Friday, 3 April 2015

செய்திகள்-01.04.15

செய்திகள்-01.04.15
------------------------------------------------------------------------------------------------------

1. புனித ஆண்டு ஆணை ஓலை ஏப்ரல் 11ம் தேதி வெளியிடப்படும்

2. அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டில், முதன் முறையாக திருப்பீடம்

3. அருள்பணியாளர்களே திருஅவையின் முதுகெலும்பு - முதலாம் ஜான் பால்

4. மணிலாவில், ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு, சிலுவைப் பாதை

5. போர்ச்சூழலில் சிறார், மனித சமுதாயத்தின் மீது விழும் சாட்டையடி

6. மரண தண்டனைக்கு எதிராக, மதத் தலைவர்கள் அறிக்கை
------------------------------------------------------------------------------------------------------

1. புனித ஆண்டு ஆணை ஓலை ஏப்ரல் 11ம் தேதி வெளியிடப்படும்

ஏப்,01,2015. இறை இரக்கத்தின் புனித ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் அதிகாரப்பூர்வ ஆணை ஓலை (Papal Bull), ஏப்ரல் 11ம் தேதி, சனிக்கிழமையன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புனித ஆண்டு குறித்து திருத்தந்தை வழங்கும் அதிகாரப்பூர்வ ஆணை ஓலையின் சில பகுதிகள், ஏப்ரல் 11ம் தேதி, இறை இரக்கத்தின் ஞாயிறுக்கு முந்திய நாள் மாலை நடைபெறும் மாலை வழிபாட்டுக்கு முன், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் புனிதக் கதவுக்கு முன் வாசிக்கப்படும்.
மார்ச் 13ம் தேதி, வெள்ளிக்கிழமை, திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு நிறைவுநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் தலைமையேற்று நடத்திய ஒப்புரவு அருள் அடையாள கொண்டாட்டத்தின்போது வழங்கிய மறையுரையில், இறை இரக்கத்தின் புனித ஆண்டைக் குறித்து முதன்முறையாகக் குறிப்பிட்டார்.
1300ம் ஆண்டு, திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்களால் முதன்முறையாக, புனித ஜுபிலி ஆண்டு அறிக்கைகள் ஆரம்பமாயின. இவ்வரிசையில், இறுதியாக, 2000மாம் ஆண்டு, கொண்டாடப்பட்ட புனித ஜுபிலி ஆண்டு, புனிதத் திருத்தந்தை, 2ம் ஜான்பால் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இறைவனின் கருணை என்ற கருத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்துள்ள அதிகாரப்பூர்வ இலச்சனையிலும், அவரது பல உரைகளிலும் முக்கியமாக இடம்பெறும் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு போலந்து நாட்டின் கிரகோவ் நகரில் நடைபெறவிருக்கும் இளையோர் உலக நாள் நிகழ்வுகளின் மையக் கருத்தாக "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்துள்ளார் என்பதும், குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்திருக்கும் இறை இரக்கத்தின் புனித ஆண்டு, இவ்வாண்டு டிசம்பர் 8ம் தேதி, அமல அன்னை மரியாவின் திருநாளன்று துவங்கி, அடுத்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி முடிய கொண்டாடப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டில், முதன் முறையாக திருப்பீடம்

ஏப்,01,2015. ஏப்ரல் 10, 11 ஆகியத் தேதிகளில், பானமா நகரில், வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் உள்ள அனைத்து நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில், திருப்பீடமும் முதன் முறையாகப் பங்கேற்க உள்ளது.
ஏப்ரல் 10, 11 ஆகியத் தேதிகளில், நடைபெறும் இந்த 7வது உச்சி மாநாட்டில், திருப்பீடத்தின் சார்பில், தான் பங்கேற்கப் போவதாக, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், Zenit கத்தோலிக்க இதழுக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
நடைபெறவிருக்கும் 7வது உச்சி மாநாட்டில், வட, தென் அமெரிக்கக் கண்டங்களின் அனைத்து நாடுகளும் முதன் முறையாகப் பங்கேற்க உள்ளன என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
இதுவரை நடைபெற்ற 6 உச்சி மாநாடுகளில் பங்கேற்காத கியூபா நாடு, இம்முறை பங்கேற்க உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், கியூபாவும், அமெரிக்க ஐக்கிய நாடும்  உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடமும் மேற்கொண்ட முயற்சிகளையும் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
மனிதர்களைப் புறக்கணிக்கும் பொருளாதாரம், புலம் பெயரும் மக்கள், குறிப்பாக, புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாகும் குழந்தைகள், ஊழல்களில் சிக்கியுள்ள அரசியல் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேசிவரும் கருத்துக்கள், அரசுத் தலைவர்கள் பலரது கவனத்தை, சரியான வகையில் ஈர்த்துள்ளன என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

