1. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை.
2. திருத்தந்தை: செவிமடுப்பதன் மூலம் பிறக்கும் விசுவாசம், அதனை எடுத்துரைப்பதன் மூலம் வலிமைபெறுகிறது
3. மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளை புதிய திருத்தந்தை ஊக்குவிப்பார், கவுகாசுஸ் இஸ்லாமியர்கள் நம்பிக்கை
4. பாலஸ்தீனியப்பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பாதியாகியுள்ளது
5. சொமாலியாவில் நம்பிக்கையின் அடையாளங்களைக் காணமுடிந்ததாக ஆயர்
6. புது டெல்லியில் சீரோ மலங்கரா ரீதியின் புதிய சமூகப்பணி மையம்.
7. நாட்டை விட்டு வெளியேறுவதா, அல்லது சாவதா என்ற குழப்பத்தில் சிரியா நாட்டு கிறிஸ்தவர்கள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை.
ஏப்.15,2013. தடைகளையும் வன்முறைகளையும் தாண்டி இயேசுவுக்குச் சாட்சிகளாக விளங்குவதற்கு உதவும் வலிமையை, முதல்
சீடர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பதை உயிர்த்த கிறிஸ்துவின்
அருகாமையும் தூய ஆவியின் செயல்பாடும் விளக்கமுடியும் என்றார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை அவர்கள், ஆதிகால கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்புக்கு வழங்கிய சாட்சியத்திற்காக, கசையடிகளையும் சிறைத்தண்டனைகளையும் பெற்றாலும், இயேசுவுக்காகத் துன்புற்றது குறித்து மகிழ்ச்சியே அடைந்தார்கள் என்றார்.
சிலுவையில் அறையுண்டு இறந்து உயிர்த்த கிறிஸ்துவின் மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசம் எத்தனை வலிமையானது எனில், அந்த விசுவாசத்திற்காக, துன்பங்களை அனுபவிப்பது, கௌரவம் நிறைந்த விருது என்றே அவர்கள் கருதினர் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உயிர்த்த
இயேசுவின் வல்லமையையும் அருகாமையையும் அனுபவிக்கும் எந்த ஒரு கிறிஸ்தவரும்
அந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கமுடியாது என்று
கூறிய பாப்பிறை, தவறாக
புரிந்துகொள்ளுதலையும் எதிர்ப்பையும் நாம் எதிர்கொள்ளும்போது அன்பினாலும்
உண்மையின் வல்லமையாலும் அவைகளை எதிர்கொள்ள முதல் சீடர்களிடமிருந்து நாம்
கற்றுக்கொள்கிறோம் என்றார்.
இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வழங்கிய டுவிட்டர் செய்தியில், 'நாம் கிறிஸ்துவுக்கு சாட்சி பகரவேண்டுமெனில் நாம் போதிப்பதன் சாட்சியாக நம் வாழ்வு இருக்க வேண்டும்', எனவும் 'கடவுளை வழிபடுவது என்பது அவரோடு இணைந்திருப்பதைக் கற்பதும், நம் தவறான கொள்கைகளை கைவிட்டு அவரை நம் வாழ்வின் மையமாக வைப்பதாகும்' எனவும் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் - வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை: செவிமடுப்பதன் மூலம் பிறக்கும் விசுவாசம், அதனை எடுத்துரைப்பதன் மூலம் வலிமைபெறுகிறது
ஏப்.15,2013. பல்வேறு துன்பங்களை அனுபவித்தாலும், இயேசுவின் வார்த்தைகளை உலகுக்கு எடுத்துரைத்த முதல் சீடர்கள் குறித்து இஞ்ஞாயிறு முதல் வாசகம் எடுத்துரைத்ததை மேற்கோள் காட்டி, புனித பவுல் பசிலிக்காப் பேராலயத்தில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், நாம் வாழும் சுற்றுப்புறங்களில் இயேசுவின் வார்த்தைகளை எடுத்துரைக்க நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியை முன்வைத்தார்.
தான் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபின் முதன்முறையாக உரோம் நகர் புனித பவுல் பசிலிக்காவுக்குச் சென்று, அங்கு விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை, செவிமடுப்பதன் மூலம் பிறக்கும் விசுவாசம், அதனை எடுத்துரைப்பதன் மூலம் வலிமைபெறுகிறது என்று கூறினார்.
புனித பேதுருவும் ஏனையத் திருத்தூதர்களும் வார்த்தைகளால் மட்டும் போதிக்கவில்லை, எடுத்துக்காட்டான தங்கள் வாழ்வு மூலமும் போதித்தார்கள் என தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய பாப்பிறை, நாமும் எவ்வாறு கிறிஸ்துவுக்கு சாட்சி பகர்கிறோம் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
வார்த்தைகளுக்கும்
வாழ்வுக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கும்போது திருஅவையின் நம்பகத்தன்மை
குறைவுபடுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் அவர்.
