மே 15 - புனிதர்பட்ட திருப்பலி விளக்கம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உரோம் நகரின் புனித பேதுரு வளாகம் திருப்பயணிகளால் நிரம்பியிருந்தது, இந்த மே மாதம் 15ம் தேதி ஞாயிறு காலையில். 10 மணி திருப்பலிக்கு, காலை 7 மணியிலிருந்தே வளாகத்திற்குள் நுழைவதற்கு வரிசையில் காத்திருந்த மக்களைக் காணமுடிந்தது. அவ்வளவு பெரிய வளாகம் மட்டுமல்ல, அதற்கு முன்னுள்ள வியா தெல்லா கொன்சிலியாட்சியோனே என்ற சாலையிலும் மக்கள் குழுமியிருந்தனர். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப்பின், அதாவது, 2019ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதிக்குப்பின் வத்திக்கானில் இடம்பெறும் இந்த புனிதர் பட்டமளிப்பு விழாவில், இந்திய மண்ணின், அதுவும் தமிழகத்தின் முதல் பொதுநிலை மறைசாட்சி தேவசகாயம் உட்பட 10 பேரை புனிதராக அறிவித்தார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். கடைசியாக இடம்பெற்ற புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கும், அதாவது 5 பேர் திருஅவையில் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட 2019ம் ஆண்டு விழாவுக்கும், தற்போது 10 பேர் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட விழாவுக்கும் இடையே நிறைய தொடர்புகள் உள்ளன. அப்போதும் இந்தியர் ஒருவர், அதாவது கேரளா மாநிலத்தின் அருள்சகோதரி மரியம் தெரேசியா சிரமல் மங்கிடியான் (Mariam Thresia Chiramel Mankidiyan) என்பவர் புனிதராக அறிவிக்கப்பட்டிருந்தார். அதே நாளில் புனிதராக அறிவிக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் கர்தினால் ஜான் ஹென்றி நியுமென் அவர்களும் நம் தேவசகாயம் அவர்களைப்போல் கத்தோலிக்க மதத்தை தழுவியவர். தேவசகாயம் அவர்கள் தன் 33வது வயதிலிலும், கர்தினால் நியூமென் அவர்கள் அவரின் 44ம் வயதிலும் கத்தோலிக்க மதத்தை தழுவியவர்கள். இவ்வாறு சில ஒற்றுமைகளை எடுத்துரைக்கலாம். கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போடப்பட்டிருந்த இந்த 10 அருளாளர்களின் புனிதர் பட்ட அறிவிப்பில், இந்தியாவிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் உட்பட எண்ணற்றோர் கலந்துகொண்டனர்.
மே 15, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் பகல் 1.30 மணிக்கு, வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் கூட்டுத்திருப்பலியில், மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் அவர்கள் உள்ளிட்ட பத்து அருளாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய பாஸ்கா கால 5ம் ஞாயிறு திருப்பலியில், திருத்தந்தையோடு இணைந்து, இந்தியாவின் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ், கேரளாவின் சீரோ மலபார் வழிபாட்டுமுறையின் தலைவரான கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, சீரோ மலங்கார வழிபாட்டுமுறையின் தலைவரான கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், தமிழக ஆயர் பேரவைத் தலைவரான சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி, பாண்டிச்சரி கடலூர் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், கோட்டாறு ஆயர் நசரேன் சூசை, கோயம்புத்தூர் ஆயர் தாமஸ் அக்குவினாஸ், தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோனி, பாளையங்கோட்டை ஆயர் அந்தோனி சவரிமுத்து, சேலம் ஆயர் அருள்செல்வம் இராயப்பன், வாரனாசி ஆயர் யூஜின் ஜோசப் உட்பட இந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்களின் ஆயர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட இந்தியத் திருஅவைத் தலைவர்கள் உட்பட பல்வேறு நாடுகளின் ஐம்பது கர்தினால்கள், 150 ஆயர்கள், 150 அருள்பணியாளர்கள் இக்கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர்.
