1. திருத்தந்தை பிரான்சிஸ், இஸ்ரேல் அரசுத்தலைவர் Peres சந்திப்பு
2. திருத்தந்தை பிரான்சிஸ் இஸ்ரேலுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்பு
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி
4. திருத்தந்தை : உலகாயுதப்போக்குள்ள திருஅவை நற்செய்தியை அறிவிக்க முடியாது
5. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள ஆயர்கள் விடுதலை செய்யப்படுமாறு கர்தினால் டோலன் வேண்டுகோள்
6. கானடாவில் சூதாட்டத்துக்கு கர்தினால் எச்சரிக்கை
7. சிறார் தொழில்முறைக்கு எதிரானப் போராட்டத்தில் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் முக்கிய காரணி, ஐ.நா.
8. உலக அளவில் நாட்டுக்குள்ளே புலம்பெயர்வு அதிகரிப்பு
9. விமர்சகர்கள்மீது இலங்கை அரசு கடுமையாக நடந்து கொள்கிறது : Amnesty Int.
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ், இஸ்ரேல் அரசுத்தலைவர் Peres சந்திப்பு
ஏப்.30,2013. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படுமாறும், இவ்விரு
தரப்பினரின் நியாயமான ஆசைகள் நிறைவேற்றப்படும் துணிச்சலான தீர்மானங்கள்
அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவுடன் எடுக்கப்படுமாறும் அழைப்பு விடுத்தார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres அவர்களை இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படவும் அழைப்பு விடுத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முப்பது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் Peres.
மத்திய கிழக்குப் பகுதியில் அமைதிக்கும் உறுதியான தன்மைக்கும் வழிஅமைக்கும் விவகாரங்கள், எருசலேம் புனித நகரின் முக்கியத்துவம், சிரியாவின் நிலைமை, திருப்பீடத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயுள்ள உறவு, இஸ்ரேலுக்கும்
உள்ளூர் கத்தோலிக்கச் சமூகங்களுக்கும் இடையேயுள்ள உறவு போன்ற விவகாரங்கள்
இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம்
கூறியது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் இஸ்ரேலுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்பு
ஏப்.30,2013.
இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முப்பது
நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres, திருத்தந்தை இஸ்ரேலுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
திருத்தந்தையைத் தனியே சந்தித்துப் பேசிய பின்னர் நிருபர்கள் முன்னிலையில் திருத்தந்தைக்கு இவ்வழைப்பை முன்வைத்த அரசுத்தலைவர் Peres, எருசலேமில் தான் மட்டுமல்ல, இஸ்ரேல் நாட்டினர் அனைவரும் திருத்தந்தைக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
அனைவருக்காகச் செபிக்குமாறும் திருத்தந்தையிடம் கேட்டுக்கொண்ட Peres, இப்புதனன்று அசிசியில் புனித பிரான்சிசின் கல்லறையில் திருத்தந்தைக்காகத் தான் செபிப்பதாகவும் உறுதி கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி
ஏப்.30,2013.
நாம் வேலை செய்யும்போது கடவுளின் வல்லமையில் நமது நம்பிக்கையை வைப்போம்.
அவரோடு சேர்ந்து நாம் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். அவரது சீடர்களாக
இருப்பதன் மகிழ்ச்சியை அவர் நமக்குத் தருவார்.
இவ்வாறு இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 29, இத்திங்கள் நண்பகலோடு அறுபது இலட்சத்தை எட்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 2012ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி @Pontifex என்ற
டுவிட்டர் பக்கத்தைத் தொடங்கினார். அவர் தனது பாப்பிறைத் தலைமைப்
பணியிலிருந்து விலகியபோது 30 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் அந்த டுவிட்டர்
பக்கத்தைப் பார்த்திருந்தார்கள்.
கடந்த மார்ச் 13ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் @Pontifex என்ற முகவரியில் தனது டுவிட்டர் பக்கத்தைத் திறந்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை : உலகாயுதப்போக்குள்ள திருஅவை நற்செய்தியை அறிவிக்க முடியாது
ஏப்.30,2013. உலகாயுதப்போக்குள்ள திருஅவையால் நற்செய்தியை அறிவிக்க முடியாது, இந்தப் போக்கினின்று திருஅவையைக் காப்பாற்ற வேண்டுமெனில், இடைவிடாத செபத்தின் மூலம் நம் ஆண்டவரிடம் அதனை ஒப்படைப்பதே ஒரேவழி என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, நமது பணியால் திருஅவையை நம்மால் காப்பாற்ற முடியும், அதனைக் குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
தீமையின் முகத்தை நோக்கி அதனை வெற்றிகொள்ளும் ஒரேயொருவரான நம் ஆண்டவர் செய்தது போன்று நாமும் செய்ய வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவைக்காக, உலகளாவியத் திருஅவைக்காக, உலகெங்கும் நாம் அறிந்திராத நம் சகோதர சகோதரிகளுக்காக நாம் செபிக்கின்றோமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இது நம் ஆண்டவரின் திருஅவை, ஆண்டவரே உமது திருஅவையை கண்ணோக்கும், ஆண்டவரே, இது உமது திருஅவை என்று நமது செபத்தில் நாம் செபிக்க வேண்டுமென்றும், முதியோர், நோயாளிகள், சிறார், இளையோர் என அனைவரையும், உலகளாவியத் திருஅவையையும் ஆண்டவரிடம் ஒப்படைத்துச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
APSA எனப்படும் திருப்பீடப் பாரம்பரியச் சொத்து நிர்வாகத் துறையினர் இச்செவ்வாய் காலையில் திருத்தந்தையின் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள ஆயர்கள் விடுதலை செய்யப்படுமாறு கர்தினால் டோலன் வேண்டுகோள்
ஏப்.30,2013.
சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு ஆர்த்தடாக்ஸ் ஆயர்கள் விடுதலை
செய்யப்படுமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் அமெரிக்க ஐக்கிய
நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் திமொத்தி டோலன்.
அமைதியின் இம்மனிதர்கள் கடத்தப்பட்டிருப்பது, சிரியா சமூகத்தின் அமைப்பையே அழிக்கும் கொடூரமான வன்முறையின் அடையாளமாக இருக்கின்றது என்று கர்தினால் டோலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விரு ஆர்த்தடாக்ஸ் ஆயர்கள் கடத்தப்பட்டிருப்பதும், அவர்களது வாகன ஓட்டுனர் கொல்லப்பட்டிருப்பதும் நன்மனம் கொண்ட மக்களின் இதயங்களை மிகவும் வேதனையடையச் செய்துள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இந்த ஏப்ரல் 22ம் தேதியன்று மனிதாபிமானப்பணிகளை முடித்துத் திரும்பும் வழியில் சிரியா ஆர்த்தடாக்ஸ் பேராயர் John Ibrahim, சிரியா கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Paul Yagizi ஆகிய இருவரும் அலெப்போவுக்கு அருகில் கடத்தப்பட்டுள்ளனர்.
ஆதாரம் : CNA
6. கானடாவில் சூதாட்டத்துக்கு கர்தினால் எச்சரிக்கை
ஏப்.30,2013.
கானடா சமுதாயம் சூதாட்டத்தைச் சார்ந்திருப்பது வளர்ந்து வருவது குறித்து
அண்மை ஆண்டுகளாக அந்நாட்டு ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டு வருகின்றனர்.
Toronto நகரில் புதிய மற்றும் பெரிய சூதாட்ட அரங்கம் கட்டுவது குறித்து அரசு சிந்தித்துவரும்வேளை, சூதாட்டத்தை எச்சரித்து மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள Toronto உயர்மறைமாவட்ட கர்தினால் Thomas Collins, சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டங்கள் குறித்த தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
சூதாட்டம் தன்னிலே தீமையானது என்றும், திருஅவையின்
மறைக்கல்வி ஏட்டில் சூதாட்டத்தினால் ஏற்படும் பிரச்சனைகள்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Collins.
சூதாட்டத்தினால் அரசுக்குப் பணம் நிறையக் கிடைப்பதால் இதற்கு மக்கள் மட்டுமல்ல, அரசும் அடிமையாகி விடுகின்றது என்றும் Toronto கர்தினாலின் அறிக்கை கூறுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. சிறார் தொழில்முறைக்கு எதிரானப் போராட்டத்தில் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் முக்கிய காரணி, ஐ.நா.
குஏப்.30,2013. சிறார் தொழிலாளர்களைக் கொத்தடிமைத்தனத்திலிருந்து காப்பாற்றுவதில், சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துவது முக்கிய பங்காற்ற முடியும் என்று ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனம் கூறியது.