அவரது
பாதையில் நடக்க நம்மை அழைத்த இயேசுவை நாம் ஏற்றுக்கொள்வதன் மூலமே
இவையெல்லாம் நமக்கு சாத்தியமாகும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வு மூலம் இயேசுவுக்குச் சாட்சி பகர்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.
ஆதாரம் - வத்திக்கான் வானொலி
3. மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளை புதிய திருத்தந்தை ஊக்குவிப்பார், கவுகாசுஸ் இஸ்லாமியர்கள் நம்பிக்கை
ஏப்.15,2013. புதியத் திருத்தந்தையாக பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது, கவுகாசுஸ் இஸ்லாமியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், மதங்களிடையே
பேச்சுவார்த்தைகளுக்கும் ஒத்துழைப்புக்கும் திருத்தந்தை சிறப்புப்
பங்காற்றுவார் என தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் அப்பகுதியின் இஸ்லாமியத்
தலைவர் Allahshukur Pashazade அறிவித்தார்.
அசர்பெய்ஜான் நாட்டில் 450 கத்தோலிக்கர்களே வாழும் நிலையில், அந்நாட்டு
தலைகநகர் பாக்குவில் பணியாற்றும் அன்னை தெரேசா பிறரன்பு சபையின் ஐந்து
கன்னியர்களின் பணி பெரும்பாலும் இஸ்லாமிய மக்களுக்கானதாகவே உள்ளது என
ஆசியச் செய்தி நிறுவனம் அறிவிக்கின்றது.
சகிப்புத்தன்மை, ஒருவர்
ஒருவர்மீது கொள்ளும் மதிப்பு மற்றும் ஒத்துழைப்பை நடைமுறை வாழ்வாகக்
கொண்டிருக்கும் அசர்பெய்ஜான் நாட்டுக்கும் திருப்பீடத்திற்கும் இடையேயான
உறவு குறித்து இஸ்லாமிய சமுதாயம் மகிழ்ச்சி அடைவதாகவும், மதங்களிடையே உருவாகவேண்டிய பேச்சுவார்த்தைகளுக்கு, புதிய
திருத்தந்தை ஊக்கமளித்து சிறப்புப் பங்காற்றுவார் என்பதில் நம்பிக்கைக்
கொண்டிருப்பதாகவும் திருத்தந்தைக்கு வாழ்த்துசெய்தியை இஸ்லாமியை தலைவர் Pashazade ஏற்கனவே அனுப்பியிருந்தார்.
ஆதாரம் AsiaNews
4. பாலஸ்தீனியப்பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பாதியாகியுள்ளது
ஏப்.15,2013. பாலஸ்தீனிய நிலப்பகுதிகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துள்ளதாக வத்திக்கானின் ஃபிதெஸ் செய்தி நிறுவனம் அறிவிக்கிறது.
பாலஸ்தீனியப் பகுதிகளில் 2000மாம் ஆண்டில் மோத்த மக்கள்தொகையில் 2 விழுக்காடாக இருந்த கிறிஸ்தவர்கள் தற்போது ஒரு விழுக்காடாகக் குறைந்துள்ளதாக எடுத்துரைக்கும் செய்தி நிறுவனம், 1948ம் ஆண்டில் யெருசலேமில் 27,000மாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5000மாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கிறது.
பாதுகாப்பான
வாழ்வைத்தேடி கிறிஸ்தவர்கள் மேற்கத்திய நாடுகளுக்குக் குடிபெயர்வதே இந்த
எண்ணிக்கை குறைவிற்கு காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் தங்கள்
குடியிருப்புகளை விட்டு வெளியேறாமல் இருக்க, குழந்தைகளுக்கான கல்வி உரிமை, வேலைவாய்ப்பில் பாகுபாடின்மை, புதிய குடும்பங்களுக்கான வீட்டுவசதி போன்றவை உறுதிச்செய்யப்படவேண்டியது அவசியம் என்றார் Gaza பகுதியின் நீண்ட கால பங்குகுரு மானுவேல் முசல்லாம்.
ஆதாரம் FIDES
5. சொமாலியாவில் நம்பிக்கையின் அடையாளங்களைக் காணமுடிந்ததாக ஆயர்
ஏப்.15,2013. சொமாலி தலைநகரில் புதிய நிர்வாக அமைப்பின் கீழ் அனைத்தும் இதுவரை வரவில்லையெனினும், நம்பிக்கையின் உண்மையான அடையாளங்களை காணமுடிகிறது என்றார் அங்கு அண்மையில் சென்று திரும்பிய Djibouti ஆயர் Giorgio Bertin.
சொமாலி தலைநகர் Mogadishuவின் அப்போஸ்தல நிர்வாகியாகவும் இருக்கும் ஆயர் Bertin உரைக்கையில், ஆறு ஆண்டுகளூக்குப்பின் தற்போதுதான் தன்னால் அங்கு போக முடிந்துள்ளது எனவும், துப்பாக்கிச்சத்தங்கள் குறைந்து, கட்டிடங்கள் புதிதாகக் கட்டப்படுவதையும், அங்கு சுமுக நிலை திரும்பிவருவதையும் நேரடியாகக் காணமுடிந்தது என்றும் கூறினார்.
தலைநகர் Mogadishuவிற்கு தான் பயணம் மேற்கொண்டது அங்குள்ள மக்களின் இன்றைய நிலைகள் குறித்து ஆராயவும், சொமாலிய காரித்தாஸ் பிறரன்புப் பணிகளைப் பார்வையிடவுமே என்றார் ஆயர் Bertin.
தங்கள் குடியிருப்புக்களை இழந்த மக்கள் தலைநகர் பேராலயத்தை ஆக்கிரமித்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்த ஆயர் Bertin, அதனைச்
சீரமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அரசு
அதிகாரிகளுடன் தான் மேற்கொண்டு திரும்பியுள்ள பேச்சுவார்த்தைகள் மீண்டும்
தொடரும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் Djibouti ஆயர் Bertin.
ஆதாரம் FIDES
6. புது டெல்லியில் சீரோ மலங்கரா ரீதியின் புதிய சமூகப்பணி மையம்.
ஏப்.15,2013. சிரோ மலங்கரா கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் புதிய சமூகப்பணி மையத்திற்கு இஞ்ஞாயிறன்று புது டெல்லியின் Jasolaவில் அடிக்கல்லை நாட்டினார் சீரோ மலங்கரா கர்தினால் Baselios Cleemis.
இயேசு கிறிஸ்துவின் அன்பின் அடையாளமாக நின்று அனைவரையும் வரவேற்கும் இந்த மையம் 'பசித்திருப்போருக்கு உணவு' என்ற திட்டத்தின் கீழ் மதம், இனம், ஜாதி என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சேவையாற்றும் என்றார் சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை தலைவர் கர்தினால் Cleemis.
சீரோ
மலங்கரா திருஅவையின் அங்கத்தினர்கள் வழங்கும் பொருளுதவியுடன்
நடத்தப்படும் இத்திட்டம் ஏற்கனவே ஒவ்வொருநாளும் புது டெல்லியின்
சேரிப்குதிகளிலும், அனாதை இல்லங்களிலும், புனர்வாழ்வு மையங்களிலும், உணவுக்கு
வழியில்லா ஏழை நோயாளிகள் மத்தியிலும் நூற்றுக்கணக்கான உணவுப் பொட்டலங்களை
ஒவ்வொரு நாளும் வழங்கி வருகிறது எனவும் கூறினார் கர்தினால் Cleemis.
ஆதாரம் UCAN
7. நாட்டை விட்டு வெளியேறுவதா, அல்லது சாவதா என்ற குழப்பத்தில் சிரியா நாட்டு கிறிஸ்தவர்கள்
ஏப்.15,2013. நாட்டைவிட்டு வெளியேறுதல் அல்லது நாட்டிற்குள்ளேயே கொல்லப்படுதல் என்ற அபாயகரமானச் சூழலை, சிரியா நாட்டு கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கி வருவதாக கவலையை வெளியிட்டார் டமாஸ்கஸின் மாரோனைட் பேராயர் Samir Nassar.
ஒவ்வொரு நாளும் நாட்டில் வெடிகுண்டுகளாலும், போதிய மருத்துவ வசதிகளின்மையாலும், சத்துணவின்மையாலும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பொதுமக்கள் பலர் இறந்து வருவதாக உரைத்தார் ஆயர் Nassar.
இதுவரை நாட்டில் 223 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் உரைத்த ஆயர் Nassar, பாதுகாப்பையும் உதவியையும் நாடி மக்கள் திருஅவையை நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்கள்
நாட்டைவிட்டு வெளியேறவேண்டாம் என அறிவுறுத்துவது அவர்களை கொலைக்களத்திற்கு
இட்டுச்செல்ல உதவுவதுபோல் இருக்கும் என்ற ஆயர், அவர்கள்
நாட்டைவிட்டு வெளியேற உதவினால் அது விவிலிய இடங்களை கிறிஸ்தவர்களே இல்லாத
பகுதியாக மாற்றுவதற்கு உதவும் என்ற திருஅவையின் மனக்குழப்பத்தையும்
வெளிப்படுத்தினார்.
No comments:
Post a Comment