Friday, 20 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 19 ஜனவரி 2012

1. திருத்தந்தை : கிறிஸ்தவ விசுவாசத்திலும், நன்னெறிக் கண்ணோட்டத்திலும் பொது நிலையினரையும், அரசியல் தலைவர்களையும் உருவாக்குவது அமெரிக்கத் திருஅவையின் தலையாயக் கடமை

2. மனித வாழ்வு, குடும்பம், பாலினம் குறித்த எண்ணங்கள் ஆகியவற்றில் கிறிஸ்தவ சபைகள் ஒத்த கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் : திருத்தந்தை

3. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மறைமாவட்டம் பிற நாடுகளில் இருந்து எவ்விதப் பண உதவியும் பெறவில்லை - ஆயர் யுவான் அம்புரோஸ்

4. பிப்ரவரி 6-9 வரை உரோம் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் ஆயர் பேரவை பிரதிநிதிகள் மற்றும் துறவு சபைகளின் தலைவர்கள் கூட்டம்

5. மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் ஆன்மீகக் குருவின் செயல்பாடு

6. டாக்காவில் இயேசு சபையினர் புதிய கல்லூரி திறக்கத் திட்டம்

7. எவரெஸ்ட் மலைப் பாதுகாப்பை வலியுறுத்த 1,700 கிலோமீட்டர் மாரத்தான் பயணத்திற்குத் திட்டம்

8. புற்றுநோயிலிருந்து குணமான 17 பேர் ஆப்ரிக்கக் கண்டத்தின் மிக உயர்ந்த கிளிமஞ்சாரோ மலையின் உச்சியை அடைந்து சாதனை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கிறிஸ்தவ விசுவாசத்திலும், நன்னெறிக் கண்ணோட்டத்திலும் பொது நிலையினரையும், அரசியல் தலைவர்களையும் உருவாக்குவது அமெரிக்கத் திருஅவையின் தலையாயக் கடமை

சன.19,2012. சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத் திருஅவை மாறாத நன்னெறி உண்மைகள் அடங்கிய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்க அழைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு நாட்டு ஆயர்களும் வத்திக்கானில் கூடி திருத்தந்தையைச் சந்திக்கும் 'Ad Limina' சந்திப்பிற்காக வந்திருக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாடு உருவானபோது எழுதப்பட்ட அடிப்படை சட்ட திட்டங்கள் இறைவன், நன்னெறி ஆகிய உண்மைகளின் மீது அமைந்துள்ளன என்பதைத் தன் உரையின் துவக்கத்திலேயே குறிப்பிட்டத் திருத்தந்தை, அண்மையக் காலங்களில் இந்த அடிப்படை உண்மைகள் சிறிது சிறிதாக மறைந்து வருவதைக் குறித்து தன் கவலையையும் வெளியிட்டார்.
விசுவாசம், தனி மனித அறிவு இரண்டும் கொண்டிருக்கும் உறவை மதிக்க வேண்டும் என்பதை அமெரிக்கத் தலத் திருஅவை நீண்ட காலமாகக் கூறிவந்துள்ளது என்றாலும், தனி மனித அறிவு, சுயநலம் என்ற போக்கில் அதிகம் வளர்ந்து, நன்னெறிகளை மறக்கும்போது மக்களுக்கு நன்னெறிகளை மீண்டும் நிலைநிறுத்தும் கடமையையும் திருஅவை கொண்டுள்ளது என்பதைத் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
மத நிறுவனங்களும் அரசும் தனித் தனியே இயங்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் என்றாலும், அரசு சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் திருஅவைக்கு இல்லை, மாறாக, அரசு வெளியிடும் கொள்கைகள் தனி மனித விசுவாசக் கோட்பாடுகளுக்கு எதிராகச் செல்கையில் திருஅவை கேள்விகள் கேட்க வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
அமெரிக்க மண்ணில் மதச் சுதந்திரம் அதிகம் போற்றப்படும் ஒரு அடிப்படை விழுமியம் என்பதை மகிழ்வுடன் எடுத்துரைத்த திருத்தந்தை, மதச் சுதந்திரம் என்பதை வெறும் வழிபாட்டுச் சுதந்திரம் என்று குறைத்துவிடும் போக்கு அதிகரித்து வருவதையும் குறித்து  எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்கத் தலத் திருஅவை அரசியலில் ஈடுபட்டுள்ளோருடன் கொண்டுள்ள தொடர்பைப் பாராட்டித் திருத்தந்தை, கிறிஸ்தவ விசுவாசத்திலும், நன்னெறிக் கண்ணோட்டத்திலும் பொது நிலையினரையும், அரசியல் தலைவர்களையும் உருவாக்குவது தலத் திருஅவையின் தலையாயக் கடமை என்பதையும் எடுத்துரைத்தார்.
அமெரிக்கக் காலாச்சாரத்தை நற்செய்தியின் அடிப்படையில் உருவாக்குவது நற்செய்தியைப் பரப்பும் புதிய வழி என்பதையும் தன் உரையில் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை16ம் பெனடிக்ட், அமெரிக்க நாட்டை அன்பு கலாச்சாரத்தில் வளர்க்க அமெரிக்க ஆயர்கள் உழைக்க வேண்டும் என்ற சிறப்பான வேண்டுகோளையும் முன் வைத்தார்.


