Wednesday 24 April 2013

Catholic News in Tamil - 22/04/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ சமூகங்களிலும்கூட வேறு வழியாக ஏறிக் குதிக்கும் திருடர்கள் உள்ளனர்

2. திருத்தந்தை பிரான்சிஸ் இளையோரிடம் : இயேசு என்ன விரும்புகிறார் என அவரிடம் கேளுங்கள்

3. திருத்தந்தை பிரான்சிஸ் புதிய குருக்களிடம் : திருஅவையாகிய இறைவனின் வீட்டை சொல்லாலும் செயலாலும் கட்டுமாறு வேண்டுகோள்

4. கோஸ்டா ரிக்கா திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் செய்தி

5. இன‌ ம‌ற்றும் ம‌த‌ அடிப்ப‌டையில் குடியிருப்புக‌ளை உருவாக்குவ‌தை எதிர்க்கிறார் ஈராக் முதுபெரும் த‌லைவ‌ர்

6. குருத்துவக் கல்லூரி அதிபர் மரணம் தொடர்புடைய விசாரணைகளை கர்நாடக அரசு விரைவுபடுத்த அழைப்பு

7. கிறிஸ்தவர்களைத் தாக்கும் எகிப்து இஸ்லாமியர்களை காவல்துறை காப்பதாக குற்றாசாட்டு

8. பூமியைக் காக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பரிந்துரை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ சமூகங்களிலும்கூட வேறு வழியாக ஏறிக் குதிக்கும் திருடர்கள் உள்ளனர்

ஏப்.22,2013. இயேசுவாகிய வாயில் வழியாக ஆட்டுக்கொட்டிலில் நுழையாமல் வேறு வழிகள் மூலமாக ஏறிக் குதிக்கும் மக்கள் கிறிஸ்தவ சமூகங்களிலும்கூட உள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் இத்திங்களன்று கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தின் ஆலயத்தில் இத்திங்கள் காலை நிகழ்த்திய திருப்பலியில் நல்லாயன் உவமை பற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, வேறு வழியாக நுழைபவர்கள் தங்களுக்கு உகந்தவற்றைத் தேடுபவர்கள் என்றும், இவர்கள் அறிந்தோ அறியாமலோ அங்கு நுழைவதாகப் பாவனை செய்பவர்கள், ஆனால் இவர்கள் திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் என்று கூறினார்.
ஏனெனில் இத்தகையவர்கள் இயேசுவின் மகிமையைத் திருடுகின்றனர்,  தங்களின் சொந்த மகிமையை விரும்புகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, பரிசேயரும் தங்களின் சொந்த மகிமையை விரும்பினர், இயேசு அவர்களிடம், நீங்கள் பிறர் புகழ்வதை விரும்புகின்றீர்கள் என்று கூறினார் என்பதையும் குறிப்பிட்டார்.
இந்நிலை வியாபார மதம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? என்று திருப்பலியில் பங்குகொண்டவர்களிடம் கேள்வி எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ், நான் உனக்கு மகிமை அளிக்கிறேன், நீ எனக்கு மகிமை அளி என்பதாக இது உள்ளது, ஆனால் இத்தகைய மக்கள் இயேசு என்ற உண்மையான வாயில் வழியே நுழையாதவர்கள் என்று மறையுரையாற்றினார்.
இயேசு வாயில் மட்டும் அல்ல, அவர் நம் பயணத்தில் நாம் பின்செல்லவேண்டிய பாதையாகவும் இருக்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, இயேசு நம்மை ஏமாற்றமாட்டார், அவர் திருடர் அல்ல, கொள்ளையருமல்ல, அவர் நமக்காகத் தமது வாழ்வைத் தந்தவர் என்றார்.
எனவே அவரிடம், இயேசுவே நீர் உமது வாழ்வை எனக்காகத் தந்தீர், நான் நுழைவதற்குத் தயவுசெய்து கதவைத் திறந்தருளும் என்று நாம் ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடப் பத்திரிகை அலுவலகத்தினர் மற்றும் வத்திக்கான் வானொலியின் பொறியியலாளர்கள் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  

2. திருத்தந்தை பிரான்சிஸ் இளையோரிடம் : இயேசு என்ன விரும்புகிறார் என அவரிடம் கேளுங்கள்

ஏப்.22,2013. இயேசு தங்களிடமிருந்து என்ன விரும்புகிறார் என்பதைக் கேட்குமாறு கத்தோலிக்க இளையோரிடம் இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இளையோர் துணிச்சலுடன் இருக்குமாறும் வலியுறுத்தினார்.
இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, இவ்வளாகத்தில் பல இளையோரைக் காண்கிறேன், உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் என்று அக்கேள்வியை முன்வைத்தார்.
ஓர் ஆசை, படபடப்பான ஒருநிலை ஆகியவை மூலமாக, ஆண்டவர் தம்மை நெருங்கிப் பின்செல்லுமாறு அழைத்த அவரின் குரலை நீங்கள் சிலநேரங்களில்   கேட்கவில்லையா? இயேசுவின் அப்போஸ்தலர்களாக ஆவதற்கான ஆவல் உங்களிடம் இல்லையா? என்று இளையோரிடம் கேட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளையோர் உன்னத நோக்கங்களைத் தேடுமாறும், இயேசு அவர்களிடம் என்ன விரும்புகிறார் என்பதைக் கேட்டுத் துணிச்சலுடன் செயல்படுமாறும், இறையழைத்தல்களுக்காகச் செபிக்கும் இஞ்ஞாயிறன்று இளையோரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், சீனாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வெனேசுவேலா நாட்டின் அரசியல் பிரச்சனைகள் சுமுகமாகத் தீர்வு காணப்படுமாறும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  

3. திருத்தந்தை பிரான்சிஸ் புதிய குருக்களிடம் : திருஅவையாகிய இறைவனின் வீட்டை சொல்லாலும் செயலாலும் கட்டுமாறு வேண்டுகோள்

ஏப்.22,2013. திருஅவையாகிய இறைவனின் வீட்டை வார்த்தையாலும் வாழ்வாலும் கட்டுமாறும், குருத்துவத் திருப்பணியை மகிழ்ச்சியோடு செய்யுமாறும் புதிய அருள்பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
50வது இறையழைத்தல் தினமான, இஞ்ஞாயிறன்று, இரண்டு கேரளத் தியாக்கோன்கள் உட்பட 10 தியாக்கோன்களை உரோம் மறைமாவட்டத்துக்கென அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்த திருப்பலியில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
நல்லாயன் ஞாயிறான இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், இந்தப் புதிய அருள்பணியாளர்கள் மக்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இறைவனுக்கு ஏற்றதை மட்டுமே செய்வதற்கு அம்மக்கள் சார்பாக அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்கள் நினைவில் வைக்க வேண்டுமெனவும் கூறினார்.
இவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிக்குப் பிரமாணிக்கமாக இருந்து அதற்குச் சாட்சி சொல்ல வேண்டுமெனவும் கூறிய திருத்தந்தை, கிறிஸ்துவின் குருத்துவப் பணியை உறுதியான மகிழ்ச்சியோடும் உண்மையான அன்போடும் செய்யுமாறும் கூறினார்.
புதிய அருள்பணியாளர்கள் தங்களின் சொந்த விருப்பப்படி இல்லாமல் இயேசு கிறிஸ்துவைச் சார்ந்ததையே செய்ய வேண்டும், நீங்கள் மேய்ப்பர்கள், செயல்படுபவர்கள் அல்ல, எனவே இடையில் வந்தவர்களாக இல்லாமல், இடைநிலையாளர்களாக இருங்கள் எனவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  

4. கோஸ்டா ரிக்கா திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் செய்தி

ஏப்.22,2013. கோஸ்டா ரிக்கா நாட்டில் இடம்பெறும் தேசிய நற்கருணை மாநாட்டிற்குத் தன் வாழ்த்துக்களையும் சிறப்புச் செய்தியையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'திருநற்கருணை: நம் மக்களுக்கு வாழ்வின் உணவு' என்ற தலைப்பில் இடம்பெறும் தேசிய நற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள தந்திச்செய்தி, விசுவாசிகளின் செப வாழ்வைப் பலப்படுத்தவும், திருநற்கருணையை வாழ்வின் மையமாக வைக்கவும்,  இம்மாநாட்டு நடவடிக்கைகளைச் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என திருத்தந்தை விரும்புவதாகத் தெரிவிக்கிறது.
மேலும், ஒப்புரவு நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்ப திருநற்கருணை நமக்கு உதவுவதாக என அத்தந்திச் செய்தியில் கூறியுள்ளார் பாப்பிறை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  

5. இன‌ ம‌ற்றும் ம‌த‌ அடிப்ப‌டையில் குடியிருப்புக‌ளை உருவாக்குவ‌தை எதிர்க்கிறார் ஈராக் முதுபெரும் த‌லைவ‌ர்

ஏப்.22,2013. ஈராக்கின் கிறிஸ்தவர்களும் ஏனைய மக்களும் இனம், மதம் என்ற அடிப்படைகளின்கீழ் தங்களுக்கிடையே தடைச்சுவர்களுடன் கூடிய குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு வாழமுடியாது என்றார் அந்நாட்டின் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தலைவர் லூயிஸ் ரஃபேல் சாக்கோ.
பிரிவினைவாதத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்ற அணுகுமுறை தவறானது எனவும் கூறிய முதுபெரும்தலைவர், ஈராக் கிறிஸ்தவர்களுக்கு என, தனிக் குடியிருப்பை ஒதுக்குவது என்ற ஆலோசனை அவர்கள் தனிமையில் ஒதுக்கப்பட்டு வாழும் நிலைக்கே தள்ளும் என்றார்.
ஒவ்வொருவரையும் பிரித்து வாழவைக்க முயல்வதைவிட, அனைத்து இன மற்றும் மதமக்களுக்கு சம குடியுரிமைகளை வழங்குவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் எனவும் கூறினார் அவர்.