மே தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ILO நிறுவனம், பணம் மாற்றுத் திட்டங்கள், சமூகநலவாழ்வுப் பாதுகாப்பு, முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் உலகில் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு உதவும் என்று கூறியுள்ளது.
போஸ்ட்வானா, மலாவி, நமிபியா, தென்னாப்ரிக்கா, டான்சானியா, ஜிம்பாபுவே போன்ற ஆப்ரிக்க நாடுகளில் 50 முதல் 60 விழுக்காட்டு அநாதைச் சிறார் தங்களது தாத்தா பாட்டிகளோடு வாழ்கின்றனர், ஆதலால் வயதான காலத்தில் வருமானத்துக்குப் பாதுகாப்பு வழங்குவது இன்றியமையாதது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
உலகில் 500 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு, அதாவது உலகின் ஏறக்குறைய 75 விழுக்காட்டு மக்களுக்குப் போதுமான சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் கிடையாது என்றும் ILO கூறியது.
11
கோடியே 50 இலட்சம் கொத்தடிமைச் சிறார் தொழிலாளர் உட்பட உலகில் சிறார்
தொழிலாளர்கள் பெருமளவில் இருப்பதற்கு இந்நிலையே காரணம் என்றும் அனைத்துலக
தொழில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆதாரம் : UN
8. உலக அளவில் நாட்டுக்குள்ளே புலம்பெயர்வு அதிகரிப்பு
ஏப்.30,2013.
தற்போது உலகிலுள்ள ஏறக்குறைய 3 கோடி அகதிகளுள் 65 இலட்சம் பேர் 2012ம்
ஆண்டில் புதிதாகப் புலம் பெயர்ந்தவர்கள் என்று ஜெனீவாவிலுள்ள IDMC என்ற நாட்டுக்குள்ளே இடம்பெறும் புலம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் கூறியது.
கடந்த ஆண்டில் புதிதாகப் புலம் பெயர்ந்தவர்களில் பாதிப்பேர், சிரியாவிலும், காங்கோ சனநாயகக் குடியரசிலும் இடம்பெறும் வன்முறையினால் புலம் பெயர்ந்தவர்கள் என்றும் IDMC மையம் இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கை கூறியது.
2012ம் ஆண்டில் நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்த மக்களை அதிகமாகக் கொண்டிருந்த நாடு கொலம்பியா என்றும், இதற்கு அந்நாட்டில் அரசுக்கும் புரட்சிக்குழுக்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் சண்டையே காரணம் என்றும், கொலம்பியாவில் 49 இலட்சம் முதல் 55 இலட்சம் புலம்பெயர்ந்த மக்கள் இருக்கிறார்கள் என்றும் அவ்வறிக்கை கூறியது.
உலகில் நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்த மக்களை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடுகளில் கொலம்பியாவுக்கு அடுத்தபடியாக சிரியாவும், அதற்கு அடுத்த இடத்தில் காங்கோ ஜனநாயகக் குடியரசும் உள்ளன என்று IDMC மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
சிரியாவில்மட்டுமே கடந்த ஆண்டின் இறுதியில், 24 இலட்சம் பேர் நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்திருந்தனர் என்று இம்மையம் கூறுகிறது.
ஆதாரம் : Guardian
9. விமர்சகர்கள்மீது இலங்கை அரசு கடுமையாக நடந்து கொள்கிறது : Amnesty Int.
ஏப்.30,2013. விமர்சிப்பவர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள் துன்புறுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதாக Amnesty International என்ற அனைத்துலக மனித உரிமை கழகம் இலங்கை அரசை குறைகூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் அரசுக்கு எதிராக கருத்துச் சொன்ன காரணத்துக்காக ஊடகவியலாளர்கள், நீதித்துறையினர், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போன்றோர் கடுமையாய்த் தாக்கப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும், சிலவேளைகளில் கொல்லப்பட்டும் இருக்கின்றனர் என்று Amnesty Int. தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கையில்
மனித உரிமைகள் நிலவரம் மேம்படாதவரையில் காமன்வெல்த் நாடுகளின் உச்சி
மாநாடு அந்நாட்டில் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என அக்கழகம்
வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் 2006ம் ஆண்டுமுதல் குறைந்தது 15 ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றும் Amnesty Int.ன் அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, இலங்கை அரசு இக்குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment