Friday, 3 April 2015

செய்திகள்-31.03.15

செய்திகள்-31.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் உலகில் 4வது மிகப் பெரியத் தலைவர், ஃபார்ச்சூன் இதழ்

2. கிறிஸ்தவர்களும் சமணர்களும் முதியோரின் நலனுக்காக அர்ப்பணிக்க அழைப்பு

3. ஈராக் புலம்பெயர்ந்த மக்களுடன் கர்தினால் ஃபிலோனி

4. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு பயிற்சியாளர் மாநாடு ஏப்.8-11,2015

5. விவசாயிகளின் தற்கொலை தலத்திருவைக்கு ஆழமான காயம்

6. 3ம் முறையாக அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு

7. திருஅவையின் போதனைகள் பற்றிய உறுதியான நிலைப்பாடு

8. நீர்ப்பற்றாக்குறை, புவியியல்-அரசியல் பதட்டநிலைகளை உருவாக்கும்

9. இந்தியப் பருவமழையின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் உலகில் 4வது மிகப் பெரியத் தலைவர், ஃபார்ச்சூன் இதழ்

மார்ச்,31,2015. ஒப்புரவு அருளடையாளம், கடவுளின் கனிவின்  அருளடையாளம்,  இது அவர் நம்மை அரவணைத்துக்கொள்ளும் வழியாகும்என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, உலகில் நான்காவது மிகப் பெரியத் தலைவராக அறிவித்துள்ளது Fortune இதழ்.
வணிகம், அரசு நிர்வாகம், மனித நேயம் போன்ற பண்புகளின் அடிப்படையில் உலகின் ஐம்பது மிகப் பெரியத் தலைவர்களைப் பட்டியலிட்டுள்ள புகழ்பெற்ற Fortune வணிக இதழ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நான்காவது இடத்தில் வைத்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முதலிடத்தில் வைத்த இந்த இதழ், இவ்வாண்டும் திருத்தந்தை பெயரைக் குறிப்பிட்டுள்ளது குறித்த கருத்து தெரிவித்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தொலைநோக்குப் பார்வை, மனஉறுதி, சீர்திருத்தத்திற்கான அர்ப்பணம் போன்றவை கடந்த ஆண்டில் மிகச் சிறந்த முறையில் அசாதரணமாக இருந்தன, எனவே இவ்வாண்டும் அவரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான Tim Cook அவர்கள், ஸ்டீவ் ஜோப்ஸ் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் வெளிப்படுத்திய சிறந்த தலைமைத்துவத்தைப் பாராட்டி Tim Cook அவர்களை இவ்வாண்டு முதலிடத்தில் வைத்துள்ளதாக Fortune இதழ் கூறியது.
உலகின் ஐம்பது மிகப் பெரியத் தலைவர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இடம்பெற்றுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கிறிஸ்தவர்களும் சமணர்களும் முதியோரின் நலனுக்காக அர்ப்பணிக்க அழைப்பு

மார்ச்,31,2015. குடும்பங்களிலும் சமூகங்களிலும் வாழும் வயதானவர்களைப் பராமரிப்பதற்கு, கிறிஸ்தவர்களும் சமணர்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது திருப்பீடம்.
சமண மதத்தைத் தோற்றுவித்த தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் அவர்கள் பிறந்த நாள் ஏப்ரல் 02, வருகிற வியாழக்கிழமையன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு உலகின் சமண சமூகத்தினர் அனைவருக்கும் நல்வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கேட்டுள்ளது திருப்பீட பல்சமய உரையாடல் அவை.
இன்றைய உலகில் பல சமூகங்களில், பல வயதானவர்கள், குறிப்பாக, நோயாளிகளும், தனிமையில் வாழ்வோரும் சுமையாகவும், பயனற்றும் நோக்கப்பட்டு இவர்கள் தங்களின் குடும்பங்கள் மற்றும் உறவுகளால் கைவிடப்படுகின்றனர் என்ற கவலையை வெளியிட்டுள்ளது இந்த உரையாடல் அவை.
எனினும், உலகில் பெருமளவான குடும்பங்கள் தங்களின் மரபுகள், விழுமியங்கள் மற்றும் கோட்பாட்டுப் பற்றுறுதிக்கு உண்மையாய் இருந்து வயதானவர்களைப் பராமரிப்பதில் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் உள்ளன என்பதையும் நாம் மறுக்க முடியாது என்றும் அவ்வவை தனது செய்தியில் கூறியுள்ளது.

பல தலைமுறைகளைக் கொண்ட நம் குடும்பங்களைத் தாங்கி நிறுத்தும் முதன்மைத் தூண்களாக உள்ள வயதானவர்கள், தங்களின் வளமான வாழ்வு மற்றும் விசுவாச அனுபவங்களை மட்டுமல்லாமல், நம் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வரலாறையும் நமக்கு வழங்குகின்றனர் என்று அச்செய்தி கூறுகிறது.
பெற்றோரையும், வயதானவர்களையும் அவர்கள் வாழ்வின் இறுதிவரை, மதிப்போடும் அன்போடும் பராமரிக்க வேண்டுமென்ற நன்னெறிக் கடமைகளை பிள்ளைகள் கொண்டிருக்கின்றனர் என்பதை அனைத்து மதங்களுமே போதிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அச்செய்தி, கிறிஸ்தவர்களும் சமணர்களும் ஒன்றிணைந்து வயதானவர்களைப் பராமரிப்பதற்குத் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.  
கிறிஸ்தவர்களும் சமணர்களும் : வயதானவர்கள் பாராமரிப்பை ஒன்றிணைந்து ஊக்குவித்தல் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியில் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, அவ்வவையின் செயலர் அருள்பணி Miguel Ángel Ayuso Guixo ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இன்றைய பீகார் மாநிலத்தில் பாட்னா நகருக்கு அருகில், ஓர் அரச குடும்பத்தில் கி.மு.599 ஆம் ஆண்டில் பிறந்த வர்த்தமானார், தமது செல்வத்தை எல்லாம் மக்கள் பலருக்கும் தானமாக வழங்கித் துறவு பூண்டு விருப்பு வெறுப்புகளை வென்றவர் என்பதால், மகா வீரர் என வரலாற்றில் போற்றப்படுகிறார். இவர், கொல்லாமை, பொய்யாமை, களவு செய்யாமை, பேராசை கொள்ளாமை முதலிய நல்லறங்களை மக்களுக்கு வலியுறுத்தி, சமண சமயக் கோட்பாடுகளைப் பரப்பியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஈராக் புலம்பெயர்ந்த மக்களுடன் கர்தினால் ஃபிலோனி

மார்ச்,31,2015. ஜோர்டன் நாட்டில் தஞ்சம் தேடும் ஈராக் மக்கள் மிகுந்த மனத்தாராளத்தோடு வரவேற்கப்படுவதைக் காணும்போது, புலம்பெயரும் அம்மக்கள் தங்களின் மாண்பை மீண்டும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, கர்தினால் Fernando Filoni அவர்கள் கூறியுள்ளார்.
ஜோர்டன் நாட்டின் அம்மான் நகரில் இரு பங்குத் தளங்களைப் பார்வையிட்டுள்ள கர்தினால் Filoni அவர்கள், அம்மக்கள் இருபது ஈராக் குடும்பங்களை ஏற்பதற்கு தயாரித்துள்ள விதம் தனக்கு வியப்பை அளித்ததாகத் தெரிவித்தார்.
ஈராக்கிலிருந்து, குறிப்பாக, மொசூல் மற்றும் நினிவே சமவெளிப் பகுதியிலிருந்து கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வையும் செபங்களையும் தெரிவிப்பதற்காக ஈராக் சென்ற நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Filoni அவர்கள், இத்தாலிய ஆயர் பேரவை வழங்கியுள்ள இனிப்புகளையும் எடுத்துச் சென்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு பயிற்சியாளர் மாநாடு ஏப்.8-11,2015

மார்ச்,31,2015. திருஅவையில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோருக்குப் பயிற்சி அளிப்பவருக்கென இம்மாதம் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை உரோம் நகரில் அனைத்துலக மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.
திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு நிகழ்வுகளில் ஒன்றாக, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோர் திருப்பேராயம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
உரோம் நகர் Ergif பயணியர் மாளிகையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் ஏறக்குறைய 1,200 பயிற்சியாளர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், ஐம்பதுக்கு மேற்பட்ட வல்லுனர்கள் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11ம் தேதி காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு வாழ்வோர் திருப்பேராயத் தலைவர் கர்தினால் João Braz de Aviz அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. விவசாயிகளின் தற்கொலை தலத்திருவைக்கு ஆழமான காயம்

மார்ச்,31,2015. இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது, தலத்திருவைக்கும் குடும்பங்களுக்கும் ஆழமான காயமாக உள்ளது என்று இந்திய ஆயர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
திருஅவை மனித வாழ்வை அதன் தொடக்கமுதல் இறுதிவரை ஆதரிக்கிறது, விவசாயிகள் துன்புறுவது திருஅவைக்கு வேதனயளிக்கிறது, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது கடும் துன்ப நிகழ்வாக அமைந்துள்ளது என்று மகாராஷ்டிர மாநிலத்தின் Vasai ஆயரான பேராயர் Felix Anthony Machado அவர்கள் கூறினார்.
Vasai மறைமாவட்டத்தில் கிராம மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் விதத்தில், 600க்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களை முன்னின்று நடத்திய பேரணியில் உரையாற்றிய பேராயர் Machado அவர்கள், மக்கள் மோதல்களில் ஈடுபடும்போது திருஅவை ஒப்புரவையும் அமைதியையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்று கூறினார்.
இதற்கிடையே, இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை 26 விழுக்காடு அதிகரித்திருப்பதாக, மத்திய வேளாண் துறை இணையமைச்சர் மோகன்பாய் குந்தாரியா அண்மையில் மக்களவையில் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 2014ம் ஆண்டில் 1,109 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, 2013ம் ஆண்டில் 879ஆகவும், 2012ம் ஆண்டில் 1,046ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 986 விவசாயிகளும், தெலுங்கானாவில் 84 பேரும், ஜார்கண்டில் 29 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லை, வறட்சி, பயிர் இழப்புகள், சொந்தப் பிரச்சனைகள் உள்ளிட்டவை விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணங்களாக மாநில அரசுகள் கூறியுள்ளன.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

6. 3ம் முறையாக அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு

மார்ச்,31,2015. ஆப்ரிக்க நாடாகிய புருண்டியில் அரசுத்தலைவர் பதவிக்கு மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவது அந்நாட்டு அரசியல் அமைப்புக்கு முரணானது என்று அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
புருண்டி அரசுத்தலைவர் Pierre Nukurunziza அவர்கள் மூன்றாம் முறையாக, ஐந்தாண்டுகால அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிட திட்டமிட்டிருப்பதற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள ஆயர்கள், இவ்வாறு நடந்தால் இந்த ஆப்ரிக்க நாடு பிரிவினைகளையும், மோதல்களையும், ஏன் சண்டையைக்கூட எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
வருகிற ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில், அரசுத்தலைவர் Nukurunziza அவர்கள் மூன்றாம் முறையாக, அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடக் கூடாது என்று  ஞாயிறு மறையுரையில் எச்சரித்தார் புருண்டி பேராயர் Simon Ntamwana.
கடவுளுக்கு எதிராகச் செயல்பட்ட யூதேயாவின் கடைசி அரசர் செதெக்கியா பற்றிக் குறிப்பிட்டு மறையுரையாற்றிய பேராயர் Ntamwana அவர்கள், அரசியல் தலைவர்கள், அன்பு மற்றும் ஒருவரையொருவர் மதித்தல் ஆகிய கோட்பாட்டின்படி நாட்டை வழிநடத்த வேண்டுமென்று வலியுறுத்தினார்.
75 விழுக்காட்டுக்கு அதிகமான கத்தோலிக்கரைக் கொண்டுள்ள புருண்டி நாட்டில் கத்தோலிக்க ஆயர்களின் இந்த எச்சரிக்கை, குடிமக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கும் என கூறப்படுகின்றது.

ஆதாரம் : AFP / வத்திக்கான் வானொலி

7. திருஅவையின் போதனைகள் பற்றிய உறுதியான நிலைப்பாடு

மார்ச்,31,2015. திருமணம் மற்றும் பாலியல் குறித்த திருஅவையின் போதனைகள்  பற்றிய தெளிவான மற்றும் உறுதியான அறிக்கை வெளியிடப்படுமாறு நூற்றுக்கணக்கான பிரித்தானிய அருள்பணியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வருகிற அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவுள்ள குடும்பம் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் இந்த அறிக்கை வெளியிடப்படுமாறு ஏறக்குறைய 500 பிரித்தானிய அருள்பணியாளர்கள் கேட்டுள்ளனர்.
கடந்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்குப் பின்னர் பொதுநிலை விசுவாசிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்த அருள்பணியாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ள திறந்த கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
இறைவார்த்தை மற்றும் திருஅவையின் அதிகாரப்பூர்வ படிப்பினைகளின் அடிப்படையில், திருமணம் மற்றும் உண்மையான மனிதப் பாலியல் பற்றிய திருஅவையின் பாரம்பரிய கோட்பாடுகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரித்தானிய அருள்பணியாளர்கள் கேட்டுள்ளனர்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி                  

8. நீர்ப்பற்றாக்குறை, புவியியல்-அரசியல் பதட்டநிலைகளை உருவாக்கும்

மார்ச்,31,2015. உலகில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பற்றாக்குறை, புவியியல் அடிப்படையில் அரசியலில் பதட்டநிலைகளை உருவாக்கும் அச்சுறுத்தலை முன்வைத்துள்ளவேளை, தண்ணீர் தொடர்புடைய புதிய உடன்பாடுகளை ஏற்படுத்த வேணடும் என்று அனைத்துலக சமுதாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. உதவி பொதுச் செயலர் யான் எலியாசன்.
மனிதர் மாண்புடன் வாழ்வதற்கும், முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும், பாதுகாப்புக்கும்  முன்னுரிமை கொடுக்க வேண்டிய விவகாரங்களில் ஒன்றாக, தண்ணீர் உள்ளது என்று, வாழ்வுக்குத் தண்ணீர் என்ற அனைத்துலக பத்தாண்டு நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டார்.
தண்ணீர்ப் பற்றாக்குறை, தனிப்பட்ட நபர்களின் வாழ்வில் துன்பங்களை ஏற்படுத்தியுள்ளதோடு, உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலையும் முன்வைத்துள்ளது என்றும் கூறினார் எலியாசன்.
2005 முதல் 2015ம் ஆண்டு வரையுள்ள காலம், வாழ்வுக்குத் தண்ணீர் என்ற அனைத்துலக பத்தாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் பயன்படுத்தப்படும் முறையில் சரியான நிர்வாகம் இல்லையெனில், 2030ம் ஆண்டுக்குள் உலகில் நாற்பது விழுக்காடு தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்று ஐ.நா. கூறுகிறது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

9. இந்தியப் பருவமழையின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வு

மார்ச்,31,2015. இந்தியப் பெருங்கடலின் தரைப் பகுதியிலிருந்து கிடைத்த படிவங்களின் மூலம் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் பருவமழை எப்படி இருந்தது என்பதை அறிவற்கு அறிவியலாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
பிரித்தானிய பன்னாட்டுப் பெருங்கடல் ஆய்வுத் திட்டத்திற்குச் சொந்தமான கப்பல், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்துப் பேசிய, இந்தத் திட்டத்தில் இணைந்து செயலாற்றும் எக்ஸெடர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கேட் லிட்லர் அவர்கள், "இந்த ஆய்வானது, இந்தியாவில் பருவமழை பொழிவு இனிமேல் எப்படி மாறும் என்பதை இன்னும் சிறப்பாக அறிந்து கொள்ள உதவும்" என்று கூறினார்.
"80 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியப் பருவமழை தீவிரமடைந்ததிலிருந்து இப்போதுவரையுள்ள அதன் பரிணாம வளர்ச்சி குறித்து பதிவுசெய்ய உள்ளதாகவும் லிட்லர் தெரிவித்தார்.
வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக, இந்தியாவில் பெய்யும் பருவமழையில் 5முதல் 10 விழுக்காடு வரை வருங்காலத்தில் அதிகரிக்கலாம். இது இந்தியாவின் பொருளாதாரத்திலும் விவசாயத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்த மார்ச் மாதம் அதிகமான கனமழை பெய்த மாதமாக உள்ளதாகவும், இதேபோன்ற நிலை 1915ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது இடம்பெற்றுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : பிபிசி/ வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...