Friday, 18 March 2011

Catholic News - hottest and latest - 18 Mar 2011

1. துன்பப்படும் ஜப்பான் மக்களுக்கு உலகளாவிய ஆயர்களின் செபங்கள், ஒருமைப்பாட்டுணர்வு

2. ஐரோப்பாவில் அணு ஆயுதங்களை அகற்றுமாறு NATO வுக்கு WCC அமைப்பு வலியுறுத்தல்
                           
3. ஜப்பான் நிலநடுக்கத்தால் பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு

4. ஒவ்வொரு மறைமாவட்டமும் இறையழைத்தலுக்காகச் செபிக்கக் குருக்கள் பேராயத் தலைவர் வேண்டுகோள்

5. வத்திக்கான் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைத்  தலைவர் சந்திப்பு

6. தேவ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்ட கத்தோலிக்கரின் மரணத்திற்கு மாரடைப்புக் காரணமல்ல- பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் 

7. பேராயர் வார்தா : ஈராக்கின் பலவீனமான அரசியல் அமைப்பு, தற்போதைய பிரச்சனைக்கு ஒரு  காரணம்

8. லிபியா குறித்து மேற்கத்திய நாடுகள் ஆலோசனை

----------------------------------------------------------------------------------------------------------------

1. துன்பப்படும் ஜப்பான் மக்களுக்கு உலகளாவிய ஆயர்களின் செபங்கள், ஒருமைப்பாட்டுணர்வு

மார்ச்18,2011. ஜப்பானில் இம்மாதம் 11ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்,  சுனாமி மற்றும் அணுஉலைகள் வெடிப்பால் இடம் பெறும் அணுக்கதிர்வீச்சுக்களால் பெரிதும் துன்பப்படும் அந்நாட்டு மக்களுக்கு உலகளாவிய அளவில் கத்தோலிக்க ஆயர்கள் தங்களது செபங்களையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான நியுயார்க் பேராயர் Timothy M. Dolan, ஜப்பானின் ஒசாகா பேராயர் Leo Jun Ikenaga வுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அமெரிக்கத் திருச்சபையின் செபங்களையும் தோழமையுணர்வையும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பேரிடர் ஏற்பட்டு இவ்வெள்ளிக்கிழமையோடு ஒருவாரம் நிறைவடைவதால் ஜப்பான் மக்களும் நிவாரணப் பணியாளர்களும் மௌன அஞ்சலியும் செலுத்தினர். 
ஜப்பான் காவல்துறையின் கணிப்புப்படி, இதுவரை 6,405 பேர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 10,200 பேர் காணமாற்போயுள்ளனர்.

2. ஐரோப்பாவில் அணு ஆயுதங்களை அகற்றுமாறு NATO வுக்கு WCC அமைப்பு வலியுறுத்தல்

மார்ச்18,2011. ஐரோப்பாவில் இன்னும் வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அனைத்து அணுஆயுதங்களை அகற்றி இந்த ஆயுதங்கள் குறித்த கூட்டுக் கொள்கையில் தனது பங்கை விலக்கிக் கொள்ளுமாறு WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றமும் திருச்சபை நிறுவனங்களும் NATO அமைப்பை வலியுறுத்தியுள்ளன.
200 அல்லது அதற்கு மேற்பட்ட அணு ஆயுதங்கள், பனிப்போர் யுக்திகளின் எஞ்சிய ஆயுதங்களாக உள்ளன எனக் கூறும் WCCன் கடிதம், ஐரோப்பாவில் ஆயுதக்களைவும் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் ஏற்படுவது குறித்து நேட்டோ அமைப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கேட்டுள்ளது.
நேட்டோ அமைப்பு மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு WCC கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகளில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அணுஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை அகற்றுவதால் அணுஆயுதங்களற்ற நாடுகளின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைக்க முடியும் என்றும் அக்கடிதங்கள் கூறுகின்றன. 

3. ஜப்பான் நிலநடுக்கத்தால் பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு

மார்ச் 16,2011 ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், பூமியின்  சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால் ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும்' என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
6,852 தீவுக் கூட்டங்களைக் கொண்ட ஜப்பான் நாட்டிலுள்ள ஹொக்கைடோ, ஹோன்ஷூ, ஷிகோக்கு, கியூஷூ ஆகிய நான்கு பெரிய தீவுகளில் ஹோன்ஷூ தீவில்தான் தலைநகர் டோக்கியோ உள்ளது. இந்த அண்மை நிலநடுக்கத்தால், ஹோன்ஷூ தீவு, 8 அடி நகர்ந்துள்ளதாகவும்,  பூமியின் அச்சு 17 செ.மீ., நகர்ந்துள்ளதாகவும் அமெரிக்க நிலவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பூமியின் எடையில் சிறிது மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன் சுற்றும் வேகம் சிறிது அதிகரித்துள்ளது. இதனால், ஒரு நாளில் மொத்த வினாடிகளில் 1.8 மைக்ரோ வினாடிகள் குறையும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