3. அருள்பணியாளர்களே திருஅவையின் முதுகெலும்பு - முதலாம் ஜான் பால்

ஏப்,01,2015. மக்களின் நல் மேய்ப்பராகப் பணியாற்றுவதே, அருள்பணியாளர்களின் மிக முக்கியமானப் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவது, மக்கள் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணப்படி, அருள்பணியாளர்களின் ஆன்மிகம்" என்ற தலைப்பில், இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரை வழங்கிய, அருள் பணியாளர் பேராயத்தின் தலைவர், கர்தினால் பெனியமினோ ஸ்டெல்லா அவர்கள், இவ்வாறு கூறினார்.
அருள்பணியாளர் என்பவர் யார் என்ற கேள்விக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் பதிலில், அருள்பணியாளர், கிறிஸ்துவின் சீடர் என்பதும், மக்களை வழிநடத்தும் மேய்ப்பர் என்பதும் முதலிடம் பெறுகின்றன என்று கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இறைவாக்கினர்களாகச் செயல்படுவதும், அருள்பணியாளர்கள் பெற்றுள்ள முக்கியாமான அழைப்பு, என்று திருத்தந்தை கூறிவருவதையும், கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
திருஅவையின் முதுகெலும்பாக விளங்குவது, மக்களின் மேய்ப்பர்களாகப் பணியாற்றும் அருள்பணியாளர்களே என்று மறைந்தத் திருத்தந்தை, முதலாம் ஜான் பால் அவர்கள் கூறியதையும், கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மணிலாவில், ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு, சிலுவைப் பாதை

ஏப்,01,2015. புனித வெள்ளியன்று, மணிலாப் பெருநகரின் சாலைகளில் மேற்கொள்ளப்படும் சிலுவை பாதை பக்தி முயற்சியில், விசுவாசிகள் முழுமனதுடன் பங்கேற்குமாறு, மணிலாப் பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
பிலிப்பின்ஸ் நாடு சந்தித்து வரும் இயற்கைப் பேரிடர்கள் மற்றும் அமைதியற்றச் சூழல் ஆகியவற்றை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் சிலுவைப் பாதையில், மக்கள் பங்கேற்று பயன் பெறுமாறு கர்தினால் தாக்லே அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இயற்கைப் பேரிடர்களால் மட்டுமல்ல, சமுதாயத்தின் அக்கறையின்மையாலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள வறியோரை மையப்படுத்தி, நாம் இறைவனிடம் மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டுள்ளோம் என்று, கர்தினால் தாக்லே அவர்கள் எடுத்துரைத்தார்.
மணிலா உயர் மறைமாவட்டத்தின் ஒருங்கிணைந்த முயற்சியாக, புனித வெள்ளியன்று, மணிலா சாலைகளில், ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு, சிலுவைப் பாதை பக்தி முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

5. போர்ச்சூழலில் சிறார், மனித சமுதாயத்தின் மீது விழும் சாட்டையடி

ஏப்,01,2015. சிறுவர், சிறுமியரை போர்ச்சூழலில், ஆயுதம் தாங்கும்படி வற்புறுத்தும் கொடுமை, மனித சமுதாயத்தின் மீது விழும் சாட்டையடி என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நியூயார்க் நகர், ஐ.நா. அவை தலைமை அலுவலகத்தில், "ஆயுதம் தாங்கிய மோதல்களில், குழந்தைகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில் பேசிய, பேராயர் Bernadito Auza அவர்கள், இவ்வாறு கூறினார்.
சட்டங்களுக்கும், நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளுக்கும் புறம்பாக வளர்ந்து வரும் தீவிரவாத அமைப்புக்கள், சிறுவர், சிறுமியரை, பாதகமானச் செயல்களுக்குப் பயன்படுத்தும் கொடுமை, வளர்ந்துவருவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Auza அவர்கள், இந்தக் கொடுமையை உடனடியாக நிறுத்துவது, அனைத்து நாடுகளின் தார்மீகக் கடமை என்று வலியுறுத்தினார்.
போர் கொடுமைகளிலிருந்து மீட்கப்படும் சிறுவர், சிறுமியரை மீண்டும் சமுதாயத்தின் அங்கமாக்கி, இயல்பு வாழ்வுக்கு அவர்களைக் கொணர்வதும் நம்மீது சுமத்தப்பட்டுள்ள முக்கியக் கடமை என்று, பேராயர் Auza அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மரண தண்டனைக்கு எதிராக, மதத் தலைவர்கள் அறிக்கை

ஏப்,01,2015. இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ள மனிதர்களின் உயிரை, நச்சு ஊசிகள், மின்சார நாற்காலி, தூக்குக் கயிறு, துப்பாக்கிச் சூடு ஆகிய அதிகாரப் பூர்வமான வழிகளில் பறிப்பது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீமை என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கத்தோலிக்கத் திருஅவை உட்பட, பல கிறிஸ்தவ சபைகளும், ஏனைய மதங்களும் இணைந்து, மரண தண்டனைக்கு எதிராக விடுத்துள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்ற கருத்தில், புனித வாரத்தின் ஒரு முயற்சியாக வழங்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, மார்ச் 31, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.
"மனிதர்களை நல்வழிப்படுத்த, மரண தண்டனை ஒருபோதும் உதவாது; அது, மென்மேலும் பகைமையையும், பழி உணர்வுகளையும் வளர்க்கவே உதவும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவரும் கருத்துக்களையும், தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர், மதத் தலைவர்கள்.
கிறிஸ்துவின் பாடுகள், மரணம், புது வாழ்வு ஆகிய உண்மைகளைப் பறைசாற்றும் புனித வாரத்தில், மனித உயிர்கள் மதிக்கப்படவேண்டும் என்று பறைசாற்றுவது பொருத்தமான ஒரு முயற்சி என்று, பல்சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...