Wednesday, 17 April 2013

Catholic News in Tamil - 17/04/13

1. கிறிஸ்துவின் சாட்சிகளைப் பெற்றெடுக்கும் தாயாக திருஅவையைக்  கருதவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

2. இறைவன் நம்மை வரவேற்க எப்போதும் காத்திருக்கிறார் என்ற செய்தியைத் திருத்தந்தை மக்களிடையே ஆழமாகப் பதித்துள்ளார் - கர்தினால் Angelo Comastri

3. அருள் பணியாளர்கள் மேற்கொள்ளும் தினசரி பணிகளுக்கு அருள்பொழிவு உந்துதலாக இருக்கும் - கர்தினால் Mauro Piacenza

4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டது இறைவன் வழங்கிய ஆச்சரியங்களில் ஒன்று - பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவையின் தலைவர்

5. ஈராக் நாட்டில் இடம்பெறும் உள்ளூர் தேர்தலில் கிறிஸ்தவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் - பாபிலோனிய முதுபெரும் தலைவர்

6. ஆர்ஜென்டினா இளையோரை வீரர்களாக மாற்றுவது போர் அல்ல, மாறாக, அன்பே - அந்நாட்டு ஆயர்கள்

7. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால், உரோம் நகரின் முக்கிய சதுக்கத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி

8. சாலையோரக் குழந்தைகளுக்கு கல்வி வசதிகள் செய்து தருவதில் இஸ்பானிய நாட்டு கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்துவின் சாட்சிகளைப் பெற்றெடுக்கும் தாயாக திருஅவையைக்  கருதவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஏப்.17,2013. குழந்தைகளைத் தூங்கவைக்கும் செவிலித்தாயாகக் கருதாமல், கிறிஸ்துவின் சாட்சிகளைப் பெற்றெடுக்கும் தாயாக திருஅவையைக்  கருதவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இப்புதனன்று காலை புனித மார்த்தா இல்லத்தில் காலை திருப்பலியாற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, புனித ஸ்தேவான் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து திருஅவைக்கு உருவான நெருக்கடியான வரலாற்றைக் குறித்துப் பேசினார்.
இந்த நெருக்கடியான நேரத்தில், எருசலேமிலிருந்து சிதறுண்ட மக்கள், தாங்களாகவே பல்வேறு நாடுகளுக்குச் சென்று, கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்பியதையும் சுட்டிக் காட்டினார் திருத்தந்தை.
அருள் பணியாளர்களும், ஆயர்களும் மட்டுமே கிறிஸ்துவை எடுத்துரைக்க அழைக்கப்படவில்லை, மாறாக திருமுழுக்கு பெற்ற அனைவருமே கிறிஸ்துவை அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைத் தெளிவுபடுத்தியத் திருத்தந்தை, இவ்வகையில் இயங்கும் திருஅவையே, மக்களைப் பெற்றெடுக்கும் தாயாக விளங்கும், இல்லையேல், அது குழந்தைகளைக் கண்காணிக்கும் செவிலித்தாயாக மட்டுமே விளங்கும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
திருமுழுக்கு பெற்ற அனைவரும் கிறிஸ்துவைப் பறைசாற்றும் துணிவு பெறவேண்டும் என்றுரைத்தத் திருத்தந்தை, வார்த்தையாலும், வாழ்வாலும் கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக விளங்க, திருப்பலியில் கலந்துகொண்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. இறைவன் நம்மை வரவேற்க எப்போதும் காத்திருக்கிறார் என்ற செய்தியைத் திருத்தந்தை மக்களிடையே ஆழமாகப் பதித்துள்ளார் - கர்தினால் Angelo Comastri

ஏப்.17,2013. இறைவன் திருஅவையை அற்புதமான முறையில் வழிநடத்துகிறார் என்பதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தெரிவு மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தையின் சார்பில் வத்திக்கான் நகரின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றும் கர்தினால் Angelo Comastri அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றியுள்ள முதல் 33 நாட்களைக் குறித்து வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
உலகின் எல்லைகளே கத்தோலிக்கத் திருஅவையின் எல்லைகள் என்ற கண்ணோட்டத்தில் காணும்போது, உலகின் ஒரு கோடியிலிருந்து திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதியத்  திருத்தந்தை, முதல் முறை மக்கள் முன் தோன்றியதே ஓர் ஆன்மீக அனுபவமாக இருந்தது என்று கர்தினால் Comastri நினைவுகூர்ந்தார்.
திருத்தந்தையின் முதல் மாதப் பணிகளின் தனித்துவம் குறித்து, நாளிதழ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் Comastri அவர்கள், அன்பும், கருணையும் மிகுந்த இறைவன் நம்மை வரவேற்க எப்போதும் காத்திருக்கிறார் என்ற செய்தியைத் திருத்தந்தை மக்களிடையே ஆழமாகப் பதித்துள்ளார் என்று கூறினார்.
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு, காயப்பட்டிருந்த இளையோரின் பாதங்களைக் கழுவியது, மாற்றுத் திறனாளிகளை அரவணைத்தது போன்ற அன்புச் செயல்களால் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இருள் சூழ்ந்திருக்கும் மக்கள் மனதில் ஒளியைக் கொணரந்துள்ளார் என்றும் கர்தினால் Comastri அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. அருள் பணியாளர்கள் மேற்கொள்ளும் தினசரி பணிகளுக்கு அருள்பொழிவு உந்துதலாக இருக்கும் - கர்தினால் Mauro Piacenza

ஏப்.17,2013. தாங்கள் அருள்பொழிவு செய்யப்பட்டுள்ளவர்கள் என்பதை அருள் பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் உணரும்போது, அவர்கள் மேற்கொள்ளும் தினசரி பணிகளுக்கு அது உந்துதலாக இருக்கும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அருள் பணியாளர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரை போலந்து நாட்டின் Krakow நகரில் இச்செவ்வாயன்று மாலை சந்தித்த, அருள் பணியாளர்கள் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenza, அருள் பொழிவைப் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
மக்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் பணிக்கே அருள் பொழிவு செய்யப்படுகிறோம் என்று, புனித வியாழன் காலை, அருள் பொழிவுக்குப் பயன்படுத்தப்படும் புனித எண்ணெயை அர்ச்சிக்கும் திருப்பலியை நிறைவேற்றியபோது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, கர்தினால் Piacenza சுட்டிக்காட்டினார்.
அருள் பணியாளர்களின் வாழ்வையும், பணியையும் குறித்து வத்திக்கான் வெளியிட்டுள்ள 160 பக்கங்கள் அடங்கிய புதிய நூல் ஒன்றை இக்கூட்டத்தில் சமர்ப்பித்தார் கர்தினால் Piacenza.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டது இறைவன் வழங்கிய ஆச்சரியங்களில் ஒன்று - பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவையின் தலைவர்

ஏப்.17,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதும் திருஅவையின் வரலாற்றில் இறைவன் வழங்கிய ஆச்சரியங்கள் என்று பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் André Vingt-Trois கூறினார்.
ஏப்ரல் 16, இச்செவ்வாய் முதல் மூன்று நாட்கள் பாரிஸ் மாநகரில் நடைபெறும் பிரான்ஸ் ஆயர் பேரவையின் வசந்தகாலக் கூட்டத்தின் துவக்கத்தில் உரையாற்றிய பாரிஸ் பேராயர் கர்தினால் Vingt-Trois இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் கர்தினால்கள் மேற்கொண்ட பொது அவையும், கான்கிளேவ் சிறப்பு அவையும் செபம் நிறைந்த ஓர் அனுபவமாக இருந்ததென்பதை கர்தினால் Vingt-Trois தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
'உரோமையின் ஆயர்' என்று திருத்தந்தை தன்னை அழைத்து வருவதைச் சிறப்பாக எடுத்துரைத்த கர்தினால் Vingt-Trois, உரோமையின் ஆயர் என்பதாலேயே அவர் அகில உலகின் மீதும் உரிமை கொள்கிறார் என்ற வரலாற்றை திருத்தந்தை நமக்கு நினைவுறுத்துகிறார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. ஈராக் நாட்டில் இடம்பெறும் உள்ளூர் தேர்தலில் கிறிஸ்தவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் - பாபிலோனிய முதுபெரும் தலைவர்

ஏப்.17,2013. ஏப்ரல் 20, வருகிற சனிக்கிழமை ஈராக் நாட்டில் இடம்பெறும் உள்ளூர் தேர்தலில் கிறிஸ்தவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்று கல்தேய வழிபாட்டு முறையைச் சேர்ந்த பாபிலோனிய முதுபெரும் தலைவர் முதலாம் Louis Raphael Sako அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஈராக் நாட்டின் வரலாற்றில் வேரூன்றியுள்ள கிறிஸ்தவக் கலாச்சாரத்தில் பிறந்த அனைவருக்கும், அந்நாட்டை வளர்க்கவும், உயர்த்தவும் கடமை உள்ளது என்பதை முதுபெரும் தலைவரின் செய்தி வலியுறுத்துகின்றது.
தேர்தலில் கலந்துகொண்டு, நாட்டின் ஒற்றுமைக்கு உழைப்பது அனைத்து கிறிஸ்தவர்களின் கடமை என்பதை எடுத்துரைக்கும் முதுபெரும் தலைவர், திருஅவை என்ற முறையில் மக்கள் யாருக்கு வாக்கு வழங்கவேண்டும் என்ற அரசியலில் பங்கேற்பது தங்கள் பணியல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார்.
2011ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகள் ஈராக் நாட்டைவிட்டு விலக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides

6. ஆர்ஜென்டினா இளையோரை வீரர்களாக மாற்றுவது போர் அல்ல, மாறாக, அன்பே - அந்நாட்டு ஆயர்கள்

ஏப்.17,2013. ஆர்ஜென்டினா நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது இளையோர் மேற்கொண்ட துயர் துடைப்புப் பணிகள் அமைதியான ஒரு புரட்சியாகவே அமைந்தன என்று அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஏப்ரல் மாதத் துவக்கத்தில் ஆர்ஜென்டினாவின் தலைநகர் Buenos Airesஐத் தாக்கிய புயல், வெள்ளம் ஆகிய இயற்கை இடர்பாடுகளின்போது, இளையோர் பலர் இரவு பகலாக உழைத்தது, பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்று La Plata உயர்மறைமாவட்ட துணை ஆயர்கள் Nicolas Baisi, மற்றும் Alberto Bochatey ஆகிய இருவரும் Fides செய்திக்கு அனுப்பியுள்ள குறிப்பில் கூறியுள்ளனர்.
La Plataவின் குருமடம் ஐந்தடி நீரில் மூழ்கியிருந்தாலும், குருமடத்திற்கு அருகில் இருந்த பகுதிகள் அதைவிட அதிகம் பாதிக்கப்பட்டதால், அங்கு வாழ்வோரை குருமடத்தில் இரவு தங்க வைத்ததை ஆயர் Bochatey சிறப்பாக நினைவு கூர்ந்தார்.
இளையோரை வீரர்களாக மாற்றுவது போர் அல்ல, மாறாக, அன்பே என்பதை அண்மைய வெள்ளம் நன்கு உணர்த்திச் சென்றது என்று ஆயர் Baisi கூறினார்.

ஆதாரம் : Fides

7. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால், உரோம் நகரின் முக்கிய சதுக்கத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி

ஏப்.17,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால், மக்கள் சதுக்கம் என்று அழைக்கப்படும் உரோம் நகரின் முக்கிய சதுக்கத்தில் ஏப்ரல் 20, இச்சனிக்கிழமை மாலையில் ஆடல், பாடல் நிகழ்ச்சி ஒன்றை உரோம் நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
உரோம் நகர மேயர் Gianni Alemanno, மற்றும் உதவி மேயர் Sveva Belviso ஆகியோரின் முயற்சியால் ஏற்பாடு செய்யப்படும் நான்கு மணி நேர நிகழ்ச்சியில், ஆர்ஜென்டினா நாட்டின் பாரம்பரிய பாடல்களும், நடனங்களும் முக்கியமாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரோம் நகரில் உள்ள ஆர்ஜென்டினா தூதரகத்தின் உதவியுடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், திருத்தந்தை பிரான்சிஸ் மீது கொண்டுள்ள மதிப்பினால், அந்நாட்டின் புகழ்பெற்ற கலைஞர்கள் இலவசமாக இந்நிகழ்ச்சிகளை ஆற்றவுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. சாலையோரக் குழந்தைகளுக்கு கல்வி வசதிகள் செய்து தருவதில் இஸ்பானிய நாட்டு கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு

ஏப்.17,2013. உத்திரப்பிரதேசத்தின் முக்கிய நகர்களில் ஒன்றான அலகாபாத்தின் சேரிகளில் வாழும் 3000க்கும் அதிகமான சாலையோரக் குழந்தைகளில் 800 பேருக்கு கல்வி வசதிகள் செய்து தருவதில் இஸ்பானிய நாட்டு கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனமான Manos Unidas ஈடுபட்டுள்ளது.
அண்மையில் கடைபிடிக்கப்பட்ட அகில உலக சாலையோரக் குழந்தைகள் நாளையொட்டி, Manos Unidas அமைப்பு, Fides செய்திக்கு அளித்த குறிப்பு ஒன்றில், 4 வயதுக்கும், 14 வயதுக்கும் உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள உதவிகள் விவரிக்கப்பட்டுள்ளன.
அலகாபாத் நகரில் அமைந்துள்ள 20 கல்வி நிறுவனங்களில் 800க்கும் அதிகமான குழந்தைகள் கல்வி பயின்று வருவதாகக் கூறும் இக்குறிப்பில், குழந்தைகளின் பெற்றோர் மத்தியிலும் Manos Unidas மேற்கொள்ளும் விழிப்புணர்வு முயற்சிகள் கூறப்பட்டுள்ளன.
Slumdog Millionaire என்ற படத்தை இயக்கிய Danny Boyle போன்றவர்களின் ஆதரவுடன், 2011ம் ஆண்டு Consortium for Street Children என்ற அமைப்பு உருவாக்கிய அகில உலக சாலையோரக் குழந்தைகள் நாள், உலகெங்கும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : Fides

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...