அருளாளர்கள் டைட்டஸ் பிரான்ட்ஸ்மா; லாசருஸ் தேவசகாயம்; சீசர் தெ புஸ்; லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ; ஜூஸ்தீனோ மரியா ருசோலில்லோ; சார்ல்ஸ் து ஃபுக்கு; மரிய ரிவியெர்; மரிய இயேசுவின் பிரான்செஸ்கா ருபாத்தோ; இயேசுவின் மரிய சாந்தோகனாலே; மரிய தொமேனிக்கோ மாந்தோவானி ஆகியோரைப் புனிதர்களாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த திருப்பலியிலும், அது தொடர்புடைய ஏனைய கொண்டாட்டங்களிலும், தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு மனோ தங்கராஜ், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான், தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் திருமிகு பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளிலிருந்து, ஆயிரக்கணக்கான தமிழர்கள் உட்பட இந்தியர்களும் கலந்துகொண்டனர்.
முதலில், திருப்பலியில் 10 அருளாளர்களை புனிதர்களாக அறிவிப்பதற்கான பரிந்துரை, கர்தினால் மர்ச்செல்லோ செமராரோ அவர்களால் திருத்தந்தையிடம் முன்வைக்கப்பட்டது. புதிய புனிதர்களின் வாழ்க்கை குறிப்பும் அனைவருக்கும் வாசிக்கப்பட்டபின் புனிதர்களின் பரிந்துரையைக் கேட்கும் மன்றாட்டும் இடம்பெற்றது. அதன் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த 10 அருளாளர்களையும் புனிதர்களாக அறிவித்தார். இதன்பின், தேவசகாயம் அவர்களின் புனிதப்பொருள்களுக்கு இடும் தூபப்பொருட்களை DMI எனப்படும் அமல அன்னை புதல்வியர் என்ற இந்திய துறவுசபையின் தலைவர் அருள்சகோதரி லலிதா அவர்கள் எடுத்துச்செனறார். ஆண்டவரின் அன்பு குறித்து தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பலியில் செபிக்கப்பட்ட நம்பிக்கையாளர் மன்றாட்டுகளில், முதல் மன்றாட்டு நற்செய்திக்கு ஆற்றும் மிகப்பெரும் மறைப்பணியில் திருத்தந்தைக்கு ஆண்டவர் சக்தியை அருளுமாறு பிரெஞ்சு மொழியில் இடம்பெற்றது. இரண்டவது மன்றாட்டு தமிழில், லீமா என்பவரின் குரலில், அரசுகளின் தலைவர்கள், மற்றும் குடிமக்களுக்காகச் செபிக்கப்பட்டது. மூன்றாவது மன்றாட்டு இஸ்பானிய மொழியில், பாவிகள், வன்முறை மற்றும் காழ்ப்புணர்வை விதைப்பவர்களின் மனமாற்றத்திற்காக, ஒப்புரவிற்காக இறைவேண்டல் செய்வதாக இருந்தது. நான்காவது மன்றாட்டு ஹாலந்து மொழியில், புதிய புனிதர்களின் சான்று வாழ்விலிருந்து துறவியர் உள்தூண்டுதல் பெறும்படியாக ஆண்டவரிடம் மன்றாடுவதாக இருந்தது. ஐந்தாவது மன்றாட்டோ, இத்தாலிய மொழியில் பெற்றோருக்காகச் செபிப்பதாக இருந்தது.
காணிக்கைப்பொருள்களை MMI எனப்படும் அமல அன்னை மறைப்பணியாளர் என்ற இந்திய துறவுசபையின் தலைவர் அருள்பணி வில்லியம் அவர்களும், ஏனையவர்களோடு பவனியில் கலந்துகொண்டார். திருப்பலியின் இறுதியில் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களோடு இணைந்து அல்லேலூயா வாழ்த்தொலி செபத்தையும் செபித்தார் திருத்தந்தை. அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மாலை திருவழிபாடு
மேலும், மே 14, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 3.15 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் இச்சனிக்கிழமை இரவு 6.45 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் தலைமையேற்று மறைசாட்சி தேவசகாயம் அவர்களின் நினைவு மாலை திருவழிபாட்டை நிறைவேற்றினார். இதில் இந்தியத் தலத்திருஅவை பேராயர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும், ஏராளமான பொது நிலையினர் பங்குபெற்றனர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நடைபெற்ற இத்திருவழிபாட்டில், பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்கள் இடம்பெற்றன. அதன்பின் வத்திக்கானுக்கு அருகில், டைபர் ஆற்றின் மறுகரையில் அமைந்திருக்கும் புனித திருமுழுக்கு யோவான் பசிலிக்காப் பேராலயத்தில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
No comments:
Post a Comment