Thursday, 24 March 2011

Catholic News - hottest and latest - 23 Mar 2011

1. திருப்பீடக் குடியேற்றதாரர் அவை : ஜப்பானில் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு

2. இயேசு சபை அருள்தந்தை லூயி லெவே அவர்கள் இறந்ததன் 38வது ஆண்டு நிறைவு

3. தமிழ் நாட்டில் கிறிஸ்தவர்கள் துவக்கியுள்ள ஓர் அரசியல் கட்சி

4. குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் பேராயரின் வன்மையான கண்டனம்

5. பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் கல்லறையைப் பார்வையிட்ட அமெரிக்க அரசுத் தலைவர்

6. புனித பூமியில் மங்களவார்த்தைப் பேராலயத்திற்கு எதிரே அகில உலக பல்சமய உரையாடல் மையம் திறப்பு

7. தேர்தலை முன்னிட்டு, கேரள கத்தோலிக்கர்களின் ஆதரவைக் கோரும் இடதுசாரி கட்சித் தலைவர்கள்

8. திருச்சபை முயற்சிகளின் பயனாக, கியூபாவில் அரசியல் கைதிகளின் இறுதி குழுவினர் விடுவிப்பு

----------------------------------------------------------------------------------------------------------------

திருப்பீடக் குடியேற்றதாரர் அவை : ஜப்பானில் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு

மார்ச்23,2011. ஜப்பானின் வடக்கில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளது திருப்பீடக் குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர்க்கான அவை.
கடல்சார்ந்த தொழிலாளிகள் மற்றும் கடல் பயணிகளின் ஆன்மீகப் பணிக்கு முழுவதும் பொறுப்பான இந்தத் திருப்பீட அவை, இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மீனவத் தொழிலாளருக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தில் ஒரு சிறப்பு நன்கொடை அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது.
கடல் சார்ந்த தொழிலாளர்க்கான மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆயர்கள், குருக்கள் துறவிகள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் இந்தச் சிறப்பு அமைப்புக்கு உதவுமாறு விண்ணப்பித்துள்ளது இந்தத் திருப்பீட அவை.
தற்போது திரட்டப்படும் இந்த நிதியானது ஜப்பானில் இதற்குப் பொறுப்பான ஆயர் Michael Goro Matsuura வுக்கு நேரிடையாக அனுப்பப்படும் என்றும் இந்தத் திருப்பீட அவை யின் அறிக்கை கூறுகிறது.


இயேசு சபை அருள்தந்தை லூயி லெவே அவர்கள் இறந்ததன் 38வது ஆண்டு நிறைவு

மார்ச் 23,2011. இயேசு சபையைச் சேர்ந்த அருள்தந்தை லூயி லெவே அவர்கள் இறந்ததன் 38வது ஆண்டு நிறைவு அண்மையில் சிவகங்கை மறைமாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. குருக்கள், துறவறத்தார் மற்றும் விசுவாசிகள் என்று ஏறத்தாழ பத்தாயிரம் பேர் கூடி வந்து திருப்பலியில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் அருள்தந்தை லெவே நினைவைக் கொண்டாட வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதென சருகணியின் பங்குத் தந்தை அருள்பணி சார்லஸ் கூறினார்.
1884ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த அருள்தந்தை லூயி லெவே, 1904ம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்து 1908ம் ஆண்டு இந்தியாவில் பணி செய்வதற்கு சென்றார். ஓரியூர் திருத்தலத்தில் போற்றப்படும் புனித அருளானந்தர் 1947ம் ஆண்டு புனிதராக உயர்த்தப்படுவதற்கு அருள்தந்தை லெவே முயற்சிகள் பல மேற்கொண்டார்.
தமிழ் நாட்டில் சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த பல பங்குத் தளங்களில் 65 ஆண்டுகள் உழைத்த அருள்தந்தை லெவே, 1973ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இறையடி சேர்ந்தார்.
அருள்தந்தை லெவே இறந்து 38 ஆண்டுகள் ஆனாலும், அவரது கல்லறையை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் கூடிவருகிறதென்றும், அருள்தந்தை புனிதராக உயர்த்தப்படுவார் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளதென்றும் அருள்தந்தை சார்லஸ் கூறினார்.


