செய்திகள் - 03.12.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - பல வழிகளில் நவீன அடிமைத்தனம் அளவுக்கதிகமாக வளர்ந்துள்ளது
2. ஜம்மு ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் - Ivan Pereira
3. திருத்தந்தை பிலிப்பின்ஸ் நாட்டிற்கு வருவதை அரசியலாக்க வேண்டாம் - மணிலா கர்தினால் தாக்லே
4. கிறிஸ்தவக் குடும்பங்கள் புனித பூமியில் தங்குவதற்கு, அனைத்துலக மறைமாவட்டங்களின் உதவி தேவை - முதுபெரும் தந்தை Fouad Twal
5. புதுடில்லியில் புனித செபஸ்தியார் ஆலயம் எரிக்கப்பட்டதை விசாரணை செய்ய சிறப்புக் குழு நியமனம்
6. போரிடும் குழுக்களிடம் ஆயுதப் பயன்பாடு இருப்பது நாட்டின் பாதுக்காப்பைக் குலைக்கிறது - மத்திய ஆப்ரிக்க ஆயர்கள்
7. மதங்களிடையே நட்புறவை வளர்ப்பதற்கு திருவருகைக் காலம் தகுந்ததொரு தருணம்
8. Mosul நகரில், ஒரு சில கிறிஸ்தவ கோவில்கள், சிறைகளைப் போலப் பயன்படுத்தப்படுகின்றன
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - பல வழிகளில் நவீன அடிமைத்தனம் அளவுக்கதிகமாக வளர்ந்துள்ளது
டிச.03,2014. இன்றைய உலகில் நிலவிவரும் அடிமைத்தனம், ஏற்றுக்கொள்ளக்கூடிய பழக்கங்களாக மாறி, மறைவில் நிகழும் அவலங்களாக உருவெடுத்துள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலகின்
முக்கிய மதங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு உயர்மட்டக் குழுவை
இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவீன அடிமைத்தனத்தை ஒழிக்க மதங்கள் காட்டிவரும் அக்கறையைப் பாராட்டினார்.
அனைத்து மனிதரும் சம உரிமைகள் பெற்றவர்கள், அனைவரும் இறைவனின் உருவில் படைக்கப்பட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும்போது, அவர்கள், சம உரிமையையும், இறைச் சாயலையும் இழக்கும் வண்ணம் நடத்தப்பட்டால், அது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
சுற்றுலா பயணிகளின் கேளிக்கைகளுக்குப் பலியாகும் இளையோர் துவங்கி, உறுப்புக்கள் தானம், குழந்தைத் தொழில், போதைப்பொருள் பயன்பாடு என்று பல வழிகளில் நவீன அடிமைத்தனம் அளவுக்கதிகமாக வளர்ந்துள்ளது என்று திருத்தந்தை கவலை தெரிவித்தார்.
துன்புறும் அனைவரின் சார்பாகவும் அனைத்து மதங்களும் ஒருமித்த குரல் எழுப்பி, இந்த அடிமைத்தனத்தை உலகிலிருந்து நீக்க இன்று உறுதியான அறிக்கையை வெளியிடுகிறோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களை இவ்வுலகிலிருந்து அறவே ஒழிக்க நமது மத நம்பிக்கையும், ஆன்மீக விழுமியங்களும் உதவும் என்ற நம்பிக்கையோடு நாம் இங்கு கூடியிருக்கிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த மதத் தலைவர்களிடம் கூறினார்.
இந்து, இஸ்லாம், யூதம், புத்தம் என்ற பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளுடன், கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ், ஆங்கிலிக்கன் சபை என்ற கிறிஸ்தவ பிரதிநிதிகளும் இணைந்து இச்செவ்வாயன்று வத்திக்கானில் ஒரு பொது அறிக்கையை வெளியிட்டுள்ளது, வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. ஜம்மு ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் - Ivan Pereira
டிச.03,2014. ஜம்மு ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அம்மறைமாவட்டத்தில் பணியாற்றிவரும் அருள் பணியாளர் Ivan Pereira அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று நியமித்தார்.
இம்மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் Peter Celestine Elampassery அவர்கள் பணி ஒய்வு பெற விழைந்து அனுப்பியுள்ள விண்ணப்பத்தையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.
1938ம் ஆண்டு கேரளாவில் பிறந்த Peter அவர்கள், 1966ம் ஆண்டு, கப்பூச்சின் துறவு சபையில் அருள் பணியாளராகத் திருநிலை பெற்று, 1998ம் ஆண்டு ஜம்மு ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் ஆயராக பொறுப்பேற்றார்.