2. மனித வாழ்வு, குடும்பம், பாலினம் குறித்த எண்ணங்கள் ஆகியவற்றில் கிறிஸ்தவ சபைகள் ஒத்த கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் : திருத்தந்தை

சன.19,2012. பின்லாந்து நாட்டில் கிறிஸ்தவ பாரம்பரியங்களுக்கு இடையே உள்ள ஒன்றிப்பின் வளர்ச்சி மேலும் தொடரவேண்டும் எனத் தான் ஆவல் கொள்வதாக, அந்நாட்டிலிருந்து வந்திருந்த கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் கடைபிடிக்கப்பட்டு வரும் இவ்வேளையில், பின்லாந்து நாட்டு கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிரதிநிதிகளை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கத்தோலிக்கர், லூத்தரன், கிறிஸ்தவர் மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபையினருக்கும் இடையே நிலவும் ஆழமான நட்புணர்வு, கிறிஸ்தவர்களிடையே பிரிவுகளைக் களைவதற்கு சரியான பாதையைக் காட்டுவதாக என்ற தன் ஆவலை வெளியிட்டார்.
அறநெறி சார்ந்த கேள்விகள், குறிப்பாக மனித இயல்பு மற்றும் மாண்பைப் புரிந்து கொள்வதில் அண்மைக் காலங்களில் எழும் வேறுபாடுகளே கிறிஸ்தவர்களிடையே பிரிவினைகளை உருவாக்கும் காரணங்களாக உள்ளன என்று கூறியத் திருத்தந்தை, மனித வாழ்வு, குடும்பம், பாலினம் குறித்த எண்ணங்கள் ஆகியவற்றில் ஒத்த கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
நமக்கு முன் சென்றுள்ளவர்களின் உயரிய சாட்சியங்களைப் பின்பற்றி, நம் புனிதத்துவத்தைப் புதுப்பிக்கவும், கிறிஸ்தவ அறநெறிகளை வெளிப்படையாகக் கடைபிடிக்கவும் இந்தச் சந்திப்பில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16 ம் பெனடிக்ட்.


3. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மறைமாவட்டம் பிற நாடுகளில் இருந்து எவ்விதப் பண உதவியும் பெறவில்லை - ஆயர் யுவான் அம்புரோஸ்

சன.19,2012. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களுக்கு தூத்துக்குடி மறைமாவட்டம் பிற நாடுகளில் இருந்து எவ்விதப் பண உதவியும் பெறவில்லை என்று அம்மறைமாவட்ட ஆயர் யுவான் அம்புரோஸ் கூறினார்.
மக்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த போராட்டத்திற்கு மக்களே நிதிகள் திராட்டி வருகின்றனர் என்றும், ஊடகச் செய்திகள் மறைமாவட்டத்தின் மீது அவதூறான செய்திகளை வெளியிடுகின்றன என்றும் ஆயர் அம்புரோஸ் இப்புதனன்று செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.
கடந்த நவம்பர் மாதம் இந்திய அரசின் உள்துறை பிரிவு தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு அனுப்பிய 32 கேள்விகளுக்குத் தாங்கள் பதிலனுப்பியதாகவும், அதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக மத்திய அரசின் அதிகாரிகள் தூத்துக்குடி மறைமாவட்ட கணக்கு வழக்குகளை சோதனை செய்து வருகின்றனர் என்றும் ஆயர் கூறியதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பொய்யான பழிகளையும், வதந்திகளையும் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன என்று கூறிய ஆயர் அம்புரோஸ், வேறு பல மறைமுகமான நோக்கங்களுடன் செயல்படும் குழுக்களின் தூண்டுதலால் அவதூறான செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள் மீது மறைமாவட்டம் வழக்குத் தொடரவும் வாய்ப்புண்டு என்று சுட்டிக் காட்டினார்.

தங்கள் வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையில் செயல்பட இருக்கும்  கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து, கடந்த பல ஆண்டுகள் அவ்வப்போது எதிர்ப்புக்கள் எழுந்தாலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.