தமிழ் நாட்டில் கிறிஸ்தவர்கள் துவக்கியுள்ள ஓர் அரசியல் கட்சி

மார்ச் 23,2011. வருகிற ஏப்ரல் மாதம் 13ம் தேதி தமிழ் நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல்களையொட்டி, அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் ஓர் அரசியல் கட்சியைத் துவக்கியுள்ளனர்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த 150 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியக் கிறிஸ்தவ மக்கள் கழகம் என்ற இந்த அமைப்பை மார்ச் 20 கடந்த ஞாயிறன்று சென்னை மயிலைப் பேராயர் சின்னப்பா அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் ஓர் அரசியல் அங்கமாக இந்தக் கழகம் செயல்படும் என்று பேராயர் சின்னப்பா கூறினார்.
இந்தக் கழகத்தை நிறுவிய F.A.நாதன் என்பவர் இக்கழகம் தற்போது தமிழ் நாட்டில் உள்ள கத்தோலிக்கர்களை மையப்படுத்தியதாக இருக்கும் என்றும், பின்னர் இது பிற மாநிலங்களில் உள்ளவர்களையும், அனைத்து கிறிஸ்தவர்களையும் ஒருங்கிணைக்கும் என்றும் கூறினார்.
மீன்பிடிப்பவர்களின் பாதுகாப்பு, அனைவருக்கும் சமமான வேலைவாய்ப்பு, நாட்டில் நிலவும் பண வீக்கத்தின் குறைப்பு ஆகியவைகளே தங்கள் கழகம் தற்போது நாட்டின் அரசுகளுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள் என்று நாதன் மேலும் கூறினார்.


குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் பேராயரின் வன்மையான கண்டனம்

மார்ச் 23,2011. அண்மையில் அமெரிக்காவில் குர்ஆன் எரிக்கப்பட்ட நிகழ்ச்சிக்குத் தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்.
இந்தக் கொடுஞ்செயல் உச்சக்கட்ட மடமை என்றும், எந்த வகையிலும் இது கிறிஸ்தவ எண்ணங்களையோ, மதிப்பீடுகளையோ திருச்சபையின் படிப்பினைகளையோ வெளிப்படுத்தவில்லை என்றும் பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் இலாரன்ஸ் ஜான் சல்தானா கூறினார்.
இச்செவ்வாயன்று துவங்கிய பாகிஸ்தான் பாராளுமன்றக் கூட்டத்தின் ஆரம்பத்தில் பேசிய பாகிஸ்தான் அரசுத் தலைவரான ஆசிப் அலி சர்தாரி இதனை வன்மையாகக் கண்டித்தார்.
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியக் குழுக்கள் இவ்வெள்ளியன்று இச்செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.
இந்த வன்செயலைக் கண்டித்து கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும்  இஸ்லாமிய சகோதரர்களுடன் கிறிஸ்தவர்களும் இணைய வேண்டும் என்றும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நல்லுறவை வளர்க்க வேண்டுமேயொழிய பகைமையை மேலும் தூண்டும் செயல்களில் ஈடுபடக் கூடாதென்றும் பேராயர் மக்களிடம் விண்ணப்பித்துள்ளார்.
கண்டனத்திற்குரிய இச்செயலைத் தீர விசாரிக்க அமெரிக்க அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் பேராயர் சல்தானா தன் அறிக்கையில் கூறியுள்ளார்.


பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் கல்லறையைப் பார்வையிட்ட அமெரிக்க அரசுத் தலைவர்

மார்ச் 23,2011. இலத்தீன் அமெரிக்காவில் இச்செவ்வாய், புதன் கிழமைகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் கல்லறையை இப்புதனன்று சென்று பார்வையிட்டார்.
சான் சால்வதோரில் திருப்பலி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் நினைவு நாள் மார்ச் 24 இவ்வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. 31 ஆண்டுகளுக்கு முன், 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மாலை பேராயர் ரோமெரோ மருத்துவமனையோன்றில் திருப்பலி நிறைவேற்றியபோது, இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பேராயர் ரோமெரோ தென் அமெரிக்காவின் தலைசிறந்த ஒரு நாயகன் என்று பராக் ஒபாமா கூறியுள்ளார். ரொமேரோவின் கல்லறைக்கு அமெரிக்க அரசுத் தலைவர் செல்வது எவ்வகையிலும் அரசியல் தொடர்பான செயல் அல்ல என்று சான் சால்வதொரின் தற்போதையப் பேராயர் Jose Luis Escobar Alas கூறினார்.
மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவரும், முக்கியமாக, ஒடுக்கப்பட்டோர் சார்பாகக் குரல் கொடுத்தவருமான பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின் கல்லறையை கறுப்பினத்தின் விடிவெள்ளியாக இருக்கும் பராக் ஒபாமா சென்று பார்த்தது பொருத்தமான ஒரு செயல் என்று பேராயர் Escobar Alas கூறினார்.


புனித பூமியில் மங்களவார்த்தைப் பேராலயத்திற்கு எதிரே அகில உலக பல்சமய உரையாடல் மையம் திறப்பு

மார்ச் 23,2011. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்து மரியாவுக்கு அறிவிக்கப்பட்ட திருநாள் மார்ச் 25, இவ்வெள்ளியன்று கொண்டாடப்படவிருக்கும் வேளையில், புனித பூமியின் நாசரேத்தில் உள்ள மரியாவின் மங்களவார்த்தைப் பேராலயத்திற்கு எதிரே அகில உலக பல்சமய உரையாடல் மையம் ஒன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாசரேத்தூர் மரியாவின்  பன்னாட்டு மையம் என்று அழைக்கப்பட விருக்கும் இந்த மையத்தை எருசலேமின் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal திறந்து வைப்பார்.
இவ்வெள்ளியன்று மாலை ஐந்து மணி அளவில் நடைபெறும் இவ்விழாவில், எருசலேமில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகள், மற்றும் பிற மதத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்வர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
யூத பாரம்பரியத்தில், கீழைரீதி சபைகளில் மற்றும் குர்ஆனில் மரியா எவ்விதம் கருதப்படுகிறார் என்பது குறித்த விவரங்கள் இந்த மையத்தில் கிடைக்கும் என்றும், இதன் வழியாக பல்வேறு சமயங்களுக்கிடையே புரிதலை வளர்க்கும் ஒரு முயற்சியாக இம்மையம் அமையும் என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


தேர்தலை முன்னிட்டு, கேரள கத்தோலிக்கர்களின் ஆதரவைக் கோரும் இடதுசாரி கட்சித் தலைவர்கள்

மார்ச் 23,2011. வருகிற ஏப்ரல் மாதம் கேரளாவில் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, அங்குள்ள இடதுசாரி கட்சித் தலைவர்கள் கத்தோலிக்கர்களின் ஆதரவைக் கோரி, கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர்களைச் சந்தித்தனர்.
இந்திய கம்யுனிசக் கழகத்தின் கேரள மாநிலத் தலைவர்கள் திரிச்சூர் பேராயர் Mar Andrews Thazhathஐ இச்செவ்வாயன்று சந்தித்துப் பேசினர் என்று UCAN செய்தி கூறுகிறது.
இச்சந்திப்பு நட்பின் அடிப்படையில் நிகழ்ந்ததேயொழிய வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று கம்யுனிசக் கழக கேரளச் செயலர் சந்திரப்பன் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதேபோல், கண்ணூரில் ஆயர் வர்கீஸ் சக்கலக்கல்லை மார்க்சிஸ்ட் கழகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சந்தித்துப் பேசியுள்ளார்.
எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிப்பது திருச்சபையின் பணி அல்ல, ஒவ்வொருவரும் அவரவர் மனசாட்சியின்படி வாக்களிக்கவே திருச்சபை மக்களிடம் கூறி வருகிறதென்று ஆயர் சக்கலக்கல் கூறினார்.


திருச்சபை முயற்சிகளின் பயனாக, கியூபாவில் அரசியல் கைதிகளின் இறுதி குழுவினர் விடுவிப்பு

மார்ச் 23,2011. கத்தோலிக்கத் திருச்சபை கியூபா அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பயனாக, அரசியல் கைதிகளாக இருக்கும் இறுதி குழுவினரை விடுவிக்க அவ்வரசு ஒத்துக் கொண்டுள்ளது.
2003ம் ஆண்டு கியூபா அரசை எதிர்த்த 75 அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு, 25 ஆண்டுகள் கடுங்காவல் தீர்ப்பு அளிக்கப்பட்டனர்.
கத்தோலிக்கத் திருச்சபை அரசுடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் 2010ம் ஆண்டில் பலன் தர ஆரம்பித்தது. அரசுத் தலைவர் Raul Castroவுக்கும் Havana பேராயர் கர்தினால் Jaime Ortegaவுக்கும் இடையே  சென்ற ஆண்டு ஜூலை மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இவ்வரசியல் கைதிகளை விடுவிக்க அரசு ஆரம்பித்தது.
இக்கைதிகளின் இறுதிக் குழுவினரை விடுவிக்க இச்செவ்வாயன்று அரசு ஒத்துக் கொண்டுள்ளது. Felix Navarro மற்றும் Jose Daniel Ferrer ஆகிய சமூகப் பணி ஆர்வலர்கள் இக்குழுவில் விடுவிக்கப்படும் முக்கியத் தலைவர்கள்.
விடுவிக்கப்பட்ட பலர் இன்று ஸ்பெயின் நாட்டில் குடியேறியுள்ளனர். அவ்வரசு இவ்வரசியல் கைதிகளுக்கு அடைக்கலம் தந்துள்ளது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...