மும்பைக்கருகில் வசாய் (Vasai) மறைமாவட்டத்தில், 1964ம் ஆண்டு பிறந்த அருள்பணி Ivan Pereira அவர்கள், 1993ம் ஆண்டு அருள் பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஜம்மு ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் கல்விப்பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிவந்த அருள்பணி Ivan Pereira அவர்கள், ஆங்கிலத்திலும், கல்வியியலிலும் பட்டங்கள் பெற்றுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிலிப்பின்ஸ் நாட்டிற்கு வருவதை அரசியலாக்க வேண்டாம் - மணிலா கர்தினால் தாக்லே
டிச.03,2014.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டிற்கு வருவதை
அரசியலாக்க வேண்டாம் என்று மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ
தாக்லே அவர்கள் கூறினார்.
சனவரி
15ம் தேதி முதல் 19ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
பிலிப்பின்ஸ் நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தை ஒரு
மேய்ப்புப்பணி நிகழ்வாக மட்டுமே காணவேண்டும் என்று கர்தினால் தாக்லே
அவர்கள், இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரது திருத்தூதுப் பயணத்தை, அதிகச்
செலவு இல்லாத வகையில் நடத்தவும் பிலிப்பின்ஸ் தலத்திருஅவை
தீர்மானித்துள்ளதாக கர்தினால் தாக்லே அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கு வரும் திருத்தந்தையின் பயணம், அரசியல் சாயம் பூசப்படாமல், ஆடம்பரம் இல்லாமல், எளிமையான முறையில் நடைபெறவேண்டும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்தியதாக, UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : UCAN
4. கிறிஸ்தவக் குடும்பங்கள் புனித பூமியில் தங்குவதற்கு, அனைத்துலக மறைமாவட்டங்களின் உதவி தேவை - முதுபெரும் தந்தை Fouad Twal
டிச.03,2014. மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், தங்கள் இல்லங்களிலேயே தங்கிவாழ உதவி செய்யவேண்டும் என்று, எருசலேமில் பணியாற்றிவரும், இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் அனைத்துலக கத்தோலிக்க மறைமாவட்டங்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அண்மையில் வத்திக்கானில், குடும்பங்களை மையப்படுத்தி நடைபெற்ற சிறப்பு ஆயர் மாமன்றத்தில் கலந்துகொண்டு, எருசலேம் திரும்பிய முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள், கிறிஸ்தவக் குடும்பங்கள் எருசலேமிலும், புனித பூமியிலும் தங்குவதற்கு, மறைமாவட்டங்களின் பொருளுதவி தேவை என்று விண்ணப்பித்துள்ளார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவதும், பெத்லகேம், எருசலேம் ஆகிய நகரங்களில் இஸ்லாமியர்கள் வீடுகளை வாங்குவதும் தற்போதைய நிலை என்று முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மறைமாவட்டமும் நிதி உதவிகள் செய்தால் மட்டுமே கிறிஸ்தவர்கள் அப்பகுதியில் வீடுகளை வாங்கி, தொடர்ந்து அப்பகுதியில் வாழ முடியும் என்று, முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
புனித பூமியில் கிறிஸ்தவ வேர்களைக் காப்பதில், உலகின் அனைத்து மறைமாவட்டங்களும் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் தன் மடலை நிறைவு செய்துள்ளார்.
ஆதாரம் : Zenit
5. புதுடில்லியில் புனித செபஸ்தியார் ஆலயம் எரிக்கப்பட்டதை விசாரணை செய்ய சிறப்புக் குழு நியமனம்
டிச.03,2014.
புதுடில்லியில் கத்தோலிக்கக் கோவில் ஒன்று எரிக்கப்பட்டதை விசாரணை செய்ய
ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படுள்ளதாக புதுடில்லி காவல் துறை
அறிவித்துள்ளது.
இத்திங்களன்று புதுடில்லியின் ஒரு பகுதியில் அமைந்த புனித செபஸ்தியார் ஆலயம் தீக்கிரையானதற்குக் கண்டனம் தெரிவித்தும், அதை விசாரிக்க ஒரு சிறப்புக் குழுவை நியமனம் செய்யக் கோரியும் இச்செவ்வாயன்று புதுடில்லியில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
டில்லி பேராயர், அனில் கூட்டோ அவர்கள் தலைமையில், தலத்திருஅவைத் தலைவர்கள், ஏனையக் கிறிஸ்தவத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தின் இறுதியில், பிரதமருக்கு வழங்கப்பட்ட மனுவில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக, பொது மேடைகளில் பேசப்படும் வெறுப்பு மொழிகளை நிறுத்தவும் அரசு, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, டில்லி காவல்துறை உயர்மட்ட அதிகாரி, Deepak Mishra அவர்கள், ஆலயத் தீவிபத்து குறித்து விசாரிக்க, தனிப்பட்ட ஒரு குழு நியமிக்கப்படும் என்றும், டில்லி மாநகரில் உள்ள அனைத்துக் கிறிஸ்தவக் கோவில்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தாக UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : UCAN
6. போரிடும் குழுக்களிடம் ஆயுதப் பயன்பாடு இருப்பது நாட்டின் பாதுக்காப்பைக் குலைக்கிறது - மத்திய ஆப்ரிக்க ஆயர்கள்
டிச.03,2014. ஆயுதம் தாங்கிய குழுக்கள், மக்களையும், நாட்டையும் இன்னும் பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர் என்று மத்திய ஆப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஞாயிறு துவங்கியுள்ள திருவருகைக் காலத்திற்கென மடல் ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய ஆப்ரிக்க ஆயர்கள், 2012, 2013
ஆகிய ஆண்டுகள் நாட்டில் நிலவிய உள்நாட்டுப் போரின் எதிரொலியாக இன்னும்
குழுக்களிடம் ஆயுதப் பயன்பாடு இருப்பது நாட்டின் பாதுக்காப்பைக்
குலைக்கிறது என்று கூறியுள்ளனர்.
