Tuesday, 24 May 2022

நல்ல சமாரியரைப் போன்று பிறரைப் பாதுகாக்க அழைக்கப்படுகிறீர்கள்

 

நல்ல சமாரியரைப் போன்று பிறரைப் பாதுகாக்க அழைக்கப்படுகிறீர்கள்



"நாம் கடவுளால் பாதுகாக்கப்படுகிறோம் என்பதை உணரும்போது, புனிதம் நிறைந்த பலரின் எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றி, நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்கு நல்லதொரு பாதுகாப்பை வழங்க முடியும்”: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உடன்பிறந்த உணர்வு நிலையில் ஒருவரின் உயிரை மீட்பதும், அதனைப் பாதுகாப்பதும், அவ்வுயிருக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பதும், இறுதிவரை அதனைக் கவனித்துக்கொள்வதுமே உண்மையான பாதுகாப்பு என்பதை உணர்ந்து பணியாற்றிட வேண்டுமென ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 23, இத்திங்களன்று, குடிமக்களின் பாதுகாப்புக்கான தேசிய சேவையின் தன்னார்வலர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத் தனிமையிலிருந்து பாதுகாப்பு, இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு, சொந்த வாழ்விடத்திலிருந்து பாதுகாப்பு ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

முதலாவதாக, சமூகத் தனிமையிலிருந்து பாதுகாப்பு என்ற தலைப்பில், போர்களாலும் நோய்களாலும் மக்கள் பெரும்துயர்களை அனுபவித்து வருகின்றனர், நாம் எல்லாவற்றிலும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, தற்போதைய உக்ரைன் நிலையை எடுத்துக்காட்டி, அனைத்து மக்களுக்கும் அமைதி நிறைந்த வாழ்வைக் கொடுக்க வேண்டியது அவர்களின் தலையாயக் கடமை என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

இரண்டாவதாக, இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு என்ற தலைப்பில், நம் காலத்தின் காலநிலை மாற்றங்கள், தீவிர வானிலை நிகழ்வுகளை பன்மடங்கு அதிகரிக்கச் செய்து பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுபோன்ற துயரங்களால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் பணியில் அவர்களின் வாழ்க்கை பெரும் சான்றாகி வருகின்றது என்றும் தெரிவித்தார்.

மூன்றாவதாக, சொந்த வாழ்விடத்திலிருந்து பாதுகாப்பு என்ற தலைப்பில், ஒவ்வொரு மனிதருக்கும் தனது நாட்டையும் சொந்த நிலத்தையும் பாதுகாப்பதில் சிறப்பான பொறுப்பு உண்டு. உலக நன்மைக்காக ஒவ்வொருவரும் தனது சொந்த நிலத்தைப் பாதுகாத்து நேசிக்க வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, இப்படிப்பட்ட நிலையில் பொதுச் சொத்துக்கள் அழிந்துபோகாமலும் அல்லது சிலருக்கு மட்டுமே பலனளிக்காமலும் பாதுகாப்பதில் மனச்சான்றுடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் எடுத்துக்காட்டி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...