4. ஒவ்வொரு மறைமாவட்டமும் இறையழைத்தலுக்காகச் செபிக்கக் குருக்கள் பேராயத் தலைவர் வேண்டுகோள்

மார்ச்18,2011. திருச்சபையில் இறையழைத்தல் அதிகரிக்கவும் அருட்பணியாளர்களின் புனித வாழ்வுக்காகவுமென ஒவ்வொரு மறைமாவட்டமும் ஆராதனைச் சிற்றாலயம் அல்லது ஒரு திருத்தலத்தை அர்ப்பணிக்குமாறு குருக்கள் பேராயத் தலைவர் கர்தினால் Mauro Piacenza கேட்டுக் கொண்டார்.
பிரான்ஸ் நாட்டு துலோன் ஆயர் Dominique Rey திருநற்கருணை ஆராதனை குறித்த அனைத்துல மாநாட்டை வருகிற ஜூன் 20 முதல் 24 வரை உரோம் சலேசிய பல்கலைகழகத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இதனையொட்டி ஆயர் ரேய்க்குக் கடிதம் எழுதிய கர்தினால் Piacenza, திருநற்கருணை ஆராதனையின் மதிப்பை விளக்கியுள்ளார். 
திருநற்கருணையில் பிரசன்னமாகியிருக்கும் நம் ஆண்டவரை வணங்குவதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூறாமல் இருக்க முடியாது என்றுரைத்த அவர், வழிபாடு, இறைமக்களின் மிக உன்னதச் செயலாக இருக்கின்றது எனவும் கூறினார்.

5. வத்திக்கான் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைத்  தலைவர் சந்திப்பு

மார்ச்18,2011. ஐரோப்பாவில் பாரம்பரியக் கிறிஸ்தவ விழுமியங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் பன்னாட்டு அமைப்புகளுடன் ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது அவசியம் என்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தலைவர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch இரஷ்யாவுக்கு மேற்கொண்ட முதல் சுற்றுப்பயணத்தில் இப்புதன்கிழமை மாஸ்கோவிலுள்ள இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை முதுபெரும் தலைவர் Kirill ஐச் சந்தித்து ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களின் நிலை குறித்து கலந்து பேசினார்.
இச்சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தலைவர் அலுவலகம், கத்தோலிக்க மற்றும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையேயான சர்வதேச உரையாடல் குழு நடத்தும் கலந்துரையாடல்கள் குறித்து இச்சந்திப்பில் இடம் பெற்றதாகக் கூறியது.
இவ்விரு சபைகளுக்கிடையே இறையியல் கருத்துக்களில் வேறுபாடுகள் இருப்பினும், ஐரோப்பாவில் சமூக, பொருளாதாரத் துறைகளிலும், அறிவியல் ஆராய்ச்சிகளின் அறநெறிக் கூறுகளிலும் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு குறித்து வலியுறுத்துவதற்கு, ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஐரோப்பிய சமுதாய அவை போன்ற பன்னாட்டு அமைப்புகளுடன் கிறிஸ்தவ சபைகள் தங்களது ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று இச்சந்திப்பில் கூறப்பட்டதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

6. தேவ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்ட கத்தோலிக்கரின் மரணத்திற்கு மாரடைப்புக் காரணமல்ல- பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் 

மார்ச்18,2011. பாகிஸ்தானில் தேவ நிந்தனை குற்றத்தின் பேரில் ஆயுள் தண்டனை அனுபவித்த வந்த கத்தோலிக்கரின் இறப்புக்கு மாரடைப்பு காரணமல்ல, மாறாக அவர் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொலையுண்டார் என்று அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.
55 வயதான Qamar David என்பவர் தேவ நிந்தனை குற்றத்தின் பேரில் 2006ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். ஆயினும் அவர் இத்திங்கள் நள்ளிரவு அல்லது செவ்வாய் அதிகாலையில் சிறையில் இறந்து கிடந்தார் எனவும் இதற்கு மாரடைப்புக் காரணம் எனவும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கை உண்மையல்ல என்றுரைத்த அதேவேளை, தேவ நிந்தனை விவகாரம் தொடர்பாக இசுலாம் தீவிரவாதக் குழுக்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து நடத்தும் வெறுப்புணர்வு வன்செயலுக்கு டேவிட் பலியாகி இருக்கக்கூடும் என்று பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம் அறிவித்தது.
நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான டேவிடின் அடக்கச் சடங்கு இவ்வியாழனன்று லாகூர் புனித யோவான் ஆலயத்தில் நடைபெற்றது. லாகூர் துணை ஆயர் செபஸ்டியான் ஷா இந்தத் திருப்பலியை நிறைவேற்றினார்.
இம்மாதம் இரண்டாம் தேதி கொலையுண்ட பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhattiன் மரணம் தந்த வேதனையிலிருந்து மீள்வதற்கு முன், மீண்டும் ஒரு மரணத்தைச் சந்தித்திருப்பது ஆழ்ந்த கவலையை உருவாக்கியுள்ளதென்று இராவல்பிண்டி ஆயர் Rufin Anthony  கூறியுள்ளார்.
7. பேராயர் வார்தா : ஈராக்கின் பலவீனமான அரசியல் அமைப்பு, தற்போதைய பிரச்சனைக்கு ஒரு  காரணம்