Seleka மற்றும் Balaka ஆகிய இனங்களிலிருந்து உருவாகியுள்ள பல்வேறு குழுக்களிடம் ஆயுத வர்த்தகம், மற்றும் பயன்பாடு நிலவி வருவதால், வழிப்பறிக் கொள்ளைகள், ஆள் கடத்தல் ஆகிய குற்றங்கள் நாட்டில் பெருகியுள்ளன என்று ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மக்களைக் காக்க, அரசு, பன்னாட்டு அரசுகளின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்றும், ஆயர்கள் தங்கள் திருவருகைக் கால மடலில் கூறியுள்ளனர் என்று Fides செய்தி கூறியுள்ளது.
ஆதாரம் : Fides
7. மதங்களிடையே நட்புறவை வளர்ப்பதற்கு திருவருகைக் காலம் தகுந்ததொரு தருணம்
டிச.03,2014. இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும்
இடையே நட்புறவை வளர்ப்பதற்கு திருவருகைக் காலம் தகுந்ததொரு தருணம் என்று
பிலிப்பின்ஸ் நாட்டின் பல்சமய உரையாடல் அமைப்பான Silsilah அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும், இஸ்லாமியர் கொண்டாடும் இரமதான் மாதத்திலும், கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவருகைக் காலத்திலும், இந்த நட்புறவை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romano கூறியுள்ளது.
கிறிஸ்துவின் வருகைக்கும், அதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகைக்கும் தயாரித்து வரும், பிலிப்பின்ஸ் நாடு, அமைதியின் இளவரசரான கிறிஸ்துவைப் போலவே, உலக அமைதிக்குப் பாடுபடும் உயர்ந்ததோர் உலகத் தலைவராக திருத்தந்தையை மதிக்கிறது என்று Silsilah அமைப்பினரின் அறிக்கை கூறுகிறது.
பிலிப்பின்ஸ் நாடெங்கும், குறிப்பாக, கிறிஸ்தவ இஸ்லாமிய மோதல்கள் நிகழ்ந்துள்ள Mindanao பகுதியில் அமைதி வளர்வதற்கு, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து சொல்லக்கூடிய ஒரு செபத்தை Silsilah அமைப்பினர் உருவாக்கியிருப்பதாகவும், அதனை, பள்ளிகளிலும், குடும்பங்களிலும், பல்சமய உரையாடல் நிறுவனங்களிலும் பயன்படுத்தவிருப்பதாகவும் இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. Mosul நகரில், ஒரு சில கிறிஸ்தவ கோவில்கள், சிறைகளைப் போலப் பயன்படுத்தப்படுகின்றன
டிச.03,2014. இவ்வாண்டு ஜூன் மாதம் முதல், ISIS பிடியில் சிக்கியுள்ள Mosul நகரில், ஒரு சில கிறிஸ்தவ கோவில்கள், சிறைகளைப் போலப் பயன்படுத்தப்படுகின்றன என்று Fides செய்தியொன்று கூறுகிறது.
கல்தேய வழிபாட்டு முறையைச் சேர்ந்த அமல உற்பவ அன்னை ஆலயமும், புனித
ஜார்ஜ் துறவு மடமும் பிணைக் கைதிகளை வைத்திருக்கும் இடங்களாக மாறியுள்ளன
என்று மொசுல் நகரிலிருந்து வெளியான ஓர் இணையத்தள செய்தி கூறுகிறது.
கல்தேய வழிபாட்டு முறையைச் சேர்ந்த திரு இருதய சபை அருள் சகோதரிகளின் துறவு இல்லம் ஒன்று ISIS வன்முறைக் குழுவின் பிடியில் சிக்கியபின், நவம்பர் இறுதியில் அந்தத் துறவு இல்லம் வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
ISIS வன்முறையாளர்களைக் கைப்பற்ற விழையும் பன்னாட்டு அரசுகள், பழமை வாய்ந்த இந்த துறவு மடங்களைத் தாக்கி, அவற்றை முற்றிலும் அழிக்கும் ஆபத்தும் உருவாகியுள்ளது என்று Fides செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.
ஆதாரம் : Fides
No comments:
Post a Comment