ஆதாரம் : Fides

6. குருத்துவக் கல்லூரி அதிபர் மரணம் தொடர்புடைய விசாரணைகளை கர்நாடக அரசு விரைவுபடுத்த அழைப்பு

ஏப்.22,2013. இந்தியாவின் பெங்களூரு தூய பேதுரு குருத்துவக் கல்லூரி அதிபர் கொலைச்செய்யப்பட்டு மூன்று வாரங்கள் கடந்தபின்னரும், கொலையாளிகளைக் கைதுசெய்ய காவல்துறை தவறியுள்ளது குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார் அப்பெருமறைமாவட்ட பேராயர் பெர்னார்டு மொராஸ்.
காவல்துறையினர் தங்கள் பணிகளைச் சிறப்பாகவேச் செய்து வருகின்றபோதிலும், கொலையாளியையோ கொலைக்கான காரணத்தையோ கண்டுபிடிக்க காலம் தாழ்த்தி வருவது கவலைதருவதாக உள்ளது என்றார் பேராயர்.
இம்மாதம் முதல்தேதி அதிகாலை தன் அறை அருகே கொலையுண்டு கிடந்த குருத்துவக் கல்லூரி அதிபர் அருள்பணி தாமசின் அறையிலிருந்து எதுவும் திருட்டுப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குருத்துவக் கல்லூரி அதிபர் அருள்பணி கே.ஜே. தாமசின் மரணம் தொடர்புடைய விசாரணைகளை கர்நாடக அரசு விரைவுபடுத்தவேண்டும் என தனிப்பட்ட முறையில் விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளார் பெங்களூரு பேராயர் மொராஸ்.

ஆதாரம் : UCAN 

7. கிறிஸ்தவர்களைத் தாக்கும் எகிப்து இஸ்லாமியர்களை காவல்துறை காப்பதாக குற்றாசாட்டு 

ஏப்.22,2013. எகிப்து தலைநகர் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கோவிலில் அடக்கச்சடங்கில் சில இஸ்லாமியக் குழுக்கள் கலகம் செய்தபோது அந்நாட்டு இராணுவம் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கலகக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக தலத்திருஅவை தெரிவித்தது.
வன்முறை இடம்பெறும் என காவல்துறைக்கு முன்னரே தெரிந்திருந்தும் முதலிலேயே பேராலயத்திற்குப் பாதுகாப்பு வழங்கத் தவறியது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார் எகிப்து கத்தோலிக்க ஆயர் பேரவையின் அதிகாரி அருள்பணி Rafik Greiche.
கலவரம் துவங்கி இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரே வந்தபோதிலும், கிறிஸ்தவர்களைத் தாக்கியவர்களுக்கே காவல்துறையால் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றார் அருள்பணி.
இம்மாதம் ஏழாம் தேதி இடம்பெற்ற தாக்குதல் குறித்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ள எகிப்தின் கிறிஸ்தவத் தலைவர்கள், எகிப்து கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமைக்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளவேளையில் இஸ்லாமியர்களின் இந்தத் தாக்குதல், கிறிஸ்தவர்களை அச்சுறுத்தி நாட்டைவிட்டு விரட்டுவதை உள்நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : CNA

8. பூமியைக் காக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பரிந்துரை

ஏப்.22,2013. சுற்றுச்சூழல் சீர்கேட்டால் இவ்வுலகம் பெருமளவில் கண்டுவரும் இழப்பை சீர்செய்வதற்கு உதவும் விதமாகக் கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக பூமி தினத்தை முன்னிட்டு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
ஏப்ரல் 22ம் தேதி இத்திங்கள்கிழமை உலகில் சிறப்பிக்கப்பட்ட உலக பூமிதினம் குறித்து செய்தி வெளியிட்ட ஆர்வலர்கள், ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம் வளர்க்கவும், அனைத்துவகை குப்பைகளைக் குறைக்கவும், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும் அழைப்புவிடுத்துள்ளனர்.
மறுசுழற்சி பொருட்களைப் பயன்படுத்துதல், மின்சாரத்தைச் சேமித்தல், பாலிதீன் பயன்பாட்டை குறைத்தல், குறைந்த தூரம் செல்ல மோட்டார் வாகனப் பயன்பாட்டை தவிர்த்தல், மாசுக்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
பாடப்புத்தகங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான பாடங்களைச் சேர்த்து, வருங்கால தலைமுறையினர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்முறை பற்றித் தெரிந்து கொள்ளச் செய்யவேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் கைலார்ட் நெல்சன் என்பவரின் தீவிர முயற்சியால், 1970ல் இத்தினம் தொடங்கப்பட்டது. தற்போது எர்த் டே நெட்வொர்க் என்ற அமைப்பில் 175க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன.

ஆதாரம் : தினமலர்

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...