Tuesday, 8 March 2011

Catholic News - hottest and latest - 08 Mar 2011

1. தொலைக்காட்சியில் இயேசு குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குத் திருத்தந்தை பதில்

2. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நியுசிலாந்து மக்களுக்குத் திருத்தந்தை  உதவி
                           
3. வத்திக்கான் உயர் அதிகாரி : சமய வெறுப்புணர்வையொட்டிக் கொல்லப்படும் மக்களில் 75 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்

4. வத்திக்கான் அதிகாரி :அமைச்சர் ஷபாஸ் பாட்டி உண்மையான மறைசாட்சி

5. இலங்கையில் அகதிகளு்ககும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் காரித்தாஸ் உதவி

6. ஐம்பதாவது சர்வதேச திருநற்கருணை மாநாட்டிற்கானத் திட்டங்களை அயர்லாந்து திருச்சபை வெளியிட்டுள்ளது

7. ஐவரிகோஸ்டில் இரண்டு மசூதிகள் அழிக்கப்பட்டதற்கு கத்தோலிக்க ஆயர்கள் கண்டனம்

8. இந்தோர் மறைமாவட்டம் மகளிர் தினத்தன்று தையல் எந்திரங்களை வழங்கியது

9. மனித உரிமைகளுக்காகப் போராடும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கப் பெண்களுக்கு ஐ.நா.அதிகாரி வாழ்த்து

10. பெண்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டால் அதிகமான மக்களின் பசியைப் போக்க முடியும் ஐ.நா

----------------------------------------------------------------------------------------------------------------

1. தொலைக்காட்சியில் இயேசு குறித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குத் திருத்தந்தை பதில்

மார்ச்08,2011. இவ்வாண்டு புனித வெள்ளிக்கிழமையன்று இத்தாலிய அரசு தொலைகாட்சியில் விசுவாசிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவிருக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வருகிற ஏப்ரல் 22ம் ததியன்று Rai Uno” என்ற இத்தாலிய தொலைக்காட்சிச் சேனலில்  “A Sua Immagine” என்ற நிகழ்ச்சியில் இயேசு குறித்து விசுவாசிகள் கேட்கும் மூன்று கேள்விகளுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பதில் அளிக்கவிருக்கிறார்
மேலும், நாசரேத்தின் இயேசு: புனித வாரம் - எருசலேம் நுழைவிலிருந்து உயிர்ப்பு வரைஎன்ற தலைப்பிலான திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புத்தகம் மார்ச் 10, இவ்வியாழனன்று வெளியிடப்படவுள்ளது.
நாசரேத்தூர் இயேசு என்ற திருத்தந்தையின் முதல் புத்தகம் ஏற்கனவே வெளியிடப்பட்டு அமோக விற்பனையிலும் வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும, தவக்காலம் தொடங்கும் இப்புதனன்று பாரம்பரியச் சாம்பல் புதன் பவனியை உரோம் Aventine குன்றிலுள்ள புனித ஆன்செல்ம் ஆலயத்திலிருந்து புனித சபினா பசிலிக்காவுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழிநடத்திச் செல்வார்.

2. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நியுசிலாந்து மக்களுக்குத் திருத்தந்தை  உதவி

மார்ச்08,2011. நியுசிலாந்து நாட்டில் நிலநடுக்கத்தால் கடுமையாயப் பாதிக்கப்பட்ட Christchurch மக்களுக்கு, Cor Unum என்ற திருப்பீட மனிதாபிமான அமைப்பின் வழியாக  ஐம்பதாயிரம் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார் திருத்தந்தை.
நியுசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான Christchurch ஐக் கடந்த மாதம் தாக்கிய நிலநடுக்கத்தில் 160க்கும் அதிகமானோர் இறந்தனர். பரவலாகக் கடும் சேதங்களும் ஏற்பட்டன.
Christchurch ஆயர் Barry Jonesக்குத் திருத்தந்தை அனுப்பிய இரங்கல் தந்தியில் பாதிக்கப்பட்ட மக்களுடனானத் தனது ஆன்மீக ரீதியிலான ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார்.

3. வத்திக்கான் உயர் அதிகாரி : சமய வெறுப்புணர்வையொட்டிக் கொல்லப்படும் மக்களில் 75 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்

மார்ச்08,2011. உலகில் சமயக் காழ்ப்புணர்வையொட்டிக் கொல்லப்படும் மக்களில் ஒவ்வொரு நூறு பேருக்கும் 75 பேர் கிறிஸ்தவர்கள் என்று ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
சமய சுதந்திரம் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 16வது அமர்வில் உரையாற்றிய பேராயர் தொமாசி, சமய சுதந்திரம், அடிப்படை மனித உரிமைகளுக்கு மையமாக இருக்கின்றது என்றார்.
சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கொள்கைகள் நடைமுறையில் எவ்வாறு மீறப்பட்டு வருகின்றன என்பதை உலகில் அதிகரித்து வரும் பாகுபாடுகள் மற்றும் வன்முறைச் செயல்கள் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

