Tuesday, 8 March 2011

Catholic News - hottest and latest - 07 Mar 2011

1.     கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டு வாழ்வைக் கட்டியெழுப்புவோம் திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை

2.    மதச் சுதந்திரத்தைக் காக்கும் தாகத்தை பாகிஸ்தான் அமைச்சரின் மரணம் நம்மில் எழுப்புகின்றது - திருத்தந்தை

3.    தேவ நிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர் யாராயினும் அவர்கள் ஆபத்தில் உள்ளனர் - Federico Lombardi

4.    குருக்களுக்கான திருப்பேராயத் தலைவரின் தவக்காலச் செய்தி.

5.    எகிப்தின் காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்.

6.    நேபாள கோவில் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

7.    நியூசிலாந்தில் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிய திருச்சபைகள் உதவி.

....................................................................................................................................


1.     கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டு வாழ்வைக் கட்டியெழுப்புவோம் திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை

மார்ச் 07,2011. இயேசு கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படும் வாழ்வில்தான் மனிதர்களாகிய நாம் நிறைவைக் காண முடியுமே தவிர, அதிகாரம், வெற்றி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் அல்ல என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, பாறையின் மீது வீடு கட்டுவோரையும், மணல் மீது வீடுகட்டுவோரையும் குறித்து இயேசு இஞ்ஞாயிறு நற்செய்தியில் சொன்னதைக் குறிப்பிட்டு இவ்வாறு கூறினார்.
மனித வரலாற்றில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு இடத்திலும் இயேசுவை அறிந்துகொள்ளும் வரம் பெற்ற ஒவ்வொருவரும் நற்செய்தியின் வழியாகவும் இன்னும் பிற வழிகளிலும் கடவுளின் குரலைக் கேட்பதற்கும் அவரைச் சந்திக்கவும் அழைக்கப்படுகின்றனர் என்று கூறிய திருத்தந்தை, இன்றைய உலகின் மனிதர்கள் தங்கள் வாழ்வின் ஆதாரங்களாய் அதிகாரம், வெற்றி, செல்வம் ஆகிய உறுதியற்ற கோட்பாடுகளில் கவனம் செலுத்துகின்றனர் என்ற தன் வருத்தத்தை வெளியிட்டார்.
கிறிஸ்துவே நமது வாழ்வின் அசைக்க முடியாத அடித்தளம் என்றும், அலைபாயும் நம் மனங்களை அவர் மட்டுமே அமைதிபடுத்த முடியும் என்றும் திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
கணப்பொழுது தோன்றி மறையும் செல்வம் நம்மில் வெற்றிடத்தை உருவாக்கும் என்றும், நம் வாழ்வை நிறைவு செய்வதற்கு இறை வார்த்தையை ஒவ்வொரு நாளும் நாம் நாடுவோம் என்றும் திருத்தந்தை தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார்.

2.    மதச் சுதந்திரத்தைக் காக்கும் தாகத்தை பாகிஸ்தான் அமைச்சரின் மரணம் நம்மில் எழுப்புகின்றது - திருத்தந்தை

மார்ச் 07,2011. மதச் சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் காக்கும் தாகத்தை பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhattiன் மரணம் நம்மில் எழுப்புகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், பாகிஸ்தான் அமைச்சருக்காகவும், லிபிய மக்களுக்காகவும் செபிக்கும்படி கூறிய திருத்தந்தை, அமைச்சர் Bhattiன் தியாகம் மக்களின் மனசாட்சிகளைத் தட்டியெழுப்பி, வீரத்தையும் அர்ப்பணத்தையும் வளர்க்க வேண்டும் என்று  கூறினார்.
ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் அண்மையில் மக்கள் மேற்கொண்டுள்ள பல்வேறு போராட்டங்களைப் பதட்டத்துடனும், அக்கறையுடனும் தான் ஒவ்வொரு நாளும் கவனித்து வருவதாக திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இவர்கள் அனைவருக்கும், சிறப்பாக லிபிய மக்களுக்குத் தன் செபங்களை உறுதியளித்த பாப்பிறை, துன்புறும் அனைத்து மக்களுக்கும் நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பாகிஸ்தானில் நிலவி வரும் தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த சிறுபான்மைத் துறை அமைச்சர் Shahbaz Bhatti, கடந்த புதனன்று இஸ்லாமாபாதில் கொலை செய்யப்பட்டார். அவரது ஆன்ம சாந்திக்கானத் திருப்பலி உரோம் நகரின் புனித பேதுரு கல்லூரியில் பல்சமய உரையாடலுக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்களால் இஞ்ஞாயிறு மாலை நிறைவேற்றப்பட்டது.

3.    தேவ நிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர் யாராயினும் அவர்கள் ஆபத்தில் உள்ளனர் - Federico Lombardi

மார்ச் 07,2011. தேவ நிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர் யாராயினும் அவர்கள் ஆபத்தில் உள்ளனர் என்று திருப்பீடத்தின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் கூறினார்.
கடந்த புதனன்று பாகிஸ்தான் அமைச்சர் Shahbaz Bhatti கொலை செய்யப்பட்டதைக் குறித்து இத்தாலியத் தொலைக் காட்சி நிகழ்ச்சியான "Octava Dies"ல் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசுசபைக் குரு Federico Lombardi இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கரான Shahbaz Bhattiம், சனவரியில் தம் மெய்காப்பாளரால் சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாப் ஆளுநரும், இஸ்லாமியருமான Salman Taseerம் தேவ நிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்தந்தை Lombardi, இருவருமே தங்களுக்கு வந்த கொலை மிரட்டல்களையெல்லாம் மீறி, மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான சமயச் சுதந்திரத்திற்காக உயிர் துறந்தவர்கள் என்று எடுத்துரைத்தார்.
உலகின் பன்னாட்டுத் தூதர்களை இவ்வருடம் சனவரியில் சந்தித்த திருத்தந்தை, சமயச் சுதந்திரம் குறித்து பேசுகையில் பஞ்சாப் ஆளுநர் பற்றி குறிப்பிட்டதை அருள்தந்தை Lombadi சுட்டிக் காட்டினார்.
பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள இவ்வன்முறைகள், அங்குள்ள கிறிஸ்தவ மக்களின் பாதுகாப்பைக் குறித்து கவலையை உருவாக்கினாலும், தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து உயிர் துறந்த இவ்விருவரும் கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்திருப்பது நம்பிக்கையையும் மனதில் எழுப்புகின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் Federico Lombardi கூறினார்.

4.    குருக்களுக்கான திருப்பேராயத் தலைவரின் தவக்காலச் செய்தி.

மார்ச் 07, 2011.   விசுவாசிகளுக்கு வழங்குவதற்கென தன்னிடம் தரப்பட்டுள்ள போதனைகளுக்கு இயைந்த வகையில் ஒவ்வொரு குருவும் தங்கள் வாழ்வை மாற்றிக்கொள்வதே மனமாற்றம் என அர்த்தப்படும் என்கிறார் குருக்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் மௌரோ பியசென்ஸா.
இப்புதனன்று திருநீற்றுப் புதனோடுத் துவங்கும் தவக்காலத்திற்கென செய்தியொன்றை உலகின் குருக்களுக்கு அனுப்பியுள்ள கர்தினால்,  ஒவ்வொரு குருவின் வாழ்வும், வாழும் நற்செய்தியின் பாடலாக மாறி மற்றவர்கள் பார்த்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு குருவும், நல்லாயனாம் கிறிஸ்துவின் சாயல் என்பதால் நம் இதயம், மனம் மற்றும் செயற்பாடுகளினால் உறுதிச் செய்யப்பட்டு நம் உண்மை நிலைக்குத் திரும்புவதற்கான மனமாற்றத்தைப் பெறவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் பியசென்ஸா.
தன் தனித்தன்மையைக் கண்டுகொள்ள ஒரு குருவுக்கு திருப்பலிக் கொண்டாட்டம் உதவுகிறது எனக்கூறும் கர்தினால், புதிய நற்செய்தி அறிவிப்பின் தேவையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிஸ்துவுடன் ஆன ஒன்றிப்பிற்கான மன மாற்றம், மற்றும் நற்செய்தி விடுக்கும் மனமாற்றத்திற்கான அழைப்பு ஆகியவை குறித்தும் குருக்களுக்கான தன் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார் குருக்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் பியசென்ஸா.

