Monday, 21 March 2011

Catholic News - hottest and latest - 21 Mar 2011

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை.

2. அணு உலைகளின் ஆபத்துக்கள் குறித்த கேள்விகளை புறந்தள்ள ‌முடியாது என்கிறார்  திருப்பீடப்பேச்சாளர்

3. குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அயர்லாந்து  கர்தினாலின் வழிகாட்டுதல் ஏடு.

4. ஜப்பானின் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10இலட்சம் ரூபாயை உதவியாக‌ வழங்குகிறது பெங்களூரு உயர்மறைமாவட்டம்.

5. கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் இந்திய - இலங்கை பக்தர்கள் பிரார்த்தனை

6. பக்கவாத நோய் ஏற்படுவதற்கு பற்களும் காரணமாக உள்ளது என்கிறது ஜப்பான் ஆய்வு ஒன்று.

----------------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தையின் மூவேளை செப உரை.

மார்ச் 21, 2011.    நமக்கென இருக்கும் ஒரே உறைவிடம் கிறிஸ்துவே என்ற புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளுடன் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்து உருமாறியது பற்றிய‌ இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்த தன் கருத்துகளை நண்பகல் மூவேளை செப உரையின்போது குறிப்பிட்ட பாப்பிறை, இந்நிகழ்வு இயேசுவில் எவ்வித மாற்றத்தையும் கொணரவில்லை எனினும், அவரின் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது என்றார்.
புனிதர்கள் பேதுரு, யாகப்பர் மற்றும் யோவானுக்குக் கிட்டிய  இயற்கைக்கு மேம்பட்ட கொடையான இந்தக் காட்சியைக் காணும் பேற்றை, நாமும் செபம் மற்றும் இறைவார்த்தைக்கு செவிமடுத்தல் மூலம் பெறமுடியும் என மேலும் கூறினார் அவர்.
லிபியாவில் காணப்படும் அண்மை பதட்டநிலைகள் குறித்தும் இம்மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை, லிபியாவின் இன்றைய நிலைகள் தன்னில் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளதாக எடுத்துரைத்தார்.
தன் கடந்த வார வருடாந்திர தியானத்தின்போது லிபியாவின் அமைதிக்காக செபித்ததாக உரைத்த பாப்பிறை, அப்பாவி பொது மக்களின் பாதுகாப்பை மனதிற்கொண்டு அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன் வைத்தார்.

2.  அணு உலைகளின் ஆபத்துக்கள் குறித்த கேள்விகளை புறந்தள்ள ‌முடியாது என்கிறார்  திருப்பீடப்பேச்சாளர்

மார்ச் 21, 2011.    மனித குலத்திற்கான பெரும் சக்தி ஆதாரமாக அணுசக்தி இருக்கின்றது என்பது உண்மை எனினும், அதனால் இடம்பெற உள்ள ஆபத்துக்கள் குறித்த கேள்விகளை நாம் புறக்கணிக்க‌முடியாது என்றார்  திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
வாரந்தோறும் தொலைக்காட்சியில் தான் வழங்கும் 'ஒக்தாவா தியேஸ்' என்ற நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்ட திருப்பீடப் பேச்சாளர், ஜப்பானின் சுனாமி இயற்கைப் பேரிடரின் பாதிப்புகள் குறித்து வரும் செய்திகள் மனிதர்களைக் கவலைக்குள்ளாக்குவதோடு, அணுசக்தி குறித்த கேள்வியையும் நம்மில் எழுப்புகின்றன என்றார். முதலில் ஆழிப்பேரலைகளினால் ஏற்பட்ட அழிவுகள் குறித்துக் கவலைப்பட்ட மனித குலம் தற்போது அணுவுலை வெடிப்புகளின் பாதிப்புகள் குறித்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது என்றார்.
மனித சமுதாயத்திற்கான பெரும் சக்தி ஆதாரமாக அணுசக்தி உள்ளது எனினும், கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு, கதிர்வீச்சால் ஏற்படும் ஆபத்து, அணுசக்திக்கு மனிதன் கொடுக்க வேண்டிய விலை ஆகியவைகள் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என மேலும் கூறினார் இயேசு சபை குரு லொம்பார்தி.

3. குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அயர்லாந்து  கர்தினாலின் வழிகாட்டுதல் ஏடு.