4. பிப்ரவரி 6-9 வரை உரோம் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் ஆயர் பேரவை பிரதிநிதிகள் மற்றும் துறவு சபைகளின் தலைவர்கள் கூட்டம்

இயேசு சபையினரால் நடத்தப்படும் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள இந்த அகில உலகக் கருத்தரங்கில் 110 ஆயர் பேரவைகளின்
சன.19,2012. குழந்தைகளையும், வயதுவந்தோரில் வலுவற்றோரையும் காப்பதற்கு உலகளாவிய ஒரு முயற்சியில் கத்தோலிக்கத் திருஅவை ஈடுபட்டுள்ளது என்பதை வெளிப்படுத்த, ஆயர் பேரவை பிரதிநிதிகள் மற்றும் துறவு சபைகளின் தலைவர்கள் ஆகியோர் கூடிவரும் ஒரு கருத்தரங்கு வருகிற பிப்ரவரி மாதம் உரோம் நகரில் நடைபெற உள்ளது.
இயேசு சபையினரால் நடத்தப்படும் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த அகில உலகக் கருத்தரங்கில் 110 ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகளும் 30 துறவு சபைகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
திருஅவையின் பணியாளர்களால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான சிறார்கள் குறித்து கடந்த சில ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவை பெருமளவு கேள்விகளுக்கு உள்ளானது. இந்தப் பிரச்னையை கத்தோலிக்கத் திருஅவை வெவ்வேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கவும், தெளிவுபடுத்தவும் இந்த கருத்தரங்கு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனையை ஒவ்வொரு மறைமாவட்டமும் கலந்துபேசி, அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்கள், கலாச்சாரம் இவைகளின் அடிப்படையில் தெளிவான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் சென்ற ஆண்டு வழங்கிய சுற்று மடலுக்கு ஆயர் பேரவைகள் எடுத்துள்ள முயற்சிகள் இந்தக் கருத்தரங்கில் விளக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நலம் பெறுதலையும் மறுமலர்ச்சியையும் நோக்கி (Towards Healing and Renewal) என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த கருத்தரங்கின் விவாதங்களும், முடிவுகளும் கருத்தரங்கின் இறுதியில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள http://www.thr.unigre.it என்ற பன்வலை தலத்தை அணுகலாம் என்று ICN செய்திக் குறிப்பு கூறுகிறது.


5. மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் ஆன்மீகக் குருவின் செயல்பாடு

சன.19,2012. கப்பல் மூழ்கப்போகிறது என்பதை உணர்ந்ததும், கப்பலின் கோவிலில் இருந்த திருநற்கருணையைத் தான் அருந்தியதாகவும், பின்னர் மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்ததாகவும் ஓர் இத்தாலிய குரு கூறினார்.
கடந்த வாரம் வெள்ளியன்று இத்தாலியின் Giglio தீவுக்கருகே 4000க்கும் அதிகமான உல்லாசப் பயணிகளைச் சுமந்து சென்ற Costa Concordia என்ற கப்பல் மூழ்கியதில், 11 பேர் இறந்துள்ளனர், மற்றும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்தக் கப்பலில் ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டிருந்த 70 வயதான அருள்தந்தை Rafaeli Mallena, கப்பல் மூழ்கப் போகிறது என்பதை அறிந்ததும் தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கடல் பயணிகளின் ஆன்மீகப்பணி ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Giacomo Martinoவிடம் கூறினார்.
அருள்தந்தை  Martino வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், கப்பலின் பணியாளர்கள் பொறுப்பின்றி நடந்து கொண்டனர் என்று ஊடகங்கள் கூறி வருவதை மறுத்துப் பேசியதோடு, Giglio தீவில் இருந்த பங்கு மக்களும், பங்குத் தந்தையும் இவ்விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டவர்களுக்கு செய்த உதவிகளையும் எடுத்துரைத்தார்.
இந்தக் கப்பலில் பணி செய்த மும்பையைச் சேர்ந்த Jason D’Silva என்ற இளைஞன், கடவுளை நம்பி தான் கடலில் குதித்ததாகக் கூறினார். இவருடன் வேறு ஐந்து மும்பை இளைஞர்களும் இந்த விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளனர் என்று மற்றொரு செய்திக் குறிப்பு கூறுகிறது.


