வாலாஜா ஏரி
இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன பிரம்மாண்டமான ஏரி ஒன்று மீட்கப்பட்டு, தற்போது கடல்போல ததும்பி நிற்கிறது தண்ணீர்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கடலூர் மாவட்டம் வடலூருக்கு அருகே உள்ள கரைமேடு பகுதியில் அமைந்துள்ள வாலாஜா ஏரி, ஏறக்குறைய 65 ஆண்டுக்கு முன்பு அழிந்துபோன 1,664 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான ஏரியாகும்.
அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் கொண்ட கதவணை இருந்திருக்கின்றது. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பைத் தவிர, வேறு எதுவும் இல்லை. ஒருகாலத்தில் அந்த ஏரியின் வழியாக முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். புதர் மண்டிக்கிடந்த அந்த ஏரியை மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது என்ற விவசாயிகளின் விண்ணப்பத்தை ஏற்று, அப்போதைய ஆட்சியர் ககன் தீப் சிங் பேடி பெருமுயற்சி எடுத்ததைத் தொடர்ந்து அது மீட்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு தொடங்கி 2013ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை. இன்னொரு பக்கம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். ஒருவழியாக 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. ஏரியில் வாரிய மண்ணைக்கொண்டே நான்கு கிலோ மீட்டர் நீளத்துக்கு மிகப் பெரிய கரையை எழுப்பியிருக்கிறார்கள். கரை சரிவில் வனத்துறையினர் 40,000 தேக்கு மரக் கன்றுகளை நட்டிருக்கிறார்கள். ஏரியின் ஒரு பக்கம் ஒன்றரை மீட்டர் ஆழம் தொடங்கி மறுபக்கம் அரை மீட்டர் வரை 23 இலட்சம் கன மீட்டர் (400 ஏக்கர்) தோண்டப்பட்டுள்ளது. இதன் வழியாக ஏரியின் மொத்த ஆழம் 5 மீட்டர். இதில் 4.5 மீட்டர் வரைக்கும் 22 இலட்சம் கன மீட்டர் தண்ணீரைத் தேக்கலாம்
இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன பிரம்மாண்டமான ஏரி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஏரியில் தற்போது கடல்போல ததும்பி நிற்கிறது தண்ணீர். இதனால், அப்பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள், நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன.
வாலாஜா ஏரியை வெட்டியது யார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. 17ம் நூற்றாண்டில் ஒடிசா முதல் தமிழகத்தின் தென்பகுதி வரை முகமது அலிகான் வாலாஜா நவாப் ஆட்சி செய்தார். இவர் விருப்பத்தின் பெயரில்தான் ஆங்கிலேயர்கள் சென்னையில் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். ஏரியை ஆங்கிலேயர் வெட்டியிருக்கலாம்; ஆனால், வாலாஜா மன்னர் மீதிருந்த அபிமானம் காரணமாக மக்கள் இந்த ஏரியை ‘வாலாஜா ஏரி’ என்று அழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment