உலகின் நீளமான ட்ராகன் வடிவ பாலம் (The Dragon Bridge)
வியட்னாம் நாட்டின் த நாங் (Da Nang) எனும் இடத்தில் ஹான் (Han) ஆற்றின்
மேல் அமைக்கப்பட்டுள்ள வியக்கவைக்கும் பாலம் ஒன்று கடந்த மார்ச் 29ம்
தேதியன்று போக்குவரத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தின்
சிறப்பம்சம் என்னவென்றால், இது லி (Ly) அரசப் பரம்பரையிலிருந்த ட்ராகன் உருவில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், 666 மீட்டர் நீளத்தையும், 37.5 மீட்டர் அகலத்தையும் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் 6 வாகனங்கள் செல்லக்கூடிய அளவுக்கு பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாலத்தைத் தாங்கியிருக்கும் இரும்பு வளையங்கள் 568 மீட்டர் நீளத்தையும், ஏறக்குறைய 9,000 டன்
எடையையும் கொண்டவை. தற்போது தென்கிழக்கு ஆசியாவில் வில்வடிவத்தில் உள்ள
ஒரே இரும்புப் பாலம் இதுவாகும். ஏறக்குறைய 8 கோடியே 80 இலட்சம் டாலர்
செலவில் கட்டப்பட்டுள்ள இதன் முக்கிய கட்டுமானப் பணிகள் 2012ம் ஆண்டு
அக்டோபர் 26ம் தேதியன்று முடிவடைந்தன. எனினும், வியட்னாம் போருக்குப் பின்னர் Da Nang விடுதலை
அடைந்ததன் 38வது ஆண்டின் நிறைவாக இவ்வாண்டு மார்ச் 29ம் தேதியன்று
போக்குவரத்துக்காக இந்த ட்ராகன் வடிவப் பாலம் திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்க
ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்ட Louis Berger கட்டட நிறுவனத்தால் இப்பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஜூலை 19ம் தேதியன்று இப்பாலத்திற்கானக் கட்டுமானப்பணிகள் தொடங்கின. மேலும், இந்த ட்ராகன் வடிவப் பாலம் திறக்கப்பட்ட அதே மார்ச் 29ம் தேதியன்று ஹான் ஆற்றில் கப்பற்பாய் வடிவில் Tran Thi Ly பாலம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. இது 731 மீட்டர் நீளத்தையும் 34.5 மீட்டர் அகலத்தையும் கொண்டுள்ளது.
ஆதாரம் : குளோபல் போஸ்ட்
No comments:
Post a Comment