Wednesday, 3 December 2014

(Pope Saint Pius V)

ஆண்ட‌வ‌ரே என் துன்ப‌ங்க‌ளையும் பொறுமையையும் அதிக‌ரித்த‌ருளும்
(Pope Saint Pius V)

அந்தோனியோ கிஸ்லியரி என்ற இயற்பெயர் கொண்ட 5ம் பயஸ், இத்தாலியின் மிலான் நகரில் போஸ்கோ என்ற இடத்தில் 1504 சனவரி 17ந்தேதி பிறந்தார். 14 வயதில் தொமினிக்கன் துறவற சபையில் சேர்ந்து, 1528ல் ஜெனோவா நகரில் குருப்பட்டம் பெற்றார். அதன்பின், பவியா நகருக்குச் சென்று 16 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1556 செப்டம்பர் 14ந்தேதி, ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்ட இவர்,1557 மார்ச் 15 அன்று, கர்தினாலாக‌ உயர்த்தப்பட்டார்.
திருத்தந்தை நான்காம் பயஸ் மறைந்ததும், 1566 சனவரி 17ந்தேதி திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்ட கர்தினால்  கிஸ்லியரி, ஐந்தாம் பயஸ் என்னும் பெயரை எடுத்துக்கொண்டார். திருத்தந்தையர் வெள்ளை அங்கி அணியும் வழக்கத்தை இவரே தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு திருத்தந்தையர் சிவப்பு அங்கியை அணிவதே வழக்கமாய் இருந்தது. அதிக நேரத்தை செபிப்பதில் செலவிட்டார் இத்திருத்தந்தை. அரசியல் குறுக்கீடுகளால் கத்தோலிக்கத் திருஅவையில் நுழைந்திருந்த தவறான வழக்கங்களை ஒழிக்க திருத்தந்தை ஐந்தாம் பயஸ் பெரிதும் விரும்பினார்.
திருத்தந்தை 5ம் பயஸ், திருஅவையின் பதவிகளை உறவு முறைப்படி பெறுவதையும், ஆன்மீகக் காரியங்களை விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தையும் ஒழிக்கப் பாடுபட்டார். இதில் இத்திருத்தந்தைக்கு பெரிய அளவில் உதவியாக இருந்தவர் புனித சார்ல்ஸ் பொரோமியாவாகும். திருஅவையின் உண்மையான விசுவாசத்தை நிலைநிறுத்தவும், பிரிவினையாளர்களின் தவறான போதனைகளை முடிவுக்குக் கொண்டு வரவும் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு ஒன்றைத் தயாரித்தார் திருத்தந்தை ஐந்தாம் பயஸ். திருப்பலியை முறைப்படுத்தும் வகையில் 1570ல் உரோமன் திருப்பலி புத்தகத்தை அறிமுகம் செய்து உலகெங்கும் உள்ள கத்தோலிக்கத் திருஅவையின் பொது திருப்பலி நூலாக்கியவர் இவரே.
1572 மே 1ம் தேதி தனது 68வது வயதில் மரணம் அடைந்தார் திருத்தந்தை ஐந்தாம் பயஸ். இவர் இறக்கும்போது கடைசியாக கூறிய வார்த்தைகள் 'என் ஆண்டவரே! என் துன்ப‌ங்க‌ளையும் பொறுமையையும் அதிக‌ரித்த‌ருளும்' என்பதாகும்.
சரியாக 100 ஆண்டுகளுக்குப்பின், இவர் இறந்த அதே தேதியில், அதாவது, 1672 மே 1ம் தேதி திருத்தந்தை 10ம் கிளமென்ட், திருத்தந்தை ஐந்தாம் பயசுக்கு அருளாளர் பட்டம் வழங்கினார். 1712 மே 24ந்தேதி 11ம் கிளமென்ட் இவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment