Tuesday, 2 April 2013

Catholic News in Tamil -02/04/13


1. தூய பேதுரு அடித்தளக்கல்லறைகளுக்குத் திருத்தந்தையின் பயணம்

2. 6வது அகில உலக Autism விழிப்புணர்வு நாளுக்கென பேராயர் Zimowski வெளியிட்டுள்ள செய்தி

3. திருத்தந்தைக்கு லாஸ் ஆஞ்சலஸ் சிறையிலுள்ள இளம் கைதிகளின் நன்றிக்கடிதம்

4. டூரின் நகரின் புனிதத் துணி இயேசு காலத்தைச்  சேர்ந்ததே

5. வறட்சி பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள் என்பகிறார் மும்பை கர்தினால்

6. குருமட அதிபரின் கொலை குறித்து பெங்களூரு பேராயர்

7. பீகார் முதல்வரிடம் அம்மாநில கிறிஸ்தவர்கள் விண்ணப்பம்

------------------------------------------------------------------------------------------------------

1. தூய பேதுரு அடித்தளக்கல்லறைகளுக்குத் திருத்தந்தையின் பயணம்

ஏப்.02,2013. தூய பேதுரு கோவிலின் மையப்பீடத்திற்கு இரண்டு தளங்களுக்கு நேர்கீழே இருக்கும் தூய பேதுரு கல்லறையை இத்திங்கள் மாலை சென்று தரிசித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
பசிலிக்காவின் அடித்தளத்திலிருக்கும் ஆதிகாலக் கிறிஸ்தவர்களின் கல்லறைப் பகுதிகளுக்குச் சென்று தரிசித்த முதல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே என்று குறிப்பிட்ட திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி, அக்கல்லறையில் அவர் அமைதியாக சில மணித்துளைகளை தியானத்தில் செலவிட்டார் எனவும் கூறினார்.
புனித பேதுருவின் கல்லறைக்கும் பசிலிக்காவுக்கும் இடையிலிருக்கும் தளத்திற்கு வந்த திருத்தந்தை, அங்கு, திருத்தந்தையர்கள் 15ம் பெனடிக்ட், 11ம் பயஸ், 12ம் பயஸ், ஆறாம் பவுல், முதலாம் ஜான் பால் ஆகியோரின் கல்லறைகளையும் தரிசித்து அவர்களின் கல்லறைகள் முன் செபிக்கவும் செய்தார்.
தூய பேதுருவின் கல்லறை மீதே கி.பி. 324ம் ஆண்டு பேரரச‌ர் கான்ஸ்டன்டைன் தூய பேதுரு பசிக்கா பேராலயத்தைக் கட்டியெழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

2. 6வது அகில உலக Autism விழிப்புணர்வு நாளுக்கென பேராயர் Zimowski வெளியிட்டுள்ள செய்தி

ஏப்.02,2013. பல வழிகளிலும் முன்னேற்றம் கண்டுள்ள நம் உலகில் Autism என்ற வார்த்தை இன்னும் பல கலாச்சாரங்களில் அச்சத்தைத் தரும் ஒரு சொல்லாகக் காணப்படுகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
Autism குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் அகில உலக நாள் ஆறாவது முறையாக உலகெங்கும் ஏப்ரல் 2ம் தேதி, இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி நலப் பணியாளர்களின் திருப்பீட அவை தலைவர் பேராயர் Zygmunt Zimowski வெளியிட்டச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த அகில உலக நாள் இவ்வாண்டு உயிர்ப்புத் திருவிழாவையொட்டி வந்திருப்பதால், இயேசுவின் பாடுகளைக் கண்டு  மனமுடைந்து எருசலேம் நகரை விட்டு எம்மாவுஸ் நகர் நோக்கிச் சென்ற கிளயோப்பா, சீமோன் ஆகிய இரு சீடர்களை, Autism உள்ள குழந்தைகளின் பெற்றோருடன் ஒப்பிட்டுள்ளார் பேராயர் Zimowski.
அவ்விரு சீடர்களும் கலக்கத்துடன் வழிநடந்ததுபோல், Autism உள்ள குழந்தைகளின் பெற்றோரும் கலக்கத்துடன் வாழ்வுப் பாதையில் செல்கின்றனர் என்று பேராயர் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் சில நாட்களிலேயே மாற்றுத் திறனாளிகள் மீது அவர் காட்டியுள்ள பரிவும், அரவணைப்பும் உலகத்திற்கு ஒரு தலை சிறந்த சாட்சியாக உள்ளது என்பதையும் எடுத்துரைக்கும் பேராயர் Zimowski, நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டில் திருஅவையின் நலப் பணியாளர்கள் மக்களுக்கும் அதிக நம்பிக்கையை வழங்கும் கருவிகளாக இருப்பார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
மருத்துவத் துறையில் இவ்வுலகம் வியக்கத்தக்க பல முன்னேற்றங்களைக் கண்டிருந்தாலும், அம்முன்னேற்றங்கள் பெரும்பாலும் மருத்துவக் கருவிகள், மருந்துகள் என்று தொழில் நுட்ப அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்பதைச் சுட்டிக் காட்டும் பேராயர் Zimowski, நோயுற்றோர், அவரைச் சுற்றியுள்ளோர் அனைவரின் உள்ளங்களையும் புரிந்து செயல்படுவது மருத்துவத் துறைக்கு முன் உள்ள பெரும் சவால் என்று எடுத்துரைத்தார்.
உலகெங்கும் தற்போது 67 மில்லியன், அதாவது, 6 கோடியே 70 இலட்சம் பேர் Autism நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் சொல்கின்றன.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தைக்கு லாஸ் ஆஞ்சலஸ் சிறையிலுள்ள இளம் கைதிகளின் நன்றிக்கடிதம்

ஏப்.02,2013. திருத்தந்தை பிரான்சிஸ் புனித வியாழன் மாலை திருப்பலியில் இளம் கைதிகளின் பாதங்களைக் கழுவித் துடைத்த செயல் தங்கள் வாழ்வில் நம்பிக்கை பிறக்க உதவியுள்ளது என தங்கள் நன்றியை வெளியிட்டு திருத்தந்தைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் லாஸ் ஆஞ்சலஸ் சிறையிலுள்ள இளம் கைதிகள்.
குற்றங்கள் புரிந்த எங்களை சமூகம் கைவிட்டுள்ள நிலையில் நீவிர் எம்மை கைவிடவில்லை என்பதை இந்த பாதம் கழுவும் நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தியுள்ளீர் என தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர் இந்த இளம் கைதிகள்.
இத்தண்டனைக்காலத்தை முடித்து வெளிவரும்போது திருத்தந்தையைப் போன்றே தாங்களும் இளையோரின் நல்வாழ்வுக்கென தங்களை அர்ப்பணிக்கும் வரத்திற்காக செபிக்குமாறு திருத்தந்தைக்கு அக்கடிதத்தில் இவ்விளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துடுள்ளனர்.
எளிமையையும் அமைதியையும் விரும்பிய புனித பிரான்சிஸ் அசிசியின் பெயரை புதிய திருத்தந்தை தேர்ந்துகொண்டதற்கு தங்கள் பாராட்டையும் நன்றியையும் வெளியிட்டுள்ளனர் லாஸ் ஆஞ்சலஸ் சிறையின் இளம் கைதிகள்.

ஆதாரம் - CNA

4. டூரின் நகரின் புனிதத் துணி இயேசு காலத்தைச்  சேர்ந்ததே

ஏப்.02,2013. இன்றளவும் இத்தாலியின் டூரின் நகரில் போற்றி பாதுகாக்கப்பட்டு வரும், இயேசுவின் இறந்த உடலை போர்த்திய புனிதத்துணி, முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததுதான் என புதிய அறிவியல் சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளாதாக இச்சோதனைகளை நடத்திய பதுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் கூறினார்.
இயேசுவின் உடலைப் போர்த்தியதென கருதப்பட்டு, பாதுக்காக்கப்படும் இந்தப் புனிதத்துணி, 14ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என சிலரால் சந்தேகம் எழுப்பப்பட்டத்தைத் தொடர்ந்து, தற்போது இத்தாலியின் பதுவை நகர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ள சில முக்கிய சோதனைகள் மூலம் இது இயேசு காலத்தைய துணிதான் என்பது நிரூபணமாகியுள்ளதாக இச்சோதனைக் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் ஜூலியோ ஃபாந்தி தெரிவித்தார்.  
இரு வேதியல் சோதனைகளுக்கும் ஒரு பொறியியல் சோதனைக்கும் இப்புனித துணி உட்படுத்தப்பட்டதிலிருந்து இவ்வுண்மை தெரிய வந்ததாகத் தெரிவித்த பெராசிரியர் ஃபாந்தி, அனைத்து சோதனைகள் மூலமும் கிடைத்த முடிவு என்னவெனில் இப்புனிதத்துணி, கி.மு. 33க்கும், அதைத்தொடர்ந்த 250 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தது என்பதேயாகும் என மேலும் உரைத்தார்.

