Wednesday, 23 March 2011

Catholic News - hottest and latest - 22 Mar 2011

1. பாலியல் உணர்வுகள் மற்றும் எண்ணங்களின் அடிப்படையில் மக்கள் தாக்கப்படுவதற்குத் திருப்பீடம் கண்டனம்

2.  திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் பற்றிய Facebook பக்கம் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது.

3.  லிபியாவில் இடம்பெறும் தாக்குதல்கள் குறித்து ஆயர் கவலை.

4.  'கருவில் உருவாகியும் பிறப்பைக் காணாத குழந்தைகள்' தினத்தை இவ்வெள்ளியன்று சிறப்பிக்கிறது அர்ஜென்டினா தலத்திருச்சபை.

5.  புனித பூமிக்கென புனித வெள்ளியன்று நன்கொடை திர‌ட்டப்படுகிறது.

6.  ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிலிப்பீனோ மக்களுக்கு டோக்கியோ கோவில்கள் உதவி.

7.  ஜப்பான் : குடிநீர், பால், கீரைகளில் அணுநச்சு  

----------------------------------------------------------------------------------------------------------------
1. பாலியல் உணர்வுகள் மற்றும் எண்ணங்களின் அடிப்படையில் மக்கள் தாக்கப்படுவதற்குத் திருப்பீடம் கண்டனம்

மார்ச்22,2011. எல்லா மனிதரின் தவிர்க்க இயலாத மாண்பும் மதிப்பும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளை, பாலியல் உணர்வுகள் மற்றும் எண்ணங்களின் அடிப்படையில் மக்கள் குறிவைத்துத் தாக்கப்படும் அனைத்து வன்முறைகளையும் திருப்பீடம் வன்மையாய்க் கண்டிக்கிறது என்று பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 16வது அமர்வில் இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி இவ்வாறு உரைத்தார்.
பாலியல் கண்ணோட்டம் என்ற வார்த்தையின் பொருள் குறித்து தேவையற்ற சில குளறுபடிகள் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், பாலியல் உணர்வுகளுக்கும் பாலியல் எண்ணங்களுக்கும் இடையே முக்கியமான வேறுபாடு இருப்பதை விளக்கினார்.
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் வாழ்க்கை முழுவதும் முழுமையாக அர்ப்பணிக்கும் திருமணத்தில் உண்மையாகவே வெளிப்படுத்தப்படும் மனிதப் பாலியல் நடவடிக்கை ஒரு கொடை என்பதில் திருப்பீடம் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் பேராயர் ஐ.நா.கூட்டத்தில் தெரிவித்தார்.
பாலியல் நடவடிக்கையின் அறநெறித்தன்மையைப் புறக்கணிப்பது மனித சுதந்திரத்தைப் புறக்கணிப்பதாகும் என்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை ஆதரிக்காதவர்களைத் தாக்கும் போக்கு காணப்படுகின்றது என்றும் இந்தத் தாக்குதல்கள் மனித உரிமைகள் அவையின் தீர்மானங்களில் அறிவிக்கப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணாக அமைகின்றன என்றும் பேராயர் குறை கூறினார்.

2.  திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் பற்றிய Facebook பக்கம் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது.

மார்ச் 22, 2011.  திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலைக் குறித்து வத்திக்கான் வானொலியும் வத்திக்கான் தொலைக்காட்சி மையமும் நடத்தி வரும் இணையதள‌த்தின் Facebook பக்கம் (www.facebook.com/vatican.johnpaul2), பெருமளவில் வெற்றி பெற்று வருவதாக இவ்விரு வத்திக்கான் அமைப்புகளின் தலைவர் குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இந்த Facebook பக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே 30 ஆயிரம் விசிறிகளை இது கொண்டுள்ளதாகவும், இத்தாலியம் முதல் சைன மொழி வரையில் பல ஆயிரக்கணக்கான‌ ஆதரவுக் கருத்துக்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்த இயேசு சபை குரு லொம்பார்தி, இப்பக்கம் ஆரம்பித்த முதல் இர‌ண்டு நாட்களில் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பேருக்கு மேல் என்ற விகிதத்தில் மக்கள் பார்வையிட்டதாகவும், அதில் வெளியிட்டுள்ள செய்திகள் இதுவரை 20 இலட்சம் தடவைகளுக்கு மேல் திறந்து வாசிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்களை எடுத்துரைத்தார்.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுலுக்கு வரும் மே மாதம் ஒன்றாந்தேதி முத்திப்பேறு பட்டம் வழங்கப்பட உள்ளதையொட்டி அதற்கெனத் திறக்கப்பட்டுள்ள Facebook மற்றும் YouTube பக்கத்தில்(www.youtube.com/giovannipaoloii)  அத்திருந்தையின் 27 ஆண்டு பாப்பிறை பதவிக் காலத்தின் ஒலி-ஒளி காட்சிகள், திருப்பயணப் பட‌ங்கள், வெவ்வேறு மொழிகளில் அவர் பேசியவை போன்றவை மக்களின் பார்வைக்கெனத் தரப்பட்டுள்ளன.

