Monday 2 January 2012

Catholic News - hottest and latest - 29 December 2011

1. திருத்தந்தை: கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் பற்றுறுதி அனைத்து வகையான அச்சங்களினின்றும் இளையோரை விடுவிக்கும்

2. 2011ம் ஆண்டில் திருத்தந்தை மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகளைக் குறித்து திருப்பீடப் பேச்சாளர்

3. பெண் குழந்தைகளை அழிப்பவர்கள் இன்றைய காலத்தில் வாழும் ஏரோது - கர்தினால் கிரேசியஸ்

4. அர்ஜென்டினா நாட்டின் ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தி

5. கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இணைந்து முயன்றாலே இந்நாடு அமைதியில் வாழ முடியும் -  நைஜீரியா நாட்டின் பேராயர்

6. ஊழலை ஒழிக்கும் சட்ட வரைவின் மீது இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இந்தியத் திருச்சபை வரவேற்பு

7. தென் கொரியாவில் Salvation Army மேற்கொண்ட நிதித் திரட்டும் முயற்சியில் இதுவரை திரட்டாத அளவு பெரும் தொகை

8. ஒவ்வோர் ஆண்டும் இறக்கும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 22,000

------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை: கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் பற்றுறுதி அனைத்து வகையான அச்சங்களினின்றும் இளையோரை விடுவிக்கும்

டிச.29,2011. மனிதர்கள் உருவாக்கும் பல்வேறு எல்லைகளைக் கடந்து இளையோராகிய நீங்கள் செபத்தால் உள்ளம் ஒன்றி இருப்பது மிகவும் அழகான ஒரு தருணம்  என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
Taize எனப்படும் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஆயிரக்கணக்கான இளையோருடன் மேற்கொண்டுள்ள ஒரு மாநாட்டிற்கு திருத்தந்தையின் வாழ்த்துக்கள் அடங்கிய செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிஸியோ பெர்தோனே இவ்வியாழனன்று அனுப்பி வைத்தார்.
கிறிஸ்துவின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி அனைத்து வகையான அச்சங்களினின்றும் உங்களை விடுவித்து, இன்றைய சவால்களை எதிர்கொள்ளும் சக்தியை உங்களுக்கு வழங்கும் என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறினார்.
உலகின் வறுமை மற்றும் அநீதிகளைக் கண்டு வெகுண்டெழும் பல்லாயிரம் இளையோர் வன்முறைகள் வழியே இவைகளுக்குத் தீர்வுகள் காண எண்ணும் வேளையில், நீங்கள் காட்டும் பற்றுறுதியும், நம்பிக்கையும் அவர்களுக்கு ஒரு தூண்டுதலாக அமையட்டும் என்று திருத்தந்தை வாழ்த்தினார்.
35வது ஐரோப்பிய Taize கூட்டம்  வருகிற ஆண்டு உரோம் நகரில் நடைபெற உள்ளதைத் தன் செய்தியின் இறுதியில் திருத்தந்தை குறிப்பிட்டு, அக்கூட்டத்திற்கு இளையோரை வரவேற்க தான் காத்திருப்பதாகவும் கூறினார்.


2. 2011ம் ஆண்டில் திருத்தந்தை மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகளைக் குறித்து திருப்பீடப் பேச்சாளர்

டிச.29,2011. திருத்தந்தையர்களின் ஒவ்வோர் ஆண்டு நிகழ்வுகளைப் போலவே இவ்வாண்டும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் செயல்பாடுகளும் அர்த்தமுள்ள வகையில் நிறைவேறின என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை ஃபெடெரிகோ லொம்பார்தி கூறினார்.
2011ம் ஆண்டில் திருத்தந்தை மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகளைக் குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி பேசுகையில், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவ்வாண்டு பெரும் பிரச்சனைகள் இன்றி ஓரளவு அமைதியாகக் கழிந்தது என்று கூறினார்.
திருத்தந்தை 2011ம் ஆண்டு மேற்கொண்ட பல்வேறு திருப்பயணங்களைப் பற்றி பேசிய அருள்தந்தை லொம்பார்தி, இஸ்பெயினில் நிகழ்ந்த உலக இளையோர் தினத்தில் திருத்தந்தை பங்கேற்றதும், அண்மையில் ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் அவர் மேற்கொண்ட திருப்பயணமும் நம்பிக்கை தரும் அடையாளங்கள் என்று கூறினார்.
மேலும், திருத்தந்தை அசிசி நகரில் தலைமையேற்று நிகழ்த்திய உலக அமைதி நாள் பல்சமய செப வழிபாடு குறித்தும், அண்மையில் திருத்தந்தை Rebibbia சிறைக்கூடத்திற்கு சென்றதையும் திருப்பீடப் பேச்சாளர் தன் பேட்டியில் சிறப்பான வகையில் குறிப்பிட்டார்.
2011ம் ஆண்டில் திருத்தந்தையின் மிகச்சிறந்த நிகழ்ச்சியாக உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவை என்று எண்ணிப் பார்க்கையில், மே மாதம் முதல் தேதியன்று முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களை அருளாளராக உயர்த்திய நிகழ்வும், விண்வெளி வீரர்களுடன் திருத்தந்தை உரையாடிய நேரமும் மனதில் நிற்கின்றன என்று வத்திக்கான் பத்திரிக்கை அலுவலகத்தின் இயக்குனர் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.