6. டாக்காவில் இயேசு சபையினர் புதிய கல்லூரி திறக்கத் திட்டம்

சன.19,2012. பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் இயேசு சபையினர் கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக BBC வங்காள மொழி சேவை இச்செவ்வாயன்று தெரிவித்தது.
கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக கொல்கத்தாவில் இயங்கி வரும் புனித சேவியர் கல்லூரியின் முதல்வர் இயேசு சபை அருள்தந்தை பெலிக்ஸ் ராஜ், இக்கல்லூரி கல்வியில் பெற்றுள்ள பழுத்த அனுபவத்தை பங்களாதேஷ் மக்களுக்கும் வழங்க எண்ணியுள்ளதாகக் கூறினார்.
பிப்ரவரி மாதம் பங்களாதேஷ் பிரதமரைச் சந்தித்து தங்களது எண்ணத்தை வெளிப்படுத்த உள்ளதாகவும், பிரதமரின் ஒப்புதலின் பேரில் தலைநகரில் இந்தக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் அருள்தந்தை பெலிக்ஸ் ராஜ் கூறினார்.
கொல்கத்தா இயேசு சபையினர் டாக்காவில் ஏற்கனவே சில சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அந்நாட்டு இளையோருக்குத் தரமான கல்வியை வழங்க இயேசு சபையினர் ஆர்வம் கொண்டுள்ளனர் என்றும் முதல்வர் பெலிக்ஸ் ராஜ் எடுத்துரைத்தார்.


7. எவரெஸ்ட் மலைப் பாதுகாப்பை வலியுறுத்த 1,700 கிலோமீட்டர் மாரத்தான் பயணத்திற்குத் திட்டம்

சன.19,2012. உலகத்தின் கூரை என்று அழைக்கப்படும் எவரெஸ்ட் மலையைக் காக்கவேண்டும் என்பதை வலியுறுத்த Apa Sherpa என்ற மலையேறும் வீரர் 1700 கிலோமீட்டர் மாரத்தான் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
51 வயதான Apa Sherpa என்ற நேபாள நாட்டைச் சேர்ந்த வீரர் இதுவரை எவரெஸ்ட் உச்சியை 21 முறைகள் அடைந்து, உலகச் சாதனை படைத்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாற்றங்களால் நாம் எவரெஸ்ட் மலையை இழக்கும் நிலையில் இருக்கிறோம் என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் Apa Sherpa 1700 கிலோமீட்டர் தூரம் கொண்ட ஒரு மாரத்தான் பயணத்தை 120 நாட்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்த 120 நாட்களில் உலகின் மிக உயர்ந்த பத்துச் சிகரங்களை அடையவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாரத்தான் முயற்சியில் 11 பேர் ஈடுபட இருப்பதாகவும் இவர்களில் சிலர் அறிவியல் ஆய்வாளர்கள் என்றும் Apa Sherpa கூறினார்.
தெற்கு ஆசியாவிற்கு நல்ல குடி நீர் வழங்கும் இமய மலையைக் குறித்து ஆய்வுகள் நடத்தச் செல்லும் இந்த மாரத்தான் பயணம், மனித குலத்தைக் காக்கும் ஒரு முயற்சியே தவிர, இது ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி அல்ல என்று உலகச் சாதனையாளர் Apa Sherpa தெளிவுபடுத்தினார்.


8. புற்றுநோயிலிருந்து குணமான 17 பேர் ஆப்ரிக்கக் கண்டத்தின் மிக உயர்ந்த கிளிமஞ்சாரோ மலையின் உச்சியை அடைந்து சாதனை

சன.19,2012. புற்றுநோயிலிருந்து குணமான 17 பேரும் அவர்களுக்கு நலபராமரிப்பு வழங்கும் 20 பேரும் இணைந்துஆப்ரிக்கக் கண்டத்தின் மிக உயர்ந்த மலை என்று அழைக்கப்படும் 19340 அடி உயரமுள்ள கிளிமஞ்சாரோ மலையின் உச்சியை அண்மையில் அடைந்தனர்.
புற்றுநோயிலிருந்து குணமானவர்களில் 72 வயதான அருள்தந்தை Frank Bognannoவும் ஒருவர். 47 ஆண்டுகளாக குருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள அருள்தந்தை Bognannoவுக்கு 17 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்நோயிலிருந்து இவர் குணமானபோதிலும், கடந்த மூன்று ஆண்டுகள் மீண்டும் இந்த நோய் இவர் உடலில் காணப்படுகிறது என்று CNS செய்திக் குறிப்பு கூறுகிறது.
புற்று நோயுற்றோரை ஒவ்வோர் ஆண்டும் மலைகளின் உச்சிக்கு அழைத்துச் செல்லும் மருத்துவர் Dr. Richard Deming, கடந்த ஆண்டு இந்த நோயுற்றோரை அழைத்துக் கொண்டு எவரெஸ்ட் மலை உச்சிக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது.
மலையுச்சிக்குச் செல்வது இந்த நோயாளிகள் தங்கள் வாழ்வில் இந்த நோயை மேற்கொள்வதற்கு ஒரு அடையாளமாக, உந்துசக்தியாக உள்ளது என்று டாக்டர் Deming சுட்டிக்காட்டியுள்ளார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...