்கறை செலுத்தவில்லையெனவும் அக்கழகம் கவலை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment