1. ஏப்ரல் 16, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 86வது பிறந்தநாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்தும் செபமும்
2. தீமையினால் ஆட்கொள்ளாதிருக்க பாஸ்டன் மக்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு
3. பாஸ்டன் நகர் குண்டு வெடிப்புக்குத் தலத்திருஅவைத் தலைவர்கள் கண்டனம்
4. கர்தினால் கிரேசியஸ் : திருத்தந்தைக்குத் தாழ்மையுடன் பணி செய்வேன்
5. எருசலேம் துணை ஆயர் : திருத்தந்தை பிரான்சிஸ் புனிதபூமி கிறிஸ்தவர்கள்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்
6. மனித வாழ்வின் மாண்பை ஊக்குவிக்கும் வத்திக்கான் கருத்தரங்கு
7. ஜெர்மன் இயேசு சபை அருள்பணியாளரின் சமஸ்கிருத இலக்கணப் பிரதி வெளியிடப்பட்டுள்ளது
8. பெய்ரூட்டில் Signis அனைத்துலக மாநாடு
9. இலட்சக்கணக்கான குழந்தைகளின் வாழ்வைக் காப்பாற்றுவதற்கு ஐ.நா. முயற்சி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஏப்ரல் 16, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 86வது பிறந்தநாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்தும் செபமும்
ஏப்.16,2013.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் 86வது பிறந்த நாளான
இச்செவ்வாயன்று காலை தான் நிகழ்த்திய திருப்பலியை திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் அவர்களுக்காக அர்ப்பணித்துச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பிறந்த நாள், அவருக்காக இத்திருப்பலியை அர்ப்பணிப்போம், ஆண்டவர் அவரோடு இருந்து அவரைத் தேற்றி அவருக்கு மிகுந்த ஆறுதலை அளிப்பாராக என்று திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், காஸ்தெல்
கந்தோல்ஃபோவில் தங்கியிருக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குத்
தொலைபேசியில் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். இந்நாள்களில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களோடு
தங்கியிருக்கும் அவரது சகோதரர் பேரருள்திரு ஜார்ஜ் இராட்சிங்கர்
அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்
என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி
கூறினார்.
ஏப்ரல் 23, வருகிற செவ்வாய் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நாம விழா நாளாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. தீமையினால் ஆட்கொள்ளாதிருக்க பாஸ்டன் மக்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு
ஏப்.16,2013.
அமெரிக்க ஐக்கிய நாட்டு பாஸ்டன் நகரில் இத்திங்களன்று இடம்பெற்ற
குண்டுவெடிப்புகளில் காயமடைந்த மக்களுக்குத் தனது ஆறுதலையும் செபத்தையும்
தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பாஸ்டன் பேராயர் கர்தினால் Seán O'Malleyக்குத் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள தந்தியில், அவ்வன்முறையில் இறந்தவர்கள் இறைவனின் அமைதியை அனுபவிப்பதற்கானத் திருத்தந்தையின் செபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நேரத்தில் பாஸ்டன் மக்கள் அனைவரும் தீமையினால் ஆட்கொள்ளப்படாதவாறு இருக்கவும், தீமையை நன்மையினால் மேற்கொள்ளவும் வேண்டுமெனக் கேட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், பாஸ்டன் மக்கள், வருகிற தலைமுறைகளுக்கு இன்னும் மேலான நீதியும், சுதந்திரமும், பாதுகாப்பும் கொண்ட சமுதாயத்தை ஒன்றிணைந்து கட்டியெழுப்பவும் உறுதி எடுக்குமாறும் அத்தந்திச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. பாஸ்டன் நகர் குண்டு வெடிப்புக்குத் தலத்திருஅவைத் தலைவர்கள் கண்டனம்
ஏப்.16,2013.
பாஸ்டன் நகரில் இத்திங்களன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் அறிவற்ற
செயல்கள் எனக் கண்டித்துள்ள அமெரிக்கத் தலத்திருஅவைத் தலைவர்கள், அவ்வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ளோர்க்குத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
பாஸ்டன் பேராயர் கர்தினால் Seán O'Malley வெளியிட்டுள்ள அறிக்கையில், இதில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகச் செபிக்குமாறு மக்களைக் கேட்டுள்ளார்.
இவ்வன்முறை
இடம்பெற்றவுடனே துரிதமாக நிவாரணப் பணிகளில் துணிச்சலுடன் ஈடுபட்டுள்ள
பாஸ்டன் அதிகாரிகளுக்குத் தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார் கர்தினால் Malley.
மேலும், இவ்வன்முறை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நியுயார்க் கர்தினால் Timothy Dolan, தீமை இன்னும் உலகில் நடமாடுகிறது மற்றும் மனித வாழ்வு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக நாம் அனைவரும் செபிக்குமாறுக் கேட்டுள்ளார் கர்தினால் Dolan.
பாஸ்டன்
நகரில் இத்திங்கள் மாலையில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் தினத்தையொட்டி
நடைபெற்ற மாரத்தான் போட்டி முடியும் இடத்தில் அடுத்தடுத்து இரண்டு
குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 144 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இம்மாரத்தான் போட்டியில் 27,000 பேர் கலந்து கொண்டனர் எனக் கூறப்படுகிறது.
