Friday, 20 May 2022

உடன்பிறந்த உணர்வுகொண்ட ஓர் உலகில் நம்பிக்கை வையுங்கள்

 

உடன்பிறந்த உணர்வுகொண்ட ஓர் உலகில் நம்பிக்கை வையுங்கள்


பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், புருண்டி, கத்தார் ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதர்களிடமிருந்து, பணி நியமன நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

மனித உடன்பிறந்த உணர்வு மற்றும், அமைதி ஆகியவற்றால் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்ப முடியும் என்பதில் நம்பிக்கை இழக்கவேண்டாம் என்று, ஆசிய நாடுகளின் புதிய திருப்பீடத் தூதர்களை இவ்வியாழனன்று ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்திற்கான பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், புருண்டி, கத்தார் ஆகிய நாடுகளின் புதிய தூதர்களிடமிருந்து, மே 19, இவ்வியாழனன்று பணி நியமன நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, வரலாற்றில் தனித்துவமிக்க சவால்நிறைந்த நேரத்தில், இப்புதிய தூதர்கள் தங்களின் பணிகளைத் தொடங்குகின்றனர் என்று கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடுகளுக்குப்பின்னர் இந்த உலகம் வழக்கமான நிலைக்குத் திரும்பியிருந்தாலும், கிழக்கு ஐரோப்பாவில் இடம்பெற்றுவரும் போரின் இருளான மேகம், உலகம் முழுவதையும், நேரடியாக அல்லது மறைமுகமான வழிகளில் சூழ்ந்துள்ளது என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

மனித சமுதாயத்தில் சிறப்பானதைக் கொணர..

ஆயினும், பெருந்தொற்றுக்கு நாம் பதிலளித்ததுபோன்று இந்தப் பெருந்துன்பம்கூட மனித சமுதாயத்தில் சிறப்பானதைக் கொணரக்கூடும் எனவும், நவீன தொழில்நுட்பம், போரின் கொடூரங்களை நமக்குக் காட்டினாலும், அது, தோழமை மற்றும், உடன்பிறந்த உணர்வை நம்மில் தூண்டியுள்ளது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

போரினால் புலம்பெயர்ந்துள்ளோரை வரவேற்பது மற்றும், அவர்களுக்கு கைம்மாறு கருதாமல் மனிதாபிமான உதவிகளை ஆற்றுவது ஆகிய நடவடிக்கைகள் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகெங்கும் இடம்பெற்றுவரும் எண்ணற்ற மற்ற போர்கள், ஊடகத்தில் சிறிதளவு அல்லது எதுவுமே கவனம் செலுத்தப்படாமல் உள்ளன என்பதையும் குறிப்பிட்டார்.

மனிதாபிமான ஆதரவும், உடன்பிறந்த உணர்வும், புவியியல் ரீதிப்படி அல்லது, சுய இலாபத்தின் அடிப்படையில் இடம்பெறக்கூடாது என்றும், இந்நற்செயல்கள்,  போர்கள் இடம்பெறும் பகுதிகளில் மட்டுமல்ல, காலநிலை மாற்றம், வறுமை, பசி போன்ற மனிதக் குடும்பத்தைத் தாக்கியுள்ள அநீதச் சூழல்களிலும் இடம்பெறவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொணாடார்.

உலக சமுதாயத்தின் பங்கு

இத்தகைய பிரச்சனைகளுக்கு உலகளாவிய சமுதாயத்தின் பங்கை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதில் அரசுகளின் தூதர்கள் ஆற்றவேண்டிய பங்கையும் எடுத்துரைத்தார். 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...