Sunday 28 April 2013

Catholic News in Tamil - 27/04/13

1. டாக்கா கட்டிட விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் செபம்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவை மகிழ்ச்சியோடு அறிவியுங்கள்

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், 70 ஆயிரம் இளையோரும்

4. டான்சானிய நாட்டு ஒன்றிப்புத் தினத்துக்கு திருத்தந்தை வாழ்த்து

5. 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு

6. பணி தொடர்புடைய நோய்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம்

7. செர்னோபில் அணுமின்நிலைய விபத்தின் பாதிப்புக்கள் வரலாற்றில் ஒருபோதும் மறக்கப்படக் கூடாது

8. உலகின் 8வது சக்தி வாய்ந்த நாடு இந்தியா

------------------------------------------------------------------------------------------------------

1. டாக்கா கட்டிட விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் செபம்

ஏப்.27,2013. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற கட்டிட விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காகத் தன்னோடு சேர்ந்து செபிக்குமாறு தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும், அத்துன்பத்தைத் தாங்கும் சக்தியையும் இறைவன் கொடுக்குமாறு செபிக்கவும் கேட்டுள்ளார் திருத்தந்தை.
மேலும், அன்பு இளையோரே, கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள கொடைகளாகிய உங்களது திறமைகளைப் புதைத்து வைக்காதீர்கள், மாபெரும் காரியங்கள் குறித்து கனவு காண்பதற்குப் பயப்படாதீர்கள் என்று இவ்வெள்ளிக்கிழமை மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டாக்காவையடுத்துள்ள சவார் பகுதியில் இரண்டு ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வந்த Rana 8 மாடி கட்டிடம் கடந்த புதன்கிழமையன்று இடிந்ததில், அங்கு பணியில் இருந்த ஆயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் 340க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இன்னும் ஏறக்குறைய 900 பேரைக் காணவில்லை. மீட்பு பணிகளும் இடைவிடாமல் இடம்பெற்றுவருகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இவ்விபத்து தொடர்பாக, இவ்விரண்டு தொழிற்சாலைகளின் முதலாளிகளும், இரு பொறியியலாளர்களும் இச்சனிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவை மகிழ்ச்சியோடு அறிவியுங்கள்

ஏப்.27,2013. நற்செய்திப்பணி புரியவும், தனது பெயரை அறிவிக்கவும் நம்மை அழைக்கும் இயேசுவை மகிழ்ச்சியோடு நோக்குமாறும், நமக்குள்ளே முடங்கிக் கிடப்பதைத் தவிர்க்குமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
இச்சனிக்கிழமை காலை புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் நற்செய்தி அறிவிப்புப்பணியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்துவின் சீடர்கள் சமூகம் கூடியிருந்த அந்தியோக்கியாவில் பலர் நம் ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்பதற்கு மறுத்து, தங்களையே ஏன் தாழிட்டுக்கொண்டார்கள் என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, ஏனெனில் அவர்கள் மூடிய இதயங்களைக் கொண்டிருந்தனர், தூயஆவியின் புதிய வாழ்வுக்குத் தங்களைக் கையளிக்காமல் இருந்தனர் என்று விளக்கினார்.
எல்லாமே தாங்கள் நினைத்தபடியே இருக்க வேண்டும் என்றும், தங்களை விசுவாசத்தின் காவலர்கள் என்றும் அவர்கள் கருதியதால் கிறிஸ்துவின் சீடர்களுக்கு எதிராகப் பேசத் தொடங்கினார்கள் என்றுரைத்த திருத்தந்தை, இக்குழுக்களின் இந்தப் போக்கை, வரலாற்றில் தங்களையே தாழிட்டுக்கொண்டிருக்கும் குழுக்களோடு ஒப்பிடலாம் என்றும் கூறினார்.
இக்குழுக்கள் ஆண்டவருக்குத் தங்களையேத் திறக்கும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கவில்லை எனவும், இக்குழுக்கள் வீண்பேச்சும் அவதூறும்  பேசுபவர்கள், இக்குழுக்களில் உள்ளவர்கள் தங்களையே பார்க்கின்றனர், இறுதியில் இந்நிலை ஒருவர் ஒருவரை அழித்துக்கொள்வதில் முடிகின்றது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
நற்செய்தி அறிவிக்க இயேசு நம்மை எவ்வாறு அனுப்புகிறார் என்று நோக்குமாறு வலியுறுத்திய திருத்தந்தை, இயேசு தமது பெயரை நாம் மகிழ்ச்சியோடு அறிவிக்க வேண்டுமென விரும்புகிறார், எனவே தூய ஆவியின் மகிழ்ச்சிக்கு நாம் பயப்படக் கூடாது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், 70 ஆயிரம் இளையோரும்

ஏப்.27,2013. திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் விசுவாச ஆண்டின் ஒரு நிகழ்வாக, ஏறக்குறைய 70 ஆயிரம் இளையோர் முதன்முறையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இச்சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர்.
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில், ஏற்கனவே உறுதிபூசுதல் திருவருள்சாதனத்தைப் பெற்றவர்கள், இன்னும் அதனைப் பெறாதவர்கள் என ஏறக்குறைய 70 ஆயிரம் இளையோர், திருத்தந்தை அவர்களால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தப்படுவர்.
இதனை அறிவித்த, இந்நிகழ்வுகளை நடத்தும் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு காலை திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியில், 44 பேர் அவரிடமிருந்து உறுதிபூசுதல் திருவருள்சாதனத்தைப் பெறுவர் எனவும் கூறியது.
இந்த 44 பேரும் 11 வயதுக்கும் 55 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றுரைத்த திருப்பீட அவை, விசுவாச ஆண்டின் இரண்டாவது முக்கிய நிகழ்வாக, பொதுவான பக்திகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி வருகிற மே 3 முதல் 5 வரை நடைபெறும் எனவும் அறிவித்தது.
இந்நிகழ்ச்சியின் உச்சகட்டமாக, மே 5 ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு, 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்குத் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ் எனவும் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவை அறிவித்தது

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. டான்சானிய நாட்டு ஒன்றிப்புத் தினத்துக்கு திருத்தந்தை வாழ்த்து

ஏப்.27,2013. டான்சானியக் குடியரசின் மக்கள் அமைதியையும் நல்வாழ்வையும் அனுபவிக்குமாறுத் தான் எல்லாம்வல்ல இறைவனிடம் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 26, இவ்வெள்ளிக்கிழமையன்று ஒன்றிப்புத் தினத்தைச் சிறப்பித்த டான்சானிய நாட்டு அரசுத்தலைவர் Jakaya Mrisho Kikwete அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளாகிய Tanganyikaம், Zanzibarம் பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த பின்னர் 1964ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதியன்று ஒன்றாக இணைந்து டான்சானியா என்ற ஒரே நாடாக மாறியது. அந்த நாளே டான்சானிய ஒன்றிப்பு நாளாகச் சிறப்பிக்கப்படுகிறது.
இந்நாளை முன்னிட்டு 2004ம் ஆண்டில் அப்போதைய அரசுத்தலைவர் Benjamin Mkapa ஏறக்குறைய 4,500 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு

ஏப்.27,2013. 2016ம் ஆண்டு மே மாதம் 23 முதல் 29 வரை பிலிப்பீன்சின் செபுவில் அடுத்த அனைத்துலக திருநற்கருணை மாநாடு நடைபெறும் என்று செபு உயர்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
கிறிஸ்து உன்னில் இருக்கிறார் : மகிமையின் நம் நம்பிக்கை என்ற தலைப்பில் 2016ம் ஆண்டில் 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு நடைபெறும் என்று அவ்வுயர்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
அனைத்துலக திருநற்கருணை மாநாடு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் ஏதாவது ஒரு நாட்டில் நடைபெறுகின்றது. 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு 2012ம் ஆண்டில் அயர்லாந்தில் நடைபெற்றது. 1937ம் ஆண்டில் பிலிப்பீன்சின் மனிலாவில் இம்மாநாடு நடைபெற்றுள்ளது.
1964ம் ஆண்டில் பம்பாயில் 38வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு நடைபெற்றது.

ஆதாரம் : CNA                           

6. பணி தொடர்புடைய நோய்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம்

ஏப்.27,2013. ஆண்டுதோறும் பணி தொடர்புடைய நோய்களால் ஏறக்குறைய 20 இலட்சம் பேர் இறக்கும்வேளை, பணி தொடர்புடைய ஆனால் உயிருக்கு ஆபத்தில்லாத நோய்களால் 16 கோடிக்கு அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர் என்று ILO என்ற உலக தொழில் நிறுவனம் கூறியது.
பணி தொடர்புடைய நோய்களால் இடம்பெறும் இறப்புகளும் பாதிப்புக்களும் உலகில் அதிகரித்துவரும்வேளை, இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாகத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ILO நிறுவனத்தின் புதிய அறிக்கை வலியுறுத்துகிறது.
பணியில் இருப்போருக்குப் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலவாழ்வு குறித்த உலக தினத்தை முன்னிட்டு ILO இயக்குனர் Guy Ryder வெளியிட்ட அறிக்கையில், பணி தொடர்புடைய நோய்களால் மனித வாழ்வு இழக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பணியோடு தொடர்புடைய இறப்புகள் ஆண்டுதோறும் ஏறக்குறைய 23 இலட்சத்து 40 ஆயிரம் இடம்பெறும்வேளை, இவற்றில் ஏறக்குறைய 20 இலட்சம் இறப்புகள் பணி தொடர்புடைய நோய்களால் ஏற்படுகின்றன என்று ILO நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது.
ஏப்ரல் 28 இஞ்ஞாயிறு பணியில் இருப்போருக்குப் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலவாழ்வு குறித்த உலக தினமாகும்.

ஆதாரம் : UN

7. செர்னோபில் அணுமின்நிலைய விபத்தின் பாதிப்புக்கள் வரலாற்றில் ஒருபோதும் மறக்கப்படக் கூடாது

ஏப்.27,2013. செர்னோபில் அணுமின்நிலைய விபத்தின் பாதிப்புக்கள் வரலாற்றில் ஒருபோதும் மறக்கப்படக் கூடாது என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
27 ஆண்டுகளுக்கு முன்னர் ஏப்ரல் 26ம் தேதியன்று இடம்பெற்ற இவ்விபத்து குறித்துப் பேசிய பான் கி மூன், அவ்விபத்தின்போது தங்கள் உயிரையும் பணயம் வைத்து அவசரகாலப் பணி செய்தப் பணியாளர்களை இந்நாளில் நினைவுகூருவோம் என்று கூறினார்.
செர்னோபில் அணுமின்நிலைய விபத்தினால் 3 இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு நிரந்தரமாக வெளியேறியுள்ளனர், மாசுகேடடைந்துள்ள பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் பான் கி மூன் கூறினார்.
1986ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதியன்று உக்ரேய்னின் செர்னோபில் அணுமின்நிலைய விபத்து ஏற்பட்டது.

ஆதாரம் : UN

8. உலகின் 8வது சக்தி வாய்ந்த நாடு இந்தியா

ஏப்.27,2013. உலகில் அதிகம் வல்லமைமிக்க 27 நாடுகளில் இந்தியா 8வது இடத்தில் உள்ளதாக, யுக்திகள் நிறைந்த வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட தேசியச் சக்தி என்ற குழு எடுத்த ஆய்வு தெரிவிக்கிறது.
புதுடெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் FSNR என்ற தேசியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் சார்பில், பாதுகாப்பு வலிமை, மக்கள்தொகை, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவை அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில்,  சீனா 2வது இடத்திலும், அமெரிக்க ஐக்கிய நாடு  முதல் இடத்திலும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
வலிமையும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நகரங்களில் பெய்ஜிங்கிற்கு அடித்தபடியாக டில்லி உள்ளதாகவும் இவ்வாய்வில் கூறப்பட்டுள்ளது.
வலிமையில் சீனா, அமெரிக்காவை மிக நெருங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவையே அச்சுறுத்தும் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வாய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, பொருளாதாரத்தில் இந்தியா 8வது இடத்திலும், இராணுவ வலிமையில் 7வது இடத்திலும், தொழில்நுட்ப வளர்ச்சியில் 17வது இடத்திலும், வெளியுறவுத்தன்மையில் 11வது இடத்திலும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஆதாரம் : TNN

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...