அமைதிக்காக செபித்து இணக்கமுடன் முன்னேறுங்கள் : திருத்தந்தை
புனித மார்ட்டின், குளிரில் துன்புற்றுக்கொண்டிருந்த ஓர் ஏழையுடன் தனது ஆடையைப் பகிர்ந்துகொண்டதோடு, அவரைக் மனிதமாண்புடனும் அக்கறையுடனும் நடத்தினார் - திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
Katholikentag என்று அழைக்கப்படும் கத்தோலிக்க நாள்களின் 102வது பதிப்பில் பங்குபெறும் அதன் பங்கேற்பாளர்களுக்குச் செய்தி ஒன்றை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், கடவுளை மகிமைப்படுத்தவும், மகிழ்ச்சியின் நற்செய்திக்குச் சான்று பகரவும் அழைப்புவிடுத்துள்ளார்.
ஜெர்மனியின் Stuttgart நகரில் மே 25, இப்புதன்கிழமை மாலை தொடங்கி வருகிற ஞாயிறு வரை நடைபெறும் இக்கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று உக்ரைன் மக்கள் மற்றும் வன்முறையால் அச்சுறுத்தப்படும் அனைவருக்கும் நெருக்கமாக இருப்பதன் வழியாக, ஏழை மக்களின் துன்பங்களைக் களைவதில் இயேசுவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றவும், அனைத்து மக்களுக்குமான அமைதியைக் கடவுளிடம் மன்றாடவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Rottenburg-Stuttgart மறைமாவட்டத்தின் பாதுகாவலரான புனித மார்ட்டின், நாம் பின்பற்றுவதற்கு ஓர் ஒளிமயமான எடுத்துக்காட்டு என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அவர் குளிரில் துன்புற்றுக்கொண்டிருந்த ஓர் ஏழையுடன் தனது ஆடையைப் பகிர்ந்துகொண்டு, உதவியை மட்டும் வழங்காமல் அவரைக் மனிதமாண்புடனும் அக்கறையுடனும் நடத்தினார் என்று விளக்கியுள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் பெயரைத் தங்கிய நாம் அனைவரும் புனித மார்ட்டினின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி, நமது வாழ்வைத் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், நாம் எங்குத் தேவைப்படுகிறோம், யாருக்காகத் தேவைப்படுகிறோம் என்பதை உணர்ந்துகொள்வதில் விழிப்புடன் இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, புனித அன்னையாம் கன்னி மரியாவின் வாழ்வை எடுத்துக்காட்டி, கடவுளுடனான அவரின் தாழ்மையான அணுகுமுறையை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொண்டு, நமது சொந்த அணுகுமுறையை வகைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
No comments:
Post a Comment