3.  லிபியாவில் இடம்பெறும் தாக்குதல்கள் குறித்து ஆயர் கவலை.

மார்ச் 22, 2011.  டிரிப்போலியின் புறநகர்ப்பகுதியில் இடம்பெற்றுவரும் வெடிகுண்டுத் தாக்குதலால் அந்நகர் மக்கள் வெளியேறி வருவதாக கவலையை வெளியிட்டுள்ளார் டிரிப்போலியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli.
போரின் மூலம் எந்த தீர்வையும் காணமுடியாது என்பதை வலியுறுத்தியுள்ள ஆயர், தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வந்து, பிரச்னைக்குத் தீர்வுகாணும் நோக்கில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் துவக்கப்படவேண்டும் என விண்ணப்பித்தார்.
அரசியல் ரீதியான தீர்வுகள் ஏன் முன்வைக்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ள ஆயர் Martinelli, லிபியாவில் உள்ள‌ எரிட்ரிய‌ அக‌திக‌ளை துனிசிய‌ எல்லைக்கு அனுப்பும் நோக்கில் த‌ல‌த்திருச்ச‌பை முய‌ற்சிக‌ளை மேற்கொண்டு வ‌ருவ‌தாக‌வும் எடுத்துரைத்தார். துனிசிய‌ எல்லையில் ச‌ர்வ‌தேச‌ ம‌னித‌பிமான‌ உத‌வி நிறுவ‌ன‌ங்க‌ள் சேவையாற்றி வ‌ருவ‌தால் லிபியா வாழ் எரிட்ரிய‌ அக‌திக‌ளை அங்கு அனுப்புவதில் உத‌வி வ‌ருகிற‌து லிபிய‌த் த‌ல‌த்திருச்ச‌பை.

4.  'கருவில் உருவாகியும் பிறப்பைக் காணாத குழந்தைகள்' தினத்தை இவ்வெள்ளியன்று சிறப்பிக்கிறது அர்ஜென்டினா தலத்திருச்சபை.

மார்ச் 22, 2011.  'கருவில் உருவாகியும் பிறப்பைக் காணாத குழந்தைகள்' தினத்தை இவ்வெள்ளியன்று சிறப்பிக்கும் அர்ஜென்டினா தலத்திருச்சபை, வாழ்வுக்கான ஜெபமாலை என்பதில் அனைத்து விசுவாசிகளும் பங்குபெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
கருக்கலைப்பு தொடர்புடைய ஒழுக்க ரீதி மற்றும் சட்ட ரீதி குற்ற நிலை குறித்து ஆழ்ந்து சிந்திக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கும் இத்தினத்தின்போது Buenos Aires  பேராலயத்தில் ஜெபமாலையை மக்களுடன் இணைந்து ஜெபிப்பார் கர்தினால் ஹோர்ஜே பெர்கோலியோ.
திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்றான கருக்கலைப்பை எதிர்ப்பதற்கான ஒரு பொதுவான வழிமுறையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தலத்திருச்சபை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
2011ம் ஆண்டை வாழ்வுக்கான ஆண்டு என அறிவித்துள்ள அர்ஜென்டினா தலத்திருச்சபை, கருவில் வளரும் குழந்தைகளுக்கானப் பாதுகாப்பு, கருக்கலைப்பைச் சட்டரீதியாக்குவதற்கு எதிர்ப்பு, கருத்தாங்கியுள்ள பெண்களுக்கானப் பாதுகாப்பை ஊக்குவித்தல், ஏழ்மையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி போன்றவைகளைத் திட்டமிட்டு அறிவித்துள்ளது.
கருக்கலைப்புக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அர்ஜென்டினாவில் 1998ம் ஆண்டு முதல்க் மார்ச் 25ந்தேதி 'கருவில் உருவாகியும் பிறப்பைக் காணாத குழந்தைகள்' தினமாக சிறப்பிக்கப்படுகிறது.

5.  புனித பூமிக்கென புனித வெள்ளியன்று நன்கொடை திர‌ட்டப்படுகிறது.

மார்ச் 22, 2011.  புனித பூமிக்கென உலகம் முழுவதும் புனித வெள்ளியன்று நன்கொடை திர‌ட்டப்படும்போது தாராளமனதுடன் செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி.
புனித பூமிக்கு உதவ வேண்டிய திருச்சபையின் அர்ப்பணம் குறித்து அனைத்து மறைமாவட்டங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள கீழை ரீதி திருச்சபைக்கானத் திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் சாந்த்ரி, அகில உலகத் திருச்சபையுடன் சகோதரத்துவ ஒருமைப்பாட்டை எதிர்பார்க்கும் புனித பூமியுடன் அருட்கொடைகளையும் துயர்களையும் பகிரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
புனித பூமியின் துயர்களால் கிறிஸ்தவ சமுதாயம் அங்கிருந்து வெளியேறி வருவது மிகுந்த கவலை தருவதாக உள்ளது என்ற கர்தினால், இதனால் அப்பகுதி இளைய சமுதாயத்தை இழந்து வருங்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என மேலும் உரைத்தார்.
எருசலேம், இஸ்ராயேல், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்தானின் கிறிஸ்தவர்களுக்கு ஊக்கத்தை வழங்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று திரட்டப்படும் நிதியானது, அமைதிப் பணிகளுக்கெனவும், கீழை நாடுகளின் கிறிஸ்தவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கெனவும் பயன்படுத்தப்படும் என்றார் கர்தினால் சாந்த்ரி.

ஜப்பான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிலிப்பீனோ மக்களுக்கு டோக்கியோ கோவில்கள் உதவி.

மார்ச் 22, 2011.  ஜப்பானின் அண்மை சுனாமி மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் வாழ் பிலிப்பினோ மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி வருகின்றன டோக்கியோவிலுள்ள கத்தோலிக்க கோவில்கள்.
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட சென்டெய்  மற்றும் ஃபுக்குஷிமா  பகுதிகளிலிருந்து தப்பிப் பேருந்து மூலம் டோக்கியோ நகரை அடைந்த பிலிப்பீனோ மக்களுக்கு அந்நகரின் இறைவார்த்தை சபையால் நடத்தப்படும் பங்கு கோவில் உட்பட மூன்று கோவில்கள் உடனடி உதவிகளை வழங்கி அடைக்கலமும் தந்துள்ளன.
இதற்கிடையே, ஜப்பானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென நிதி திரட்டல் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது பிலிப்பீன்ஸ் தலத்திருச்சபை.
அண்மை இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கும், ஜப்பான் வாழ் பிலிப்பீனோ மக்களுக்கும் உதவுவதற்கென இத்தவக்கால நிதி திரட்டல் ஒன்றிற்கும் விண்ணப்பித்துள்ளார் மணிலா துணை ஆயர் Broderick Pabillo.

7.  ஜப்பான் : குடிநீர், பால், கீரைகளில் அணுநச்சு  

மார்ச் 21,2011 ஜப்பானின் புக்குஷிமாவைச் சுற்றியுள்ள நான்கு மாகாணங்களில் இருந்து உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புக்குஷிமா, இபாராக்கி, டோச்சிகி மற்றும் குன்மா ஆகிய மாகாணங்களில் இருந்து கீரை ஏற்றுமதியும், புக்குஷிமாவில் இருந்து பால் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த இருநாட்களில், இவற்றில் அளவுக்கு அதிகமாக கதிர்வீச்சின் பாதிப்பு இருந்ததால், ஜப்பான் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில், தற்போது மூன்று உலைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. எனினும் மின்சாரம் மூலம் உலை குளிரூட்டும் முறை துவக்கப்படவில்லை. அதனால், தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் நீர் ஊற்றப்பட்டு உலைகள் குளிரூட்டப்படுகின்றன. இதன் காரணமாக, கதிர்வீச்சு கசிவு கணிசமான அளவில் குறைந்துள்ளது. இந்நிலையில் இத்திங்களன்று 3ம் உலையில் இருந்து, திடீரென சாம்பல் நிறத்தில் புகை வெளிப்பட ஆரம்பித்தது. இதனால் அங்கிருந்த பணியாளர்கள் தற்காலிமாக வெளியேற்றப்பட்டனர்.
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், 10 லட்சத்து 57 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு ஜப்பானில் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஐந்தாண்டு காலம் ஆகும் என்றும் உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...