இத்தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. கர்தினால் கிரேசியஸ் : திருத்தந்தைக்குத் தாழ்மையுடன் பணி செய்வேன்
ஏப்.16,2013.
உலகளாவியத் திருஅவையின் நிர்வாகத்தில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு உதவியாக
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ள கர்தினால்கள் குழுவில்
தானும் ஒருவராக நியமிக்கப்பட்டிருப்பதை மிகவும் தாழ்மையுடன் ஏற்பதாகத்
தெரிவித்துள்ளார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
இந்நியமனம் குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ள கர்தினால் கிரேசியஸ், இந்நியமனப் பணிமூலம் உலகளாவியத் திருஅவைக்கும், திருத்தந்தைக்கும் ஆழ்ந்த நன்றியுடன் பணி செய்வேன் என்று கூறியுள்ளார்.
இக்கர்தினால்கள் குழு, அகிலத்திருஅவையைக் குறித்து நிற்க வேண்டும் என்று திருத்தந்தை விரும்பியதாகவும், இக்குழுவில் உள்ளவர்கள் அனைத்துக் கண்டங்களைச் சார்ந்தவர்கள் எனவும் கர்தினால் கிரேசியஸ் கூறினார்.
ஹொண்டூராஸ், சிலே, இந்தியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, காங்கோ, அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 கர்தினால்கள் கொண்ட குழுவை இம்மாதம் 13ம் தேதி உருவாக்கியுள்ளார் திருத்தந்தை.
உலகின் மூன்று முக்கிய மதங்களுக்குப் பிறப்பிடமான ஆசியாவில், உலகின் கிறிஸ்தவரல்லாதவரில் 85 விழுக்காட்டினரும், உலக
மக்கள்தொகையில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினரும் வாழ்கின்றனர்.
இக்கண்டத்தில் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர்
என்றும், இங்கு 50 இலட்சம் முதல் 2 கோடிப் பேர்வரை வாழும் 30க்கும் மேற்பட்ட மாநகரங்கள் உள்ளன என்றும் ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஆதாரம் : AsiaNews
5. எருசலேம் துணை ஆயர் : திருத்தந்தை பிரான்சிஸ் புனிதபூமி கிறிஸ்தவர்கள்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்
ஏப்.16,2013.
திருத்தந்தை பிரான்சிஸ் தனது மக்களை அன்புகூரும் ஒரு மனிதர் மற்றும் தனது
மந்தையோடு வாழ விரும்பும் ஒரு மேய்ப்பர் என்று எருசலேம் துணை ஆயர்
வில்லியம் ஷோமாலி கூறினார்.
எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தலைவரும், அம்முதுபெரும்
தலைவர் இல்லப் பிரதிநிதிகளும் தானும் இத்திங்கள் காலை திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த பின்னர் அவரோடு சேர்ந்து மதிய உணவு
அருந்தியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகக் கூறிய ஆயர் ஷோமாலி, இச்சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தாழ்ச்சி நிறைந்த பண்பை உணர முடிந்தது என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் புனிதபூமி கிறிஸ்தவர்கள்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்பதை, தான் எருசலேம் திரும்பிய பின் மக்களிடம் சொல்லவிருப்பதாகவும் ஆயர் ஷோமாலி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஆதாரம் : AsiaNews
6. மனித வாழ்வின் மாண்பை ஊக்குவிக்கும் வத்திக்கான் கருத்தரங்கு
ஏப்.16,2013.
மனித வாழ்வின் மாண்பு குறித்த திருஅவையின் போதனைகள் மற்றும் இவை புதிய
நற்செய்திப்பணிக்கு எவ்வாறு பொருத்தமாக இருக்கின்றன என்பது குறித்து
உரோமில் நடைபெறவிருக்கும் 2 நாள் நிகழ்வுகள், நம்பிக்கை ஆண்டின் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜூன் 15,16 தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பன்னாட்டு நிகழ்வுகள், வாழ்வுக் கலாச்சாரம் குறித்த திருஅவையின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் என்று, புதிய நற்செய்திப்பணியை ஊக்குவிப்பதற்கான திருப்பீட அவையின் அலுவலகர் அருள்திரு Geno Sylva கூறினார்.
“வாழ்வின் நற்செய்தியும் புதிய நற்செய்திப்பணியும்” என்ற தலைப்பில் முதல்நாள் காலை அமர்வுகள் நடைபெறும் எனவும், 1995ம் ஆண்டில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் வெளியிட்ட Evangelium Vitae என்ற திருமடலில் அடங்கியுள்ள உண்மைகள் இந்நிகழ்வுகளில் வெளிப்படுத்தப்படும் எனவும் அருள்திரு Sylva கூறினார்
தற்போது சிறப்பிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டு வருகிற நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும்.
ஆதாரம் : CNA
7. ஜெர்மன் இயேசு சபை அருள்பணியாளரின் சமஸ்கிருத இலக்கணப் பிரதி வெளியிடப்பட்டுள்ளது
ஏப்.16,2013. ஜெர்மன் இயேசு சபை அருள்பணியாளர் Johann Ernst Hanxleden எழுதிய சமஸ்கிருத இலக்கணப் பிரதி ஒன்று பெல்ஜியத்தில் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Arnos Padre என அழைக்கப்பட்ட அருள்பணியாளர் Hanxleden ஒரு மெய்யியலாளர் மற்றும் சொற்களஞ்சிய மேதையாவார்.
300 ஆண்டுகளுக்கு முன்னர் சமஸ்கிருத மொழியில் இவர் எழுதிய இலக்கணம், சமஸ்கிருதத்திலுள்ள பழமையான மறைப்பணியாளர்களின் இலக்கணமாக நோக்கப்படுவதாக, திருச்சூர் Arnos Padre கழகத்தின் இயக்குனர் இயேசு சபை அருள்பணியாளர் Roy Thottathil தெரிவித்தார்.
'Grammatica Grandonica' என்ற 88 பக்க கையெழுத்துப் பிரதி 300 ஆண்டுகளுக்கு மேலாகக் காணாமற்போயிருந்தது என்றுரைத்த அருள்பணியாளர் Thottathil, இதனை Montecompatri கார்மேல் சபை துறவு இல்ல நூலகத்தில் கடந்த ஆண்டில் பெல்ஜிய நாட்டுப் பேராசிரியர் Toon Van Hal என்பவர் கண்டுபிடித்தார் என்று கூறினார்.
ஜெர்மனியின் Ostercappelnல் பிறந்த இயேசு சபை அருள்பணியாளர் Hanxleden, 1700ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்தியாவுக்கு
வந்தார். இவர் 1712ம் ஆண்டில் வேலூரில் புனித பிரான்சிஸ் சவேரியார்
ஆலயத்தைக் கட்டினார். தனது எஞ்சிய வாழ்நாளை அங்கேயே செலவிட்டார் என்று UCA செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஆதாரம் : UCAN
8. பெய்ரூட்டில் Signis அனைத்துலக மாநாடு
ஏப்.16,2013. “புதிய தலைமுறையோடு இணைந்து வேறுபட்ட உருவங்களை படைத்தல் : அமைதிக் கலாச்சாரத்துக்கு ஊடகம்” என்ற தலைப்பில் இவ்வாண்டின் Signis அனைத்துலக மாநாடு நடைபெறவிருக்கிறது.
வருகிற
அக்டோபர் 20 முதல் 23 வரை லெபனன் நாட்டின் பெய்ரூட்டில் நடைபெறவிருக்கும்
இம்மாநாடு குறித்து வத்திக்கான் வானொலியில் நிருபர் கூட்டத்தில் பேசிய Signis தலைவர் அகுஸ்தின் லூர்துசாமி, புதிய தலைமுறைகளுக்கும் ஊடகத்துக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து விளக்கினார்.
ஊடகத்துறையில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களுக்கும், புதிய
தலைமுறைகளுக்கும் இடையே உண்மையான ஒத்துழைப்பு ஏற்படுவதன் வழியாக நிறையக்
காரியங்களைச் சாதிக்க முடியும் என்று விளக்கினார் லூர்துசாமி.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
9. இலட்சக்கணக்கான குழந்தைகளின் வாழ்வைக் காப்பாற்றுவதற்கு ஐ.நா. முயற்சி
ஏப்.16,2013. விலைமலிவான மருந்துகளைப் பயன்படுத்துதல், குழந்தை
பிறப்புக்குப் பின்னர் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல் போன்ற
நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான
குழந்தைகளின் வாழ்வைக் காப்பாற்ற முடியும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம்
அறிவித்துள்ளது.
புதிதாகப்
பிறந்த குழந்தைகளின் நலவாழ்வு குறித்து உலகில் முதன்முறையாக இடம்பெறும்
கருத்தரங்குக்குச் செய்தி அனுப்பியுள்ள ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், பிறந்தவுடன்
இறக்கும் குழந்தைகளின் வாழ்வைக் காப்பாற்றுவதற்கு இதில் கலந்து கொள்ளும்
நாடுகளின் பிரதிநிதிகள் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையைத்
தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்காவின் Johannesburgல் இத்திங்களன்று தொடங்கியுள்ள 4 நாள் கருத்தரங்கில், நலவாழ்வு அதிகாரிகள், அரசுகளின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் 50 நாடுகளிலிருந்து கலந்து கொள்கின்றனர்.
தடுத்து
நிறுத்தக்கூடிய மற்றும் சிகிச்சைகளால் காப்பாற்றப்படக்கூடிய நோய்களால்
ஒவ்வோர் ஆண்டும் 30 இலட்சம் குழந்தைகள் பிறந்த மூன்று மாதங்களுக்குள்
இறக்கின்றன என்று ஐ.நா.நிறுவனங்கள் கூறுகின்றன.
ஐ.நா.பொதுச்செயலரின் செய்தியை, ஐ.நா.வின் தென்னாப்ரிக்க ஒருங்கிணைப்பாளர் Agostinho Zacarias வாசித்தார்.
No comments:
Post a Comment