4. வத்திக்கான் அதிகாரி :அமைச்சர் ஷபாஸ் பாட்டி உண்மையான மறைசாட்சி

மார்ச்08,2011. பாகிஸ்தானில் கொல்லப்பட்டுள்ள சிறுபான்மை அமைச்சர் Shahbaz Bhatti உண்மையான மறைசாட்சி என்று பாராட்டினார் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran.
இம்மாதம் 2ம் தேதி இசுலாமாபாத்தில் கொல்லப்பட்ட அமைச்சர் Shahbaz Bhatti யின் ஆன்ம சாந்திக்காக உரோம் பாகிஸ்தான் கத்தோலிக்கச் சமூகத்தினருடன் இணைந்து திருப்பலி நிகழ்த்திய கர்தினால் Tauran, கடந்த நவம்பரில் லாகூரில் ஷபாசைச் சந்தித்த போது அவர் கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்.
நான் கொல்லப்படுவேன் என்பது தெரியும், ஆயினும் கிறிஸ்துவுக்காகவும் பல்சமய உரையாடலுக்காகவும் நான் என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன் என்று ஷபாஸ் கூறியதைக் குறிப்பிட்டுப் பேசினார் கர்தினால் Tauran.
இந்த அமைச்சருடைய வார்த்தைகள் செயலோடு எப்போதும் ஒத்திணங்கிச் சென்றன என்றுரைத்த கர்தினால் Jean-Louis Tauran, இத்தகைய உண்மையான மறைசாட்சியை நாம் கொண்டிருப்பதற்குக் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும் என்றார்.

5. இலங்கையில் அகதிகளு்ககும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் காரித்தாஸ் உதவி

மார்ச்08,2011. இலங்கையில் அகதிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், குறிப்பாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் போரினாலும் வெள்ளத்தாலும் கடுமையாயப் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் சிறாரின் நலனில் இலங்கை காரித்தாஸ் முக்கிய கவனம் எடுத்துச் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்ட இலங்கை காரித்தாஸ் இயக்குனர் அருட்திரு ஜார்ஜ் சிகாமணி, ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி, அமைதியை ஏற்படுத்துதல், குணப்படுத்துதல், ஒப்புரவு ஆகிய பணிகளில் காரித்தாஸ் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாக அறிவித்தார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியில் 500 முதல் 600 வீடுகள் கட்டும் திட்டமும் இதில் உள்ளடங்கும் என்றும் அக்குரு கூறினார்.
அண்மையில் வெளியான புள்ளி விபரங்களின்படி, 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த போரினால், மூன்று இலட்சத்து 27 ஆயிரம் பேர் இன்னும் நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எவ்வித உதவியும் பாதுகாப்பும் இன்றி ஒரு இலட்சத்து 95 ஆயிரம் பேர் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

6. ஐம்பதாவது சர்வதேச திருநற்கருணை மாநாட்டிற்கானத் திட்டங்களை அயர்லாந்து திருச்சபை வெளியிட்டுள்ளது

மார்ச்08,2011. 2012ம் ஆண்டு ஜூன் 10 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் ஐம்பதாவது சர்வதேச திருநற்கருணை மாநாட்டிற்கானத் திட்டங்களை வெளியிட்டுள்ளனர் அயர்லாந்து கத்தோலிக்கத் தலைவர்கள்.
டப்ளின் ராயல் கழகம் உட்பட அந்நகரின் பல்வேறு இடங்களில் இம்மாநாடு நடைபெறும். இதன் நிறைவுத் திருப்பலி டப்ளின் Croke பூங்காவில் இடம் பெறும் எனவும் இதில் சுமார் 80 ஆயிரம் விசுவாசிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த உலக மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கானப் பதிவுகள் வரும் மாதத்தில் தொடங்கப்படும் என்று இம்மாநாட்டின் பொது நிர்வாகி Anne Griffin கூறினார்.
"திருநற்கருணை :கிறிஸ்துவோடும் ஒருவர் ஒருவரோடும் ஐக்கியம்" என்ற தலைப்பில் இந்த 50 வது சர்வதேச மாநாடு நடைபெறுகின்றது. 
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் இச்சர்வதேச திருநற்கருணை மாநாடு,  ஆசியாவில் மணிலா, மும்பை, செயோல் ஆகிய மூன்று நகரங்களில் நடைபெற்றுள்ளது.
இத்தகைய உலக மாநாடு அயர்லாந்தில் 1932ல் ஏற்கனவே ஒருமுறை நடைபெற்றுள்ளது.

7. ஐவரிகோஸ்டில் இரண்டு மசூதிகள் அழிக்கப்பட்டதற்கு கத்தோலிக்க ஆயர்கள் கண்டனம்

மார்ச்08,2011. ஐவரிகோஸ்ட் நாட்டில் இரண்டு மசூதிகள் அழிக்கப்பட்டதற்கு அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்களும் பிற மதத் தலைவர்களும் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
போர்ச்சூழல் காணப்படும் ஆப்ரிக்க நாடான ஐவரிகோஸ்டில் இரண்டு அந்நாட்டிற்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் அம்புரோஸ் மாத்தா உள்ளிட்ட பல மதத் தலைவர்கள் பல மசூதிகளைப் பார்வையிட்டு சமயங்களுக்கிடையே அமைதிக்கானத் தங்கள் அர்ப்பணத்தை வெளியிட்டுள்ளனர்.
ஐவரிகோஸ்டின் தற்போதைய கலவரநிலை முற்றிலும் அரசியல் ரீதியானது, எனவே இதனைச் சமயப் பிரச்சனைகளுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது என்று அந்நாட்டின் பல மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்

8. இந்தோர் மறைமாவட்டம் மகளிர் தினத்தன்று தையல் எந்திரங்களை வழங்கியது

மார்ச்08,2011. பெண்கள், ஆண்கள் போன்று சமமாகச் சம்பாதிக்கத் தொடங்கும் போது மட்டுமே இந்திய சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அட்டூழியங்களும் முடிவுக்கு வரும் என்று   இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
மத்திய இந்தியாவின் இந்தோர் மறைமாவட்டம் இச்செவ்வாய்க்கிழமை அனைத்துலக மகளிர் தினத்தைக் கடைபிடித்த விழாவில் சேரிப் பெண்களுக்கு 25 தையல் எந்திரங்களை வழங்கி உரையாற்றிய இந்தோர் மறைமாவட்ட ஆயர் Chacko Thottumarickal இவ்வாறு கூறினார்.
இந்த அனைத்துலக மகளிர் தின விழாவில் முப்பது சேரிகளிலிருந்து சுமார் நான்காயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய இந்தோர் மறைமாவட்ட சமூகப்பணி மைய இயக்குனர் அருட்திரு சைமன் ராஜ், இந்தத் தையல் எந்திரங்கள் நிரந்தர வருமானத்தை மட்டுமல்லாமல், ஒரு தொழிலைச் செய்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும் என்றார்.

9. மனித உரிமைகளுக்காகப் போராடும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கப் பெண்களுக்கு ஐ.நா.அதிகாரி வாழ்த்து

மார்ச்08,2011. மனித மாண்பு, நீதி, மனித உரிமைகள் ஆகியவற்றைத் தங்களுக்காகவும் தங்களோடு வாழ்வோருக்காவும் கிடைப்பதற்குத் தைரியத்தோடு போராடும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கப் பெண்களை உலகின் அனைத்துப் பெண்களுடன் இணந்து வாழ்த்துவதாகத் தெரிவித்தார் ஐ.நா.அதிகாரி நவநீதம்பிள்ளை.
இச்செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக மகளிர் தினத்திற்கெனச் செய்தி வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் அவை இயக்குனர் நவநீதம்பிள்ளை, எகிப்திலும் டுனிசியாவிலும் பெண்கள் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் மற்றும் தெருக்களிலும் நின்று போராடுகின்றனர் என்றார்.
இவ்விரு நாடுகளிலும் பெண்கள் இவ்வாறு செயல்படுவதற்குக் கல்வியே உதவியுள்ளது எனவும் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்

10. பெண்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டால் அதிகமான மக்களின் பசியைப் போக்க முடியும் ஐ.நா

மார்ச்08,2011. இன்னும், உணவு உற்பத்திக்கு அவசியமான நிலம், பணம், கல்வி, தொழிற்நுட்பம் உட்பட அனைத்து வசதிகளும் பெண்களுக்கு வழங்கப்பட்டால் உலகில் பசியாய் இருக்கும் மக்களில் 15 கோடிக்கு மேற்பட்டோருக்கு அவர்கள் உணவளிக்க முடியும் என்று ஐ.நா.அறிக்கை கூறுகிறது.
கிராமப்புறப் பெண்கள் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்குத் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றுரைக்கும் FAO என்ற ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கு முதலீடுகள் இல்லாததால் அவர்களின் உற்பத்தியும் குறைவாக இருக்கின்றது என்று கூறியது. 
ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் வேளாண் உற்பத்தித் தொடர்பான வசதிகள் வழங்கப்பட்டால் வளரும் நாடுகளில் 20 முதல் 30 விழுக்காட்டு உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும் என்றும் FAO நிறுவன அறிக்கை கூறுகிறது.
2010ம் ஆண்டில் சுமார் 92 கோடியே 25 இலட்சம் பேர் ஊட்டச்சத்துக் குறைவானவர்கள். இவர்களில் பெரும்பான்மையினோர் வளரும் நாடுகளில் உள்ளனர்.

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...