1. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் வார்த்தை நம் அறிவு வழியாக இதயத்தை நேரிடையாகச் சென்றடைகின்றது
2. திருத்தந்தை பிரான்சிஸ், ஈக்குவதோர் அரசுத்தலைவர் சந்திப்பு
3. சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களுக்குப் பணி செய்வோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் பாராட்டு
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணிக்காலம் பாத்திமா அன்னைமரியிடம் அர்ப்பணிப்பு
5. ஆயர் Paglia : முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவிக்காலம் தாழ்ச்சியின் அடையாளமாக இருந்தது
6. வத்திக்கான் : சர்க்கஸ், ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவச் செய்தியைக் கொண்டுள்ளது
7. சிரியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்த விவாதங்களைக் கைவிடுமாறு மேற்கத்திய நாடுகளுக்கு முதுபெரும் தலைவர் வேண்டுகோள்
8. அருள்பணியாளர் லொம்பார்தி அவர்களுக்கு “ஆண்டின் ஊடகத் தொடர்பாளர் விருது”
9. மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறுவது, மனித உரிமைகளை மீறும் செயல் : WHO
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவின் வார்த்தை நம் அறிவு வழியாக இதயத்தை நேரிடையாகச் சென்றடைகின்றது
ஏப்.19,2013. இறைவன் திருஅவையை அனைத்துத் தனிமனிதக் கருத்துக்கோட்பாட்டு விளக்கங்களிலிருந்து விடுவித்து, எளிமையான நற்செய்திக்கு வழிநடத்துவாராக என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
அன்பு
பற்றிப் பேசும் மற்றும் அன்பைக் கொண்டுவரும் அழகான தூய்மையான
நற்செய்திக்கு இறைவன் திருஅவையை வழிநடத்துவாராக என்று உரைத்த திருத்தந்தை, தனிமனிதப்போக்கின்படி நற்செய்திக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விளக்கமும் தவறானது என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாப்பிறைத் தலைமைப்பணியை ஏற்று ஏப்ரல் 19 இவ்வெள்ளியன்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளவேளை, இந்நாளின் காலையில் புனித மார்த்தா இல்லத்தில் வத்திக்கானின் அச்சகத்துறையினர் மற்றும் L'Osservatore Romano நாளிதழ்ப் பணியாளர்க்கு நிகழ்த்திய திருப்பலியில், திருஅவைக்காகவும், இதயங்களின் மனமாற்றத்திற்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
புனித பவுலின் மனமாற்றம், கப்பர்நகூம் தொழுகைக்கூடத்தில் இயேசுவின் உரை ஆகிய இரண்டு விவிலியப் பகுதிகளை மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் வார்த்தை அன்பின் வார்த்தை என்பதால் அதனைத் தாழ்மையான இதயத்தோடு ஏற்க வேண்டும், இவ்வார்த்தை நம் அறிவின் வழியாக நுழைந்து நேரடியாக இதயத்துக்குச் செல்கின்றது என்றும் கூறினார்.
ஆயினும், தங்களது அறிவால்மட்டும் புரிந்துகொண்ட நற்செய்தியை நடைமுறைப்படுத்த விரும்புகிறவர்களும் இருக்கிறார்கள், இவர்கள் பெரிய கருத்தியல்வாதிகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இறைவார்த்தையைப் பணிவான, திறந்த உள்ளத்துடன் ஏற்ற அன்னைமரியா, எசாயா, எரேமியா, மோசே போன்றவர்களைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவார்த்தைக்கு அறிவுப்பூர்வமாகப் பதிலளித்த மறைநூல் அறிஞர்கள், இறைவார்த்தை இதயத்துக்குச் செல்கின்றது மற்றும் மனமாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அறியாமல் இருந்தவர்கள் என்றும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ், ஈக்குவதோர் அரசுத்தலைவர் சந்திப்பு
ஏப்.16,2013. இவ்வெள்ளியன்று ஈக்குவதோர் அரசுத்தலைவர் Rafael Vicente Correa Delgadoவை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அரசுத்தலைவர் Correa Delgado.
ஈக்குவதோர் சமூக வாழ்வின் பல்வேறு துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் மற்றும் ஈக்குவதோர் நாட்டுக்கும், தலத்திருஅவைக்கும் இடையேயான உறவுகள் குறித்து இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
ஈக்குவதோர் நாட்டின் பூர்வீக இனமக்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் மதித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், நாட்டின்
சமூகநீதி மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல் போன்ற விவகாரங்களும்
இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாகத் திருப்பீடம் மேலும் அறிவித்தது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களுக்குப் பணி செய்வோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் பாராட்டு
ஏப்.19,2013.
சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களோடு நெருக்கமாக இருந்து அவர்களைப்
புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவி செய்வதற்கு முயற்சிக்கும் மக்களுக்குத்
தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டினா நாட்டின் Buenos Aires
சேரிகளில் வாழும் மக்கள்மீது கர்தினால் பெர்கோலியோவாகிய திருத்தந்தை
பிரான்சிஸ் கொண்டிருந்த அன்புக்கு நன்றி சொல்லி கடிதம் அனுப்பிய Plaza de Mayo அன்னையர் கழகத்தின் தலைவர் Hebe de Bonafiniக்கு அனுப்பியுள்ள நன்றிக் கடிதத்தில் திருத்தந்தை இவ்வாறு பாராட்டியுள்ளார்.
தான் ஏற்றுள்ள இந்தப் பாப்பிறைப் பணியில், உலகில்
வறுமை ஒழிப்புக்காகப் போராடுவதற்குத் தனக்கு இறைவன் சக்தியை அளிக்குமாறு
செபிக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதேசமயம், பொதுநல வாழ்வுக்குப் பொறுப்பானவர்கள், உலகில்
வறுமை என்ற வடுவைக் களைவதற்கு ஊக்கமுடன் செயல்பட வேண்டுமென்று தான்
செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் நேரடிச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.
Plaza de Mayo அன்னையர் கழகம் என்பது, அர்ஜென்டினாவில்
1976ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரை இடம்பெற்ற இராணுவ சர்வாதிகார ஆட்சியில்
காணாமற்போன குழந்தைகளின் அன்னையர் அமைப்பாகும். இவ்வமைப்பினர் 1977ம்
ஆண்டிலிருந்து ஒவ்வொரு வியாழனன்றும் Casa Rosada என்ற
அரசு அலுவலகத்தின்முன்கூடி அந்த இராணுவ ஆட்சியில் நடத்தப்பட்ட
குற்றங்களுக்கு எதிராகத் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணிக்காலம் பாத்திமா அன்னைமரியிடம் அர்ப்பணிப்பு
ஏப்.19,2013. வருகிற மே 13ம் தேதி, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் பாப்பிறைத் தலைமைப்பணிக்காலத்தை பாத்திமா அன்னையிடம்
அர்ப்பணிக்கவுள்ளனர் போர்த்துக்கல் நாட்டு ஆயர்கள்.
தனது
பாப்பிறைத் தலைமைப்பணிக்காலத்தைப் பாத்திமா அன்னையிடம் அர்ப்பணிக்குமாறு
கேட்டுக்கொண்ட திருத்தந்தையின் சிறப்பான வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக, பாத்திமா அன்னையின் விழாவான வருகிற மே 13ம் தேதி போர்த்துக்கல் நாட்டு ஆயர்கள் இந்நிகழ்வை நடத்தவுள்ளனர்.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் மேய்ப்புப்பணியை அர்ப்பணிக்கும் இந்நிகழ்வில்
திருப்பயணிகள் கலந்துகொள்ளுமாறு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலமணிநேரங்களுக்குப் பின்னர் போர்த்துக்கல் நாட்டுக் கர்தினால் José Policarpoடம் பேசிய திருத்தந்தை,
தனது பாப்பிறைத் தலைமைப்பணிக்காலத்தை பாத்திமா அன்னையிடம்
அர்ப்பணிக்குமாறு ஒரு சிறப்பான வேண்டுகோளை முன்வைத்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. ஆயர் Paglia : முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவிக்காலம் தாழ்ச்சியின் அடையாளமாக இருந்தது
ஏப்.19,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவிக்காலம், அன்பு மற்றும் தாழ்மையின் அடையாளமாக இருந்தது என்று திருப்பீட குடும்ப அவையின் தலைவர் ஆயர் Vincenzo Paglia கூறினார்.
திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அவர்கள் கத்தோலிக்கத் திருஅவையின் 265வது திருத்தந்தையாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டதன் 8ம் ஆண்டு இவ்வெள்ளிக்கிழமையன்று நிறைவடைந்ததை
முன்னிட்டு வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்
ஆயர் Paglia.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பதவி விலகல் அவரது தாழ்மைப் பண்பை எடுத்துரைக்கின்றது என்றும், உண்மை மற்றும் அன்பின்மீது தாகம் கொண்டிருக்கும் அவரது ஆன்மீகத்தை இப்பதவி விலகலில் காண முடிந்தது என்றும் ஆயர் Paglia கூறினார்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி திருஅவையின் 265வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
2013ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதியோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைகின்றது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. வத்திக்கான் : சர்க்கஸ், ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவச் செய்தியைக் கொண்டுள்ளது
ஏப்.19,2013. சர்க்கஸ் என்ற காட்சிக்கூடாரம், ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவச் செய்தியைக் கொண்டுள்ளது, இதனைத் திருஅவை பாராட்டுகின்றது என்று திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò கூறினார்.
இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் 4வது அனைத்துலக சர்க்கஸ் தினத்திற்கென, உலக சர்க்கஸ் கூட்டமைப்புத் தலைவர் Urs Pilzக்குச் செய்தி அனுப்பியுள்ள கர்தினால் Vegliò, 2012ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியன்று, முன்னாள்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சர்க்கஸ் கலைஞர்களுக்கு வழங்கிய செய்தி
இன்னும் பசுமையாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்க்கஸ் விளையாட்டுக்களை நடத்துபவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கர்தினால் Vegliò, போர், வன்முறை, இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சர்க்கஸ் நடத்துவதற்குத் தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தமது பாப்பிறை தலைமைப்பணியின் தொடக்கத்தில் கூறியதுபோல அனைவரும் நம்பிக்கையின் ஒளியைப் பார்க்கவும், நம்பிக்கையை வழங்கவும் வேண்டுமெனவும் கர்தினால் Vegliò தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. சிரியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்த விவாதங்களைக் கைவிடுமாறு மேற்கத்திய நாடுகளுக்கு முதுபெரும் தலைவர் வேண்டுகோள்
ஏப்.19,2013.
சிரியாவின் எதிர்தரப்புப் படைகளுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்த
விவாதங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக அந்நாட்டில் அமைதியைக் கொண்டுவருவதற்கு
மேற்கத்திய நாடுகள் உடனடியாக முயற்சிகளில் இறங்குமாறு வலியுறுத்தியுள்ளார்
சிரியாவின் முதுபெரும் தலைவர் Gregoire Laham.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று சந்தித்த பின்னர் வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த முதுபெரும் தலைவர் 3ம் Laham, சிரியாவில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து திருத்தந்தையிடம் எடுத்துச் சொன்னதாகத் தெரிவித்தார்.
வருகிற ஜூனில் அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமாவுக்கும், இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putinக்கும் இடையே இடம்பெறும் சந்திப்பு சிரியாவுக்கு ஏதாவது நன்மையைக் கொண்டுவரும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாகவும் முதுபெரும் தலைவர் Laham கூறினார்.
ஆயுதங்களை வழங்குவதா வேண்டாமா என்பதைத் தவிர வேறுவிதமாயச் சிந்திக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கின்றது என்றுரைத்த அவர், அமைதிக்கான நடவடிக்கைகள் குறித்து யாரும் உண்மையாகச் சிந்திப்பதில்லை என்று கூறினார்.
ஐ.நா.வின் கணிப்புப்படி, சிரியாவின்
சண்டையில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் மற்றும் 30
இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் புலம்பெயர்ந்துள்ளனர் எனத் தெரிகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. அருள்பணியாளர் லொம்பார்தி அவர்களுக்கு “ஆண்டின் ஊடகத் தொடர்பாளர் விருது”
ஏப்.19,2013. “ஆண்டின் ஊடகத் தொடர்பாளர்” என்ற உயிரிய விருதை திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி அவர்களுக்கு வழங்கியுள்ளது Allianz Group என்ற ஜெர்மனியின் பன்னாட்டு நிதிப்பணிகள் நிறுவனம்.
அருள்பணியாளர் லொம்பார்தி, திருப்பீடம் குறித்து விளக்கும்போது, மேம்பட்ட பண்போடும், அனுபவத்தோடும் அதேநேரம் தன்னை முக்கிய நபர் என்று காட்டிக்கொள்ளாமலும் இருப்பவர் என்று பாராட்டியுள்ளது Allianz நிறுவனம்.
70க்கு மேற்பட்ட நாடுகளில் 7 கோடியே 80 இலட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் தனது நிறுவனத்தின் இயக்குனர்களுடன் கூட்டம் நடத்தி உலகின் ஊடகங்கள் குறித்து அலசி வருகிறது.
இவ்வியாழனன்று நடந்த இக்கூட்டத்தில் அருள்பணியாளர் லொம்பார்தி அவர்களுக்கு “ஆண்டின் ஊடகத் தொடர்பாளர்” என்ற உயிரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அருள்பணியாளர் லொம்பார்தி வத்திக்கான் வானொலியின் இயக்குனருமாவார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
9. மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறுவது, மனித உரிமைகளை மீறும் செயல் : WHO
ஏப்.19,2013. ஒரு நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் தங்களது பெயர்களைப் பதிவு செய்யத் தவறுவது, மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் மருத்துவர் Marie-Paule Kieny கூறினார்.
குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது குறித்துப் பேசிய மருத்துவர் Kieny, ஒரு நாட்டில் பிறந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கைச் சரிவரத் தெரியாதபோது, அக்குழந்தைகளின் நலவாழ்வைப் பாதுகாப்பதற்குத் தேவையான தடுப்பூசிகளைக் கணக்கிடுவது கடினம் என்று தெரிவித்தார்.
மேலும், இச்சனிக்கிழமையன்று தொடங்கும் உலக நோய் எதிர்ப்புச் சக்தி வாரத்தையொட்டி பேசிய WHO நிறுவனத்தின் உதவி இயக்குனர் Flavia Bustreo, 2 கோடியே 20 இலட்சம் சிறாருக்கு, தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களுக்கானத் தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறினார்.
தடுப்பூசிகள் போடுவதால், ஆண்டுதோறும் 20 இலட்சம் முதல் 30 இலட்சம் வரையிலான குழந்தைகளின் மரணங்களை நிறுத்த முடியும் என்று Bustreo தெரிவித்தார்.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment