1. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் அழகான முகத்தைக் காண்பதற்கு நமது இதயங்கள் தயார் செய்யப்படுகின்றன
2. மடகாஸ்கர் அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு
3. லெபனன் முதுபெரும் தலைவர் : ஏழைகளின் திருத்தந்தை பிரான்சிஸ்
4. சிரியா குறித்த பிரிட்டன் கத்தோலிக்க, ஆங்லிக்கன் தலைவர்களின் அறிக்கை
5. புதுடெல்லி பிறரன்பு மையம் : நாட்டையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கு அனைத்துவிதமான வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும்
6. இந்திய காரித்தாஸ் ஏறக்குறைய 5 இலட்சம் பேருக்கு மலேரியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது
7. அனைத்துலக அறிவுச்சொத்து தினம் படைப்பாற்றல்திறனை ஊக்குவிக்கின்றது
8. இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் அதிவேக இரயில் பாதைகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் அழகான முகத்தைக் காண்பதற்கு நமது இதயங்கள் தயார் செய்யப்படுகின்றன
ஏப்.26,2013.
இறைவனின் அழகான முகத்தைக் காண்பதற்கு நமது விசுவாசப் பயணம் நமது
இதயங்களைத் தயார் செய்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வெள்ளிக்கிழமை காலை நிகழ்த்திய திருப்பலியில், உங்கள்
உள்ளம் கலங்க வேண்டாம் என்று இயேசு தமது இறுதிப் பரியாவிடை உரையின்போது
தம் சீடர்களுக்குக் கூறிய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து ஆற்றிய சிறிய
மறையுரையில் இவ்வாறு கூறினார்.
சோதனைகள், ஆறுதல்கள், கலக்கங்கள், நல்லவைகள் ஆகியவற்றோடு நம் ஆண்டவர் நமது வாழ்வுப் பயணத்தில் நமது இதயங்களைத் தயார் செய்கின்றார் என்றுரைத்த திருத்தந்தை, நமது வாழ்வுப் பயணம் முழுவதும் தயாரிப்பின் பயணமாக இருக்கின்றது என்றும் கூறினார்.
கிறிஸ்தவ வாழ்வு முழுவதும் இயேசுவின் பணியாக இருக்கின்றது, நமது
ஆன்மாவின் கண்கள் இயேசுவின் அழகான முகத்தைத் தியானிப்பதற்குத் தயார்
செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விண்ணகத்திற்கானத் தயாரிப்பு என்பது தூரத்தில் இருந்து அவரை வாழ்த்துவதற்குத் தொடங்குவதாகும், இயேசு நமது இதயங்களைத் தயார் செய்வதற்கு அனுமதிப்பதாகும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், விண்ணக வீட்டுக்கு நமது கண்களையும், இதயங்களையும், நமது செவிப்புலனையும் தயார் செய்வதற்கு நம் ஆண்டவரை அனுமதிப்பதற்கு அவர் நமக்கு நம்பிக்கையையும், துணிச்சலையும், தாழ்ச்சியையும் தர வேண்டுமென்று செபிப்போம் எனவும் இறுதியில் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. மடகாஸ்கர் அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு
ஏப்.26,2013. ஆப்ரிக்காவின் மடகாஸ்கர் நாட்டில் அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகிச்செல்லவிருக்கும் Andry Nirina Rajoelina அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அரசுத்தலைவர் Rajoelina.
மடகாஸ்கர் நாட்டுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நல்ல உறவுகள் இருந்து வருவது குறித்து, இனிதாக இடம்பெற்ற இச்சந்திப்பில் பேசப்பட்டதாகத் தெரிவித்த திருப்பீட பத்திரிகை அலுவலகம், அந்நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாகக் கூறியது.
மடகாஸ்கரின் பொருளாதார முன்னேற்றம், அந்நாடு பன்னாட்டு அளவில் உறவுகளைக் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியம், உறுதியான தன்மையையும் சனநாயகத்தையும் அமைப்பதற்கு அந்நாடு தற்போது எடுத்துவரும் முயற்சிகள், கத்தோலிக்கத் திருஅவையின் பங்கு போன்ற விவகாரங்கள் இச்சந்திப்பில் இடம்பெற்றதாகத் தெரிவித்தது திருப்பீட பத்திரிகை அலுவலகம்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. லெபனன் முதுபெரும் தலைவர் : ஏழைகளின் திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்.26,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராக
இருந்த சமயத்தில் வாழ்ந்த வீட்டைப் பார்க்கும்போது அவர் தற்போது
வாழ்ந்துவரும் வாழ்வைப் புரிந்துகொள்ள முடிகின்றது என்று லெபனன் மாரனைட்
முதுபெரும் தலைவர் கர்தினால் Beshara Rai கூறினார்.
பிரேசில், அர்ஜென்டினா, மெக்சிகோ, உருகுவாய், வெனெசுவேலா ஆகிய நாடுகளில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் லெபனன் நாட்டு குடியேற்றதாரர்களைப் பார்வையிட்டு வரும் கர்தினால் Rai, Buenos Airesல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்ந்த வீட்டைப் பார்த்துவிட்டு இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அறையில் ஒரு சிலுவை மற்றும் நிறைய நூல்கள் இருக்கின்றன என்றும், தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனவசதி என எதுவும் கிடையாது என்றும் கர்தினால் Rai தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் வழக்கமாகத் திருத்தந்தையர் தங்கும் இடத்தில் தங்காமல், புனித மார்த்தா இல்லத்தில் தங்குவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகின்றது என்றும் கர்தினால் Rai கூறினார்.
கடவுளில் மூழ்கியிருந்த மனிதர் என்ற புனிதர் Sharbel குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்தான், பிரான்சிஸ் அவர்களின் வீட்டைப் பார்த்தவுடன் தனக்கு நினைவுக்கு வந்தது என்றும் லெபனன் முதுபெரும் தலைவர் ராய் கூறினார்
ஆதாரம் : AsiaNews
4. சிரியா குறித்த பிரிட்டன் கத்தோலிக்க, ஆங்லிக்கன் தலைவர்களின் அறிக்கை
ஏப்.26,2013. சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கடும் வன்முறைகளுக்கு அரசியல்ரீதியாகத் தீர்வு காணப்படுமாறும், அனைத்து சிரியா மக்களும் தங்களின் அடிப்படை உரிமைகளைப் பெறும்படியாகவும் தாங்கள் தொடர்ந்து செபிப்பதாக, பிரிட்டனின் கத்தோலிக்க மற்றும் ஆங்லிக்கன் கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
சிரியாவில் இவ்வாரத்தில் இரு ஆயர்கள் கடத்தப்பட்டிருப்பது குறித்தும், அந்நாட்டில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கடும் வன்முறைகள் குறித்தும் பிரிட்டனின் Westminster கத்தோலிக்கப் பேராயர் Vincent Nichols, Canterburyன் ஆங்லிக்கன் பேராயர் Justin Welby ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சிரியாவின் கிறிஸ்தவச் சமூகங்களுக்குத் தங்களது உறுதியான ஆதரவையும் செபத்தையும் தெரிவித்துள்ள அத்தலைவர்கள், அந்நாட்டில் துன்புறும் மக்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிரியாவில்
பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்த சமய சகிப்புத்தன்மை மீண்டும்
காக்கப்படும்படியாகவும் அத்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆதாரம் : CCN
5. புதுடெல்லி பிறரன்பு மையம் : நாட்டையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கு அனைத்துவிதமான வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும்
ஏப்.26,2013. குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றி அவற்றுக்கு ஆதரவு வழங்குவதற்கு உதவும் வகையில், பெண்கள், சிறுமிகள், ஆண்கள், சிறுவர்கள்
என அனைவருக்கும் எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று புதுடெல்லி
உயர்மறைமாவட்ட பிறரன்பு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
“பாலியல் வன்செயலை நிறுத்து” என்ற தலைப்பில் Chetanalaya
என்ற புதுடெல்லி உயர்மறைமாவட்ட பிறரன்பு மையம் இவ்வியாழனன்று தொடங்கிய
வன்முறைக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய
அம்மையத்தின் இயக்குனர் அருள்பணி அகுஸ்தீன் சவரி ராஜ் இவ்வாறு
கேட்டுக்கொண்டார்.
பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக மட்டுமல்லாமல், ஆண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிரான உரிமை மீறல்களும் தொடர்ந்து இடம்பெற்றுவருவது, இந்தியாவுக்கு இடர்நிறைந்த விவகாரமாக இருக்கின்றது என்றுரைத்தார் அருள்பணி சவரி ராஜ்.
