சீரோ மலங்கரா ரீதி ஆயர்கள், திருத்தந்தை சந்திப்பு
2. திருத்தந்தை : ஒப்புரவு திருவருட்சாதனம் குருக்களின் விசுவாசத்தையும் தனித்துவத்தையும் வளர்க்கிறது
3. புனித வெள்ளி சிலுவைப்பாதைத் தியானச் சிந்தனைகள் முழுவதையும் ஒரு பெண் தயாரிக்கிறார்
4. டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி : லிபியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் ஆப்ரிக்க ஒன்றியம் நடுநிலை வகிக்க அழைப்பு
5. பிரிட்டன் ஆயர் : லிபியாவில் நடத்தப்படும் கூட்டணிப் படைகளின் தாக்குதல்கள் பொது மக்களைக் காப்பாற்றும் குறிக்கோளிலிருநது பிறழக் கூடாது
6. மியான்மாரின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தோலிக்க நிறுவனங்கள் உதவி
7. பாகிஸ்தானில் Paul Bhatti சிறுபான்மை மதத்தவர்க்கான சிறப்பு ஆலோசகராக நியமனம்
8. ஐ.நா.பொதுச் செயலர் : காசநோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மேலும் நிதியுதவிகள் ஒதுக்கப்பட வேண்டும்
----------------------------------------------------------------------------------------------------------------
1. சீரோ மலங்கரா ரீதி ஆயர்கள், திருத்தந்தை சந்திப்பு
மார்ச்25,2011. சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கரின் திருவழிபாடு மற்றும் ஆன்மீக மரபுச் செல்வங்கள் மீது அந்த ரீதியின் அருட்பணியாளர்களும் விசுவாசிகளும் பற்றை வளர்ப்பதற்கு ஆயர்கள் தொடர்ந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆயர்கள் பாப்பிறையைச் சந்திக்கும் அட் லிமினா சந்திப்பையொட்டி கேரளாவின் சீரோ மலங்கரா ரீதியின் 13 ஆயர்களை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, பாரம்பரியமாகப் பெறப்பட்ட விசுவாசத்தை இறைவார்த்தை மற்றும் திருவருட்சாதனங்கள் வழியாக வளர்க்குமாறு வலியுறுத்தினார்.
இந்தியாவில் கலாச்சாரத்திற்கும் சமுதாயத்திற்கும் ஆன்மீகத்திற்கும் கிறிஸ்தவம் பெரும் பங்காற்றி வருகிறது என்பதைக் குறிப்பி்ட்டு, விசுவாசிகள், இறையன்பை அடித்தளமாகக் கொண்டு இறைவார்த்தையைப் போதிப்பதிலும் தோழமையை வளர்ப்பதிலும் தொடர்ந்து மணம் பரப்பட்டும் என்ற தனது ஆவலையும் வெளியிட்டார் திருத்தந்தை.
கேரளாவின் சீரோ மலங்கரா ரீதி ஆயர்களிடம், கிறிஸ்தவச் சமூகங்களின் முக்கியத்துவத்தை விளக்கி, மறைக்கல்வி மற்றும் விசுவாசத்தில் பயிற்சியளிக்கும் திட்டங்கள் மூலம் ஆயர்கள் அச்சமூகங்களைத் தங்களது வழிநடத்துதலில் வைக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை.
2. திருத்தந்தை : ஒப்புரவு திருவருட்சாதனம் குருக்களின் விசுவாசத்தையும் தனித்துவத்தையும் வளர்க்கிறது
மார்ச்25,2011. பாவங்கள் மற்றும் ஒப்புரவு திருவருட்சாதனத்திற்குப் பொறுப்பான அப்போஸ்தலிக்கப் பாவமன்னிப்புத் துறை நடத்திய பயிற்சியில் பங்கு கொண்ட சுமார் 800 பேரை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஒப்புரவு திருவருட்சாதனத்தின் மேன்மை குறித்து விளக்கினார்.
ஒப்புரவு திருவருட்சாதனம் அதனைப் பெறும் விசுவாசிகளுக்கு மட்டுமன்றி, அதனை வழங்கும் அருட்பணியாளர்களுக்கும் முக்கியமானது என்று கூறிய திருத்தந்தை, இந்த அருட்சாதனத்தின் வழியாக பலரின் மனமாற்றப் புதுமைகளைக் காணும் அருட்பணியாளர்கள், தாங்களும் தங்களது விசுவாசத்தில் ஆழப்படுத்தப்படுகிறார்கள் என்றார்.
ஒப்புரவு திருவருட்சாதனத்தைப் பெறும் விசுவாசிகளின் ஆன்மீக வாழ்வு, அவர்களின் ஆன்மப் பரிசோதனை மற்றும் தங்களது சொந்தப் பாவத்தை ஏற்பதற்கு இருக்கும் தாழ்ச்சி எனும் பண்பிலிருந்து குருக்கள் தங்களுக்குரிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்கிறார்கள் என்றார் திருத்தந்தை.
ஒப்புரவு திருவருட்சாதனத்தை நிறைவேற்றுவதன் மூலம், விசுவாசம் மற்றும் தாழ்ச்சியின் ஆழமானப் பாடங்களைக் குருக்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்றும் குருக்கள் தங்களது தனித்துவம் குறித்து சிந்தித்து பார்க்க அழைக்கப்படுகிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
3. புனித வெள்ளி சிலுவைப்பாதைத் தியானச் சிந்தனைகள் முழுவதையும் ஒரு பெண் தயாரிக்கிறார்
மார்ச்25,2011. இவ்வாண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழிநடத்தும் புனித வெள்ளி சிலுவைப்பாதைத் தியானச் சிந்தனைகள் முழுவதையும் ஒரு பெண் தயாரிக்கிறார் என்று திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
வருகிற ஏப்ரல் 22ம் தேதி உரோம் கொலோசேயத்தில் திருத்தந்தை வழி நடத்தும் இந்தச் சிலுவைப்பாதைத் தியானச் சிந்தனைகளை உரோம் புனித அகுஸ்தீன் அடைபட்ட துறவுமடங்கள் கூட்டமைப்பின் தலைவர் அன்னை மரிய ரீட்டா பிச்சியோனே எழுதுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. உரோமையில் Santi Quattro Coronati என்ற துறவு இல்லத்தில் இவர் வாழ்கிறார்.
இதற்கு முன்னர் 1993ம் ஆண்டில் மதர் அன்னமரியா கனோப்பியும் 1995ல் சுவிட்சர்லாந்து நாட்டு அருட்சகோதரி Minke de Vriesம் இந்தத் தியானச் சிந்தனைகளைத் தயாரித்தனர்.
மேலும், இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் காலத்தில் 14 பத்திரிகையாளர்கள் இந்தத் தியானச் சிந்தனைகளைத் தயாரித்த போது அவர்களில் பெண் பத்திரிகையாளர்களும் பங்கு பெற்றிருந்தனர்.
4. டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி : லிபியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் ஆப்ரிக்க ஒன்றியம் நடுநிலை வகிக்க அழைப்பு
மார்ச்25,2011. வட ஆப்ரிக்க நாடான லிபியாவின் தற்போதைய வன்முறைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை ஆப்ரிக்க ஒன்றியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி மர்த்தினெல்லி பரிந்துரைத்தார்.
அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைமையிலான ஐரோப்பியப் படைகள் இம்மாதம் 19ம் தேதியிலிருந்து நடத்தி வரும் குண்டு வீச்சுத் தாக்குதல்களுக்குப் பின்னர் கருத்து தெரிவித்த ஆயர் மர்த்தினெல்லி, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் ஆப்ரிக்க ஞானத்தில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.
குண்டுவீச்சுக்களால் தீர்வு காண முடியும் என்ற ஐரோப்பியர்களின் எண்ணம் தவறானது என்று இவ்வியாழனன்று Fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த ஆயர், லிபியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் ஆப்ரிக்க ஒன்றியம் நடுநிலை வகிக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
லிபியாவை கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபியின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் கடந்த மாதம் அந்நாட்டில் மக்கள் கிளர்ச்சி தொடங்கியது.
