Thursday, 3 March 2011

Catholic News - hottest and latest - 02 Mar 2011

1. பாகிஸ்தான் அமைச்சர் கொலை செய்யப்பட்டதற்கு வத்திக்கான் கடும் கண்டனம்

2. அமைச்சர் Shahbaz Bhatti கொலை செய்யப்பட்டதையொட்டி பாகிஸ்தான், இந்தியக் கிறிஸ்தவர்கள்  கண்டனம்

3. ஆள்வோரின் கட்டுப்பாட்டுக் கருவியாக கல்வி செயல்படக்கூடாது - வத்திக்கான் அதிகாரி

4. அன்பு, மனித மாண்பு இவைகளின் அடிப்படையில் இளையோர் வளர்க்கப்பட்டால், வருங்காலம் உறுதியான வகையில் அமையும் - ஸ்பெயின் நாட்டின் கர்தினால்

5. லிபியாவிலிருந்து வெளியேற விரும்பும் எரித்ரிய நாட்டவர்களுக்கு உதவும்படி திருப்பீடத் தூதர் வேண்டுகோள்

6. இந்தியாவின் மத்திய நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சி தருகிறது - இந்திய ஆயர்கள் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர்

7. இந்திய கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய தலித் அமைப்புக்கள் மாநிலங்கள் தேர்தல்களைப் புறக்கணிக்க முடிவு

8. இந்தியாவில் ஐந்து மாதங்களில் 5,000 சிறுவர்கள் விற்பனை

----------------------------------------------------------------------------------------------------------------

1. பாகிஸ்தான் அமைச்சர் கொலை செய்யப்பட்டதற்கு வத்திக்கான் கடும் கண்டனம்

மார்ச் 02,2011. பாகிஸ்தான் மத்திய அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவ அமைச்சராக இருந்த Shabbaz Bhatti சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறித்து வத்திக்கான் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் சிறுபான்மைத் துறை அமைச்சரான 42 வயது கத்தோலிக்கர் Shabbaz Bhatti இப்புதன் உள்ளூர் நேரம் பகல் 11.20 மணியளவில் தனது வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறியவுடன் முகமூடி அணிந்த நான்கு பேர் துப்பாக்கிகளுடன் அவரின் வாகனத்தைச் சூழ்ந்து குண்டுகளைச் சரமாரிச் சுட்டதில் அவர் இறந்தார்.
இந்த வன்முறை, "வலிமைமிக்கக் கொடுஞ்செயல்" என்று கூறியத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெடரிக்கோ லொம்பார்தி, அந்தப் பகுதியில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் ஆபத்து குறித்து திருத்தந்தை கொடுத்து வரும் எச்சரிகைகள் இச்செயல் மூலம் முழுவதும் நியாயப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்தார்.
கொல்லப்பட்டுள்ள அமைச்சர் Shabbaz Bhatti கடந்த செப்டம்பரில் திருத்தந்தை 16ம் பெனடிக்டை வத்திக்கானில் சந்தித்தார் என்றும், முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானில் சமயக் குழுக்கள் மத்தியில் அமைதி நிறைந்த உறவுகளைக் கட்டி எழுப்பத் தன்னை அர்ப்பணிக்க இவர் உறுதி வழங்கினார் என்றும் அருட்தந்தை லொம்பார்தி கூறினார்.
பாகிஸ்தானில் "வன்முறை மற்றும் அடக்குமுறைகளிலிருந்து" கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்படுமாறும் அவர்களின் சமய சுதந்திரம் காக்கப்படுமாறும் திருப்பீடப் பேச்சாளர் அழைப்பு விடுத்தார்.