1994ம் ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட சமூகநலப்பணி மையமாக செயல்பட்டுவரும் Chetanalaya மையத்தின் பணிகளால் குறைந்தது 20 ஆயிரம் பெண்கள் பலனடைந்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்திய காரித்தாஸ் நிறுவனத்தோடு தொடர்புடைய இந்த Chetanalaya மையத்தின் உதவியுடன் மேலும் ஆறாயிரம் பெண்கள் சிறுதொழில்களைத் தொடங்கியுள்ளனர் என்றும், 600 குடும்பங்கள் வீடுகளைக் கட்டியுள்ளன என்றும் அருள்பணி சவரி ராஜ் கூறினார்
ஆதாரம் : AsiaNews
6. இந்திய காரித்தாஸ் ஏறக்குறைய 5 இலட்சம் பேருக்கு மலேரியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது
ஏப்.26,2013. வடகிழக்கு இந்திய மாநிலங்களும், ஒடிசா, ஜார்க்கண்ட், சட்டிஷ்கார், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் மலேரியாவால் அதிகம் தாக்கப்படுகின்றன என்று இந்திய காரித்தாஸ் நிறுவனம் கூறியது.
இவ்வியாழனன்று அனைத்துலக மலேரியா தினத்தைக் கடைப்பிடித்த இந்திய காரித்தாஸ் நிறுவனம், இந்தியாவில் மலேரியாவால் ஆண்டுதோறும் ஏறக்குறைய முப்பதாயிரம் பேர் வீதம் இறக்கும்வேளை, அந்நோயைத் தடுப்பது மற்றும் அதற்குச் சிகிச்சை அளிப்பது குறித்த கலந்தாய்வை நடத்தியுள்ளது.
82 விழுக்காட்டு இந்தியர்கள் மலேரியாவால் எளிதில் தாக்கப்படும் பகுதிகளில் வாழும்வேளை, 20 விழுக்காட்டு மக்கள் இந்நோயினால் அதிகம் தாக்கப்படுகின்றனர் என்று இந்திய காரித்தாஸ் நிறுவன உதவி இயக்குனர் அருள்பணி Paul Moonjely கூறினார்.
வடகிழக்கு
இந்தியாவில் 48 மாவட்டங்களில் ஏறக்குறைய 5 இலட்சம் பேருக்கு மலேரியா
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது இந்திய காரித்தாஸ் நிறுவனம்.
ஏப்ரல் 25, அனைத்துலக மலேரியா தினமாகும்.
ஆதாரம் : UCAN
7. அனைத்துலக அறிவுச்சொத்து தினம் படைப்பாற்றல்திறனை ஊக்குவிக்கின்றது
ஏப்.26,2013. படைப்பாற்றல்திறன்கொண்ட அடுத்த தலைமுறையினர் கனவு காண்பதற்குரிய திறமையைக் கொண்டுள்ளனர், இந்தத் தலைமுறையாகிய இளையோரே வருங்காலம் என்று அனைத்துலக அறிவுச்சொத்து நிறுவன இயக்குனர் Francis Gurry கூறினார்.
ஏப்ரல் 26, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக அறிவுச்சொத்து தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட Gurry, மனித சமுதாயம் அனைத்துக்கும் பொதுவான படைப்பாற்றல்திறனும், கண்டுபிடிப்புத்திறனும் இவ்வுலகின் வாழ்வின் தரத்தை மேம்படுத்துவதற்கு பொறுப்பானவை என்று கூறியுள்ளார்.
உலகில் படைப்பாற்றல்திறனும், புதிது புதிதான கண்டுபிடிப்புகளும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் Gurry.
அன்றாட வாழ்வில் அறிவுச்சொத்தின் பங்கு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் WIPO என்ற அனைத்துலக அறிவுச்சொத்து நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் 2000மாம் ஆண்டில் இந்த அனைத்துலக அறிவுச்சொத்து தினத்தைக் கடைப்பிடிக்கப்பட்டத் தொடங்கின.
ஆதாரம் : UN
8. இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் அதிவேக இரயில் பாதைகள்
ஏப்.26,2013. இலங்கையின் வடபகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவரும் இரயில் பாதைகள், மணிக்கு
120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவிதத்தில் உருவாக்கப்பட்டு
வருவதாக அந்த வேலைத்திட்டத்தின் தலைவர் எஸ்.எல்.குப்தா தெரிவித்தார்.
இத்திட்டம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செய்தி வழங்கிய அவர், மதவாச்சியிலிருந்து மன்னார் வரையில் 43 கிலோமீட்டர் தூர இரயில்பாதை முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இப்பாதையில் மணிக்கு 120 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் இரயில்கள் செல்லலாம் என்றும் குப்தா கூறியுள்ளார்.
இத்திட்டத்திற்கென இந்திய அரசு 80 கோடி டாலர்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம் : ANI
No comments:
Post a Comment