மார்ச்18,2011. இரண்டு தலைவர்களைத் திருப்திபடுத்துவதற்கு முயற்சிப்பது போல் அமைந்துள்ள பலவீனமான அரசியல் அமைப்பு, ஈராக் நாட்டின் தற்போதைய பிரச்சனையின் ஓர் அங்கமாக இருக்கின்றது என்று அந்நாட்டு பேராயர் ஒருவர் கூறினார்.
Aid to the Church in Need என்ற ஜெர்மனியின் கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம் நடத்திய நிருபர் கூட்டத்தில் பேசிய ஈராக்கின் Irbil பேராயர் Bashar Warda இவ்வாறு கூறினார்.
நசுக்கப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ற தலைப்பில் புதிய அறிக்கை வெளியிடுவதற்காக இப்பிறரன்பு நிறுவனம் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
ஈராக் அரசை நிலைகுலையச் செய்வதற்காக அதன் அண்டை நாடுகள் பணத்தையும் ஆயுதங்களையும் கொடுக்கின்றன, இச்செயல் நாட்டில் கிளர்ச்சிக்கு வித்திடுகின்றது என்றும், ஈராக்கில் மனித உரிமை மீறல்களும் கிறிஸ்தவர்கள் அனுபவித்த இனப்படுகொலைகளும் தற்காலிகமானவை என்று நினைத்து உலகின் பிற அரசுகள் ஒதுங்கிவிட்டன என்றும் பேராயர் வார்தா தெரிவித்தார்.
ஈராக்கில் 2003ல் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைமையில் நடந்த ஆக்ரமிப்புக்குப் பின்னர் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2006க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் 17 ஈராக்கிய குருக்களும் இரண்டு ஆயர்களும் கடத்தப்பட்டு அடிக்கப்பட்டனர் மற்றும் சித்ரவதை செய்யப்பட்டனர். ஓர் ஆயர், நான்கு குருக்கள் மற்றும மூன்று தியாக்கோன்கள் கொலை செய்யப்பட்டனர் என்றார் பேராயர் வார்தா.
கிறிஸ்தவர்கள் ஈராக்கை வி்டடு வெளியேற வேண்டுமென்பதே இந்த வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணம் எனவும் அவர் கூறினார்.

8. லிபியா குறித்து மேற்கத்திய நாடுகள் ஆலோசனை

மார்ச்18,2011. லிபிய அதிபர் Muammar Gaddafi ன் தாக்குதல்களிலிருந்து அப்பாவி பொது மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ஐ.நா.பாதுகாப்பு அவை ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதையடுத்து, லிபியா வான்வெளியில் விமானங்கள் பறப்பதைத் தடை செய்வது  குறித்து மேற்கத்திய நாடுகள் விவாதித்து வருகின்றன.
தனக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு பென்காசியில் தாக்குதலை நடத்துவதாக கடாஃபி அறிவித்துள்ளதையொட்டி ஐ.நா.பாதுகாப்பு அவை இவ்வியாழன் இரவு இத்தீர்மானத்தை நிறைவேற்றியது.
லிபியா மற்றும் டுனிசியா எல்லைப்புறத்தில் 15 ஆயிரத்துக்கு அதிகமான சூடான உணவுப் பொட்டலங்களைத் தினமும் வழங்கி வருகிறது உலக உணவு திட்ட அமைப்பு.
கடந்த மாதத்தில் சுமார் 3 இலடச்ம் குடியேற்றதாரப் பணியாட்கள் லிபியாவை வி்டடு வெளியேறி இருக்கின்றனர்.  
இதற்கிடையே, உடனடியாக போரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.நா., கொள்கைகளை லிபியா மதித்து நடக்கும் எனவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...