5.    எகிப்தின் காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்.

மார்ச் 07, 2011.   எகிப்தின் Soul  என்ற நகரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் காப்டிக் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு குருவும் மூன்று தியாக்கோன்களும் காணாமற்போயுள்ளனர்.
காப்டிக் கிறிஸ்தவ ஆண் ஒருவர்,  ஓர் இஸ்லாமியப் பெண்ணை விரும்பி அவரோடு பழகியதைத் தொடர்ந்து இதனால் கோபமுற்ற Soul  நகரின் ஏறத்தாழ 4000 இஸ்லாமியர் ஒன்றிணைந்து கடந்த வெள்ளி இரவில், கிறிஸ்தவ வீடுகளைத் தாக்கியதுடன் அந்நகரின் புனிதர்கள் மினா மற்றும் ஜார்ஜ் கோவிலை தீயிட்டுக் கொளுத்தினர்.
இக்கோவிலில் வசித்து வந்த குரு யோஷாவும் மூன்று தியாக்கோன்களும் தீயில் கருகி இறந்தார்களா அல்லது இஸ்லாமியர்களால் கடத்தப்பட்டுள்ளார்களா என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை என அப்பகுதி கிறிஸ்தவர்கள் அறிவித்துள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு 30 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இந்நகரில் 12,000 கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியில் தற்போது காவல்துறையால் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

6.    நேபாள கோவில் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 07, 2011.   நேபாள தலைநகரின் விண்ணேற்பு மாதா கோவிலில் மேலும் வெடிகுண்டுகள் தீவிரவாதிகளால் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடிய காவல்துறையினர் வெடிகுண்டு தாக்குதல் முயற்சி ஒன்றை கடந்த வாரத்தில் முறியடித்துள்ளனர்.
2009ம் வருடம் காத்மண்டுவின் விண்ணேற்பு மாதா கோவிலை வெடிகுண்டு வைத்து தாக்கியது உட்பட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் மைனாலி என்பவரோடு தொடர்புடைய 6 பேரைக் கைது செய்துள்ளது நேபாளக் காவல்துறை. 
NDA எனும் தேசியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இந்த ஐந்து பேரிடமிருந்து மூன்று வெடிகுண்டுகளும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இம்முறை இவர்களின் நோக்கம் கிறிஸ்தவர்கள் அல்ல, மாறாக மக்கள் கூடுமிடங்களைத் தாக்கி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவது நோக்கமாக இருக்கலாம் என்கிறது காவல்துறை.
NDA என்ற இந்த அமைப்பே 2008 ஜூன் மாதம் நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் சலேசிய சபை குரு ஜான் பிரகாஷை கொலை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

7.    நியூசிலாந்தில் நிலஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிய திருச்சபைகள் உதவி.

மார்ச் 07, 2011.   நியூசிலாந்தில் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென ஜப்பான், சைனா மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் நிதியுதவியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அந்தந்த நாடுகளின் தலத்திருச்சபைகளால் திரட்டப்படும் இவ்வுதவிகள் நியூசிலாந்தின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்.
பிப்ரவரி மாதம் 22ந்தேதி நியூசிலாந்தில் இடம்பெற்ற நில அதிர்ச்சியால் 161 பேர் உயிரிழந்ததாக அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்நில அதிர்ச்சியால் 2500பேர் வரை காயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...