5. பிரிட்டன் ஆயர் : லிபியாவில் நடத்தப்படும் கூட்டணிப் படைகளின் தாக்குதல்கள் பொது மக்களைக் காப்பாற்றும் குறிக்கோளிலிருநது பிறழக் கூடாது
மார்ச்25,2011. லிபிய அதிபர் கடாபிக்கு எதிரான மேற்கத்தியக் கூட்டணிப் படைகளின் இராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசிய பிரிட்டன் இராணுவத்திற்கான ஆன்மீக ஆலோசகர் ஆயர் Richard Moth, லிபியாவில் அப்பாவி பொது மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற தங்கள் இலக்கிலிருந்து தவறக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
லிபிய சர்வாதிகாரி கடாபியின் இராணுவத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள், அத்தாக்குதலிலிருந்து அப்பாவி பொது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஐ.நா.பாதுகாப்பு அவை இம்மாதம் 17ம் தேதி லிபியாவுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்திற்குப் பின்னர் மேற்கத்திய போர் விமானங்கள் லிபியா வான்பரப்பில் 300க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசு, லிபியா தொடர்பான பன்னாட்டுக் கூட்டம் ஒன்றை வருகிற செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
6. மியான்மாரின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தோலிக்க நிறுவனங்கள் உதவி
மார்ச்25,2011. மியான்மாரின் வடகிழக்கிலும் தாய்லாந்தின் வடக்கிலும் இடம் பெற்ற தொடர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தோலிக்க நிறுவனங்கள் உதவி செய்யும் பணியில் உடனடியாக ஈடுபட்டுள்ளன.
மியான்மாரின் Kengtung ல் இவ்வெள்ளி அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் இடம் பெற்ற நிலநடுத்தில் குறைந்தது 75 பேர் இறந்துள்ளனர். முதலில் தாய்லாந்தின் பாங்காக்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பின்னர் மியான்மாரில் இடம் பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
Kengtung மறைமாவட்ட சமூகப்பணி மையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் முனைந்துள்ளது.
7. பாகிஸ்தானில் Paul Bhatti சிறுபான்மை மதத்தவர்க்கான சிறப்பு ஆலோசகராக நியமனம்
மார்ச்25,2011. பாகிஸ்தானில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சிறுபான்மைத்துறை அமைச்சர் Shahbaz Bhattiயின் சகோதரர் Paul Bhatti அந்நாட்டின் சிறுபான்மை மதத்தவர்க்கான சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முழுவதும் சிறுபான்மை மதத்தவரின் விவகாரங்களைக் கவனிப்பதற்கென்று அந்நாட்டுப் பிரதமர், Paul Bhattiஐ நியமித்துள்ளார். இந்தப் பதவியானது அமைச்சருக்குரிய அதே அதிகாரங்களைச் செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவராக இருந்த Shahbaz Bhatti, தேவநிந்தனை சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்ததால் கொல்லப்பட்டார்.
8. ஐ.நா.பொதுச் செயலர் : காசநோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மேலும் நிதியுதவிகள் ஒதுக்கப்பட வேண்டும்
மார்ச்25,2011. காசநோயை ஒழிப்பதற்கான ஆராய்ச்சிகள், அந்நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், அதற்கானச் சிகிச்சைகள் ஆகியவற்றுக்கு மேலும் நிதியுதவிகள் ஒதுக்கப்படாமல் இருந்தால், தற்போதிலிருந்து 2015ம் ஆண்டுக்குள் சுமார் எண்பது இலட்சம் பேர் அந்நோயால் இறக்கக்கூடும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் எச்சரித்துள்ளார்.
மார்ச் 24ம் தேதி கடைபிடிக்கப்பட்ட உலக காச நோய் தினத்தையொட்டி பான் கி மூன் வெளியிட்ட செய்தி இவ்வாறு கூறுகிறது.
இந்நோயை ஒழிப்பதற்கு உலக நலவாழ்வு நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து வரும் யுக்திகளினால் நான்கு கோடிக்கு மேற்பட்ட மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றுரைக்கும் அவரின் செய்தி, உலக சமுதாயம் தொடர்ந்து நிதியுதவி செய்து வந்தால் இந்நோயினால் இறப்போரின் எண்ணிக்கையையும் தொடர்ந்து குறைக்க முடியும் என்றும் கூறுகிறது.
இந்நோய் பரிசீலிக்கப்படாமல் தொடர்ந்து அது பரவுவதற்கு அனுமதிக்கப்பட்டால் இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை உலகம் திரும்பப் பெற வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டில் உலகில் 94 இலட்சம் பேர் காச நோயால் தாக்கப்பட்டனர். இவர்களில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட காச நோயாளிகள் உட்பட 17 இலட்சம் பேர் இறந்தனர்.
2011க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் இருபது இலட்சத்திற்கும் மேற்பட்டோர் காசநோயால் புதிதாகப் பாதிக்கப்படுவர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கணித்துள்ளது.
No comments:
Post a Comment