ஆதாரம் CathNews

5. வறட்சி பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள் என்பகிறார் மும்பை கர்தினால்

ஏப்.02,2013. மகராஷ்டிரா மாநிலத்தின் வறட்சி பிரச்சனை குறித்தும் மும்பை அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பு அதிகரிப்பு குறித்தும் பொதுமக்கள் தங்கள் கவனத்தைத் திருப்பவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேஷியஸ்.
பசிச்சாவுகளுக்கும் தற்கொலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடிய வறட்சி அச்சுறுத்தல்களிலிருந்து விவசாயிகளைக் காக்க வேண்டியது நம் கடமையாகிறது என தன் அறிக்கையில் கூறியுள்ள கர்தினால் கிரேஷியஸ், நீர் சேமிப்பு மற்றும் உடனடி நிவாரணப்பணிகள் என்பவை போர்க்கால நடவடிக்கை போல் ஏற்று நடத்தப்பட வேண்டும் என அதில் அழைப்பு விடுத்துள்ளார்.
நகர அதிகாரிகளின் பொறுப்பற்ற போக்கினால் பொது மருத்துவமனைகளில் குழந்தைகளின் இறப்பு அதிகரித்துவருவது குறித்தும் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் கர்தினால் கிரேஷியஸ்.
மும்பை நகரின் கிறிஸ்தவ சமூகம் 'அநீதிகளை எதிர்த்துப் போராடுவோம்' என இந்த உயிர்ப்பு விழாவின்போது தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் UCAN

6. குருமட அதிபரின் கொலை குறித்து பெங்களூரு பேராயர்

ஏப்.02,2013. பெங்களூருவின் தூய பேதுரு குருமட அதிபர் கொலையுண்டது குறித்து தன் அதிர்ச்சியையும் அனுதாபங்களையும் தெரிவித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் பெங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ்.
இம்மாதம் முதல் தேதி இடம்பெற்ற குருமட அதிபர் கே.ஜே. தாமசின் கொலை குறித்து காவல்துறையின் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும், அவரின் அடக்குச்சடங்கு குறித்து அவர் சார்ந்திருக்கும் ஊட்டி மறைமாவட்டமே முடிவெடுக்கும் எனவும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார் பேராயர்.
எளியவராகவும், எவருக்கும் துன்பம் விளைவிக்காதவராகவும், பக்தி நிறைந்தவராகவும் விளங்கிய குருமட அதிபரின் மரணம் அனைவருக்கும் பெரும் இழப்பு எனவும் கூறியுள்ள பேராயர் மொராஸ், இக்கொலையை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பிறந்து ஊட்டி மறைமாவட்டத்தில் குருவான குரு.கே.ஜே. தாமஸ், தற்போது இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் CBCI

7. பீகார் முதல்வரிடம் அம்மாநில கிறிஸ்தவர்கள் விண்ணப்பம்

ஏப்.02,2013. பீகார் மாநில கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் அம்மாநில முதல்வரைச் சந்தித்து விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளது பீகார் கிறிஸ்தவ அவை.
கிறிஸ்து உயிர்ப்பு வாழ்த்துக்களை வழங்கும்பொருட்டு மாநில முதல்வர் நிதிஷ் குமாரைச் சந்தித்த கிறிஸ்தவக்குழு, மேல் அவையில் ஒரு கிறிஸ்தவர் நியமிக்கப்படுதல், மாநில சிறுபான்மையினருக்கான ஆணைக்குழுவில் ஒரு கிறிஸ்தவரை துணைத்தலைவராக நியமித்தல், எருசலேம் புனித பயணத்திற்கென கிறிஸ்தவர்களுக்கு நிதிஉதவிச்செய்தல் போன்ற விண்ணப்பங்களை முன்வைத்துள்ளது.
இதற்கிடையே, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு முன்னர் சில கிறிஸ்தவ கோவில்களை வந்து சந்திக்கும்படி இந்த கிறிஸ்தவ குழு விடுத்த அழைப்பைத் தான் ஏற்பதாக அறிவித்தார் முதல்வர் நிதிஷ் குமார்.

ஆதாரம் UCAN

No comments:

Post a Comment