Friday, 27 May 2022

சிறுபான்மை வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு

 

சிறுபான்மை வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு



மிக மோசமான பொருளாதாரத்தை ஏற்படுத்தி நாட்டின் வளர்ச்சியை சீர்குலைத்திருக்கும் வெறுப்பு கலாச்சாரம் குறித்த மற்ற நாடுகளின் கடந்த கால தவறுகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் : இந்திய கத்தோலிக்க அமைப்பு

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவில் அண்மைய மாதங்களில் அதிகரித்து வரும் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகள் இப்போது தடுக்கப்படாவிட்டால், தேசிய அமைதி மற்றும் ஒற்றுமைக்கு அவை பெரும்தீங்கை  விளைவித்துவிடும் என்று 103 ஆண்டுகள் பழமையான இந்திய கத்தோலிக்க அமைப்பு கூறியுள்ளது.

மாநில மேலவையில் வாக்கெடுப்பு நடத்தத் தவறிய நிலையில் மாநில ஆளுநரால் கையெழுத்திடப்பட்ட ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு கர்நாடக மாநிலம் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தியதற்குப் பதிலளிக்கும் விதமாக மே 23, இத்திங்களன்று இவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.  

அவ்வாறே மற்ற ஒன்பது இந்திய மாநிலங்களும் மத மாற்றத்தைக் குற்றமாகக் கருதும் இதேபோன்ற சட்டங்களை இயற்றியுள்ளதாகவும் இவ்வமைப்பு மேலும் கவலை தெரிவித்துள்ளது.

அமைதி மற்றும் நல்லுறவை வலுப்படுத்த அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அவர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாது என்றும் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் இவ்வமைப்பின் தேசியத் தலைவர் Lancy D'Cunha.  

உத்தரப்பிரதேசம், கர்நாடகா, அரியாணா ஆகிய மாநிலங்களில் அண்மையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மதமாற்றத் தடைச் சட்டங்கள், அனைத்து நிலைகளிலும் சிறுபான்மை சமூகங்கள், அவர்களின் மதத்தலைவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைப்  பயமுறுத்துவதற்கு சம்மந்தமே இல்லாத பலருக்கு இது அதிகாரம் கொடுத்துள்ளதாகவும் அவ்வமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

AICU என்பது, இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட பொதுநிலையினரைக் கொண்ட ஒரு அமைப்பாகும். திருஅவையின் சமூகப் போதனைகளை அறிவிப்பதில் பொறுப்புள்ள கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு  மக்களைத் தூண்டி எழுப்புகிறது இவ்வமைப்பு.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...