2. அமைச்சர் Shahbaz Bhatti கொலை செய்யப்பட்டதையொட்டி பாகிஸ்தான், இந்தியக் கிறிஸ்தவர்கள்  கண்டனம்

மார்ச் 02,2011. மேலும், கத்தோலிக்க அமைச்சர் Shahbaz Bhatti சுட்டு கொல்லப்பட்டது குறித்து பாகிஸ்தான் பிரதமர் Syed Yousuf Raza Gilani, இந்தியக் கிறிஸ்தவர்கள்  உட்பட அந்நாட்டுக் கத்தோலிக்க மற்று்ம் பிற கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தை முன்னிட்டு இப்புதன் மாலை லாகூர் பேராயர் இல்லத்திற்கு அருகிலுள்ள இயேசுவின் திரு இதயப் பேராலயத்தில் கத்தோலிக்க மற்று்ம் பிற கிறிஸ்தவ சபைத் தலைவர்களின் கூட்டத்திற்கு செய்த லாகூர் குருகுல முதல்வர் அருட்திரு ஆண்ட்ரு நிசாரி (Andrew Nisari), இவ்வன்முறையை வன்மையாயக் கண்டித்தார்.
இந்த நாட்டில் மாற்றுக் கருத்தை யாரும் கொண்டிருக்க முடியாது என்பதை இந்த வன்செயல் காட்டுகின்றது என்றுரைத்த குரு நிசாரி, பாகிஸ்தானில் இம்மாதிரியானப் போக்குத் தொடர்ந்தால் அது தோல்வியடைந்த நாடாக மட்டுமல்லாமல், அனைத்துலக சமுதாயத்தால் தனிமைப்படுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
இன்னும், இந்தக் கொலைச் சம்பவம் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல், மனித சமுதாயத்துக்கே வேதனையையும் கவலையையும் தருகின்றது என்றுரைத்த இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி ஆயர் ரூஃபின் அந்தோணி, இது சிறுபான்மையினருக்கும் அரசுக்கும் உண்மை நிலையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
லாகூரில் பொதுநிலைக் கிறிஸ்தவர்களும் போராட்டங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்கள் நடத்துவதற்குத் தயாரித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் கிறிஸ்தவருடன் தங்களது தோழமை உணர்வைத் தெரிவித்த இந்தியக் கிறிஸ்தவர்கள், தேவநிந்தனைச் சட்டம் திரும்பப் பெறுமாறும் கேட்டுள்ளனர்.
2008ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி சிறுபான்மைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் கத்தோலிக்கரான Shabbaz Bhatti, சமய சுதந்திரம், அமைதி, மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அவரின் முயற்சிகளுக்கு எண்ணற்ற சர்வதேச விருதுகளைப் பெற்றிருப்பவர். தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர்


3. ஆள்வோரின் கட்டுப்பாட்டுக் கருவியாக கல்வி செயல்படக்கூடாது - வத்திக்கான் அதிகாரி

மார்ச் 02,2011. மனித மாண்பில் ஊன்றப்படாமல், மதம் மற்றும் கலாச்சாரத்தின் மதிப்பீடுகளை மதிக்காமல் வழங்கப்படும் கல்வி, அறிவை வளர்ப்பதற்குப் பதிலாக, ஆள்வோரின் கட்டுப்பாட்டுக் கருவியாக மட்டுமே செயல்படும் என்று வத்திக்கான் அதிகாரி கூறினார்.
பெண்களின் தற்போதைய நிலைக்கான ஐ.நா. கழகத்தின் கூட்டமொன்றில் ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட்டின் சார்பாக, இத்திங்களன்று பேசிய Jane Adolphe, பெண்களுக்குரிய கல்வியின் அவசியத்தைக் குறித்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
இறைவன் வகுத்துள்ள பல இயற்கை விதிகளில் பொதிந்துள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாகும் கல்வியே மனித குலத்திற்குப் பயனுள்ளதாய் இருக்கும் என்று Adolphe எடுத்துரைத்தார்.
கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை துவங்கி, சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் எதிராக இழைக்கப்படும் பல்வேறு வன்முறைகளிலிருந்து இவர்களைக் காப்பதற்கு திருச்சபை அளித்துள்ள பல்வேறு கருத்துக்களை மனதில் கொள்வது நல்லதென்று அவர் சுட்டிக் காட்டினார்.
பெண்களின் முன்னேற்றத்திற்கென இவ்வெள்ளி வரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்தில்  நடைபெறும் இக்கூட்டத்தில் பேசிய திருப்பீட அதிகாரி Jane Adolphe, கருவறையிலிருந்து கல்லறை வரை பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளைக் குறித்து வலியுறுத்திப் பேசினார்.


4. அன்பு, மனித மாண்பு இவைகளின் அடிப்படையில் இளையோர் வளர்க்கப்பட்டால், வருங்காலம் உறுதியான வகையில் அமையும் - ஸ்பெயின் நாட்டின் கர்தினால்

மார்ச் 02,2011. உறுதியான கிறிஸ்தவ குடும்பங்களைச் சார்ந்தே எதிர்கால சந்ததிகள் அமைந்துள்ளன என்று கர்தினால் Antonio Maria Rouco Varela கூறினார்.
ஆகஸ்ட் மாதம் ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளையொட்டி, அண்மையில் ஸ்பெயின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை நடத்தியக் கூட்டத்தில் தலைமை உரையாற்றிய அப்பேரவையின் தலைவரும், மத்ரித் பெராயருமான கர்தினால் Varela இவ்வாறு கூறினார்.
மனித அன்பு, மனித மாண்பு இவைகளின் அடிப்படையில் குடும்பங்களிலும் பள்ளிகளிலும் பங்குத் தளங்களிலும் சிறுவயது முதல் நமது இளையோர் வளர்க்கப்பட்டால், வருங்காலம் உறுதியான வகையில் அமையும் என்று கர்தினால் Varela சுட்டிக் காட்டினார்.
பள்ளிக் கல்வியில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அக்கறை காட்டவில்லையெனில், பள்ளிகளில் தரப்படும் கல்வியின் தரம் வெகுவாக குறைந்து விடும் என்றும், குடும்பம், பள்ளி, பங்கு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து உழைப்பதே வருங்காலத்தை வடிவமைக்கும் என்றும் கர்தினால் வலியுறுத்தினார்.
தன்னலத்தையே பெரிதுபடுத்தும் இன்றைய உலகில் தவிக்கும் இளையோருக்கு அன்பை அடித்தளமாய் கொண்ட குடும்ப வாழ்வே உறுதியாக அமையும் என்று எடுத்துச் சொல்வது அனைவரின் கடமையாகிறது என்று கர்தினால் Varela எடுத்துரைத்தார்.


5. லிபியாவிலிருந்து வெளியேற விரும்பும் எரித்ரிய நாட்டவர்களுக்கு உதவும்படி திருப்பீடத் தூதர் வேண்டுகோள்

மார்ச் 02,2011. உள்நாட்டுப் போரையொத்த ஒரு சூழ்நிலை உருவாகியுள்ள இந்நேரத்தில் லிபியாவிலிருந்து வெளியேற விரும்பும் எரித்ரிய நாட்டவர்களுக்கு உதவும்படி லிபியாவுக்கான திருப்பீடத் தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tripoliயில் உள்ள திருப்பீடத் தூதரான பேராயர் Tommaso Caputo FIDES செய்தி நிறுவனத்திற்கு இத்திங்களன்று அனுப்பியுள்ள ஒரு விண்ணப்பத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
எரித்ரிய நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 2000 பேர் தற்போது அங்குள்ள கோவில்களில் தங்கியுள்ளனர் என்றும் அவர்களுக்கு உதவிகள் செய்யமுடியாமல் தலத் திருச்சபை பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளதென்றும் பேராயர் Caputo கூறினார்.
தற்போது Tripoliயில் ஓரளவு அமைதி நிலவுகிறது என்றாலும், இது எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியாது என்றும், எரித்ரிய மக்களில் பெரும்பாலும் அவதிப்படுவது குழந்தைகளும், பெண்களுமே என்றும் பேராயர் எடுத்துரைத்தார்.
லிபியாவில் நடைபெற்றுவரும் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர் மற்றும் பிற மதத்தினர் அனைவருக்கும் தலத்திருச்சபை சார்பில் பல்வேறு துறவறக் குழுக்களும், தனிப்பட்ட மனிதர்களும் உதவி வருகின்றனர் என்று  FIDES செய்தி கூறுகின்றது.


6. இந்தியாவின் மத்திய நிதிநிலை அறிக்கை மகிழ்ச்சி தருகிறது - இந்திய ஆயர்கள் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர்

மார்ச் 02,2011. இச்செவ்வாயன்று இந்திய பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையைக் குறித்து தன் மகிழ்வைத் தெரிவித்துள்ளார் இந்திய ஆயர்கள் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப்.
இந்தியா இன்று சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் மத்தியில், விவசாயிகள், வரிசெலுத்துவோர், மற்றும் வயது முதிர்ந்தோர் என்று அனைத்துத் தரப்பினரையும் மனதில் கொண்டு இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென்று அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.
2011-2012க்கான நிதியறிக்கை எவ்வகையிலும் வரலாறு படைக்கவில்லையெனினும், வலுவிழந்த சமுதாயத்தை மனதில் கொண்டு வரையப்பட்டுள்ள இவ்வறிக்கை திருப்தியைத் தருகிறதென்று அருள்தந்தை கூறினார்.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்த இந்த நிதி அறிக்கையை எதிர்கட்சியான பாரதீய ஜனதாவும், இடது சாரி கட்சிகளும் கண்டனம் செய்துள்ளன.


7. இந்திய கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய தலித் அமைப்புக்கள் மாநிலங்கள் தேர்தல்களைப் புறக்கணிக்க முடிவு

மார்ச் 02,2011. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களைப் புறக்கணிக்கப் போவதாக இந்திய கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய தலித் அமைப்புக்கள் கூறியுள்ளன.
அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, வங்காளம், மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல் நாட்களை இந்திய தேர்தல் ஆணையம் இச்செவ்வாய்க் கிழமை அறிவிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், இவ்வமைப்புக்கள் தங்கள் கூட்டங்களை நடத்தி, செய்தியாளர்களிடம் தங்கள் முடிவுகளைத் தெரிவித்தனர்.
தலித் கிறிஸ்தவர்களின் தேசிய அவை மற்றும் அனைத்திந்திய Pasmanda Muslim Mahaz ஆகிய இரு அமைப்புக்களும் முன்னின்று நடத்திய இக்கூட்டத்தில், சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த தலித்துக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதால் இத்தேர்தல்களைத் தாங்கள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.
தமிழ் நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி தலித் கிறிஸ்தவர்களின் கோரிக்கைகளுக்கு எவ்வகையிலும் ஆதரவு தராததால், அக்கட்சிக்கு தங்கள் வாக்கு இல்லையென்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பழங்குடியினர் மற்றும் தலித் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை காச்மன் ஆரோக்கியராஜ் கூறினார்.


8. இந்தியாவில் ஐந்து மாதங்களில் 5,000 சிறுவர்கள் விற்பனை

மார்ச் 02,2011. இந்தியாவில் வெளி மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட சிறுவர்கள் விற்பனையாவது அதிகரித்து வரும்வேளை, ஐந்து மாதங்களில் 5,000 சிறுவர்கள் விற்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கொச்சி மற்றும் எர்ணாகுளம் பகுதிகளில் 7 வயது முதல் 11 வயதிற்குட்பட்ட நிறையச் சிறுவர்கள், வீடுகள், உணவகங்கள், விடுதிகள், கடைகள் போன்றவற்றில் பணி செய்து வருகின்றனர்.
ஆந்திரா, மேற்கு வங்கம், அசாம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஐந்து மாதங்களில் மட்டும் 5,000 சிறுவர்கள் கொச்சியில் விற்கப்பட்டுள்ளதாகச் சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் குழந்தைகளைத் தத்து எடுத்தல் என்பதை அம்மாநில அரசு கடுமையாக்கி விட்டதால், அங்கு பிற மாநிலங்களில் இருந்து சிறுவர்களைக் கொண்டு வந்து தத்து எடுத்தும் வருகின்றனர்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...