மார்ச் 21, 2011.    குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் வழிகாட்டுதல்கள் அடங்கிய சிறு மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார் அயர்லாந்து பேராயர் கர்தினால் Sean Brady.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருத்தந்தை வெளியிட்ட மேய்ப்புப் பணி சுற்றறிக்கையின் முக்கிய கருத்துக்களைத் தன் சுற்றறிக்கையில் கோடிட்டுக் காட்டியுள்ள கர்தினால், அமைதி மற்றும் குணப்படுத்தலின் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கும் நாம், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மற்றும் புதுப்பித்தலுக்கான தலத்திருச்சபையின் அர்ப்பணம் ஆகியவை பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.
'குணப்படுத்தல் மற்றும் புதுப்பித்தலை நோக்கி' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இம்மேய்ப்புப்பணி சுற்றறிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கான செபம், அவர்களுக்கு அக்கறையுடன் செவிமடுத்தல், ஆன்மீக முறையிலான ஆதரவு, திருச்சபைக்குள் குழந்தைகளுக்கான பாதுகாப்பானச் சூழலை உருவாக்குதல், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான தேசிய அவையின் உதவியுடன் மறைமாவட்டங்கள், துறவு இல்லங்கள் மற்றும் சமூகங்களில் ஆய்வு செய்தல் போன்றவைகளைப் பரிந்துரைத்துள்ளது.

4. ஜப்பானின் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10இலட்சம் ரூபாயை உதவியாக‌ வழங்குகிறது பெங்களூரு உயர்மறைமாவட்டம்.

மார்ச் 21, 2011.    ஜப்பானின் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென 10இலட்சம் ரூபாயை கொடையாக வழங்குவ‌தாக அறிவித்துள்ளது பெங்களூரு உயர்மறைமாவட்டம்.
இந்த இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் அனுதாபங்களை வெளியிட பல்வேறு சமூக மக்கள் கூடிய கூட்டத்தில் இவ்வறிவிப்பு விடப்பட்டது.
பெங்களூரு பேராயர் பெர்னார்டு மொராசுடன் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜப்பான் கிளைத்தூதரகப்பிரிவு அதிகாரிகள் ஷாலினி வாலியாவும் பிராத்திமா சர்காரும், இந்திய மக்களின் இந்த ஒருமைப்பாட்டுணர்வுக்கு தங்கள் நன்றியை வெளியிட்டனர்.
இவ்வுலகில் நில நடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களுக்கு வழி கோலும் தட்ப வெப்ப நிலை மாற்றம் குறித்த க‌வ‌லையும் இக்கூட்ட‌த்தில் வெளியிட‌ப்ப‌ட்ட‌து.

5. கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் இந்திய - இலங்கை பக்தர்கள் பிரார்த்தனை

மார்ச் 21, 2011.    அந்தோணியார் ஆலய விழாவைச் சிறப்பிக்க கச்சத்தீவில் கூடிய இந்திய மற்றும் இலங்கை விசுவாசிகள், இஞ்ஞாயிறு காலை திருப்பலியில் கலந்து கொண்டு,   இந்திய - இலங்கை ஒற்றுமை, உலக அமைதி, சுனாமியில் பாதித்த ஜப்பான் நாடு ஆகியவற்றிற்காக  கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
'இந்திய மக்களுக்கான நலம்புரி சேவைகள்' என்ற பெயரில் தற்காலிக முகாம் அமைத்திருந்த இலங்கைக் கடற்படையினர், தமிழக பக்தர்களுக்கு ஞாயிறு காலை சாப்பாடு, பிஸ்கட் பாக்கெட், வாழைப்பழம், மாம்பழச்சாறு, ஐஸ்கிரீம், தண்ணீர் பாட்டில்களை வழங்கியதாகவும்,  தீவை சுற்றிப் பார்ப்பதற்கும் அனுமதி வழங்கியதாகவும் அங்கு சென்று திரும்பியோர் அறிவித்தனர்.

6. பக்கவாத நோய் ஏற்படுவதற்கு பற்களும் காரணமாக உள்ளது என்கிறது ஜப்பான் ஆய்வு ஒன்று.

மார்ச் 21, 2011.    பக்கவாத நோய் ஏற்படுவதற்கு பற்களும் காரணமாக உள்ளது என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜப்பானில் உள்ள ஹீரோஷிமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் 50 முதல் 60 வயதுக்குட்பட்ட பக்கவாத நோய் பாதித்த நபர்களிடம் ஆய்வு மேற்கொண்டதில், அவர்களில் 24 மற்றும் அதற்கு குறைவான பற்கள் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும், அதே வேளையில் இதே வயதுடைய அதிக பற்கள் உள்ளவர்களுக்கு பக்கவாதம் நோய் பாதிப்பு அதிக அளவில் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
எனவே பற்களைப் பாதுகாப்பதன் மூலம் அந்த நோயில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பற்கள் தவிர உடல் பருமன் மற்றும் மது குடித்தல் போன்றவற்றினாலும் பக்கவாத நோய் தாக்குவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...