சேலம் மூக்கனேரி அல்லது, கன்னங்குறிச்சி ஏரி
சேலம் மூக்கனேரியைத் தூர்வாரியபோது அகற்றப்பட்ட களிமண்ணைப் பயன்படுத்தி 47, சிறு மணல் தீவுத்திட்டுகள் அமைக்கப்பட்டன. இப்பகுதியில் 12,000த்துக்கு மேற்பட்ட மரங்கள் உள்ளன
மேரி தெரேசா: வத்திக்கான்
மூக்கனேரி அல்லது, கன்னங்குறிச்சி ஏரி என்பது, தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் 58 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நீர்த்தேக்கமாகும். சேர்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி, சேலம் நகரத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக அமைந்துள்ளது. ஏற்காடு மலைகளில் பெய்யும் மழை நீரானது, புத்தேரியினை அடைந்து, அதன் உபரி நீரானது, கொத்துக்காரன் ஓடை வழியாக மூக்கனேரி ஏரியை வந்தடைகிறது இந்த ஏரியைத் தூர்வாரியபோது அகற்றப்பட்ட களிமண்ணைப் பயன்படுத்தி 47, சிறு மணல் தீவுத் திட்டுகள் அமைக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் ஏரிப் படுகையிலிருந்து ஏறத்தாழ பத்து அடி உயரம், மற்றும், சில ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இத்தீவுத் திட்டுகளில், மண் அரிப்பினைத் தடுக்கும் வகையில், தினை உள்ளிட்ட சிறு தானியங்கள் பயிரிடப்பட்டன. பின்னர் வேம்பு, ஆலமரம், நாவல், அரசமரம், வெட்டிவேர் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது இப்பகுதியில் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்கள் உள்ளன.
பறவைகள் சரணாலயம்
சேலம் மூக்கனேரியில் பசுமையாக வளர்ந்து நிற்கும் மரங்கள், மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகவும் மாறி வருகிறது. இந்த ஏரியில் கொக்குகள், மீன்கொத்திகள், பூநாரைகள், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, சாம்பல் நிற வாலாட்டிக் குருவி, சாதா உள்ளான், சூறைக்குருவி, மீசை ஆலா, பைலனின் கோழி, மஞ்சள் குருகு, வயல் கதிர்க்குருவி, சிட்ரின் வாலாட்டி, சின்னத் தகைவிலான், பழுப்புத்தலை கடற்பறவை, மஞ்சள் மூக்கு நாரை, பாம்புத்தாரா, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும்வரும் கருந்தலை என 169க்கும் மேற்பட்ட பறவை மற்றும், விலங்கினங்களும், கட்லா, ரோகு, குறவை உள்ளிட்ட மீன் வகைகளும் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள மீனவர்களும், மீன் ஆர்வலர்களும் இந்த ஏரியில் மீன்களைப் பிடித்துச் செல்கின்றனர். இந்த ஏரி, இப்பகுதியின் நிலத்தடி நீர் சேமிப்பின் ஆதாரமாக உள்ளது. மூக்கனேரி, கழிவுநீர் மற்றும், குப்பைகளால் மாசடைந்துவருகிறது. இதனால் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி, போடிநாயக்கன்பட்டி ஏரி ஆகியவற்றை புனரமைத்து மேம்படுத்த, தமிழக அரசு 69 கோடியை ஒதுக்கியுள்ளது என்று இவ்வாண்டு மார்ச் மாதம் 24ம் தேதி வெளியான செய்திகள் கூறுகின்றன.
ஏரிப் பகுதியில் பூங்கா
இந்த ஏரிப் பகுதியில் உள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடும் இடமும், சிறிய கலையரங்கமும், இயற்கையான சூழலில் அமைக்கப்பட்டுள்ளன. நடையோரங்களில் அமர்வதற்கு இருக்கைகள், பூந்தொட்டிகள், ஏரியின் வழியே நடப்பவர்களுக்கான நடை பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பரிசலில் சென்று ஏரித் தீவுகளைப் பார்வையிட வசதியும் உள்ளது. (நன்றி: விக்கிப்பீடியா)
No comments:
Post a Comment