Tuesday, 2 April 2013

மிக அதிக வெப்பமுடைய கோளம்

மிக அதிக வெப்பமுடைய கோளம்

கோளங்களைப்பற்றி வியப்பளிக்கும் தகவல்கள் பல உள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று.
சூரியனைச் சுற்றிவரும் கோளங்களில், மிக அதிக வெப்பமுடைய கோளம் எதுவென்று கேட்டால், சூரியனை மிக நெருக்கமாகச் சுற்றிவரும் புதன் கோளம் (Mercury) என்று தயக்கமில்லாமல் சொல்வோம். ஆனால், இது தவறு. புதனுக்கு அடுத்ததாக சூரியனிலிருந்து 30 மில்லியன், அதாவது, 3 கோடி மைல்கள் தள்ளி, சூரியனைச் சுற்றிவரும் வெள்ளிக் கோளமே (Venus) மிக அதிக வெப்பமுடையது. அதற்கான காரணம் இதுதான்...
புதன் கோளத்தைச் சுற்றி காற்று மண்டலம் கிடையாது. எனவே, அது சூரிய வெப்பத்தை எளிதில் உள்வாங்கி, வெளியில் விட்டுவிடுகிறது. ஆனால், வெள்ளிக் கோளத்தைச் சுற்றி அமைந்துள்ள காற்று மண்டலமோ, பூமியைச் சுற்றி அமைந்துள்ள காற்று மண்டலத்தைக் காட்டிலும் 93 மடங்கு அடர்த்தியானது. இக்காற்று மண்டலத்தை ஏறத்தாழ முற்றிலும் நிறைத்திருப்பது கார்பன்-டை-ஆக்ஸைடு. எனவே, இக்கோளம் சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தை எளிதில் வெளியேற்றுவதில்லை. இதனால் வெள்ளிக் கோளத்தில் நிலவும் வெப்பம் 461.85 °C. தகரம், ஈயம் போன்ற உலோகங்களை திரவமாக்கும் வெப்பம் இது. சூரியனுக்கு அடுத்திருக்கும் புதனின் வெப்பநிலையோ 425 °C தான்.
புதனைச்சுற்றி காற்று மண்டலம் இல்லாததால், பகலில் 425 °Cம், இரவில் பூஜ்யத்திற்குக் கீழ் -190 °Cம் இருக்குமளவு பெரும் மாற்றங்கள் கொண்டது. வெள்ளியைச் சுற்றியுள்ள வெப்பநிலை இரவும், பகலும் மாறாமல், 460 °Cயைச் சுற்றியே உள்ளது.
வெள்ளிக் கோளத்திற்கு அடுத்ததாக சூரியனைச் சுற்றி வரும் கோளம் பூமி. நமது தொழிற்சாலைகளாலும், வாகனங்களாலும் நாம் உருவாக்கும் கார்பன் வெளியீட்டினால் நமது காற்று மண்டலமும் நிறைந்து, பூமி வெப்பமாகி வருகிறது என்பதை அண்மைக் காலங்களில் நாம் அடிக்கடி பேசி வருகிறோம்.

ஆதாரம் - http://earthsky.org; http://www.universetoday.com

No comments:

Post a Comment