3. பெண் குழந்தைகளை அழிப்பவர்கள் இன்றைய காலத்தில் வாழும் ஏரோது - கர்தினால் கிரேசியஸ்

டிச.29,2011. பெண் குழந்தைகளையும், பிற குழந்தைகளையும் கருவிலேயே அழிப்பவர்களையும், மனித உரிமைகளையும், மத உரிமைகளையும் மறுப்போரையும் இன்றைய காலத்தில் வாழும் ஏரோது என்று ஒப்புமைப்படுத்தி மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் பேசினார்.
டிசம்பர் 28, இப்புதனன்று கொண்டாடப்பட்ட மாசில்லாக் குழந்தைகள் திருநாளையொட்டி, தன் கருத்துக்களை வெளியிட்ட இந்திய ஆயர் பேரவையின் தலைவரும், ஆசிய ஆயர் பேரவையின் பொதுச் செயலுருமான கர்தினால் கிரேசியஸ், மாசில்லாக் குழந்தைகளைக் கொன்று குவித்த ஏரோதைப் போலவே தற்காலத்திலும் அப்பாவி உயிர்களைப் போக்கும் பலர் நம் மத்தியில் இருப்பது வேதனையைத் தருகிறது என்று கூறினார்.
ஏரோதைப் போலவே தங்கள் செல்வத்தையும் சுகத்தையும் தெய்வங்களாக வழிபடும் மக்களே கருக்கலைப்பு மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் போன்ற குற்றங்களை இவ்வுலகில் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர் என்று கர்தினால் கிரேசியஸ் சுட்டிக் காட்டினார்.
கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொண்டுள்ள ஒரே காரணத்தால் துன்பங்களை அனுபவிக்கும் இந்தியக் கிறிஸ்தவர்களின் துயரங்களைக் குறித்தும் கர்தினால் கிரேசியஸ் தன் கருத்துப் பரிமாற்றத்தில் எடுத்துரைத்தார்.


4. அர்ஜென்டினா நாட்டின் ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தி

டிச.29,2011. அர்ஜென்டினா நாட்டில் நிலவும் கொடுமையான வறுமை ஒரு சமுதாய அமைப்பாக மாறிவருவதாகவும், இன்றைய இளையோர் பலரின் பெற்றோர் பல ஆண்டுகளாக வேலை எதுவுமின்றி வாழ்ந்து வருவது பெரும் கவலைக்குரிய ஒரு போக்கு என்றும் அர்ஜென்டினா நாட்டின் ஆயர்கள் கூறியுள்ளனர்.
கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி அர்ஜென்டினா நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களுக்கும் கிறிஸ்மஸ் செய்தியை அனுப்பியுள்ள அந்நாட்டு ஆயர்கள், மனித உயிர்கள் கருவிலிருந்து கல்லறை வரை மதிக்கப்பட வேண்டும் என்ற அழைப்பினை விடுத்துள்ளனர்.
குடும்பங்களில் காணப்படும் வன்முறைகளால் பாதிக்கப்படும் இளையோர், அதே வன்முறைகளை சமுதாயத்தில் தொடர்வது நாம் சமுதாயத்தில் களைய வேண்டிய ஓர் அவசரமான சவால் என்று அர்ஜென்டினா ஆயர் பேரவையின் புதியத் தலைவர் பேராயர் José María Arancedo கூறினார்.
எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்து இளையோரும் கல்வி பெறுவதற்கான வழிகளை அரசும் மக்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பேராயர் Antonio Marino கூறினார்.


5. கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இணைந்து முயன்றாலே இந்நாடு அமைதியில் வாழ முடியும் -  நைஜீரியா நாட்டின் பேராயர்

டிச.29,2011. கிறிஸ்மஸ் அன்று தங்கள் உயிரை இழந்தவர்கள் வீணாகச் சாகவில்லை என்பதை தான் நம்புவதாகவும், தீவிரவாதிகளின் தாக்குதல்களால் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல இஸ்லாமியரும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆப்ரிக்க பேராயர் ஒருவர் கூறினார்.
கிறிஸ்மஸ் நாளன்று நைஜீரியா நாட்டின் அபுஜா நகரில் புனித தெரேசா ஆலயத்தில் நிகழ்ந்த வன்முறைத் தாக்குதல்களால் உயிரிழந்த மக்களைக் குறித்து FIDES செய்திக்கு பேட்டியளித்த அபுஜா பேராயர் John Olorunfemi Onaiyekan இவ்வாறு கூறினார்.
இவ்வன்முறைகளுக்குக் காரணமான Boko Haram குழுவினர் இஸ்லாமியர் அல்ல என்று பல இஸ்லாமியக் குழுக்கள் கூறிவந்தாலும், இந்த நிராகரிப்பு மட்டுமே வன்முறைகளை ஒழிக்கப் போவதில்லை என்று பேராயர் Onaiyekan சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு ஆலயங்களில் பாதுகாப்பு முயற்சிகள் பலபடுத்தப்பட்டிருந்தாலும், அபுஜா நகரில் நிகழ்ந்த தாக்குதல் தற்கொலைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதால், அவர்கள் குண்டுகளுடன் ஏறிவந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோரில் பலர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இளையோரே என்றும் பேராயர் வருத்தத்துடன் கூறினார்.
Boko Haram போன்ற அடிப்படைவாத, வன்முறையாளர்களால் நாட்டில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இவ்விரு மதத்தினரும் இணைந்து முயன்றாலே இந்நாடு அமைதியில் வாழ முடியும் என்றும் பேராயர் Onaiyekan வலியுறுத்திக் கூறினார்.


6. ஊழலை ஒழிக்கும் சட்ட வரைவின் மீது இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இந்தியத் திருச்சபை வரவேற்பு

டிச.29,2011. ஊழலை ஒழிக்கும் சட்ட வரைவின் மீது இந்தியப் பாராளுமன்றத்தில் இப்புதனன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியத் திருச்சபைத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
1968ம் ஆண்டு முதல் பல்வேறு பாராளுமன்ற அவைகளின் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு வரும் இந்த சட்ட வரைவு, தற்போது பாராளுமன்றத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது ராஜ்ய சபாவிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றபின் சட்டமாக அமல்படுத்தப்படும்.
42 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி தற்போது பலன்களைத் தந்துள்ளது என்பது இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று மனித உரிமை ஆர்வலரும் இயேசு சபை குருவுமான செட்ரிக் பிரகாஷ் கூறினார்.
ஊழல் என்பது இந்திய சமுதாயத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருப்பதால், இதனை ஒழிப்பது வெறும் சட்டத்தால் மட்டும் முடியாது எனினும் இது சிறந்ததொரு ஆரம்ப முயற்சி என்று அருள்தந்தை பிரகாஷ் எடுத்துரைத்தார்.
இந்திய அரசின் இந்த முயற்சியை பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. தென் கொரியாவில் Salvation Army மேற்கொண்ட நிதித் திரட்டும் முயற்சியில் இதுவரை திரட்டாத அளவு பெரும் தொகை

டிச.29,2011. கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி தென் கொரியாவில் Salvation Army எனப்படும் பிறரன்பு அமைப்பு மேற்கொண்ட நிதித் திரட்டும் முயற்சியில் இதுவரை திரட்டாத அளவு பெரும் தொகை திரட்டப்பட்டது.
டிசம்பர் மாத துவக்கத்தில் இருந்து கிறிஸ்மஸ் விழா வரை 300 இடங்களில் திரட்டப்பட்ட தொகை, 473 கோடி won, அதாவது, ஏறத்தாழ 41 இலட்சம் டாலர்கள் மதிப்புள்ளது.
45,000 தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டிருந்த இந்த நிதித் திரட்டும் முயற்சியின் வழி கிடைத்த தொகையைக் கொண்டு மிகவும் வறுமையில் உள்ளோரின் தேவைகள் நிறைவேற்றப்படும் என்று Salvation Armyன் சார்பாகப் பேசிய Chung Mi-sun கூறினார்.
2009ம் ஆண்டு இறையடி சேர்ந்த கர்தினால் Stephen Kim Sou-hwan தன் மரணத்திற்கு முன் கண்களைத் தானம் செய்த நிகழ்ச்சி, கொடுக்க வேண்டும் என்ற ஆவலை தென் கோரிய கத்தோலிக்க மக்களிடையே அதிகரித்துள்ளது என்று Mi-sun மேலும் கூறினார்.


8. ஒவ்வோர் ஆண்டும் இறக்கும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 22,000

டிச.29,2011. உலகின் பல நாடுகளில் பணியாற்றும் 21 கோடியே 50 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்களில் 11 கோடியே 50 இலட்சம் குழந்தைகள் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் சூழல்களில் பணி புரிகின்றனர் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கல்வி மற்றும் கலை வழியாக குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள SCREAM என்ற திட்டத்தின் 8வது அறிக்கையைச் சமர்ப்பித்த ILO எனப்படும் உலக உழைப்பாளர் அமைப்பு ஸ்பெயின் நாட்டின் Madrid நகரில் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நோயுற்றும், விபத்துக்களுக்கு உள்ளாகியும் இறக்கும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் 22,000க்கும் அதிகம் என்று கூறும் இவ்வறிக்கை, தொழில் தொடர்பான விபத்துக்களில் இறக்கும் வயது வந்தோரின் எண்ணிக்கையை விட இவ்வாறு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று கூறியுள்ளது.
2010ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து Hague நகரில் நடைபெற்ற உலகக் கருத்தரங்கில், உலகினின்று 2016ம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...