Monday, 16 May 2022

மே 15, இஞ்ஞாயிறு 10 அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்

 

மே 15, இஞ்ஞாயிறு 10 அருளாளர்களுக்கு புனிதர் பட்டம்


திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியில், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அவர்கள் உட்பட திருத்தந்தையோடு கர்தினால்கள், ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்கள் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

மே 15, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் பகல் 1.30 மணிக்கு, வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் கூட்டுத்திருப்பலியில், மறைசாட்சி அருளாளர் தேவசகாயம் அவர்கள் உள்ளிட்ட பத்து அருளாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் பாஸ்கா கால 5ம் ஞாயிறு திருப்பலியில், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அவர்கள் உட்பட திருத்தந்தையோடு கர்தினால்கள், ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்கள் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுவர்.

இந்தியப் பிரதிநிதிகள்

தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு மனோ தங்கராஜ், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான்,  தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் திருமிகு பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும், இந்தியாவின் முதல் பொதுநிலைப் புனிதர் மற்றும், தமிழகத்தின் முதல் புனிதராகச் சிறப்புப்பெறும் அருளாளர் தேவசகாயம் அவர்கள் புனிதராக உயர்த்தப்படும் திருப்பலியில் பங்குபெற உரோம் வந்துள்ளனர். இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்து, ஆயிரக்கணக்கான இந்தியர்களும் வந்திருக்கின்றனர்.

இந்தியாவின் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ், கேரளாவின் சீரோ மலபார் வழிபாட்டுமுறையின் தலைவரான கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, சீரோ மலங்கார வழிபாட்டுமுறையின் தலைவரான கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், தமிழக ஆயர் பேரவைத் தலைவரான சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, மதுரை பேராயர் அந்தோனி பாப்புசாமி, பாண்டிச்சரி கடலூர் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட்,  கோட்டாறு ஆயர் நசரேன் சூசை, கோயம்புத்தூர் ஆயர் தாமஸ் அக்குவினாஸ், தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோனி, பாளையங்கோட்டை ஆயர் அந்தோனி சவரிமுத்து, சேலம் ஆயர் அருள்செல்வம் இராயப்பன், வாரனாசி ஆயர் யூஜின் ஜோசப் உட்பட இந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்களின் ஆயர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட இந்தியத் திருஅவைத் தலைவர்கள் உட்பட பல்வேறு நாடுகளின் ஐம்பது கர்தினால்கள், 150 ஆயர்கள், 150 அருள்பணியாளர்கள் இக்கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றுகின்றனர்.

10 அருளாளர்கள்

அருளாளர்கள் டைட்டஸ் பிரான்ட்ஸ்மா; லாசருஸ் தேவசகாயம்; சீசர் தெ புஸ்; லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ; ஜூஸ்தீனோ மரியா ருசோலில்லோ; சார்ல்ஸ் து ஃபுக்கு; மரிய ரிவியெர்; மரிய இயேசுவின் பிரான்செஸ்கா ருபாத்தோ; இயேசுவின் மரிய சாந்தோகனாலே; மரிய தொமேனிக்கோ மாந்தோவானி ஆகியோரைப் புனிதர்களாக அறிவிக்கின்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மாலை திருவழிபாடு

மேலும், மே 14, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை 3.15 மணிக்கு, இந்திய இலங்கை நேரம் இச்சனிக்கிழமை இரவு 6.45 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் தலைமையேற்று    மறைசாட்சி தேவசகாயம் அவர்களின் நினைவு மாலை திருவழிபாட்டை நிறைவேற்றினார். இதில் இந்தியத் தலத்திருஅவை பேராயர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும், ஏராளமான பொது நிலையினர் பங்குபெற்றனர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நடைபெற்ற இத்திருவழிபாட்டில், பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வு வத்திக்கான் செய்திகளின் யுடியூப் வழியாக தமிழில் வழங்கப்படுகிறது இந்நேரடி வர்ணனை, 17790 கிலோ ஹெர்ட்ஸ் சிற்றலை அலைவரிசையிலும், வெப் வானொலி அலைவரிசை 11லிலும் ஒளிபரப்பப்படுகின்றது.

இந்த பத்து அருளாளர்களில் இருவர் மறைசாட்சிகள். ஏழு பேர் துறவு சபைகளை நிறுவியவர்கள். மூவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஐவர் இத்தாலி நாட்டவர். ஒருவர் நெதர்லாந்தையும் ஒருவர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...